தாம்பத்தியம்    

                           சிறுகதை ---- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

     “ராகவன் இன்று வருகிறானாமே, எத்தனை மணிக்கு வருகிறான்?” என்று பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணபதி குருக்கள் கேட்டார்.

     “மாலை சரியாக 5 மணிக்கு வருகிறான். அமெரிக்காவிலிருந்து சரியாக மதியம் 1 மணிக்கு விமானம் சென்னை வருகிறது. அங்கிருந்து டாக்ஸி பிடித்து நம்ம வீட்டிற்கு வர 5 மணியாகும் என்று நேற்று ஃபோனில் சொன்னான்”. என்றார் சுந்தரேசன். அருகில் புன்னகையுடன் அவர் மனைவி பத்மா நின்றிருந்தாள்.

     கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ கண்டபுரம் கிராமம். காவிரி ஆறு பாயும் இடம் என்பதால் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். குளங்கள் வயல் வெளிகள், மா மரங்கள், தென்னை மரங்கள் என்று ஸ்ரீ கண்டபுரம் ஊரே செழிப்பாக இருக்கும். அக்ரகாரம் நீண்டு வலது பக்கம் சிறிது வளைந்திருக்கும். நல்ல அகலமான வீதியில் இரண்டு பக்கமும் சுமார் முப்பது வீடுகளிருக்கும். கோயிலின் வலது புறம் தேர் நிற்குமிடம். கோபுரம் 45 அடிகள் உயரம். உட் பிரகாரம், வெளிப் பிரகாரம் நீளமாகவும் அகலமாகவும் அமைந்திருக்கும்.

     அக்ரகாரத்தில்  குடியிருக்கும் சுந்தரேசன் பத்மா தம்பதியருக்கு ஒரே பிள்ளை ராகவன். கும்பகோணம் சென்று பள்ளியில் படிக்கும் போதும் சரி, சென்னையில் ஐ ஐ டியில் படிக்கும் போதும் சரி எப்போதும் படிப்பில் முதலாவது ராங்க். கல்லூரியில் இரண்டாவது ராங்க் சென்னை மைலாப்பூரிலிருந்து வரும் ஜானகிதான். இருவரும் முதலாம் ஆண்டு முதல் ஒன்றாகவே படித்து முடித்தார்கள். சில சமயம் ஜானகி முதல் ராங்கும் ராகவன் இரண்டாவது வருவதுமுண்டு. இந்தப் போட்டியில் மற்ற மாணவர்களுக்கு இடமில்லை. இருவருக்கும் காம்பஸ் இன்டர்வியூவில் சென்னையிலேயே வேலை கிடைத்தது. ஒரு ‘ப்ராஜக்ட்’ கற்றுக் கொள்ள ராகவன் அமெரிக்கா செல்லும் போது ஜானகி மூன்று மாதங்களாக வீட்டிலிருந்து வேலை பார்க்க அலுவலகத்தில் அனுமதி வாங்கி ஸ்ரீ கண்டபுரம் கிராமத்திலேயே தங்கியிருந்தாள். மூன்று மாதப் பயிற்ச்சிக்காக அமெரிக்கா சென்ற ராகவன் இன்று வருகிறான்.

     கணபதி குருக்கள் மனசுக்குள்ளே ‘ ராகவன் வரட்டும். இந்த ஜானகி என்னைக் கொஞ்சம் கூட பொருட்படுத்துவதில்லை. ஒரு நாளாவது நின்னு நிதானமாக என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆனால் சிவன் கோயிலில் பூஜை செய்யும் பரசுராமனிடம் சிரித்து சிரித்துப் பேசுகிறாள். அப்படியென்ன அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சு வேண்டிக் கிடக்கிறது? பரசுராமனுக்கு சின்ன வயது. கோயிலில் கூட்டம் இல்லாத நேரத்தில் ரொம்ப நேரம் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை நானே எத்தனை தடவைப் பார்த்திருகிறேன். இந்த சமாச்சாரம் பற்றி ராகவனிடம் சொல்லாமல் விடப் போவதில்லை. இந்த ஜானகியை அழ வைக்க வேண்டும் அல்லது ராகவனே அவளை வீட்டை விட்டே அனுப்ப வேண்டும். வரட்டும், வரட்டும் ராகவன், பார்த்துக்கிறேன்.”

     ஒரு முறை பத்மா தன் கணவரிடம், “ என்னங்க? நான் ஒரு விஷயம் சொல்லப் போறேன், சற்றுப் பொறுமையாகக் கேளுங்க. நான் குறை சொல்லுறேன்னு இல்லங்க. நடந்ததை, கண்ணால் பார்த்ததை அப்படியே சொல்லுறேன். நம்ம மருமகள் ஜானகியோட உறவுக்காரன்னு போன மாதம் இங்கே வந்து இரண்டு நாள் தங்கியிருந்தானே, பெயர் கூட சேகர்ன்னு ஞாபகம். ஜானகி அவன் கூட சிரிப்பென்ன, பேச்சென்ன, விருந்து உபச்சாரம் என்ன என்று அசத்திட்டாளே. அப்படி என்னங்க கணவன் இல்லாத சமயம் ஒரு பெண் இப்படியா அந்நிய மனுஷன்டே நடந்துப்பாள்? பார்க்க சகிக்கலே. உங்க கிட்டேயும் ஜாடை மாடையா சொன்னேன். நீங்க காது கொடுத்தே கேட்கவில்லை. “ என்று சொன்னாள்.

     சுந்தரேசன், “பத்மா, நம்ம வாழ்ந்த காலம் வேறே, இந்தக் காலம் வேறே. இன்றெல்லாம் பெண்கள் நிறையப் படிக்கிறார்கள். உன்னுடைய பெற்றோர்கள் சொன்னதால்  நீ பெரிய மனிஷியானதும் படிப்பை நிறுத்திட்டே, இப்பவெல்லாம் அப்படியில்லை. பெண்கள் கல்லூரி போறாங்க, ஆண்களுக்கு சமமாகவோ அல்லது அதற்கு மேலேயோ நிறைய படிக்கிறாங்க, நம்ம மருமகள் ஜானகி, ராகவன் கூடயே சென்னையிலே படிச்சிருக்கா, பட்டணத்து நாகரீகம், கல்லூரியில் படித்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களிடம் பேசிப் பழகியிருப்பாள் என்பதை நான் எத்தனை முறை சொன்னாலும் நீ சொன்னதையே சொல்லிண்டு இருக்கே”. என்று பத்மாவிடம் சொன்னார். சுந்தரேசன் என்ன சொன்னாலும் பத்மா மனம் சமாதான மடையவில்லை. ராகவன் வந்த பின்பு அவனிடம் இது பற்றி நிச்சயம் பேச வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள். ஜானகி பற்றி கணபதி குருக்கள் மனதிலுள்ளதையும், தன் மனைவி பத்மா சொன்னதையும் சுந்தாரேசன் ஒரு முறை பேசும் போது ராகவன் காதில் போட்டு வைத்தார்.

     இவர்கள் குடியிருந்த வீட்டின் எதிர் வரிசையில் மூன்றாவது வீட்டில் இருக்கும் லலிதாவுக்கு  ஜானகியின் வயதுதான். லலிதாவும் பி. டெக் முடித்து விட்டு கடந்த ஓராண்டு காலமாக தீவிர முயற்சியுடன் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள். இன்று வரை ஒன்றும் கிடைக்கவில்லை

     லலிதா ராகவனை ஒரு தலையாகக் காதலித்து வந்தாள். அவள் அப்பா மிகவும் கோபக்காரர் என்பதால் வெளியே சொல்லத் தயக்கம். அதற்குள் இரு வீட்டார் சம்மதத்துடன் ராகவன் ஜானகி திருமணம் நடந்து முடிந்து விட்டது. அன்றிலிருந்து லலிதாவுக்கு ஜானகி மேலே மனதுக்குள் பொறாமை. தனக்குக் கிடைக்க வேண்டிய ராகவன் ஜானகிக்குக் கிடைத்து விட்டானே என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள். இரவு நேரம் மொட்டை மாடியில் நின்று கொண்டு ஜானகி நீண்ட நேரம் ஃபோனில் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பதைப் பார்த்து லலிதாவுக்கு ஜானகி மேல் சந்தேகம். ராகவன் வந்ததும் ஜானகியைப் பற்றி சொல்லி அவன் மனதில் பெரிய சந்தேகத்தைக் கிளப்பி விட வேண்டியதுதான் என்று லலிதா முடிவு செய்திருந்தாள்.

     ராகவன் லலிதா ஒரே கல்லூரியில் படித்ததாலும் அடிக்கடி சந்தித்து பாட விஷயங்கள் பற்றி விவாதம் செய்து வந்ததாலும் அவர்கள் இருவரும் அறியாமலேயே ஒருவர் மனதில் மற்றவர் இடம் பிடித்துக் கொண்டார்கள். அறிவு சார்ந்த நட்பு என்பது ஒரு கட்டத்தில்  உணர்வு பூர்வ காதலாக மாறி விட்டதை இருவரும் புரிந்து கொண்டார்கள். ஆனால் மற்ற காதலர்களைப் போல கடற்கரை செல்வதையோ, சினிமாவுக்குச் செல்வதையோ இருவரும் ஒரு போதும் விரும்புவதில்லை. கல்லூரியில் உள்ள வாசகசாலையிலோ கான்டினிலோ தான் இருவரும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். படிப்பு நல்ல முறையில் முடிந்து இருவருக்கும் நல்ல பிடித்தமான வேலைகள் கிடைத்த பின்புதான் காதலைப் பற்றியும் திருமணம் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்பதில் இருவரும் தீர்மானமாக இருந்தார்கள்.

     அன்று மாலை ராகவன் டாக்ஸியில் வந்து இறங்கியதை பக்கத்து வீட்டிலிருந்த கணபதி குருக்களும் எதிர் வீட்டிலிருந்த லலிதாவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து ராகவன் புன்னகை செய்து கொண்டே தன் வீட்டிற்குள் நுழைந்தான். தன்னுடைய அப்பா, அம்மா இருவரையும் நமஸ்கரித்து விட்டு ஜானகியைப் பார்த்து ஒரு புன் முறுவலுடன் தோளில் தட்டிக் கொடுத்தான். இரவு உணவருந்தி முடிந்தவுடன்  கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். “ராகவா, உனக்குப் பிரயாணக் களைப்பிருக்கும். எல்லோரும் தூங்கப் போகலாம் என்றார்.  

     மறு நாள் காலை வாக்கிங்க் செல்லும் போது ராகவன் கணபதி குருக்களிடம் “மாமா, இன்று மாலை காஃபி சாப்பிட எங்க வீட்டிற்கு வந்திருங்கோ“ என்றான். எதிர் வீட்டிலிருந்த லலிதாவிடமும் மாலை வீட்டிற்கு வரச் சொன்னான். இருவரும் சரியென்று தலையசைத்தார்கள்.

     மாலை ஜானகி பாலில் செய்த  ஒரு இனிப்பும் பஜ்ஜியும் நல்ல ஃபில்டர் காஃபியும் தயாராக வைத்திருந்தாள். கணபதி குருக்களும், லலிதாவும் வந்த பின்பு எல்லோரும் டிஃபன் சாப்பிட்டு முடித்தபின் ராகவன், “என்ன மாமா, லலிதா டிஃபன் எப்படியிருந்ததுஎன்று கேட்டான். “ஜானகியின் கை மணம் இந்த அக்ரகாரம் முழுவதும் மணக்குமே என்றார் கணபதி குருக்கள். லலிதாவும் புன்னகையுடன் அவர் சொன்னதை ஆமோதித்தாள்.

     ராகவன், “மாமா, ஜானகி அடிக்கடி சிவன் கோயில் சென்று வருவதைப் பார்த்திருப்பீர்கள் ; அங்கு பூஜை செய்யும் பரசுராமனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள். பரசுராமன் டிகிரி வரை படித்தி ருக்கிறான். வேலை தேடிக் கொண்டிருக்கிறான். தேர்வில் பாஸாகி விடுவான். ஆனால் இன்டர்வியூவில் தேர்வாக மாட்டான். காரணம் பரசுராமனுக்கு திக்கு வாய் என்பதால் அவனுக்குத் தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது.. நம்ம ஜானகி பரசுராமனிடம் சகஜமாகப் பேசி, சிரித்துப் பேசிப் பழகி அவன் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியதால், சென்ற வாரம் சென்னையில் ஒரு இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் சேர்ந்து விட்டான். மாமா, நீங்க நடக்கும் போது சில சமயங்களில் தடுமாறுவதை ஜானகி கவனித்திருக்கிறாள். அமேசானில் ஒரு வாக்கிங்க் ஸ்டிக், ஒரு ஸ்வெட்டர் ஆர்டர் செய்து  இரண்டும் இன்று வந்திருக்கின்றன. என்றான். அவற்றை ஜானகி கொண்டு வந்து தர கண்களில் நீர் மல்க கணபதி குருக்கள் பெற்றுக் கொண்டார்.

     ராகவன், “ லலிதா, ஜானகி மொட்டை மாடியிலிருந்து எனக்கு ஃபோன் பண்ணும் போதெல்லாம் நீ பார்த்துக் கொண்டிருப்பாய் என்ற என்னிடம் சொன்ன ஜானகி உனக்கு ஒரு மொபைல் ஃபோன் வாங்கி வரச் சொன்னாள். இதோ, உனக்கு நாங்கள் தரும் பரிசு. ஜானகி தான் வேலை பார்க்கும் கம்பெனியில் உனக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்திருக்கிறாள் என்றான்.  ஜானகியைத் தவறாகப் புரிந்து கொண்டதற்கு லலிதா மனதுக்குள் மிகவும் வருந்தினாள். மானசீகமாக ஜானகியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

     ராகவன் இப்போது அப்பாவிடம் “ அப்பா உங்களுக்கு ஒரு புது ‘லாப்டாப் வாங்கியிருக்கேன். பழைய லாப்டாப் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறது மாமா மிகவும் சிரமப்படுகிறார் என்று ஜானகி சொன்னாள். என்றான். சுந்தரேசன் ஜானகியைப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்.

     ராகவன் “ அம்மா, ஜானகி உன்னிடம்தான் இந்த மூன்று மாத காலத்தில் சுவையாக சமையல் செய்யக் கற்றுக் கொண்டதாக என்னிடம் ஃபோனில் அடிக்கடி கூறுவாள். அவள் உறவினர் சேகரும் ஜானகியும் சின்ன வயதிலிருந்தே அண்ணன் தங்கையாகப் பழகி கிண்டலும் கேலியுமாக வளர்ந்து வந்திருக்கிறார்கள். ஜானகி பண்ணிய சமையல் சுவை பற்றி அவங்க ஊரிலுள்ள அனைவரிடமும் சேகர் சொல்லியிருக்கிறான். உன்னிடம் சமையல் கற்றுக் கொண்டதற்காக ஜானகி உனக்கு இரண்டு தங்க வளையல்கள் வாங்கியிருக்கிறாள் “ என்று சொல்லிவிட்டு ஜானகியைப் பார்க்கிறான். உடனே ஜானகி தன் மாமியாரை வணங்கிய பின் தங்க வளையல்களைக் கொடுக்கிறாள். இப்படியொரு தங்கமான மருமகள் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று கணவரைப் பெருமையுடன் பார்க்கிறாள்.

     ராகவன் எல்லோரையும் பார்த்து, “ நானும் ஜானகியும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே ஒருவர் மனதை மற்றொருவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறோம். எந்த ஒரு சூழ் நிலையிலும் யார் என்ன சொன்னாலும் எங்களுக்குள் மனஸ்தாபம் ஒரு போதும் வரக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். அதனால்தான் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை இனிதாக யிருக்கிறது. தாம்பத்தியம் என்பது புனிதமானது;மிகவும் உயர்வானது. தாம்பத்தியம் நமக்கு சந்ததிகளை அளிக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சந்தேகம் என்று ஒரு முறை வந்து விட்டால் அதன் பின் தாம்பத்திய வாழ்க்கை நரகம்தான். கணவன் மனைவி இருவரும் ஒருவர் மேல் மற்றவர் காட்டும் ஆட்படுகிற அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மன நிலையும் இருந்தால் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையும் அந்தக் குடும்ப சூழ் நிலையும்  மிகவும் சிறப்பாக இருக்கும்.

     ஆங்கிலத்தில் சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று சொல்லுவார்கள்; அது போல ராமரின் மனைவி சீதையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று ஏனோ நாமெல்லாம் சொல்லுவதில்லை., சீசரின் மனைவி மற்றும் ராமரின் மனைவி சீதை இருவரும் எப்படி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களோ இருந்தார்களோ அது போல என் மனைவி ஜானகியும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று உறுதியாக இன்று நான் எல்லோருடைய முன்னிலையிலும் சொல்லுகிறேன். என்ற உறுதியாகச் சொன்ன தன் கணவன் ராகவனைப் பெருமையுடன் ஜானகி பார்த்தாள்.

 

 

 

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE