திருநெல்வேலி நகரமும் திரையரங்குகளும்
திருநெல்வேலி நகரமும் திரையரங்குகளும்
-கே.எஸ்.கோபால கிருஷ்ணன், முது நிலை மேலாளர், கனரா வங்கி
திருநெல்வேலி நகரம் என்பது டவுண், ஜங்ஷன், பாளையம்கோட்டை (இனி பாளை என்றே குறிப்பிடுவோம்)என்று மூன்று இடங்களும் சேர்ந்தது. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் திருநெல்வேலியில் மூன்று திரையரங்குகளே இருந்தன. ராயல் தியேட்டர், பாப்புலர் தியேட்டர், பாலஸ்- டி- வேல்ஸ் என்று பெயர்கள் கொண்ட இந்த மூன்றும்தான்.
ராயல் தியேட்டரை டவுண் நெல்லையப்பர் கோயிலுக்கு வடக்கே இருந்ததால் வடக்குக் கொட்டகை என்றும், பாப்புலர் தியேட்டர் கோயிலுக்குத் தெற்கே இருந்ததால் தெற்குக் கொட்டகை என்றும், பாலஸ் – டி- வேல்ஸை வீராவரம் (வீரராகவபுரம்) தியேட்டர் என்றும் அந்தக் காலத்தில் திருநெல்வேலி டவுணில் உள்ள பெண்கள் குறிப்பிடுவது வழக்கம். பாளையில், மார்க்கட் பக்கத்தில் அசோக் தியேட்டர் ஒன்று இருந்தது. இந்தத் தியேட்டரில் புதுப்படங்களாக இல்லாமல், இரண்டாவது சுற்றில் திரைப் படங்கள் திரையிடப்பட்டன. கிராமங்களிலுள்ள டூரிங் தியேட்டர்களில், திரைப் படம் தொடங்குவதற்கு முன்பு இசைத் தட்டுக்களில் பழைய திரைப் படப் பாடல்கள் போடுவது போல, இந்தத் தியேட்டரிலும் ஒவ்வொரு காட்சி ஆரம்பம் முன்னால் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். பல நாட்களில், ‘வாராய்,நீ வாராய்” ( இரசிகர்களை அழைக்கும் ஒரு செயல்) என்ற மந்திரிகுமாரி பாடலைக் கேட்கலாம்.
ஆயிரத்து தொள்ளயிரத்து ஐம்பத்தி நாலாம் ஆண்டில் டவுணில் ரத்னா தியேட்டர் கட்டப்பட்டது; அதில் திரையிடப்பட்ட முதல் திரைப் படம் சிவாஜி கணேசன் நடித்த மனோகரா. இந்த திரைப் படம்வில் கிரிஜா கதாநாயகியாகவும், டி.ஆர்.ராஜகுமாரி வில்லியாகவும், எஸ்.ஏ.நடராஜன் வில்லனாகவும் நடித்திருப்பார்கள். ஷேக்ஸ்பியர் எழுதிய துன்பியல் நாடகமான ஹேம்லட் கதையைத் தழுவி மனோகரா எடுக்கப்பட்டது.
ரத்னா தியேட்டர் எதிரில் அமைந்துள்ள பார்வதி தியேட்டர் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதில் கட்டப்பட்டது. முதல் திரைப்படம் பிரபல ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்து சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா நடித்த இரும்புத் திரை. இந்தத் தியேட்டர் திறப்பு விழாவில் ஒரு பிரச்னை; முழுவதும் கட்டிமுடிக்கப்படாத நிலையில், திறப்பு விழாவிற்கு நாள் குறிப்பிடப்பட்டு, அன்றைய முதல்வர் திரு காமராஜரை அழைத்திருந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டரோ, கட்டிடம் முழுவதும் முடிவடையா ததால் தியேட்டர் திறப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டார். தியேட்டர் உரிமையாளர் காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவர். உடனே சென்னை சென்று திரு காமராஜரை சந்தித்தார். கலெக்டர் அனுமதி மறுத்ததில் உண்மை இருப்பதை அறிய வந்ததும், திரு காமராஜ் “கலெக்டரிடம் முறையாக அனுமதி வாங்கிவிட்டு பிறகு என்னிடம் வந்து சொல்லுங்கள், கண்டிப்பாக வருகிறேன்“ என்று சொல்லிவிட்டார்.
திருநெல்வேலி டவுணுக்கும், திருநெல்வேலி ஜங்ஷனுக்கும் நடுவில் சென்ட்ரல் தியேட்டர் கட்டப்பட்டு, ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி இரண்டில் திறக்கப்பட்டது. பிரபல திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய போலீஸ்காரன் மகள், முதல் திரைப் படம் திரையிடப்பட்டது.. தமிழ் நாட்டில் கட்டப்பட்ட தியேட்டர்களில் சென்ட்ரல் மிகவும் வித்தியாசமானது. இந்தத் தியேட்டரின் உள் அரங்கு அரைவட்ட வடிவில், காலரி முறைப்படி, அதாவது ஒரு வரிசைக்கு அடுத்த வரிசை 4 அங்குல உயரத்தில் கட்டப்பட்டிருக்கும். எனவே ரசிகர்கள் எங்கு அமர்ந்து பார்த்தாலும் திரைப் படம் தெளிவாகப் பார்க்க முடியும். தற்போது பங்குதாரர்கள் பிரச்னை காரணமாகப் பல ஆண்டுகளாக சென்ட்ரல் தியேட்டர் இப்போது மூடிக் கிடக்கிறது.
ராயல் டாக்கீஸ், பாலஸ்-டிவேல்ஸ் இரண்டிலும் கட்டிட மேற்கூரை தகரத்தில் அமைந்திருந்ததால், அப்போதிருந்த மாவட்ட கலெக்டர் அந்த இரு தியேட்டர்களுக்கும் லைசன்ஸ் புதுப்பிக்க மறுத்து விட்டார்.. காரணம் மேற்கூரை தகரத்தில் இருப்பதால் பகல் காட்சி திரையிட உரிமை கிடையாது என்றும் சொல்லி விட்டார்.. வேறு வழியில்லாமல், இந்த இரண்டு தியேட்டர்களும் மாலை,இரவுக் காட்சிகளை மட்டும் சில ஆண்டுகள் நடத்தி வந்தன, பிறகு ராயல் டாக்கீஸ் மட்டும் மேற்கூரையை மாற்றி அமைத்து, பகல் காட்சி நடத்த அனுமதி பெற்றது.
, ராயல் டாக்கீஸில்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் என்ற திரைப் படம் மூன்று தீபாவளிகளையும் கடந்து ஓடியது. ஹரிதாஸ் திரைப் படம் நடக்கும் போது, அரங்கின் உள்ளே இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தைவிட, பாகவதர் பாடல்களைக் கேட்க, பாகவதரின் குரலைக் கேட்க அரங்கின் வெளியே ரசிகர்கள் கூட்டம் நிறைய இருந்தது. இந்த தியேட்டர் நுழைவு வாசலில் ஹரிதாஸ் என்ற எழுத்துக்கள் சுவரில் புடைப்பு வடிவில் பல ஆண்டுகள் இருந்தன.
கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
எழுதிய ‘தென் பொதிகைத் தென்றல்’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு
பகுதி.
Comments
Post a Comment