ஆச்சி எங்கே செல்லுகிறாள் ?

 

                                                            கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

 

இந்த ஆச்சி

முதுமையிலும் அழகுதானே !

ஏழ்மையிலும் வலிமைதானே !

கருத்த மேனியின்  திறந்த

முதுகினில் தோல் சுருக்கங்கள்

வரி வரியாக , அழகு அழகாக !

 

தலையில் ஒரு சுமை !

இடையில் ஒரு கூடை !

கையில் ஒரு பை !

மெ(ய்)யில் ஒரு சேலை !

 

இந்த ஆச்சி

எங்கு செல்கிறாள் ? ஏன் செல்கிறாள்?

யாரைப் பார்க்கச் செல்லுகிறாள் ?

 

பல்லாண்டு உடன் இருந்தார் ,

நல்லதிலும் கெட்டதிலும்

இன்பத்திலும் துன்பத்திலும்

இணைந்து நின்ற கணவர் !  

 

இந்த ஆச்சி

இப்போது தாத்தாவைப் பார்க்கச்

செல்லவில்லை ; ஏனென்று

உடையில் தெரிகிறது. !

 

சுமைகள் பல இருந்தாலும் 

தளர்வில்லா நடையில் 

சுகம் தெரிகிறது !

சுமையின் கனம்

தாங்கும்

ஆச்சியின் உடல் !

வேதனையின் கனம்

தாங்குமா?

ஆச்சியின் மனம் ?

 

சுமைகளில் என்ன இருக்கும்?

சுவை மிகுந்த கை முறுக்கும்

வெல்லம் போட்டுச் செய்த

பருப்பு உருண்டைகளும்,

நிறைந்திருக்கும்தானே !

நெஞ்சின்  பாச  உணர்வில்

அந்த சுமைகளின்  பாரமும்

குறைந்திருக்கும்தானே !

 

இந்த ஆச்சி

பெற்ற மகளையும்

உற்ற மகனையும்

பார்க்கச் செல்லுகிறாளா ?

மடியில் விளையாடும்

மழலை  மொழி பேசும்

பேரனையும்

பேர் சொல்லப் பிறந்திருக்கும்

பேத்தியையும்

பார்க்கச் செல்லுகிறாளா?

 

இந்த ஆச்சி

எங்கு செல்கிறாள் ? ஏன் செல்கிறாள்?

யாரைப் பார்க்கச் செல்லுகிறாள் ?

 

 

 

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE