திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
ஆமாம் ! திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவுக்கு மட்டும் ஏன் இந்த சுவை? காரணங்கள்
என்னவென்று பார்ப்போமா?
இராஜஸ்தானிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிங் என்ற சிங்க இனத்தவர்கள்
திருநெல்வேலி வந்தார்கள். அவர்கள் தயாரித்த இனிப்புகளில் அல்வாவின் சுவை சுற்று வட்டாரங்களில்
வசித்த வந்த மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல் அல்வா
தயார் செய்ய மாட்டார்கள். எனவேதான், மாலை 5 மணிக்குக் கடையைத் திறந்து இரவு 8 – 9 மணிக்குக்
கடையை அடைத்து விடுவார்கள். பல ஆண்டுகளாக, எனக்குத் தெரிந்து சுமார் 50 ஆண்டுகளாக,
இந்த நடைமுறை இருந்து வருகிறது.
தரமுள்ள பஞ்சாப் கோதுமையை ஊற வைத்து, கைகளால் உரலில் இட்டு அரைத்துப் பால் எடுக்கிறார்கள்.
( மற்ற கடைகளில் இயந்திரங்களில் அரைத்துப் பால் எடுப்பது வழக்கம் ).
அல்வா தயாரிக்கும் முறை, பக்குவம் சிங் குடும்பத்தின் இரகசியம். ஒரு நாள் தயாரித்த
அல்வா மறு நாள்தான் விற்பனைக்கு வரும்.
தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் ஒரு முக்கிய காரணம் என்று திரு ஹரிசிங் பல பேட்டிகளில்
சொல்லியிருக்கிறார். ஏன் ? தாமிரபரணி ஆறு புறப்படும்
பொதிகை மலையில் இருக்கும் பல விதமான மூலிகைகளில் உரசி ஓடி வந்து கடலில் கலக்கும் வரை
வழியெல்லாம் ஊற்றுக்கள் இருப்பதால் ஆண்டு முழுவதும் கோடையிலும் தண்ணீர் ஓடிக் கொண்டே
இருக்கும்.
திரு கிருஷ்ண சிங், தொடர்ந்து திரு பிஜ்லி சிங், மூன்றாவது தலைமுறை நபர்தான்
திரு ஹரி சிங். கடையில் பணியில் இருப்பவர்கள் இருவர்கள் ¼, ½, 1 கிலோ என்று பாக்கட்
பண்ணிய அல்வாவை விற்பார்கள். ஆனால் திரு ஹரி சிங் இதழில் மலர்ந்த சிறிய புன்னகையுடன்
கூட்டத்தில் நிற்கும் நபர்களுக்கு 10 ரூபாய் அல்லது 20 ரூபாய்க்கு ஒன்று அல்லது இரண்டு
கரண்டி அல்வாவை ஒரு சிறிய இலையில் வைத்துக் கொடுப்பார்.
நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் அடிக்கடி கடைக்குச் சென்று
அல்வா சாப்பிடுவது வழக்கம். அந்த நாளிலிருந்து கடைசி வரை (மார்ச், 19 ந் தேதி அங்கு
அல்வா வாங்கினேன்) கடைக்குப் பெயர் கிடையாது. ஒரு சிறிய குண்டு பல்பு, நீண்ட பலகைகளை
வைத்து கடையை அடைப்பது, திறக்கும் நேரம், அடைக்கும் நேரம், இரண்டு பணியாளர்கள், சிரித்த
முகத்துடன் திரு ஹரி சிங், முண்டியடித்து வாங்கும் கூட்டம்; எளிதில் யாராலும் மறக்க
முடியாத நிகழ்வுகள். திருநெல்வேலி நகரின் ஒரு நீண்ட சகாப்தம் முடிந்து விட்டது என்றே
சொல்லலாம். வியாபாரம் என்ற நோக்கம் மட்டும் இல்லாமல், சேவை மனப் பான்மையுடன் இயங்கி
வந்த இந்த நூற்றாண்டின் ஒரு அற்புதமான கடைதான் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா.
25.6.2020 அன்று அல்வாவின் சுவை கசந்தது.
திரு ஹரி சிங் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? 25.6.2020 அன்று காலை அவருக்குக்
கொரோனா தொற்று இருப்பதாக சொன்னார்கள். தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் அவர் மனம் திறந்து
சொல்லியிருக்கிறார். ‘ என்னால் பாரம்பரியமான கடைக்குக் கெட்ட பெயர் வந்து விட்டதே,
கொரோனா தொற்று இருப்பது தெரியாமல் வழக்கம் போல நிறைய நபர்களுக்கு அல்வா சாப்பிடக் கொடுத்து
விட்டேனே. நம்மை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரித்து வந்த மக்களுக்குத் தீங்கு செய்து
விட்டேனே’ என்று புலம்பியிருக்கிறார்.
திரு ஹரி சிங் தற்கொலை செய்து கொண்டார்; ஏனென்றால் திரு ஹரி சிங் மிகவும் நல்லவர்.
திரு ஹரி சிங் ஆயிரத்தில் ஒருவர் அல்ல; இலட்சத்தில் ஒருவர் என்று சொல்லுவது மிகையாகாது.
திருநெல்வேலி மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதாகவே
நினைக்கிறார்கள்.
நீண்ட தொலைவில் இருந்து வந்து திருநெல்வேலியில் தங்கி உலகம் முழுவதும் திருநெல்வேலி
இருட்டுக் கடை அல்வாவின் மணம், சுவை பரப்பி வந்தவர்களின் வாரிசுகள் இனி என்ன செய்யப்
போகிறார்கள்? இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
நம்மை விட்டு மறைந்த திரு ஹரி சிங் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்; அன்னாரது
குடும்பத்திற்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வோம்,.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
98941 87627
Comments
Post a Comment