கிரீன் கார்டு

                                          கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

      ஒரு நாள் காலை அமெரிக்காவில் இருந்து மகன் ராகவன், ‘ அம்மா, எனக்கும், அவளுக்கும் கிரீன் கார்டு கிடைத்து விட்டது” என்று  அலை பேசியில் சொன்னதும் கமலாம்பாளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சந்தோஷம் என்று சொல்வதா வேண்டாமா என்று யோசித்தாள். ஏனென்றால் கணேச ஐயர் கமலாம்பாள் தம்பதியருக்கு ராகவன் ஒரே மகன்; இன்னொரு பெண் பிள்ளையோ அல்லது ஆண் பிள்ளையோ வேண்டுமென்று தம்பதியினர் மனதுக்குள் நினைத்தனர். காலையில் குளித்து விட்டுப் பூஜை செய்யும் போதெல்லாம் இருவருமே வேண்டிக் கொள்வதுண்டு. ஏனோ பகவான் மனமிரங்கவில்லை.

      “ சரியப்பா, இனிமேல் நீங்கள் மூவரும் இந்தியாவுக்கு வருவீர்களா” என்று கமலாம்பாள் கேட்டாள்.“ஏதாவது முக்கியமான விஷேசம் என்றால் கண்டிப்பாக வருவோம் அம்மா. அப்பாவிடம் சொல்லிவிடு ” என்றான் ராகவன். கமலாம்பாள் கணவர் வரட்டும் என்று காத்திருந்தாள். அதி காலையில் எழுந்து விடுவதால் சமையல் வேலைகள் எல்லாம் வீட்டில் காலை 10 மணிக்குள்ளாகவே முடிந்து விடும். கணேச ஐயர் ஆபீஸ் செல்லும் போது டிபன் கேரியரில் உணவு  எடுத்துக் கொள்வார். ராகவன் கல்லூரி கேண்டீனில் சில நாட்கள் நண்பர்களுடன் சாப்பிடுவானே தவிர, அவனுக்கும் அம்மா கொடுத்து விடும் உணவுதான் வேண்டும். உத்தியோகம் தேடி வெளியூர் செல்ல நேர்ந்தால் ராகவன் என்ன செய்வானோ என்று  கமலாம்பாள் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் வெளியூரென்ன, தன் பையன் வெளி நாட்டிலேயே நல்ல சுவையாக டிபன், சமையல் எல்லாம் செய்வதைப் பார்த்து ஒரு முறை கமலாம்பாள் தன் கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கும் போது ஆச்சரியப்பட்டாள்.

      கணேச ஐயர் இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்று சொந்த ஊர் கல்லிடைக் குறிச்சியில் செட்டிலாகி ஆறு ஆண்டுகளாகி விட்டன. தினம் காலை தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து விட்டு வருவது அவர் பழக்கம். ஆற்றின் ஒரு பக்கம் அம்பாசமுத்திரம் மறு பக்கம் கல்லிடைக் குறிச்சி. இரண்டுமே மிகவும் அழகான ஊர்கள். நிறைய சினிமா படப் பிடிப்பு இந்த ஊர்களில் நடைபெறும். தினம் டிபன் முடிந்து, 11 மணிக்குக் கமலாம்பாள் தரும் சூடான ஃபில்டர் காபி குடித்து விட்டு வெளியே சென்றால், அநேகமாக 1 மணிக்குத்தான் திரும்ப வீட்டுக்கு வருவார். வழக்கமாக சந்திக்கும்  நாலைந்து நண்பர்கள், அருகில் உள்ள  ஹோட்டலில் தேநீர், அரட்டை என்று நேரம் சென்று விடும். அப்படி நண்பர்கள் யாரும் வரவில்லையென்றால், லைப்ரரியில் நாளிதழ்கள் மற்றும்  புத்தகங்கள் படித்தால் நல்ல பொழுது போய்விடும். 

      கணேச ஐயர் வீட்டில் நுழைந்தவுடன் சிறிது நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, கமலாம்பாள் கொடுத்தத் தண்ணீரை மெதுவாகக் குடித்தார். :

      “ஏன்னா, நம்ம ராகவனுக்கும் அவன் மனைவிக்கும் கிரீன் கார்டு கிடைத்து விட்டதாம். அப்பா வந்ததும் சொல்லிடு அம்மா’ என்றான், என்னவோ இந்த இரண்டு வரிகள் பேசுவதற்குள்  கமலாம்பாளுக்குத் தொண்டை அடைப்பது போல இருந்தது. கணேச ஐயர் ஒன்றுமே சொல்லவில்லை. கமலாம்பாள் முகத்தைப் பார்த்தார். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தயாரக இருந்ததைக் கவனித்தார். இந்த வேளையில் தான் சொல்லும் வார்த்தைகள் அவளை மேலும் கலங்க வைத்து விடக் கூடாது என்று நினைத்து, ‘ கமலா, நல்ல செய்திதானே, இனி ராகவனும், அவன் மனைவியும் குழந்தைகளுடன் அமெரிக்காவாசிகள். நாம் இந்தியர்கள்; அவர்கள் எல்லாம் அமெரிக்கர்கள். இருந்து விட்டுப் போகட்டுமே’ என்றார் கணேச ஐயர்.

      மதியம் உணவருந்தி விட்டு, சிறிது நேரம் இரண்டு பேரும் ஓய்வெடுப்பது வழக்கம். மாலை ஃபில்டர் காபி, பிறகு ஒரு அரை மணி நேரம் வாக்கிங். இரவு உணவு முடிந்த பின் படுக்கைக்குச் செல்லும் முன்பு டி வி ஒரு மணி நேரம் பார்ப்பார்கள். ஆனால் இன்று என்னவோ இருவருக்கும் டி வி பார்க்க இஷ்ட மில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் சொல்ல முடியாத சோகத்துடன் பார்த்த படியே இருந்தார்கள். சிறிது நேரத்தில் படுக்கச் சென்றார்கள்.

      கமலாம்பாள், “ ஏன்னா, ராகவனுக்குக் கல்யாணம் ஆகு முன்பு நாம ஒரு தடவை அமெரிக்கா போயிருந்தோமே, அப்ப நம்ம பையன் ஆசை, ஆசையா அங்கு நிறைய இடங்களுக்கு நம்மை அழைச்சுண்டு போனானே! ஹாலிவுட், யுனிவர்சல் ஸ்டுடியோ, லாஸ் வேகாஸ், சாண்டியாகோ டால்பின் ஷோ, லாஸ் ஏஞ்செலஸ் என்று பல இடங்கள் ரொம்ப சந்தோஷமா பார்த்தோமே, நீங்க சின்ன பிள்ளையாட்டம் வேடிக்கை பார்த்துண்டே வந்தேள். நம்ம வாழ்க்கையிலே அதையெல்லாம் எப்படிங்க மறக்க முடியும்? ராகவனுக்கு நம்ம மேலே எத்தனைப் பிரியம் இருந்தா அப்படி அழைச்சுண்டு போவான்? சில நாட்கள்ளே அவனே நமக்கு சமைச்சுப் போட்டான். அட, நம்ம பையனா இத்தனை டேஸ்டா பண்றான் நாம இரண்டு பேரும் ரொம்பவே அதிசயப் பட்டோம்.” என்றாள்.

      கணேச ஐயர், “ ஏன் கமலா, ரொம்ப வாட்டி நம்மை அமெரிக்காவில் உள்ள வெஜிடேரியன் ஹோட்டல்களுக்கு அழைச்சுண்டு போயிருக்கான். அந்த ஹோட்டல்களில் கிடைத்த சாம்பார், சட்னி நம்ம ஊரில் கூட இல்லை. அவ்வளவு ருசியாக இருந்தது. உனக்குத் தான் தெரியுமே, இட்லிக்கோ, தோசைக்கோ, சட்னி, சாம்பார் நன்னா இருந்த்துண்ணா, நான் கூட இரண்டோ, மூன்றோ அதிகம் சாப்பிடுவேன் இல்லையா? ஆனால் அங்கோ ஒரு தோசை 7 டாலர், இரண்டு இட்லி 5 டாலர் என்கிற போது, நன்னா இருந்தாலும் நாம போதும், போதும் என்று சொன்னோம் இல்லையா?” என்றார்.

      “அப்ப நம்ம பிள்ளை ராகவன் ‘ இந்திய ரூபாய் கணக்குப் பார்க்காதீங்கோ, தோசை ஒன்னு 7 ரூபாய், இரண்டி இட்லி 5 ரூபாய் என எண்ணிக்குங்கோ” என்று சொல்லி சிரித்தான். அது போல ஒரு காபி ஒரு டாலர்தான் இல்லையா? ராகவன் ஆபீஸிலிருந்து எப்பவும் லேட்டாகத்தான் வருவான். அந்த வேளைகளில் நாம காலார நடந்து போய் மெக் டோனால்ட்ஸ் கடையில் ஒரு டாலருக்கு ஃபிங்கர் சிப்ஸ், ஒரு டாலருக்கு காபி வாங்கி நாம் இரண்டு பேரும் சாப்பிடுவோம் இல்லையா? என்றாள்  கமலாம்பாள்

      “சில நாட்கள் அவனோட நண்பர்களை அழைத்து வந்தா, நீ நன்னா சமைச்சுப் போட்டியே கமலா, இப்படி ஒரு சாம்பார், காய்களை எங்க ஆயுள்ள நாங்க சாப்பிட்டதில்லை என்று பசங்க சொன்னாங்க. கமலா இப்ப ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, என்னுடைய அம்மா கையாலே இருபத்தி ஐந்து ஆண்டுகள் சாப்பிட்டிருக்கேன்; உன்னோட கையாலே நாற்பது வருஷம் கமலா, நாற்பது வருஷம்!. இன்னிக்கு நான் ஆரோக்கியமா இருக்கேன்னா என்னுடைய அம்மாவும், இந்தக் கமலாம்பாளும்தான் காரணம்” என்றார் கணேச ஐயர் சிரித்துக் கொண்டே!.

      கமலாம்பாள் ஒன்றும் சொல்லவில்லை. மெதுவாக மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். இந்த மனுஷன் இந்த வார்த்தைகளை எத்தனை முறைதான் சொல்லுவார்?

      “ ஏன்னா, மணி ராத்திரி பன்னிரண்டுக்கு மேலே இருக்கும், இன்னும் தூக்கம் வரலயா? போன மாதம் திடீரென்று உயில் எழுதி வைச்சுட்டேள், நமக்கு இருக்கும் இந்த வீடு ராகவனுக்கு, நம்மிடம் வேறு சொத்துக்கள் எதுவும் கிடையாது. நீங்களோ பிரஸ்டீஜ் பதமநாபன் போல சம்பளம் தவிர ஒரு பைசா ஆபீஸில் வாங்கியது கிடையாது; எங்காத்துலே நான் ஒரே பொன்னு, உங்க தம்பி கேசவன் உங்களைப் போல உத்தியோகத்தில் இல்லை. எனவே கேசவன் மகள் சாரதாவுக்கு என்னிடம் இருக்கும் 50 பவுன் நகைகளையும் உயிலில் எழுதி விட்டோம். நமக்குப் பெண் இல்லாத குறையைத் தீர்ப்பது போல பகவான் சாரதாவை நம்ம குடும்பத்திற்கு அனுப்பியிருக்கிறார். என்னை வாய் நிறைய அம்மா என்றும் உங்களை அப்பா என்றும் அவள் அழைப்பது மனதிற்கு எவ்வளவு ஆனந்தம் தெரியுமா? சரிங்க,  மற்றதை நாளை பேசிக்கலாம், நன்னா தூங்குங்கோ” என்று  கமலாம்பாள் சொன்னாளே தவிர அவளுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை.

      திடீரென்று கணேச ஐயர் கமலாவிடம், கொஞ்சம் சுடு தண்ணீர் கொண்டு வாரியா என்று கேட்டார். என்ன, ஏது என்று கேட்காமலேயே கமலாம்பாள் கிச்சனை நோக்கி நடந்தாள். இந்த வழக்கம் கடந்த 40 வருஷங்களாகவே கமலாம்பாளிடம் இருக்கிறது. கணேச ஐயருக்கு வாய்வுத் தொந்தரவு அவ்வப்போது வருவது உண்டு. 

      “இந்தாங்கோ, சிறிது காயம் போட்டு இரண்டு தம்ளர் நீங்கக் குடிக்கிற  சூட்டிலே  இருக்கு, மட மடன்னு குடியுங்கோ” என்றாள் கமலாம்பாள்.

      ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லிக் கொண்டே இரண்டு தம்ளர் சுடு தண்ணீரையும் மெதுவாகக் குடித்தார்.

      “ கமலா, இப்ப சௌகரியமா இருக்கு. ராகவனுக்குக் கல்யாணமாகி அந்த வாண்டு பிறந்த நாளுக்குப் போனோமே, அப்ப நடந்த சம்பவங்களை இப்ப நினைத்தாலும் மனசுக்கு சங்கடமாக இருக்கு, இல்லையா. அவன் மனைவி நம்ம இரண்டு பேரிடமும் எவ்வளவு மரியாதைக் குறைவாக நடந்து கொண்டாள். நம்மிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவதில்லை. ஏதோ, கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுவாள். அயல் நாடு என்பதால் ராகவன் இரண்டு பக்கமும் பேச வேண்டிய சூழ்நிலை. நாம வாயே திறப்பதில்லை என்பது நம்ம பிள்ளைக்கு நன்றாகவே தெரியும். ராகவனும் தன் மனைவியிடம் எங்க அப்பா, அம்மா வயதானவர்கள், முதன் முதலாக இவ்வளவு தூரம் நம்மைப் பார்ப்பதற்கு வந்திருக்கிறார்கள், நல்ல படியாக நடந்து கொள்ள எத்தனையோ முறை சொன்னான். அவளோ ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பது நம்ம யாருக்கும் புரியவில்லை. ஒரு வேளை அவள் வளர்ப்பு அப்படி, நம்ம பையன் தலைவிதி இப்படி ஆகி விட்டதே என்று நம்மால் வருத்தப்படத்தான் முடிந்தது, இல்லையா?” என்றார் கணேச ஐயர்.

      “சரிதான், இப்படி பேசிண்டே இருந்தா எப்ப தூங்கிறது? இதப் பற்றி யெல்லாம் நாம இரண்டு பேரும் நிறைய தடவை பேசியாச்சு. நம்ம பிள்ளை நம்ம இரண்டு பேரிடமும் அன்பாகவும், பாசமாகவும் இருக்கான் இல்லியோ, அது போதுங்க, பேசினது போதும், கண்ணைப் பொத்திண்டு தூங்குங்கோ” என்றாள் கமலாம்பாள். 

      . “நீ சொல்றத இன்னிக்காவது நான் கேட்கிறேன். ஆமாம் ராகவன் காலையில் என்ன சொன்னான்? ஏதாவது முக்கிய விஷயம் என்றால் கண்டிப்பா வர்ரேன்னு சொன்னானா? அவன் வந்துட்டுப் போயி இரண்டு வருஷம் ஆயிருச்சுல்லே? அப்படியென்ன முக்கிய விஷயம் இப்ப வரப் போறது? ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியுது கமலா, நம்ம கடைசி நாட்கள்ள ராகவன் நம்ம பக்கத்திலே இருக்கப் போவதில்ல, இல்லையா கமலா? என்று கேட்கும் போதே கணேச ஐயர் தொண்டை அடைத்தது  கமலா, உனக்கோ, இல்லை எனக்கோ ஏதாவது நேர்ந்த பின்தான் நம்ம பிள்ளையால் வர முடியும். அந்தக் கடைசி நேரத்தில நாம அவனிடம் ஏதாவது பேச நினைத்தாலும், அவன் நம்மிடம் பேச நினைத்தாலும் முடியாது இல்லையா?” என்று கேட்டார்.     

      இதற்குக் கமலாம்பாள் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. பிறகு ரொம்ப நேரம் இருவருமே பேசவில்லை.

      காலையில் பால்காரன், பேப்பர் போடுபவன் என்று வந்து விட்டுச் சென்றார்கள்.  ஏழு மணியாகியும் கமலா ஏன் வெளியே வரவில்லை என்று பங்கஜம் மாமி கமலாம்பாள் வீட்டுக் கதவைத் தட்டினாள். பதிலே இல்லை. உடனே தன் கணவர் ராம கிருஷ்ணனிடம் சொன்னாள். உடனே இருவரும் சேர்ந்து கதவைத் தட்டியும் கதவு திறக்கவில்லை. கணேச ஐயருடைய தம்பி கேசவனை அலை பேசியில் சொல்லி உடனே வரச் சொன்னார் ராம கிருஷ்ணன்.

      கேசவன், தன் மனைவி, மகள் சாரதாவுடன் வந்தார். எல்லோரும் சேர்ந்து கதவை வேகமாகத் தள்ளியதும் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்து கொண்டது. எல்லோரும் உள்ளே சென்று பார்த்தார்கள்.

      கணேச ஐயர்,  கமலாம்பாள்  இருவரும் தனித் தனிக் கட்டில்களில் உறங்குவது போல அசையாமல் படுத்திருந்தார்கள். கேசவன் இருவர்களின் அருகில் சென்று ‘அண்ணா, அண்ணா’, ‘அண்ணி அண்ணி’ என்று அழைத்துப் பார்த்தார். இருவரிடமும் அசைவே இல்லை.  அவர்கள் உடல்களில் உயிர் இல்லை; இருவரும் இந்த உலகில் இல்லை. கேசவன் அண்ணா என்று அலறினார். சாரதா ‘அப்பா, அம்மா ‘ என்று கதறி அழுதாள். அக்கம் பக்கத்திலிருந்து நிறைய பேர் வர ஆரம்பித்து விட்டார்கள்.

      ராம கிருஷ்ணன், “ கேசவா, ராகவனுக்கு நான் வாட்ஸப்பில் சொல்லி விட்டேன். ஓ வென்று கதறி அழுதான்; கொரோனா என்பதால் விமான சேவை இல்லையே மாமா என்று மிகவும் வருத்தப்பட்டான். உன் சித்தப்பா கேசவன் சடங்கு, மற்ற காரியங்களையெல்லாம் உன் சார்பில் பார்த்துக் கொள்வார். வீடியோ அனுப்பறேன் என்று சொல்லி விட்டேன் என்றார்.

      வந்தவர்களிடம் கேசவன், ‘ நேற்று மாலைதான் அண்ணா பேசினார், அமெரிக்காவில் ராகவனுக்கும், அவன் மனைவிக்கும் கிரீன் கார்டு கிடைத்து விட்டது என்று சொன்னார். அப்படி சொல்லும் போது குரலில் சிறிது நடுக்கம் தெரிந்தது. ஏதோ அமெரிக்கா செல்லும் ஆசைப்படும் மகன் பணம் சம்பாதித்து விட்டு பத்துப் பன்னிரண்டு வருஷங்களில் இந்தியா வந்து நம்முடைய கடைசி காலங்களில் கூட்டுக் குடும்பமாக கூடவே இருப்பான் என்ற எதிர்பார்ப்பு கணேச ஐயர், கமலாம்பாள் இருவருக்கும் இருந்திருக்க வேண்டும். கிரீன் கார்டு கிடைத்து விட்டதால் இனி மேல் ராகவன் தங்கள் இருவரையும் பார்க்க வர மாட்டான்; அப்படி வந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டும் நம்முடன் தங்கி விட்டுத் திரும்ப அமெரிக்கா சென்று விடுவான் என்ற நினைப்பில் மனக் கஷ்டத்துடனும், மன அழுத்தத்துடனும், ஒரு வித ஏக்கத்துடனும் இருவரும் தூங்கியிருக்கலாம். அவர்கள் அறியாமலேயே இருவருடைய உயிர்களும் பிரிந்திருக்கலாம்.” என்று விம்மியபடியே சொன்னார்.

      பங்கஜம் மாமி சொல்லுகிறாள், ‘கணேச அண்ணாவும், கமலா அண்ணியும் எவ்வளவு தூரம் ஒற்றுமையாகவும் அந்நியோன்னியமாகவும் இருந்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் நம்மை எல்லோரையும் விட்டுப் பிரிந்து இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டார்கள். இருவரில் யார் முதலில் இறந்தார்கள் என்பது அவர்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியும் என்று எண்ணுகிறேன். அவர்கள் இருவருடைய ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுவதே கணேச அண்ணாவுக்கும், கமலா அண்ணிக்கும் நாம் எல்லோரும் செய்யும் இறுதி மரியாதை.”   

 

 

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE