திருநெல்வேலி நகரமும் பூரிக் கிழங்கு மசாலும்

 

     திருநெல்வேலி நகரமும் பூரிக் கிழங்கு மசாலும்

                                                                      கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

                                                                       முது நிலை மேலாளர் ஓய்வு, கனரா வங்கி

    

     திருநெல்வேலிக்கும் பூரிக் கிழங்குக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? திருநெல்வேலி அல்வாதானே உலகப் பிரசித்தி பெற்றது, இதில் பூரிக் கிழங்கு எப்படி வந்தது என்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வருவது நியாயம்தான்.

    எனக்குத் தெரிந்தவரை திருநெல்வேலியில் மட்டும்தான் பூரிக் கிழங்கை வித்தியாசமாக, அதாவது ஓட்டலில் சாப்பிடச் சென்றாலும் சரி, பார்சல் வாங்கினாலும் சரி, ஒரு பூரியின் மீது உருளைக் கிழங்கு மசாலா வைத்துப் பின் அதன் மேல் இன்னொரு பூரியை வைத்துக் கொடுப்பார்கள். அப்படிச் செய்வதனால் பூரியும் மசாலாவும் ஒன்றாக, மீண்டும் பிரிக்க முடியாதவாறு இணைந்து விடும். பூரி தன் மொறு மொறுப்பை இழந்து விடுமே என்று சிலர் எண்ணுவதுண்டு. ஆனால் இது போல பூரி மசால் சாப்பிடுவதன் சுவைக்கு ஈடு இணை கிடையாது.

    உருளைக் கிழங்கு மசாலுக்கு எப்பவுமே ஒரு மணம் உண்டு. உருளைக் கிழங்கை நல்ல பக்குவமாக வேக வைத்துப் பின் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அது போலவே தேவையான பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வாணலியில் அளவாக எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வெட்டி வைத்த வெங்காயம்  போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு, உருளைக் கிழங்கைப் போட்டு நன்றாகக் கிளறவும். தேவையான உப்பு இடவும். , கொத்துமல்லி இலையை சிறிதாக வெட்டி மசால் மீது தூவவும். இப்போது  அருமையான ஒரு மணம் வருகிறதல்லவா!.

   தேவையான உப்பு, அளவாகத் தண்ணீர், அதில் சிறிது சூடான எண்ணெய் இவற்றை  ஒரு அகண்ட பாத்திரத்தில் விட்டு,  நல்ல தரமான கோதுமை மாவைப் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டுப்  பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், வட்ட வடிவமாகப் போட்டு வைத்த பூரிகளை எண்ணெயில் போட்டுப் பக்குவமாகச் சுட்டு எடுக்கவும். பக்குவம் என்றால் – பூரி முறுகலாக ஆனால் கருகாமல் இருக்க வேண்டும். உப்பி வர வேண்டும், ஆனால் எண்ணெய் அதிகம் குடிக்கக் கூடாது அடேயப்பா பூரி சுடுவதில் இத்தனை ‘கண்டிஷன்கள் இருக்கின்றனவா?. அதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. நம்முடைய வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு அந்தப் பக்குவம் நல்லவே தெரியும்!.

   முறுகலான ஒரு பூரி மேல் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து, அதன் மேல் மற்றொரு பூரி வைத்துப் பரிமாற வேண்டும். சாப்பிட்டுப் பாருங்களேன். அப்போதுதான் பூரிக் கிழங்கின் உண்மையான சுவை தெரியும். சூடான பூரிகளுடன் சர்க்கரைத் தொட்டு சாப்பிடுவது குழந்தைகளுடைய வழக்கம். சில நபர்கள் பூரிகளைத் தனியாகவும், வேறு சிலர் உருளைக் கிழங்கு மசாலாவைத் தனியாகவும் வாங்கிச் செல்வதும் உண்டு.

    திருநெல்வேலி டவுனில் இருந்த போத்தி ஓட்டலில் மாலை 4 மணிக்குத் தயாராகும் பூரிக் கிழங்கின் மணம் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வீசும். திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள சந்திர விலாஸ் ஓட்டலுக்கு, பூரிக் கிழங்கு சாப்பிடுவதற்காகவே டவுனிலிருந்து 2 கி. மீ தூரம் நடந்து செல்பவர்களும் உண்டு. அந்த நாட்களில் டவுன் போத்தி ஓட்டல் பூரிக் கிழங்கு ருசியில் சிறந்ததா அல்லது ஜங்ஷன் சந்திர விலாஸ் ஓட்டல் பூரிக் கிழங்கு ருசியில் சிறந்ததா என்று பட்டி மன்றங்கள் வீதியோரம் அவ்வப்போது நடப்பதுண்டு. கடைசி வரை முடிவு(தீர்ப்பு) சொல்லப்படாத பட்டி மன்றம்  ஒன்று உண்டு என்றால் அது இதுதான் என்று  நிக்கிறேன்.

   சில ஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூர் மருதமலை முருகன் கோயிலுக்குக் குடும்பத்தோடு  சென்றோம். மலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றோம். பூரிகள் நன்றாக உப்பியிருந்ததைப் பார்த்து பூரி மசால் சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். பூரிகள் வந்தன, உடனே சர்வர், ‘இதுதான் உருளைக் கிழங்கு மசாலா என்று சொல்லி மஞ்சள் நிறத்தில் தண்ணீர் போல பூரிகள் மேல் ஊற்றினார் ‘ஆமாம், இதில் எங்கே உருளைக் கிழங்கு என்று நாங்கள் கேட்டதும், சர்வர் எவ்வளவோ முயற்சி செய்த பின்னும், அந்த வாளியிலிருந்து ஒரு சிறிய துண்டு உருளைக் கிழங்கு கூட எடுக்க முடியவில்லை. அது வெறும் கடலைமாவு கரைக்கப்பட்ட சூடான ஒரு திரவம், அவ்வளவுதான்!. எல்லோரும் வாய் விட்டு சிரித்தோம்.

   ஒரு முறை பம்பாய் நகரத்திற்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். அங்கு ஒரு மராத்தி ஓட்டலில் பூரிக் கிழங்கு சாப்பிட்டோம்; வாழ் நாளில் மறக்கவே முடியாது. ஆஹா, ஆஹா ! அற்புதமான ருசி! அப்படியென்ன என்று வாசகர்கள் கேட்பது தெரிகிறது. அதாவது, பூரிகள் நம்ம வீட்டுப் பெண்மணிகள் போடும் ‘சைஸ் போல இல்லாமல், மிகவும் குட்டி குட்டி ‘சைஸில் இருந்தன. ஒரு தட்டில் 10 பூரிகள். மணம் வீசும் பூரி மசால் ஒரு கிண்ணம் நிறைய. அருமை, மிக அருமை! பம்பாய் சென்று வந்த பின் நம்முடைய பெண்மணிகளும் சில நாட்கள் அந்த சிறிய ‘சைஸ் பூரிகள் செய்தார்கள். பிறகு ‘வேறு வேலையில்லை, யாரால் சின்ன சின்ன பூரிகளை நீண்ட நேரம் போடுவது என்று சொல்லிக் கொண்டே, நம்ம வீட்டுப் பூரிகள் தான் சரி, அதுதான் ருசி என்று சொல்ல, நாமும் அதை ஆமோதிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியம்? 

    ஒரு முறை பாளையங்கோட்டை கோபால சாமி கோயில் அருகில் உள்ள சாரதி மெஸ்ஸுக்கு இரவு உணவு சாப்பிட நானும் மனைவியும் சென்றிருந்தோம். சாப்பிட்ட பின் பில்லுக்குப் பணம் கொடுக்கும் வேளையில், பரிமாறுபவர் ஒரு பூரி மாசால் பார்சலை என்னுடைய கையில் கொடுத்தார். நான் பேசுவதற்கு முன் அவரே,சார் நீங்க இப்ப சாப்பிட்டு முடித்து விட்டீர்கள். ஆனால் பூரி மசால் சாப்பிடவில்லை. பூரி மசால் உங்களுக்குப் பிடிக்கும் என்றும், ஆனால்  இப்போது உங்களால் சாப்பிட முடியாது என்றும் தெரியும். எனவே இந்தப் பார்சலை வீட்டுக்குப் போன பின், மெதுவாகப் பிரித்துச் சாப்பிடுங்கள் என்றார். எனவே வீட்டிற்கு வந்தவுடன் பரிமாறுபவருடைய அன்புக் கட்டளைக்கிணங்க இரவு 10 மணிக்கு அவர் கொடுத்த பூரிக் கிழங்கு மசால் பார்சலைப் பிரித்துச் சாப்பிட்டேன். ஆறினாலும்   மணமும், சுவையும் கொஞ்சமும் குறையவே இல்லை. அதுதான் திருநெல்வேலி பூரிக் கிழங்கு மசால்!

விமர்சனங்கள்:

திரு கிருஷ்ணமூர்த்தி, மகராஜ நகர், திருநெல்வேலி  5.8.2020

வாயில் எச்சி ஊறி விட்டது. பூரிக் கிழங்கு வாசனை மூக்கைத் துளைக்கிறது. ஆம். நடுவில் உள்ள கிழங்கு பூரியை நனைத்து இருக்கும். பூரி சூட்டில் வெங்காயம் மணம் பரப்பும். 

 

Mr Anbarasu, Sakthi Apoorva, K.K.Pudur, Coimbatore  -   5.8.2020

Really you have made me tasted Pooris and Potatoes Masala. The taste is lingering in my tongue. Fine description.

Comments

Post a Comment

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE