24.5.2021
பிரபல எழுத்தாளர் ஜெய காந்தன்
பிரபல வார இதழ் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு எஸ்..பாலசுப்ரமணியன் எழுத்தாளர்
திரு ஜெய காந்தன் பற்றி….பிரமாண்டமானத் திரைப் படங்கள் தயாரித்து சந்திரலேகா, ஔவையார்,
அபூர்வ சகோதரர்கள், மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு, வஞ்சிக் கோட்டை வாலிபன்,
வெளியிட்ட ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் தனயன்தான் திரு எஸ்..பாலசுப்ரமணியன்.
ஜெய காந்தனின் எழுத்துகளை முதன் முதலில் படித்த போது ஒரு சராசரி வாசகன் என்ற
முறையில் பளிச்சென்று ஈர்த்தது அந்த நடை. 1960 ஆம் கால கட்டத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியான பெரும்பாலான படைப்புகளில்
காணப்பட்ட நடையிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்த மின்சார நடை அது!
‘யார் இந்தப் படைப்பாளி? பத்திரிகை உலகம் எப்படி இத்தனை நாளும் இவரைக் கண்டு
கொள்ளாமல் விட்டது? இவரை நான் ஏன் இன்னும் சந்திக்கவில்லை? உடனே ஜெய காந்தனை சந்திக்க விரும்பினேன். சரளமான
பேச்சின் போதே கருத்துச் செறிவு அவரிடம் தெரிந்தது. ஆனந்த விகடனில் அவர் எழுதிய சிறு
கதைகள் ஒவ்வொன்றும் ஒரு வரலாறு. அதிலும் ‘அக்கினிப் பிரவேசம்’ கதை அன்றைய கால கட்டத்தில் ஏற்படுத்திய புரட்சி அலைகளை என்னால் என்றும் மறக்க
முடியாது.
கதை விவாதங்களில் அவருடன் இருந்த நேரங்கள், அந்த நினைவுகள் அவரிடம் நான் கொண்ட நட்பு காலங்களைக் கடந்த அவருடைய
எழுத்து, எல்லாம் அவர் மீது பிரமிப்பை மேலும் கூட்டுகின்றன.
ஜெய காந்தன் :
அப்போது ஆனந்த விகடன் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே போராட்டம்
நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு சிறு கதை எழுதி ஆனந்த விகடன் இதழுக்கு
அனுப்பினேன். அந்தக் கதையை மிகச் சிறந்த முறையில் வண்ணத்தில் அச்சிட்டு வெளியிட்டார்கள்.
அடிப்படையில் நான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். ஆனால் ஆனந்த விகடனின் இந்த செய்கை
அவர்களோடு நட்பு ஏற்பட வழியமைத்தது. எனக்கு ஒரு தெளிவு பிறந்த்து. ‘ கலை இலக்கிய விஷயத்தில்
வர்க்க பேதங்களுக்கும் மோதல்களுக்கும் இடமில்லை. மனிதாபிமானத்தையும் மனித வர்க்கத்திடையே
நல்லுறவையும் உருவாக்கும் வல்லமையும் திறனும் உடையவை அவை. என்ற படிப்பினையையும் தந்தது
அந்த அனுபவம்.
1960 ஆம் ஆண்டு கட்ட்த்தில், ஒரு நாள்
திரு எஸ்.பாலசுப்ரமணியன், “ உங்களைப் போன்றவர்களின் கதைகள் ஆனந்த விகடனில் நிறைய
வர வேண்டும் என்பதற்காக அந்தக் கதைகளுக்கு முத்திரை இட்டு கௌரவப்படுத்துவது என்று முடிவு
செய்திருக்கிறோம். “ என்றார்.
நான் எழுதிய பல சிறு கதைகளுக்கு முத்திரை கொடுத்தார்கள்; என்னைத் தொடர்ந்து
பலரும் சிறந்த கதைகள் எழுதி, ஆனந்த விகடனின்’முத்திரை’ பெற்றுத் தாமும்
உயர்ந்து, ஆனந்த விகடனின் தரத்தையும் உயர்த்தினார்கள்.
15 ஆண்டுக் காலம் இந்தத் தரமும் இந்த
நிறைவும் தொடர்ந்து நீடித்து வந்தது ஒரு பொற்
காலம் என்றே சொல்ல வேண்டும்.
ஜெய காந்தன் :
நிறைய சிறுகதைகளும் குறு நாவல்களும் 1960 முதல் 1980 வரை எழுதிருக்கிறார். ஒவ்வொரு
கதையிலும் அவர் படைக்கும் பாத்திரங்கள் மிகவும் அற்புதமானவை. அந்தப் பாத்திரங்கள் எல்லாம்
மிகவும் எளிமையானவை; அவையெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, மனுஷிகளைப்
போலவே அமைந்திருக்கும். கதா பாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல்களில் பலவும் நாமும்
உடனிருந்து கேட்பது போல இருக்கும். இப்படியெல்லாம் கதா பாத்திரங்களைப் படைத்து, கதைகளை
உருவாக்குவது ஜெய காந்தன் என்ற ஆளுமை நிறைந்த ஒருவருக் குத்தான் முடியும் என்று நான்
உறுதியாகச் சொல்லுவேன்.
ஜெய காந்தன் எழுதிய ஒரு கதையைப் பற்றி இன்று பேசப் போகிறேன்.
‘யுக சந்தி’ இரண்டு கால கட்டங்களில்
வாழ்ந்த கதா பாத்திரங்கள் அங்கு நிகழும் சம்பவங்கள் பற்றிய கதை. இந்தக் கதையில் கௌரிப் பாட்டிதான் முக்கியப்
பாத்திரம். சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கௌரியம்மாள் தன்னுடைய பத்தாவது வயதில் வாழ்க்கைப்பட்டு
பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் விதவையானாள்.
தன் ஒரே மகன் கணேச ஐயருடைய மூத்த மகள் கீதா. பத்தே மாதங்களில் தரித்திருந்த
சுமங்கலிக் கோலத்தை கலைத்து விட்டு விதவையாகிய சூழ்நிலை. பேத்தி கீதா கதறிக் கொண்டு தன் மடியில் வந்து விழுந்து
குமுறி அழுத நாள் முதல் கௌரிப் பாட்டி கீதாவைத் தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது
கண்ணீரில், தனது ஒட்டுதலில் இருத்திக் கொள்வதையே தன் கடமை என்று நினைத்தாள். கணவன்
இறந்த நாள் முதல் தன் மகன் மேல் வைத்திருந்த அன்பு, பாசம் எல்லாம் பேத்தி கீதா மேல்
கொண்டதற்குக் காரணம் ‘கௌரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதியெனத் தன்னையே
அவளில் கண்டாள்’.
சில மாதங்களில் கீதா ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, அதில் தேர்வாகி
நெய்வேலியிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து விட்டாள். கௌரிப் பாட்டித் துணைக்குச் செல்ல முடிவெடுக்கும் போது
‘ இந்தத் தள்ளாத வயதில் மகனையும், குடும்பத்தையும் துறந்து தனியமைப்படத் தானே வலிய
முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக் கூட எட்டாத கீதா வைதவ்ய இருளில் அடைபட்டுப்
போவாளோ என்ற அச்சம்தான்.
வாரம் ஒரு முறை கடலூருக்கு வந்து மகன் கணேச ஐயர் குடும்பத்துடன் தங்கி விட்டு,
நாவிதனிடம் தன் தலையைச் சிரைத்துக் கொண்டு போவது வழக்கம். ஒரு வாரம் சனிக் கிழமை கௌரிப்
பாட்டி பஸ்ஸிலிருந்து இறங்கித் தணலாய்த் தகிக்கும்
வெயிலில் இடுப்பில் ஏற்றிய சுமையுடன் புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய் சாய்ந்து சாய்ந்து மகன் வீடு நோக்கி
நடந்தாள். வீட்டில் பாட்டியை எல்லோரும் வரவேற்கிறார்கள். தன் பையிலிருந்த வெள்ளரிப்
பிஞ்சுகளை எல்லோரிடமும் எடுத்துக் கொடுக்கும் போது பையிலிருந்து ஒரு கவர் வந்து விழுகிறது.
அது கீதா தன்னுடைய அப்பா அம்மாவுக்கு எழுதிய கடிதம். என்ன எழுதிருக்கிறாய் என்று பாட்டி
கேட்ட போது, கடிதத்தைப் படித்து விட்டு அப்பா
சொல்லுவார் என்று கீதா சொல்லி விட்டாள்.
கணேச ஐயர் கடிதத்தில் உள்ள வரிகளைப் படிக்கும் போது, கைகள் நடுங்கின, குப்பென்று
வியர்த்தது, உதடுகள் துடித்தன. கடிதம் கீழே
நழுவியது. அதை எடுத்து கௌரிப் பாட்டி படிக்க ஆரம்பித்தாள்.
“கடந்த ஆறு மாதங்கள் தீவிரமாக யோசித்தப் பின்தான் என்னுடன் வேலை பார்க்கும்
ஆசிரியர் ஒருவரை இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.
நான் விதவை என்பது அவருக்குத் தெரியும். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட
முடியாமல் வேஷம் போட்டுத் திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகி, குடும்பத்தையும் அவமானப்
படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். என் காரியம் என் வரைக்கும்
சரியானதே!
நான் தவறு செய்வதாக நினைக்கவில்லை. உங்கள் எல்லோருடைய உறவை இழந்து விடுகிறேனே
என்ற வருத்தம் என்னை வாட்டுகிறது. இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வெளிச்சத்தைப்
பெற்று ஒரு புது யுகப் பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற எண்ணத்தில் நான் ஆறுதலும்,
மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன். உங்கள் வாழ்த்தை
எதிர்பார்க்கிறேன். இல்லை யெனில் உங்களைப் பொறுத்தவரை கீதா செத்து விட்டாள் என்று தலை
முழுகி விடுங்கள்.
என்னடா இப்படி ஆயிடுத்தே .. கௌரிப் பாட்டி.
அவ செத்துட்டா, தலை முழுகிட வேண்டியதுதான்… கணேச ஐயர்.
அடி பாவிப் பெண்ணே, தலையிலே தீயை வச்சிட்டியே…. பார்வதி.
கடிதத்தின் கடைசி வரிகள் ‘ எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள்
நலனைத் துறந்து தியாகம் செய்து விட்டார்கள்?‘
கீதா பதினெட்டு வயதில் பொட்டும், பூவும் இழந்தது அவள் விதி என்று மறந்து விடவில்லையா
அவளுடைய பெற்றோர்கள்; அதன் பின்புதானே இரண்டு குழந்தைகளைப் பெற்றார்கள்.
ஆனால், கீதாவைப் போல், அவள விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய
இந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந்தீயில் வடுப்பட்டு, வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம்
கொண்டிருந்த, அந்தக் கனவுகளையெல்லாம் கண்டிருந்த அந்த ஆசைகளையெல்லாம் கொண்டிருந்த கௌரிப்
பாட்டி அவற்றையெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்?
இரவு முழுவதும் கௌரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; ஈசிச் சேரை விட்டு
எழந்திருக்கவும் இல்லை. என்னடி இப்படி பண்ணிட்டியே
என்று மனதுக்குள் குமுறி குமுறிக் கேட்டுக் கொண்டாள். தன்னை அறியாமல் சிறிது நேரம்
கண்ணயர்ந்தாள்.
விடிந்ததும், ‘. அம்மா, நாவிதன் வந்திருக்கான். அவள் செத்துட்டானு நினைச்சு,
தலையைச் சிரைச்சு தண்ணிலே முழுகு ‘ கணேச ஐயர்.
‘ என்ன நடந்துட்டுன்னு அவளை சாகச் சொல்றே ‘ என்ன தப்பு பண்ணிட்டா அவா’ என்று கேட்டு விட்டுத் தாங்க முடியாத சோகத்துடன் அழுதாள் பாட்டி.
தொடர்ந்து, ‘கணேசா, காலம் மாறிண்டு வருது, மனுஷாலும் மாறனும்தான். கீதா பண்ணுன
காரியத்தை மனசால கூட நினைக்க முடியாத யுகம் நான் வாழ்ந்த காலம் அது. உன் சாஸ்திரம்
அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்டா. டேய் கணேசா, என்னை மன்னிச்சுக்கோடா,
எனக்கு அவ வேணும். அவளோட போறேன். என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட
எரியட்டும்.: புரிஞ்சுக்கோ , இல்லேன்னா அவளோட சேர்த்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு” என்கிறாள்.
கணேச ஐயர் ‘ அம்மா, என்று சொல்லிவிட்டு கண்ணீர் விட்டு அழறார்.
“ அசடே, எதுக்கு அழறே? நானும் ரொம்ப யோசித்துத் தான் இந்த முடிவு பண்ணினேன்.
என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தைடா”
இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற் படியிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி
நின்று, ‘ நான் போயிட்டு வரேன்.’ என்று மீண்டும்
விடை பெற்றுக் கொண்டாள்.
அதோ, அந்தக் காலை இள வெயிலில் சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப்
பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்து கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்….
வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து வரும்
ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக் கொள்ளப் பயணப்படுவதென்றால்?...
ஓ ! அதற்கு ஒரு பக்குவம் தேவை!
என்ன ஒரு அற்புதமான வார்த்தைகள். மனதை உலுக்கும் வார்த்தைகள். படிப்பவர் உள்ளம்
கலங்கும். அதுதான் ஜெய காந்தன்!
Comments
Post a Comment