ஷைலஜா
--
இளஞ்செழியன்
(பெற்றவர்களின்
அன்பும், பாசமும் கிடைக்காத ஒரு பெண்ணைப் பற்றிய
சிறு கதை)
அன்று பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய வணிக
வளாகத்தில் ஒரு திரைப்
படத்தின் படப் பிடிப்பு
நடந்து கொண்டிருந்தது. கதா நாயகனும் கதா நாயகியும் நடிக்கும்
ஒரு காதல் காட்சியைப் பிரபல இயக்குனர் மகேந்திர
வர்மன் படமாக்கிக் கொண்டிருந்தார். இடை வேளையில் இயக்குனர், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஷைலஜாவைப் பார்த்ததும் அருகில் வந்து,
“ உன் பெயர் என்னம்மா? நான் எடுக்கப் போகும் அடுத்த திரைப் படத்தில் நடிக்க நீண்ட நாளாகப் பொருத்தமான ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தேன்.
அந்தப் பெண் நீதான், உனக்குத் திரைப்படத்தில் நடிக்கச் சம்மதம்தானே? என்று கேட்டார்.
ஷைலஜா ஒன்றும் பதில் சொல்லவில்லை. எல்லோரும்
தன்னைப் பார்த்ததால் ஷைலஜாவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது. எப்படியாவது அந்தக்
கூட்டத்திலிருந்து வெளியேற நினைத்தாள். சற்றுத் தொலைவில் இருந்த தன்னுடன் கல்லூரியில்
படித்த ராம் குமாரைத் தற்செயலாகப் பார்த்தாள். சைலஜாவின் நிலையைப் பார்த்ததும் ராம்
குமார் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக அந்தக் கூட்டத்திலிருந்து வெளியே
வந்தான். அப்போதுதான் தன்னுடைய வலது கை அவளுடைய வள வளப்பான இடையை அணைத்திருந்ததைக்
கவனித்தான். இடையிலிருந்து தன் கையை எடுக்க நினைத்தும் மனம் வரவில்லை. அவன் மனம் தடுமாறுவதைக்
கவனித்ததும், ஷைலஜா, பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து, ராம்குமார் கையைப் தன் இடையோடு
சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். இருவரும் ஒன்றும் அதிகம் பேசாமல் அருகிலிருந்த
‘காஃபி டே’ க்குள் சென்றார்கள்.
“ஷைலஜா, என்னை நினைவிருக்கிறதா, நான் ராம் குமார்!,
நாம் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோமே. இப்போது ஒரு பிரபலமான ஐ.டி கம்பெனியில்
மேலாளராக இருக்கிறேன். உன்னைப் பற்றிச் சொல்லேன்.” என்று சொல்லி விட்டு அவளைக் கூர்ந்து
கவனித்தான். பெண்களுக்குத் தேவையான உயரம். நெற்றியில் புரளும் சிறு அலைகளென கூந்தல்
முடிகள்; வளைந்த புருவங்களுக்கிடையே சற்றுப் பெரிய கரிய விழிகள்; இமையின் முடிகளே அழகாக
இருந்தன; அளவான அழகிய நாசி; இயற்கையிலேயே மென்மையாக அமைந்த சிவந்த சிறிய உதடுகள்; சற்றே
வளைந்த காது மடல்களில் தோடும் அதனுடன் இணைந்த
ஜிமிக்கியும் அவள் அழகை இன்னும் அதிகமாகக் காட்டின. இந்தப் பெண்ணைப் படைக்கும் போது,
கண்டிப்பாகப் பிரம்மா அதிக நேரம் எடுத்திருப்பார் என்று ராம் குமார் நினைத்தான்.
ஷைலஜா சிறு புன்னகையுடன், “ என்ன ராம் குமார்,
இப்படிக் கேட்டு விட்டாய்? உன்னைத் தெரியுமா என்று கேட்கிறாயே? உன்னை அவ்வளவு எளிதாக
என்னால் மறக்க முடியுமா என்ன ? கல்லூரி நாட்களை நம் இருவராலுமே மறக்க முடியாதல்லவா?” என்றாள்.
ஷைலஜா தன்னை நினைவில் வைத்திருக்கிறாள் என்று
எண்ணும் போது ராம் குமார் மனம் மகிழ்ச்சியால்
துள்ளியது. ராம் குமாரும் நல்ல உயரத்துடன், கம்பீரமாக பெண்கள் கவனத்தை ஈர்க்கும் படியாக
அந்தக் கால நடிகர் ஜெமினி கணேசன் போல அழகாக இருந்தான். ராம் குமாரும், ஷைலஜாவும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நல்ல நண்பர்களாகப்
பழகி வந்தார்கள். கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டிகளிலும், கவிதை அரங்கங்களிலும்
இருவரும் கலந்து கொள்வார்கள்.. ஆங்கில இலக்கியப் பாடங்களைப் பற்றி இருவரும் அடிக்கடி
விவாதங்கள் செய்வதுண்டு.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் சில காதலர்கள்
அடுத்தவர் மேலுள்ள தன்னுடையக் காதலை வெளிப்படுத்தத் தயங்குவதைப் பற்றியும் கூடப் பேசியதுண்டு..
ஆனால். சொல்லத்தான் நினைக்கிறேன் என்று ஒரு திரைப் படத்தில் வருவது போல ராம் குமார்
ஷைலஜா இருவருமே தங்கள் மனதிலிருந்த காதலை வெளிப்படுத்தவே இல்லை. இருவருடைய மனங்களிலும்
காதல் என்ற உணர்வுகள் மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்த வேளையில் கல்லூரிப் படிப்பு
முடிந்து பிரிய வேண்டியதாகி விட்டது.
ராம் குமார், “ஆமாம், நீ ஏன் திரைப் படத்தில்
நடிக்க மாட்டேன் என்று சொன்னாய்? உன்னைப் போன்ற அழகானப் பெண்ணுக்குத் திரைப் படத் துறையில்:
நல்ல எதிர்காலம் நிச்சயம் இருக்குமே? என்று கேட்டான்.
“ராம், நாம் சந்தித்து 3 அல்லது 4 ஆண்டுகளாகியிருக்குமே?
இன்று என் பெயரை நீ சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது., எனக்குத் திரைப்
படத்தில் நடிக்க சுத்தமாக ஆர்வம் கிடையாது; ஒன்று சொல்லட்டுமா?, உலகில் இருக்கும் நாடுகளுக்கெல்லாம்
போக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, ராம், நீ என்ன நினைக்கிறாய்? உனக்கும் விருப்பம்
இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றாள் ஷைலஜா..
“ஷைலஜா, என்ன திடீரென்று வெளி நாடு செல்லத் தீர்மானித்து
விட்டாய்? நானும் இதுவரை வெளிநாடு சென்றதில்லை. நீ விருப்பப்பட்டால், நானும் தயார்தான்.
எந்த நாடு போகலாம் என்று சொல்லு” என்றான் ராம்குமார்.
உடனே ஷைலஜா, “ராம், பாரீஸ்தான் முதலில் பார்க்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னைப் பாரீஸ்
அழைத்துச் செல்வாயா? என்னடா, நீண்ட நாள் கழித்துப் பார்த்த உடனேயே இந்த ஷைலு இப்படிக்
கேட்கிறாளே என்று நீ எண்ண வேண்டாம்; இன்று வரை என்னுடைய அப்பா, அம்மாவிடம் மட்டும்தான்
என்னை வெளி நாடு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லியிருக்கிறேன். ஆனால், அவங்க இரண்டு பேரும்
‘பிசினஸ்’, ‘பிசினஸ்’ என்று அலைந்து
கொண்டிருப்பார்களே தவிர, நான் சொல்வதைக் காது கொடுத்துக் கூடக் கேட்க மாட்டார்கள்.
ஏனென்று தெரியவில்லை, உன்னை இன்று பார்த்தவுடன் பாரீஸ் கூட்டிட்டுப் போவீயான்னு கேட்கத்
தோனுச்சு” என்றாள்
சைலஜா.
ராம் குமாருக்கு ஒன்றுமே பேச முடியவில்லை. இந்த
மாதிரி ஒரு அழகானப் பெண் பாரீஸ் கூட்டிட்டுப் போகச் சொல்லுவாள்னு கனவிலிலும் அவன் நினைக்கவில்லை.
சர்வர் கொண்டு வந்த சூடான காஃபியை இருவரும் குடித்து முடித்தார்கள்.
“ஷைலஜா, நீ நினைப்பது போல, பாரீஸ் செல்வதெல்லாம்
அவ்வளவு எளிதான காரியமில்லை; பாஸ் போர்ட், விசா என்று ஏகப்பட்ட ‘ஃபார்மாலிட்டீஸ்’ இருக்கின்றன”. என்றான்
ராம் குமார்.
ராம், “அதெல்லாம் எனக்கும் தெரியும். என்னிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. உன்னிடமும்
பாஸ்போர்ட் இருக்கும் என்று நினைக்கிறேன். நம்ம இருவருக்கும் விசா, டிக்கட் மட்டும்
நீ ஏற்பாடு பண்ணு. நாம் இருவரும் பாரீஸ் சென்று ஜாலியாகச் சுற்றிப் பார்த்துவிட்டு
வரலாம்.” என்றாள்
ஷைலஜா.
மறு நாள், இருவரும் அதே இடத்தில் சந்திப்பதாக
முடிவு பண்ணிவிட்டுப் பிரிந்து சென்றார்கள்.
சரியாக மாலை ஆறு மணிக்கு ராம் குமார் வந்து விட்டான்.
ஆனால் ஏழு மணியாகியும் ஷைலஜாவைக் காணவில்லை. இனிமேலும் காத்திருப்பது வீண் என்று எண்ணி, வேகமாக சிறிது கோபம் மற்றும் ஏமாற்றத்துடன் ராம்
குமார் வெளியே வரும் போது, ஷைலஜா வந்துவிட்டாள். உடனே இருவர் முகத்திலும் ஒரே நேரத்தில்
புன்னகை. ராம் குமாரின் கோபமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. ஷைலஜாவிடம்
ஏன் ‘லேட்’ என்று கேட்கக்
கூடத் தோன்றவில்லை.
ஷைலஜா அருகில் வந்ததும் ராம் குமாரின் வலது கை
அவளுடைய இடையைச் சுற்றி வளைத்தது. ஷைலஜா ஒன்றும் சொல்லவில்லை. ராம் குமாரின் கை தன்னுடைய
இடையில் இருப்பது ஒரு இயல்பான செயல் என்றே நினைத்தாள். பாஸ் போர்ட், புகைப் படம் இரண்டையும்
ராம் குமாரிடம் கொடுத்தாள். தான் கொண்டு வந்திருந்த விசா விண்ணப்பத்தில் ஷைலஜாவிடம்
ராம் குமார் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.
இருவரும் டின்னரை அங்கேயிருந்த ஒரு
‘காமத் ரெஸ்டாரண்ட்டில்’ முடித்துக்
கொண்டார்கள். இரவு 9 மணிக்குப் பிரிந்து செல்லுமுன் ராம் குமாரை ஷைலஜா மென்மையாக அணைத்து
கன்னத்தில் ஒரு சிறிய முத்தமிட்டாள்.
மறு வாரம் சந்திக்கும் போது, இருவருக்கும் விசா
வந்து விட்டது என்று ராம் குமார் சொன்னதும் ஷைலஜாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாளை இரவு 9 மணிக்குப் புறப்படும் விமானத்தில் பாரீஸ்
செல்ல வேண்டும் என்பதால். அன்று மாலை ஜெய நகரில் இருக்கும் ‘சென்ட்ரல்’ வணிக வளாகத்தில்
சந்தித்து இருவருக்கும் வேண்டிய ‘டிரஸ்’ வாங்கினார்கள். ஷைலஜாவிற்குச் சேலை
கட்டுவது எப்பவுமே பிடிக்கும். இரண்டு ஃபேன்ஸி சேலைகள், சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ்,
இரவு அணியும் உடைகள் மற்றும் உள்ளாடைகள் வாங்கிக் கொண்டாள். ராம் குமாரும் தனக்குத்
தேவையான பேன்ட், ஷர்ட், குர்தா, போன்ற டிரஸ்கள் வாங்கிக் கொண்டான்.
மறு நாள் சரியாக மாலை 7 மணிக்கு ஷைலஜா ‘கெம்பகௌடா
இன்டெர்னேஷனல் ஏர்போர்ட்’ விமான நிலையத்திற்கு
வந்து விட்டாள். அங்கு தனக்காகக் காத்துக் கொண்டிருந்த ராம் குமார் அருகில் சென்று
ஒரு புன்னகையுடன் அவனுடைய வலது கையை எடுத்துத் தன்னுடைய இடையில் சுற்றிக் கொண்டாள்.
மஞ்சள் வண்ணத்தில் ஜீன்ஸ், இள மஞ்சள் நிறத்தில் ஆண்கள் போடும் முழுக் கை சட்டை, அதன்
மேல் மஞ்சள் நிறத்தில் பாதி ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். மஞ்சள் வண்ணத் தேவதை போல அத்தனை
அழகாக ஷைலஜா இருந்தாள். பாரீஸ் செல்லும் விமானம் புறப்படும் அறிவிப்பு வந்தவுடன் இருவரும்
வரிசையில் நின்றார்கள். அவளுடன் நடந்து செல்வது ராம் குமாருக்குப் பெருமையாக இருந்தது.
இருவர் கைகளும் இணைந்திருந்தன. விமானத்தில்
மூன்று பேர் அமரும் இருக்கையில் இவர்கள் இருவருக்கும் இடம் ஒதுக்கியிருந்தார்கள். இருவரிடமிருந்தும்
ஒரு நிம்மதிப் பெரு மூச்சு வந்தது; இருவரும் சின்னதாக சிரித்துக் கொண்டார்கள்.
விமானம் ‘டேக் ஆஃப்’ ஆகும் போது
ஷைலஜா ராம் குமார் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டாள். இரவு உணவு முடிந்ததும்,
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். “ராம், எனக்குத் தூக்கம் வருகிறது.
உன் தோளில் சாய்ந்து கொள்கிறேன் “ என்று சொல்லிவிட்டு ராம் குமார் பதில் சொல்வதற்குள்
ஷைலஜா அவன் தோளில் சாய்ந்து கொண்டுத் தூங்க ஆரம்பித்து விட்டாள். மணம் வீசும் அவள்
கூந்தலை ராம் குமார் முகர்ந்து பார்த்தான். அவள் மேனியிலிருந்தும் இனிய மணம் வந்ததை
ராம் குமார் உணர்ந்து கொண்டே தூங்கி விட்டான். அதி காலை விடியும் நேரம் ஷைலஜா தன் மடியில்
படுத்து ஒரு குழந்தை போல உறங்குவதையும்,. தன்னுடைய வலது கையை எடுத்து ஷைலஜா தன் இடையில்
சுற்றியிருப்பதையும் பார்த்தான். மனதுக்குள் மெதுவாக சிரித்துக் கொண்டான். பாரீஸ் விமான நிலையத்தில் விமானம் ‘லேண்டிங்” ஆகும் போதும்
ஒரு குழந்தையைப் போல ஷைலஜா ராம் குமாரைப் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
ஒரு வாடகைக் காரில் ஏற்கனவே, ரிசர்வ் செய்திருந்த
ஹோட்டலுக்குச் சென்றார்கள். ஹோட்டலில் அறை மிகவும் அழகாக இருந்தது. சிறிய வரவேற்பறை,
விசாலமான ஹால், இரண்டு பேர் படுக்கக் கூடிய வெள்ளைப் படுக்கை விரிப்பு, ட்ரஸ்ஸிங் டேபிள்,
சிறிய டைனிங் டேபிள், சோஃபா செட்…அலங்கார விளக்குகள்…என அந்த அறை பார்ப்பதற்கு மிகவும்
ரம்மியமாக இருந்தது.
ஷைலஜா ஒரு குழந்தை போல் அந்த அறையைச் சுற்றி
வந்தாள். நிலைக் கண்ணாடி முன் நின்று தன் அழகைத் தானே பார்த்து ரசித்துக் கொண்டாள்.
சோஃபாவில் அமர்ந்தாள், உடனே எழுந்து சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். ராம் குமார்
ஷைலஜாவையே ஒரு சிறிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
“ ராம், இங்கே வா, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்
கொள்ளலாம், பிறகு குளித்து விட்டு, வெளியே செல்லலாம்.” என்றாள்.
ராம் குமாரும் கட்டிலில் ஷைலஜா அருகில் படுத்துக்
கொண்டான். ராம் குமாரின் வலது கையை எடுத்துத் ஷைலஜா தன் இடையில் போட்டுக் கொண்டாள்.
இருவரும் அப்படியே சுமார் ஒரு மணி நேரம் படுத்திருந்தார்கள். “ ராம், முதலில் நான்
குளிக்கிறேன், பிறகு நீ போய் குளிக்கலாம்” என்றாள். ராம் குமார் புன்னகையிலேயே
சரி என்றான்.
அரை மணி நேரத்தில் குளித்து விட்டு ஷைலஜா அழகு
தேவதையாக நடந்து வந்தாள். இருவரும் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு முதலில் ‘ஈஃபில் டவர்’ பார்க்கலாம்
என்று முடிவு செய்தார்கள். ஒரு வாடகைக் காரில் பின் சீட்டில் நெருக்கமாக அமர்ந்தார்கள்.
ராம் குமார் வலது கையை எடுத்து ஷைலஜா தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
‘ஈஃபில் டவர்’ 324 மீட்டர் உயரம் இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் நபர்கள்
வருகை தருகிறார்கள். ராம் குமார், ஷைலஜா இருவரும் டவரின் உயரம் வரை ‘லிஃப்டில்’ சென்றார்கள்.
பயமோ என்னவோ, ஷைலஜா ராம் குமாரைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். டவரின் உயரத்திலிருந்து
பார்க்கும் போது மின் விளக்குகளால் பாரீஸ் நகரமே ஒரு சொர்க்கம் போலத் தெரிந்தது. இருவரும்
அங்கே இருந்த ஒரு ‘ரெஸ்டிராண்டில்’ இரவு உணவை முடித்துக் கொண்டார்கள்.
டவரின் உச்சியிலிருந்த ராம் குமாரும் ஷைலஜாவும் ஒருவரை ஒருவர் கன்னங்களில் முத்தமிட்டுக்
கொண்டார்கள். பாரீஸ் நகரத்தில் காதலர்களோ, கணவன் மனைவியோ வெளியிடங்களில் முத்தமிடுவது
இயல்பான ஒரு நிகழ்வு. ஆனால் ஏனோ தெரியவில்லை, ஷைலஜா உதட்டில் முத்தங்கள் பெற விரும்பியதில்லை.
டவரிலிருந்து கீழே இறங்கி வந்ததும், ராம் குமார்,
“ ஷைலு, மை டியர் ஷைலு, ஐ லவ் யூ ” என்றான். ஷைலஜா தன்னுடைய அழகான விழிகளை
விரித்து வியப்புடன், ராம் குமாரைப் பார்த்து, : “என்ன ராம் இது? கல்லூரி நாட்களிலிருந்த
மன நிலையில் நான் இப்போதில்லை. காரணம் எனக்கேப் புரியவில்லை. உனக்கு நான் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, ஐ யம்
வெரி சாரி” என்றாள். ராம் குமார் ஒன்றும் பேசவில்லை. ராம் குமார் கண்களில்
சிறிய ஏமாற்றம் தெரிந்தது.
தங்கியிருந்த விடுதிக்கு வந்ததும். பாத் ரூமில்
இருவரும் முகம் கழுவிக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்தார்கள். “ ராம், நான் உன்னுடைய
மடியில் படுத்துக் கொள்ளவா” என்று கேட்டுக்
கொண்டே ஷைலஜா ராம் குமாரின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.. ஷைலஜா கூந்தலுக்குள்
தன் விரல்களை நுழைத்து, மெதுவாக வருடினான். ராம் குமாரின் வலது கையை எடுத்துத் தன்
இடையில் ஷைலஜா வைத்துக் கொண்டாள். ராம் குமார் கண்களுக்கு ஷைலஜா ஒரு குழந்தையைப் போலத்
தோன்றினாள். சில நிமிடங்களில் ஷைலஜா தூங்கி விட்டாள். விடியும் பொழுது இருவரும் கட்டிலில்
தூங்கிக் கொண்டிருந்தார்கள். தன் இடையில் இருந்த ராம் குமாரின் வலது கையை ஷைலஜா அழுத்தமாகப்
பிடித்திருந்தாள்.
மறு நாள் காலை ராம் குமார் ஷைலஜா இருவரும் பாரீஸில்
பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து ஒரு ‘லிஸ்ட்’ தயார் பண்ணினார்கள். முதலில் 700
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ‘நாட்ரடாம் கதீட்ரல்’ என்ற பிரமாண்டமான சர்ச் இருக்கும்
இட்த்திற்குச் சென்றார்கள். 387 படிகள் இருந்தன. சர்ச்சில் இருந்த கலை நயம் மிக்க அழகான சிற்பங்களை ரசித்துக் கொண்டே நடந்தார்கள்..ராம்
குமாரின் வலது கை ஷைலஜாவின் இடையைச் சுற்றிருந்தது.
அடுத்ததாக, 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ‘லூர்
மியுசியம்’ மற்றும்
19 ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்ட ‘ஆர்க் ஆஃப் ட்ரையம்ப்’ – நெப்போலியனின் வெற்றிகள் பொறிக்கப்பட்ட வெற்றிச் சின்னம் இரண்டும்
பார்த்தார்கள். இரவு உணவை முடித்து விட்டு .தங்கியிருந்த அறைக்கு வந்தார்கள். இருவரும்
தனித் தனியாகக் குளித்துவிட்டு, நேற்றுப் போல் சோஃபாவில் ராம் குமார் மடியில் தலையை
வைத்து ஷைலஜா படுத்துக் கொண்டாள்.. வழக்கம் போல ராம் குமாரின் வலது கை ஷைலஜாவின் இடையைச்
சுற்றியிருந்தது.
மூன்றாம் நாள் திட்டமிட்டபடியே, 130 மீட்டர்
உயரத்தில் அமைந்திருந்த ‘மான்ட் மார்ட்டர்’ குன்றில் இருந்த பிரமாண்டமான வெள்ளை
நிறம் கொண்ட கட்டிடத்தில் இருந்த அற்புதமான சிற்பங்கள், மற்றும் ஓவியங்களைப் பார்த்து
ரசித்தார்கள். சில சிற்பங்களும், ஓவியங்களும் ஆடைகளின்றி நிர்வாணமாக இருந்ததைக் கண்டு
வியப்புடன் பார்த்த ஷைலஜா முகம் சிவந்து ராம் குமாரிடம் வேறு இடம் செல்ல அவன் கைகளைப்
பற்றி இழுத்தாள். “ஷைலஜா, இதெல்லாம் இயற்கைதானே? நாமெல்லாம் ஆடைகளின் றித்தானே பிறந்தோம்.
ஏன் வெட்கப் படுகிறாய்?” என்று கேட்டு
விட்டுச் சிரித்தான். பிறகு அங்கிருந்து ‘லிடோ’ என்ற பிரபல
கேளிக்கை விடுதிக்குச் சென்றார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த ‘கேபரே’ நடனத்தில்
இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு சின்ன சின்ன அசைவுகளுடன் முத்தங்கள் பரிமாறிக்
கொண்டு இஷ்டத்திற்கு சிரித்தபடியே ஆடினார்கள். நாளை இரவு இந்தியா திரும்ப வேண்டும்
என்று இருவருமே மனதுக்குள் நினைத்தார்கள்..
தங்கியிருந்த அறைக்குத் திரும்பியவுடன், ஷைலஜா,
“ ராம், இன்று நான் முதலில் குளிக்கப் போகிறேன். குளித்து முடித்தப் பின், என்னுடைய
தலையைத் துவட்டி விட வேண்டும். சரியா? என்றாள். ராம் குமாருக்கு ஷைலஜாவைப் புரிந்து
கொள்ள முடியவில்லை. ஒரு புன்னகையுடன் சரி என்றான்.
குளியலறையில் நுழைந்த பின் கதவைத் தாளிட்டாள்.
பிறகு ஆடைகளை முழுவதும் களைந்து விட்டு ‘ஷவரில்’ குளித்தாள்.
சின்ன வயதில் தான் குளிக்கும் போது ஒரு நாளும் அம்மாத் தன்னை குளிப்பாட்டியதோ, தலை
துவட்டி விட்டதோ இல்லை; என்று நினைக்கும் போது ஷைலஜாவின் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர்
மாலை மாலையாக வழிந்து கொண்டே இருந்தது.
குளியலறையிலிருந்து டவலைச் சுற்றியிருந்த ஷைலஜா
வெளியே வந்ததும், கண்ணாடி முன் போய் நின்று கொண்டு, “ராம்” என்று அழைத்தாள்.
ராம் குமார் இரண்டு டவல்களுடன் வந்து, ஒரு டவல் கொண்டு தலையைத் துவட்டி விட்டான்; மற்றொரு
டவலை ஷைலஜாவின் தலையை இன்னும் நன்றாகத் துவட்டிவிட்டு கொண்டை போடுவது போல சுற்றி விட்டான்.
சிறிது நேரம் ‘ஹேர் டிரையரைப்’ போட்டு விட்டான்.
இருவரும் சோஃபாவில் அமர்ந்து கொண்டார்கள்.
தன்னுடைய விரல்களால் ஷைலஜாவின் தலை முடிகளை சிக்கல் பிரித்து ராம் குமார் கோதி விட்டான்.
மீண்டும் ஷைலஜாவின் கண்களில் கண்ணீர் திரண்டன. அழகிய கன்னங்களில் கண்ணீர் வழிந்து,;
ராம் குமார் விரல்களையும் நனைத்தன. ‘ என்ன ஷைலு, என்ன இது? நான் ஏதாவது தப்பாக நடந்து
கொண்டேனா? உன் மனம் வருந்தும் படி ஏதாவது பேசினேனா? என்று ஷைலஜாவின் கன்னங்களில் வழிந்த
கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துக் கொண்டே கேட்டான்.
“ ராம், நான் பிறந்த நாள் முதல் இன்று வரை என்
அம்மா மடியில் நான் தலை வைத்துப் படுத்ததே இல்லை; ‘ஷைலு’ என்று என்
அம்மாவோ, அப்பாவோ என்னைக் கூப்பிட்டதோ, கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொஞ்சியதோ
இல்லை;.என்னுடைய அம்மா, என்னைக் குளிப்பாட்டியதோ, எனக்கு ஆசை ஆசையாய் ஒரு நாளும் உணவு
ஊட்டியதோ இல்லை; அப்பாவோ, அம்மாவோ தங்களுடைய காரில் என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றதில்லை:
சின்ன வயதில் என்னுடன் படித்தத் தோழிகளை காரில் வந்து பள்ளியில் விடும் போது அவங்க
அப்பாவோ, அம்மாவோ கன்னத்தில் முத்தமிட்டு, ‘டாட்டா’ காட்டுவதை நிறைய தடவை ஏக்கத்தோடு
பார்த்திருக்கிறேன். எங்க வீட்டு ஆயாவுடன், காரை டிரைவர் ஓட்ட நான் மட்டும் தனியாகப்
பள்ளிக்குச் செல்வேன்.
கல்லூரி விடுதியில் நான் மூன்று ஆண்டுகள் இருந்த
போது ஒரு நாள் கூட என்னை அப்பாவோ, அம்மாவோ வந்து பார்த்ததில்லை; அதனால்தான் ராம், நான்
உனக்கு முத்தங்கள் கொடுத்ததற்கும், உன்னிடமிருந்து நிறைய முத்தங்கள் வாங்கியதற்கும்
காரணம். உன் வலது கை என்னுடைய இடையில் இருக்கும் போது நான் உணர்ந்த பாதுகாப்பு என்
அப்பாவிடமிருந்தோ, அம்மாவிடமிருந்தோ ஒரு நாளும் எனக்குக் கிட்டியதில்லை. அப்பா, அம்மா
என்று இருவரும் எனக்கு இருந்தும் இந்த உலகத்திலேயே அன்பும், பாசமும் கிடைக்காத மிகவும்
பரிதாபமான அனாதை நான்தான் ராம்” என்றெல்லாம் சொல்லி ஷைலஜா அழுதாள். .ராம் குமார் ஷைலஜாவை
மெதுவாக அணைத்துக் கொண்டான். ஷைலஜாவே .தொடர்ந்து பேசட்டும் என்று ராம் குமார் அமைதியாக
இருந்தான்.
“ராம், நான் இன்று உன்னிடம் கேட்டதும், பெற்றதும்
இதுவரை என்னுடைய வாழ்வில் எனக்குக் கிடைக்காதவை;. நான் உன்னை தயக்கம் இல்லாமல் முத்தங்களிட்டதும்,
உன் முத்தங்களை நான் பெற்றுக் கொண்டதும், உன்
வலது கை என்னுடைய இடையைச் சுற்றிய போது நான் எண்ணிய பாதுகாப்பு உணர்வும் … என்னால்
மறக்க முடியாதவை. ராம், … ராம்”… என்று சொல்லிக் கொண்டே ராம் குமார் தோளில் சாய்ந்தாள்.
ராம் குமார் அப்படியே அவளைத் தன் இரு கரங்களுக்குள் சிறை வைத்தான். அவள் கன்னங்களில்
அழுத்தமாக ஒரு முத்தமிட்டான். ஷைலஜாவின் கண்ணீர் வழிந்த கன்னங்களில் ராம் குமாரின்
உதடுகள் பட்டதும் உப்புக் கரித்தன.
“
ஷைலு, நீ நினைத்த
அன்பும், பாசமும் என் மூலமாக உனக்குக்
கிடைத்து விட்டது என்று நீ உண்மையாகவே உணர்ந்தால் என்னை விட பாக்கியசாலி இந்த உலகில் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். ஷைலு, உன்னை நான் முழுவதுமாகப் புரிந்து
கொண்டேன். உன் மேலுள்ள
என்னுடைய அன்பும், பாசமும்
ஒரு நாளும் மாறாது.
என்னை நம்பு ஷைலு” என்று ராம் குமார் சொன்னதும்
ஷைலஜா சிறிது நிம்மதியுடன் புன்னகை செய்தாள்..
பிறகு
இருவரும் மறுநாள் பார்க்கத்
திட்டமிட்ட ‘ப்ளேஸ் ஒஃப் வெர்சைலெஸ்’ என்ற புகழ் பெற்ற மாளிகைகளும், தோட்டங்களும் நிறைந்த இடம்.. அங்கு சென்றவுடன் இருவரும் சில நேரங்களில் கைளைக்
கோர்த்துக் கொண்டும், சில நேரங்களில் ராம் குமாரின் வலது கை ஷைலஜாவின் இடையை அணைத்தவாறும்
இருக்கக் காலாற ஏதேதோ பேசிக் கொண்டே நடந்தார்கள்.
‘ஹவுஸ் ஆஃப் மிர்ர்’ என்ற இடத்தில்
நுழைந்ததும் அங்கிருந்த கண்ணாடிகளில் எல்லாம் நூற்றுக் கணக்கான ஷைலஜா இன்னும் அழகாகத்
தெரிந்தாள். தேர்ந்தெடுத்த மிகவும் திறமையுள்ள சிற்பி ஒருவன் வடித்த செப்புச் சிலை
போல சகல சாமுத்ரிகா லட்சனங்களும் பொருந்திய தேவலோகப் பெண்தான் இந்த ஷைலஜா என்று அந்த
அறையிலிருந்த அத்தனைக் கண்ணாடிகளும் கட்டியம் கூறிக் கொண்டே இருந்தன..ராம்குமாரும்
ஷைலஜாவும் முத்தமிட்டுக் கொண்டதை அங்கிருந்த அத்தனைக் கண்ணாடிகளும் அழகாகப் பிரதிபலித்தன.
ஷைலஜாவுக்கு அந்த அறையை விட்டு வெளியே வர மனமேயில்லை. ஷைலஜாவுக்குத் தன் இளமையின் மீதும்,
தன் அழகின் மீதும் அவ்வளவு பெருமை. ராம் குமார் அவள் கையைப் பிடித்து சிரித்துக் கொண்டே
கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றான்.
தங்கியிருந்த அறைக்கு இரவு 7 மணிக்கு இருவரும்
வந்து சேர்ந்தார்கள். இருவரும் குளித்துவிட்டு அங்கேயே டின்னருக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.
அந்த பாரீஸ் ரெஸ்ட்ராண்டில் இலங்கையைச் சேர்ந்த ஒரு ‘செஃப்’ இருந்ததால்
இட்லி, தோசைகள், சட்னி, சாம்பாருடன் சுடச் சுட வந்தன. ஷைலஜா விரும்பியபடி, ராம் குமாரே
இட்லி, தோசைகளை சட்னி, சாம்பாரில் தோய்த்து ஷைலஜாவின் வாயில் ஊட்டி விட்டான். ஒரு குழந்தை
போல மிகவும் மகிழ்ச்சியாக ஷைலஜா சாப்பிட்டாள். ராம் குமாரும் கூடவே சாப்பிட்டு முடித்தான்.
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் அங்குள்ள சேனல்களில் சில நிக்ழ்ச்சிகள் பார்த்தார்கள்.
“ராம் எனக்குத் தூக்கம் வருகிறது” என்ற ஷைலஜா
அப்படியே அவன் மடியில் சரிந்தாள், உடனே ராம் குமார் அவளிடம் “படுக்கையிலேயே படுத்துத்
தூங்கலாம்” என்றான்.
படுக்கையில் இருவரும் நெருக்கமாகப் படுத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் ராம் குமாரின்
வலது கையை எடுத்துத் தன் இடையில் போட்டுக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து, ஷைலஜாவின்
உதடுகள் “ராம் .. ராம் குமார்” என்று முணு
முணுத்தன; அவள் தன்னுடலை ராம் குமாரின் இரண்டு கைகளுக்குள் கொடுத்தாள். ராம்குமாரும்
ஷைலஜாவை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டான். “ஷைலு… ஷைலு ஐ லவ் யூ” என்று சொல்லிக்
கொண்டேயிருந்தான்.
“செம்புலப் பெய நீர் போல அன்புடைய நெஞ்சஙகள்
கலந்தன” என்ற குறுந்தொகைப்
பாடலுக்கு அங்கு விளக்கம் கிடைத்தது.. அன்று இரவு நடந்தன எல்லாம் இனிதே நடந்தன.
காலையில் ராம் குமார்தான் முதலில் கண் விழித்தான்.
ஷைலஜா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கன்னத்தில் மெல்லிதாக ஒரு முத்தம் கொடுத்து
விட்டு குளிக்கச் சென்றான். ராம் குமார் குளியலறையிலிருந்து வெளியே வந்த பின்னும் ஷைலஜா
இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். ராம் குமார் அவள் அருகில் சென்று, “ஷைலு, மை டியர் ஷைலு, ஷைலஜா”… என்று அழைத்தான்.
தன்னுடைய அழகிய விழிகளைத் திறந்து பார்த்த ஷைலஜா சிறிய புன்னகையுடன் ராம் குமாரை நோக்கினாள்.
ஒரு குழந்தைத் தன்னைத் தூக்கச் சொல்லுவது போல
தன் இரண்டு கைகளையும் நீட்டினாள். .ராம் குமார் ஷைலஜாவை அப்படியேத் தன் இரண்டு கைகளில்
அள்ளி எடுத்தான். ராம் குமாரிடமிருந்து ஒரு புன்னகையுடன் தன்னை விடுவித்துக் கொண்ட
ஷைலஜா குளிக்கச் சென்றாள்.. முந்தின நாள் இரவு நடந்த சம்பவங்களைப் பற்றி இருவரும் ஒன்றும்
பேசவில்லை.
அன்று பாரீஸில் இருந்த ஒரு இந்துக் கோயிலுக்குச்
செல்ல முடிவு செய்தார்கள். இருவரும் நல்ல புத்தாடைகள் அணிந்து கொண்டார்கள். ஆரஞ்சு
வண்ணத்தில் சேலையும், சட்டையும், அதே வண்ணத்தில் காதுகளில் தோடுகளும், கைகளில் வளையல்களும்
அணிந்திருந்த ஷைலஜா ஒரு இணையில்லாத அற்புதமான அழகியாக ராம் குமார் கண்களுக்குத் தெரிந்தாள்.
ஷைலஜா போன்ற ஒரு அழகியப் பெண் இந்த உலகத்தில் வேறு எங்கும் இருக்க முடியாது என்று எண்ணியவாறு,
அவளைக் கட்டியணைத்து அவளுடைய இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டான். பைஜாமா, குர்தா அணிந்திருந்த
ராம் குமாரும் அழகான வாலிபனாகத் தோன்றினான். ஷைலஜாவும், “ராம், இன்று நீ ரொம்ப அழகாக
இருக்கிறாய்” என்று சொன்னவாறு
அவனை முத்தமிட்டாள்.
அது ஒரு அழகான கிருஷ்ணர் கோயில், கிருஷ்ணர்,
ராதை இரண்டு உருவங்களும் மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும் இருந்தன. தமிழ் நாட்டைச்
சேர்ந்த பூஜை செய்பவர் அருகில் வந்து இருவருடைய நட்சத்திரங்கள், இராசிகள் கேட்டு அர்ச்சனை
செய்தார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்று ஆசீர்வாதம் வழங்கினார். ராம் குமார், ஷைலஜா இருவரும் புன்னகை செய்தார்கள்.
பாரீஸில் இன்னும் சில இடங்களைப் பார்த்து விட்டு,
தங்கியிருந்த அறைக்குத் திரும்பினார்கள். சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, எல்லாவற்றையும்
பெட்டிகளில் எடுத்து வைத்தார்கள்., அறையைக்
காலி செய்து விட்டு, இருவரும் விமான நிலையம் வந்தடைந்தார்கள். இருவருடைய கைகளும் அழுத்தமாக
இணைந்திருந்தன. விமானத்தில் வசதியான இருக்கைகள் கிடைத்தன. விமானத்தில் தந்த டின்னர் சாப்பிட்டு விட்டு, இருவரும்
தூங்கினார்கள். சிறிது நேரம் ஷைலஜா ராம் குமாரின் தோளிலும், பிறகு அவன் மடியிலும் படுத்துத்
தூங்கினாள்.
பெங்களூர் ‘ஏர்போர்ட்டில்’ விமானம்
தரையிறங்கியதும் இருவரும் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு இறங்கினார்கள். ராம் குமாரின்
வலது கை ஷைலஜாவின் இடையைச் சுற்றியிருந்தது. வெளியே வருமுன் சில நிமிடங்கள் இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்தபடியே கண்கள் கலங்க சிலைகள் போல நின்றார்கள். பிறகு சில வினாடிகள்
கட்டிப் பிடித்து முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
ஷைலஜா,“ ராம், உனக்கு மிகவும் நன்றி, என்னுடைய
வாழ்க்கையில் என் மனதிலிருந்த ஆசைகள், கனவுகள் எல்லாம் உன்னால்தான் நிறைவேறின. என்னுடைய
மனம் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஏதோ ஒரு வகையில் திருப்தியாகவும் இருக்கிறது. ஒரு போதும்
என் வாழ் நாளில் உன்னை நான் மறக்கவே மாட்டேன். என்னால் மறக்கவும் முடியாது ராம்!. ‘ஐ லவ் யூ’ என்று நீ சொன்னதற்கு என்னால் பதில்
சொல்ல முடியவில்லை; என்னை மன்னித்து விடு ராம் “ என்று சொல்லி விட்டு அழுதாள்.
ராம் குமார்,” ஷைலு, நீ என்னிடம் மன்னிப்பு
எல்லாம் கேட்காதே, அழாதே. ஷைலு, உன்னை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன். நீண்ட நாட்களாக
உன் மனதிலிருந்த ஆசைகள், ஏக்கங்கள் எல்லாவற்றையும் கடந்த சில நாட்களில் என்னால் உணர்ந்து
கொள்ள முடிந்தது. கல்லூரியில் படிப்பு முடிந்து நாம் இருவரும் பிரிந்து சில ஆண்டுகளாகியும்
கூட அன்று நாம் சந்தித்த நிகழ்வு, பாரீஸ் செல்ல முடிவு செய்து, நாம் இருவரும் பாரீஸ்
சென்று வந்தது எல்லாமே கனவு போல இருக்கிறது. ஷைலு, உன்னையும் பாரீஸில் நாம் சுற்றித்
திரிந்த நாட்களையும், பார்த்த இடங்களையும், அன்புடன் நீ கொடுத்த முத்தங்களையும் என்
வாழ்க்கை முழுவதும் என்னால் மறக்க முடியாது;
மறக்கவும் மாட்டேன்..
நீ பதில் சொல்லாவிட்டாலும், நான் மீண்டும் சொல்லுகிறேன். ‘ஷைலு ஐ லவ் யூ “ என்று
சொல்லவும் ஷைலஜா ராம் குமாரைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ராம் குமாரின் வலது கை
ஷைலஜாவின் இடையை அணைத்திருந்தது.
இருவர் விழிகளிலும் கண்ணீர்த் துளிகள் திரண்டன.
கண்களில் கண்ணீர் வழிந்தன. இருவர் இதயங்களும் வலித்தன. வெளியே வந்ததும் இரண்டு வாடகைக் கார்களில் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றார்கள்.
ஒரு வாரம் அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததால்
ராம் குமாருக்கு ஷைலஜாவை சந்திக்க நேரமில்லாமல்
போய் விட்டது. அலை பேசியில் முயன்றும், ஷைலஜாவின் அலை பேசி அணைக்கப் பட்டிருப்பதாகவே
இருந்தது. மறு வாரம் திங்கள் கிழமை ராம் குமார் ஷைலஜா வேலை பார்க்கும் அலுவலகம் சென்று
விசாரித்தான். அங்கு வரவேற்பில் அமர்ந்திருந்த ஒர் பெண், “ஷைலஜா வேலையை ‘ரிசைன்’ பண்ணிவிட்டு
சென்ற வாரமே போய் விட்டாள். எங்கு போகிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை” என்றாள்.
ராம் குமாருக்குத் தாங்க முடியாத ஏமாற்றமாக இருந்தது.
மனதை இனம் புரியாத வேதனை வாட்டியது. வலது கை
ஷைலஜாவினுடைய வள வளப்பான இடையைத் தேடியது. மனம் வலித்தது. இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில்
ஷைலஜாவை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்லாமல் ராம் குமாரின் இரண்டு கண்களும்
கலங்கின;
சென்னையில் ஷைலஜா :, தன்னுடைய ஆசைகள், கனவுகள்,
விருப்பங்கள் எல்லாம் நிறைவேறி விட்டன என்ற திருப்தியுடன் அப்பா, அம்மாவுக்குச் சொந்தமான
கம்பெனியில் உதவி நிர்வாக அதிகாரியாக சேர்ந்து விட்டாள். தன்னுடைய வாழ்க்கையில் இனி
மேல் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் தீர்மானமாக முடிவெடுத்தாள். தாய் தந்தை
இழந்த அல்லது தாய் தந்தை இருந்தும் அன்புக்காக
ஏங்கும் ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கம்பெனியில் கிடைக்கும்
லாபத்தில் 25 சதவீதம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்குத் தன் அப்பா, அம்மா இருவரும்
சம்மதித்த பின்புதான்,, தான் உதவி நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றதையும் பெருமிதமாக
நினைத்துப் பார்த்தாள். பெற்றோர்கள் இருவரும் இருந்தும், அவர்களின் அன்புக்காக ஏங்கும்
நிலை தன்னைப் போல் எந்த ஒரு பெண்ணுக்கும் இனி வரக் கூடாது என்பதை எண்ணித் தன்னால் முடிந்தவரை
நேரில் சென்று அந்தக் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதுதான் தன் வாழ்க்கையின்
இலட்சியம் என்று எண்ணித் திருப்தியுடன் ஷைலஜா புன்னகைத்தாள்.
இப்போது ஷைலஜா என்ன முடிவுகள் எடுத்திருந்தாலும்,
அவள் மனதிலிருந்து ராம் குமார் மறைந்து விடுவானா என்ன? எத்தனையோ விடை தெரியாத புதிர்களுக்குக்
காலம் விடை சொல்லும் என்று சொல்லுவார்கள். ராம் குமார், ஷைலஜா இருவருடைய வாழ்க்கையைப்
பற்றிக் காலம் என்ன முடிவு செய்யப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
- ஷைலஜா என்ற
சிறுகதை இப்போது முடிந்தாலும், என்றாவது ஒரு நாள் மீண்டும் தொடரும்.
இளஞ்செழியன் என்ற புனை பெயரில் எழுதியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment