அலங்காரப் பதுமைகள்


                                    அலங்காரப் பதுமைகள்
            


கீதாக் கண்ணு, இன்னிக்கு சாயந்திரம் 5 மணிக்கு வந்திடம்மா, கோயம்புத்தூரிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்து விடுவதாக சொல்லியிருக்காங்க, 5 மணிக்குள்ளே நீ வந்தாத்தான், முகம் கழுவி, புடவையெல்லாம் கட்டி முடிக்க நேரம் சரியாக இருக்கும். மறந்து விடாதே, என்று அம்மா விடிந்ததிலிருந்து நாலாவது முறையாக சொல்லி விட்டாள். இதோ, மணி 8.15 ஆகி விட்டது. இப்போது வீட்டிலிருந்து புறப்பட்டால்தான்  பஸ்ஸைப் பிடித்து, மதுரை டவுண் ஹாலிலிருக்கும்வர்ஷிணி டெக்ஸ்டைல்ஸ்க்கு கீதா சரியாக 9 மணிக்குப் போய் சேர முடியும். 10 நிமிடங்களில் ஆடைகளை மாற்றி விட்டு, சிறிது முக அலங்காரங்கள் செய்து முடித்த பிறகு, கடை வாசலில் தோழி கவிதாவுடன் அலங்காரப் பொம்மையென மதியம் 3 மணி வரை நிற்க வேண்டும். இடையில் 30 நிமிடங்கள் உணவு வேளை. 3 மணியிலிருந்து 7 மணி வரை கடையிலுள்ள சில அலுவலக வேலைகள் பார்த்தால் அதற்குத் தனியாக ஒரு தொகை சம்பளமாகக் கிடைக்கும். அந்த வேலைகளையும் முடித்து விட்டுத்தான் கீதாவும், கவிதாவும் 7 மணிக்கு வீட்டிற்குப் புறப்படுவார்கள்.
            கீதாவின் தந்தை உடல் நலமில்லை என்ற காரணத்தால், விருப்ப ஓய்வு பெற்று 2 ஆண்டுகளாகி விட்டது. தனியார் கம்பெனியில் வேலை பார்த்ததால் பென்ஷனும் கிடையாது. மொத்தமாகக் கொடுத்த கொஞ்ச பணமும், வீடு வாங்கும் போது பெற்ற கடனுக்கு சரியாகப் போய் விட்டது. ஏதோ அம்மா சுப்புலட்சுமி மிகவும் சிக்கனமாக இருந்து, கொஞ்ச கொஞ்சமாக பணம் சேர்த்து கீதாவுக்கு சில தங்க நகைகள் வாங்கியிருந்தாள். எப்படியும் ஒரு 10 பவுன் தேரும். கீதாவுடன் பிறந்த ஒரு தம்பி கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படிக்கிறான். பெயர் கணேஷ். முதலில் அரசுப் பள்ளியில் படித்தாலும் படிப்பில் எப்போதும் முதல் ரேங்க்; எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பான். ‘அக்கா, அக்கா என்று கீதாவிடம் மிகவும் பிரியமாக இருப்பான். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், ஏதாவது ஒரு நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். முக்கியமாக தன்னுடைய அக்கா வேலைக்குப் போவதையோ, அந்தக் கடையில் அலங்காரப் பொம்மையென நிற்பதுவோ கணேஷுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தான் வேலைக்குச் சென்று, குடும்பச் செலவை யெல்லாம் பார்த்துக் கொண்டு, அக்காவையும் வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத் திருந்தான்.
      கீதாவும், கவிதாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே உயிர்த் தோழிகள். வர்ஷிணி டெக்ஸ்டைல்ஸில் முதலில் கவிதாதான் வேலைக்குச் சேர்ந்தாள். அன்றாட செலவுகளுக்கே கீதா குடும்பம் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்து, கவிதாவின் அறிமுகத்தில்தான் கீதா இந்தக் கடையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தாள். அது வரை குடும்ப செலவுகளுக்காக  ஒப்பந்த அடிப்படையில் கீதாவின் அம்மா சுப்புலட்சுமி துணிகள் தைத்துக் கொடுத்து ஒவ்வொரு வார முடிவு நாள் சனிக் கிழமையன்று   பணம் பெற்று வந்தாள். வீட்டிலிருந்த தையல் எந்திரத்தில் தைப்பதும் அல்லது அருகிலிருந்த அலுவலக் கட்டிடம் சென்று துணிகளைத் தைத்துக் கொடுப்பதும் உண்டு.
      மதுரையிலேயே வர்ஷிணி டெக்ஸ்டைல்தான் மிகப் பெரிய துணிக் கடை. ஆண்களுக்கு, பெண்களுக்கு, சிறுவர்களுக்கு என்று தனித் தனியாக மாடிகள் அமைந்திருந்தன. திருமணம் மற்றும் வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கென்று ஆடைகள் தனியாக ஒரு மாடியில் இருந்தன. இந்தக் கடையில் குறிப்பிட்ட ஆடைகள் கிடைக்கவில்லை என்றால், மதுரையில் எத்தனைக் கடைகளுக்குச் சென்றாலும் வாடிக்கையாளர்கள், விரும்பியது கிடைக்காது.  கடை முழுவதும் குளிர்சாதன வசதி; வேலை பார்க்கும் அனைவருக்கும் காலையிலும், மாலையிலும் வடை அல்லது பிஸ்கட்டுடன் தேநீர் அல்லது காஃபி உண்டு. மதியம் உணவு விரும்புபவர்களுக்கு மட்டுமே உண்டு. ஏனென்றால், ஒரு சிலர் வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வருவது வழக்கம். கீதாவும், கவிதாவும் மதிய உணவு எடுத்து வருவார்கள். இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து ஏதாவது பேசிக் கொண்டே உணவு அருந்துவார்கள்.
      அலங்காரப் பொம்மைகளாக் நிற்பதும், வருகிறவர்களை ஒரு சிறிய புன்னகையுடன் வரவேற்பதும் கீதா, கவிதா இருவருக்குமே கொஞ்ச நாட்கள் வேடிக்கையாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மனதில் சில சங்கடங்கள் தோன்ற ஆரம்பித்தன. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கால்கள் வலிக்க ஆரம்பித்தன. தலைவலியோ அல்லது வயிற்று வலியோ எது இருந்தாலும் நீண்ட நேரம் நிற்பதும், செயற்கையான புன்னகையுடன் வரவேற்பதும் சிரமமாக இருந்தது. ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாது. 
      கடையின் மேலாளர் கனகசபைக்கு சுமார் 55 வயதிருக்கும். நெற்றி நிறைய திருநீறு அணிந்திருப்பார்; அப்போதுதான் குளித்தது போல ஒரு தோற்றம். எல்லோரிடமும் அன்பாக இருப்பார். ஆனால் வேலை வாங்குவதில் ஊழியர்களிடம் சிறிது கடுமையாக நடந்து கொள்வார். கடை தொடங்கிய நாளிலிருந்தே கனகசபை மேலாளராக இருந்து வருகிறார். கடையின் பங்குதாரர்கள் நால்வருக்குமே இவர் மேல் அதீத நம்பிக்கை. அந்த நால்வரும் எப்போது கடைக்கு வந்தாலும், வாடிக்கையாளர்கள் போல வந்து செல்வார்களே தவிர, எந்த ஒரு விஷயத்திலும் தலையிட மாட்டார்கள். கனகசபை சொல்வதுதான் சரி, அதுதான் அந்த நால்வரின் முடிவு. வேலை பார்க்கும் ஆண்களோ அல்லது பெண்களோ, அவர்கள் வீட்டில் என்ன ஒரு விஷேசம் என்றாலும் அங்கு கனகசபை இருப்பார்; ஒரு நல்ல தொகை சன்மானமாகக் கொடுத்து விட்டு, உணவருந்தி விட்டுத்தான் வருவார். அந்த செயல் ஊழியர்களின் மத்தியில் கனகசபைக்கு மட்டுமல்ல, கடையின் உரிமையாளர்களுக்கும் மிகவும் நல்ல பெயர். எனவே, வர்ஷிணி டெக்ஸ்டைல்ஸைப் பொருத்த வரையில் அங்குள்ள ஊழியர்கள் அத்தனை பேரும் உண்மையாகவும், கடுமையாகவும் உழைப்பார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. மேலாளர் கனகசபைக்குக் குழந்தைகள் இல்லை என்பதாலும், ஊழியர்கள் அனைவரையும் மிகவும் அன்பாக நடத்துவது அவரது வழக்கம். கடையில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லோரும், ‘நல்ல வேளை, அங்காடித் தெரு சினிமாவில் வரும் மேலாளர் போல நம்ம கனகசபை சார் இல்லை என்று பேசிக் கொள்வார்கள். 
      கவிதாவை விட கீதா மிகவும் அழகு; கவிதாவே சில சமயங்களில், ‘கீதா, உன்னை மட்டும் கடவுள் இவ்வளவு அழகாகப் படைத்திருக்கிறாரே, அதை நினைக்கும் போது என்னைப் போன்ற பெண்களுக்கு அந்தக் கடவுள் மேலேயே சில சமயங்களில் கோபம் வருகிறது என்று சொல்லுவாள். கவிதா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான். இலக்கியங்களில் கூறும் சாமுத்ரிகா லட்சணம் என்பது கீதாவிடம் முழுமையாக இருந்தது. கீதாவின் உடலமைப்பு என்பது கோவில்களில் நாம் பார்க்கும் செப்புச் சிலையைப் போல் இருந்தது; அலை பாயும் கருங் கூந்தல்; அளவான நெற்றி, அதில் சிறிய கோபிப் பொட்டு;  வில் போன்ற வளைந்த புருவங்கள்; சற்றே பெரிய அகலமான கண்கள்; நீண்ட கூரிய நாசி, அழகான காதுகள்; மெல்லிய பள பளக்கும் சிவந்த உதடுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்த அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்பவன் நிச்சயம் தவம் செய்தவனாகவும், கடவுளின் அருள் பெற்றவனாகவும்தான் இருப்பான் என்று எல்லோரும் நினைப்பதுண்டு.
      பெண்களுக்குத் தொல்லை தரும் அந்த மூன்று நாட்களில், அலங்காரப் பொம்மையென நிற்க முடியாமல் தான் படும் வேதனையை, கீதா கவிதாவிடம் கூறுவாள். அப்போதெல்லாம் கவிதா, ‘கீதா, நீ போய் ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்; கனகசபை சார் வந்தால் நான் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லுவாள். அதே பிரச்னை கவிதாவுக்கு வரும் போது, அந்த வார்த்தைகளை கவிதாவிடம் கீதா சொல்லுவாள். இருவரும் உடன் பிறவா சகோதரிகள்; இணை பிரியா தோழிகள்.
      கடையில் மதியம் உணவு வேளைக்குப் பிறகு மாலை 4 மணி வரை வாடிக்கையாளர்கள் வருவது குறைவாகவே இருக்கும். பொதுவாக மற்ற கடைகள் போலல்லாமல் அந்த நேரங்களில் ஊழியர்கள் சற்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கனகசபை எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார். கீதாவும், கவிதாவும் பார்சல் டெலிவெரி கொடுக்கும் இடங்களில் அமர்ந்து 3 மணி வரைப் பேசிக் கொண்டிருப்பார்கள். தினமும் இவர்கள் இரண்டு பேரும் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் வியப்படை வார்கள். சில நேரம் வாடிக்கையாளர்கள் வந்தால், இரண்டு பேரும் எழுந்து நின்று வழக்கமான புன்னகையுடன் வரவேற்பார்கள். அதன் பின் 7 மணி வரை அலுவலகத்தில் இருக்கும் வேலைகளைச் செய்து விட்டு, இருவரும் புறப்பட்டு, இரவு 8 மணிக்குள் அவரவர் வீட்டுக்குச் சென்று சேர்ந்து விடுவார்கள்.
      கவிதாவுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஒரு வயதில் பெண் குழந்தை உண்டு.  குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துப் பழகியிருந்ததால், அந்த நேரங்களில் கடைக்கு வர மிகவும் சிரமப்பட்டாள். பிரசவ காலங்களில் இரண்டு மாதங்கள் மட்டும்தான் விடுமுறை கொடுப்பார்கள். கவிதாவினுடைய வேதனையைச் சொல்லி முடியாது. கணவரும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததால், வீட்டில் குழந்தையை விட்டு வரவும் முடியாது. கவிதாவுக்கு  பெற்றோர்கள் இல்லை. மாமியாரும் இல்லை. கணவனின் தந்தை தனியாக கிராமத்தில் இருக்கிறார். கடைக்கு அருகில் குழந்தையைப்  பார்க்கும் ஒரு இலவச அமைப்பு இருந்தது. குழந்தையை அங்கு விட்டுச் செல்பவர்கள் நன்கொடையாகப் பணம் கொடுப்பதை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்.
      மேலாளர் கனகசபையிடம் அனுமதி பெற்று விட்டு, இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஒரு முறை சென்று, கவிதா தன்னுடைய குழந்தையின் பசியாற்றி விட்டு வருவாள்.  மதியம் மூன்று மணிக்குக் குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விடுவாள். பெண்களுடைய சிரமங்கள் பெண்களுக்குத்தானே தெரியும் என்று கீதாவும், கவிதாவும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். கடையில் வேலை பார்க்கும் சில பெண்கள் கூட்டுக் குடும்பமாக வசிப்பதுண்டு. அவர்களின் குழந்தையை வீட்டில் அந்தப் பெண்களின் அம்மாவோ அல்லது மாமியாரோ பார்த்துக் கொள்வார்கள். ஆனால் தாய்ப் பால் கொடுக்கும் பெண்கள், கடை அருகில் உள்ள அந்த இலவச அமைப்பில்தான் குழந்தையை விட்டு வர வேண்டும். தேவைப்படும் போது அந்தப் பெண்கள் சென்று குழந்தைகளுக்குப் பாலூட்டி வர வேண்டும். இது போன்ற இலவச அமைப்பு எல்லா கடைகளுக்கு அருகிலும், எல்லா ஊர்களிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அரசுத் துறைகளே ஒரு சட்டம் அமல் செய்து, நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கீதாவும் கவிதாவும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.
      கோடிக் கணக்கில் வியாபாரம் செய்து, கோடிக் கணக்கில் அல்லது லட்சக் கணக்கில் லாபம் ஈட்டுபவர்கள், தங்கள் கடையிலேயே ஒரு பெரிய அறையில் ஒன்றிரண்டு ஆயாக்களை நியமித்து குழந்தைகள் பராமரிப்பு செய்யலாம். அங்கு வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவைப்படும் போது பாலூட்டலாம். கார் பார்க்கிங் இருந்தால்தான் கட்டிட அனுமதியோ அல்லது கடை நடத்தும் அனுமதியோ கொடுப்பது  போல, குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் பெரிய கடைகளில் அமைப்பதையும் கட்டாயப் படுத்த வேண்டும்.   அந்த செயல் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை; ஏனென்றால் தாய்ப் பால் என்பது பிறந்த குழந்தைகளின் உரிமை; அந்த உரிமையைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அரசாங்கமே இந்தக் கருத்துக்களுடன் விளம்பரம் செய்வதுண்டு. இது போன்ற விஷயங்களைக் கவிதா அடிக்கடி கீதாவிடம் சொல்வதுண்டு; கீதா மௌனமாக ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொள்வாள்.
      கீதா கடையில் சேர்ந்து சில நாட்கள் இருக்கும். ஒரு நாள்  இரண்டு கல்லூரி இளைஞர்கள்  வந்தார்கள்; கீதாவைப் பார்த்துக் குறும்புடன், ‘ஏன் மேடம், பெண்களின் உள்ளாடைகள் வாங்க வேண்டும்; எந்த மாடியில் இருக்கிறது?’ என்று கேட்டார்கள். ‘அளவு தெரியவில்லை என்று அவர்களில் ஒருவன் சொல்ல, கீதாவுக்கு மிகக் கூச்சமாக இருந்தது, என்ன சொல்வது என்று தெரியாமல், கவிதாவைப் பார்க்க, உடனே கவிதா அந்த இருவரிடம், ‘ ஏன் தம்பிகளா, உண்மையிலேயே உள்ளாடைகள் உங்க அக்கா அல்லது தங்கைக்குத் தானே வாங்கப் போகிறீர்கள் ? அளவுதானே வேண்டும், என்னை உங்க அக்காவாகவும், அருகிலிருந்த கீதாவைக் காட்டி, இவளை உங்க தங்கையாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது பிரச்னை தீர்ந்ததா?’ என்று கேட்டதும் வந்திருந்த இரண்டு இளைஞர்களுக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை; முகம் சிவக்க அங்கிருந்து விலகிச் சென்றார்கள். கவிதா “ கீதா, இது போன்ற சந்தர்ப்பங்களில் தயங்கவே கூடாது; நாம் தைரியமாக அவர்களின் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும்; அவர்கள் வந்த வழியே போய் விடுவார்கள். கீதா, நீயோ மற்றவர்களை விட மிக அழகாக இருப்பதால், இந்த மாதிரி இளைஞர்கள் உன்னிடம் வந்து பேச வருவதும், அசடு வழிவதும் ஒன்றும் அதிசயமில்லை ” என்றாள். பதிலாகக் கீதாவிடமிருந்து ஒரு புன்னகை மட்டும்.
      கீதா, ‘கவிதா, இன்று வீட்டிலிருந்து நான் புறப்படும் போதே, அம்மா என்னிடம் சீக்கிரம் மாலை 5 மணிக்குள் வரச் சொல்லி யிருக்கிறாள்’. என்றாள்.
      ‘என்ன கீதா, உன்னைப் பெண் பார்க்க, யாரோ ஒரு மாப்பிள்ளை  வருகிறார், சரிதானே? என்று கவிதா கேட்டாள்.
      ‘ஆமாம் கவிதா, நீ சொல்வது உண்மைதான். இன்று வருவது 5 வது மாப்பிள்ளை வீட்டார். இதற்கு முன்பு வந்தவர்கள், ’பெண் பிடித்திருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய நகைகள் வேண்டும். வரதட்சனை ஆயிரங்களில் வேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள்.  கவிதா, இதென்ன அநியாயம்? ஒரு பெண்ணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள், திருமணம் என்பது ஒரு புனிதமான உறவு ஏற்படுவதற்கு வழி வகுக்கும் நிகழ்வல்லவா? இதில் நகைகளும், வரதட்சனைப் பணமும் எங்கிருந்து வந்தன? பெண்களாகிய நாம் அந்த ஆண்களிடம் ஏதாவது கேட்கிறோமா, என்ன?’ என்று கேட்டாள் கீதா.
      ‘கீதா, நீ சொல்வது உண்மைதான். இதுவரை எந்தப் பெண்ணும் பெண் பார்க்க வரும் ஆணிடம் எந்தவிதமான கோரிக்கைகளும் வைப்ப தில்லை. ஆனால், ஆண்களும், அவர்களைப் பெற்றவர்களும் இது போல் கேட்பதும், பெண் வீட்டார்கள் செய்வதும் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பெண்ணைப் பெற்றவர்கள் வசதியானவர்களாக இருந்து விட்டால் பிரச்னை இல்லை. வசதியில்லாதவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? உறவினர்களிடமும், நெருங்கிய நண்பர் களிடமும் கடன் வாங்கியாவது தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அதற்குப் பிறகு கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க அந்தப் பெற்றோர்கள் என்ன பாடு படுவார்கள்? இதையெல்லாம் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களும், ஏன் மாப்பிள்ளையாக வரப் போகும் அந்த ஆண்களும் என்றாவது, ஒரு முறையாவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?’ என்று கவிதா கேட்டாள். இந்த சம்பாஷனை வழக்கம் போல் உணவருந்தும் வேளையில் நடந்தது.
      கீதா, ‘ கவிதா, இன்று என்னுடைய வீட்டிற்கு நீ வர வேண்டும். என்னைப் பெண் பார்க்க வருவதால், என்னுடன் நீ இருந்தால் எனக்குத் தைரியமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். என்றாள்.
      கவிதாவும் உடனே சம்மதித்தாள்; தன் கணவருக்குப் போன் செய்து சுருக்கமாக விஷயத்தை சொன்னாள். கவிதா குழந்தையை எடுத்துக் கொண்டதும், இருவரும் சரியாக 4 மணிக்கு ஒரு ஆட்டோவில் புறப்பட்டார்கள். கவிதாவின் குழந்தை பெயர் தமிழ். ஏன் தமிழ் என்று பெயரிட்டாய் என்று கேட்பவர்களிடம், ‘ தமிழ் மொழியில் மட்டுமே தமிழ் என்று ஆண் அல்லது பெண் பிள்ளைகளுக்குப் பெயரிட முடியும். தமிழ் என்ற பெயர் இனிமை அல்லவா? என்று கவிதா பதில் சொல்லுவாள்.
      கவிதாவைப் பார்த்த்தும் கீதாவின் அம்மா சுப்புலட்சுமி “ வா கவிதா, நீ இங்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டன. கீதாவைப் பெண் பார்க்க இன்று வருவதால் , நீ கூட இருந்து கீதா அலங்காரம் பண்ண  உதவி செய்யம்மா, உன் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.
      சரியாக 5.45 மணிக்கு கீதா தயாராகி விட்டாள். கவிதாவும் சிறிது முகம் கழுவி, புடவையை சரி செய்து கொண்டாள். இயற்கையிலேயே கீதா நல்ல அழகு; இன்று கவிதாவின் கை வண்ணம், கீதா அழகுப் பதுமையாக ஜொலித்தாள். கீதாவைப் பார்த்ததும், சுப்பு லட்சுமிக்கு ஒரே பெருமை; தன் கணவர் சுந்தரேசனிடம் சொல்லி, சொல்லி மகிழ்ந்தாள்.
      வீட்டிலிருந்த பழங்காலக் கடிகாரத்தில் மணி 6 முறை அடிக்கவும், வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
      வீட்டில் இருந்த ஜன்னல் வழியாக கீதாவும், கவிதாவும் வாசலைப் பார்த்தார்கள். அழகான, சராசரி உயரத்துடன் ஒரு வாலிபன் புன்னகை தவழும் முகத்துடன் காரிலிருந்து இறங்கி வந்தான். கூடவே ஆண்களும், பெண்களுமாக சிலர் வந்தார்கள்.
      தற்செயலாக வாலிபனின் கண்கள் ஜன்னலில்,  தெரிந்த கீதாவைப் பார்க்க, அங்கிருந்த கீதா வாலிபனைப் பார்க்க, யார்  முதலில் யாரைப் பார்த்தார்கள் என்று யாராலுமே சொல்ல முடியாது.
      இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கவிதா, ‘ அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் மிதிலை நகரில் இராமனும் சீதையும் சந்தித்த நிகழ்ச்சியைக் கம்பர் மிக அழகாக வர்ணித்தது என் நினைவுக்கு இப்போது வருகிறது‘ என்றாள். கவிதா சொன்னதைக் கீதா கவனிக்கவே இல்லை. அவள் பார்வையும், அந்த வாலிபனின் பார்வையும் ஒன்று கலந்தன.
      எல்லோரும் வீட்டின் உள்ளே வந்து அமர்ந்தார்கள். ஒரு ஜமுக்காளம் விரித்து அதில் கீதாவை அமர வைத்தார்கள். கவிதா அருகில் அமர்ந்தாள். மாப்பிள்ளை வீட்டார்கள் சோஃபாவில் அமர்ந்ததும், பெண் வீட்டார் சார்பில் கவிதா வந்தவர்களுக்கு வழக்கம் போல் பஜ்ஜி, சொஜ்ஜி, ஃபில்டர் காஃபி கொடுத்தாள். கார்த்திக் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எல்.ஐ.சியில் கிளார்க் வேலையில் சேர்ந்திருந்தான்.
      ‘என்ன கார்த்திக்? ஒன்றுமே சாப்பிடவில்லை. கீதாவைப் பிடித்திருக்கிறதா? என்னம்மா, கீதா எங்க பையனைப் பிடித்திருக்கிறதா? இரண்டு பேரும் பதில் சொன்ன பிறகுதான் நாங்கள் மற்றது பேச வேண்டும்என்று கார்த்திக்கின் அம்மா லட்சுமி கேட்டுவிட்டு, தன் கணவர் சுதாகரனைப் பார்த்தாள். மனைவி சொன்னதை ஆமோதிப்பது போல சுதாகரன் புன்னகை புரிந்தார்.  
      ‘என்ன கார்த்திக் சார், என் தோழி கீதாவைப் பிடிச்சிருக்கா? பிடிச்சிருக்குன்னு நீங்க சொன்னாதான், நீங்க கீதாவுடன் தனிமையில் பேச நாங்கள் அனுமதிப்போம். என்றாள் கவிதா.
      உடனே கார்த்திக், ‘கீதாவுக்கு என்னைப் பிடித்திருக்கான்னு தெரியலையே,  தனிமையில் பேச நான் தயார். எல்லோரும் என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்டான்.
      கீதாவிடமிருந்து வந்த புன்னகையே அவளுடைய சம்மதத்தைத் தெரிவித்தது.
      கார்த்திக்கும், கீதாவும் பத்து நிமிடங்கள் தனியாக பக்கத்திலிருந்த அறையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கார்த்திக்கும், கீதாவும் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார்களே தவிர, ஒன்றுமே பேசவில்லை. ஏதோ பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று ஒரு கவிஞர் சொன்னது போல அவர்களுக்கே வியப்பாக இருந்தது. இன்றுதான் முதன் முறையாக சந்திக்கிறோம் என்று இருவரது மனங்களும் எண்ணவில்லை.
      கார்த்திக், கீதா இருவரும் வெளியே வந்தவுடன், அவரவர் இடங்களில் அமர்ந்தார்கள்.
      கீதாவுடைய தந்தை சுந்தரேசன், ‘ கீதாவுக்கு நாங்கள் 10 பவுன் நகைகள் கொடுக்கிறோம் என்றார்.
      கார்த்திக்குடைய தந்தை சுதாகரனும் ‘ நாங்களும் கீதாவுக்கு 10 பவுன் நகைகள் தருகிறோம் என்றார்.
      கீதாவின் அம்மா சுப்புலட்சுமி, ‘ வரதட்சனையாகப் பணம் 25,000/ மற்றும் மாப்பிள்ளைக்கு ரூபாய் 10000/ க்கு பட்டு வேட்டி, பட்டுச் சட்டை முதலியன எடுக்கக் கொடுக்கிறோம் என்றாள்.
      கார்த்திக்கின் அம்மா லட்சுமி, ‘ நாங்களும் வரதட்சனையாகப் பணம் 25,000/ , பெண்ணுக்குப் பட்டுப் புடவை, பட்டுச் சட்டை வாங்க 10,000/ கொடுக்கிறோம்என்றாள்.
      எல்லோருக்கும் வியப்பு தாளவில்லை; இதென்ன மாப்பிள்ளை வீட்டார் இப்படி பேசுகிறார்களே, இது வரை எங்குமே கேள்விப்படாத நிகழ்வாக இருக்கிறதே என்று எண்ணினார்கள்.
      சுதாகரனும், அவர் மனைவி லட்சுமியும் தபால் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள். ஓய்வு பெற்ற பின்னும், சுதாகரன் தபால் துறையின் ஊழியர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்; எப்போதுமே கம்யூனிச சிந்தனைகள் கொண்டவர். அவர் மனைவி லட்சுமியும் அது போன்ற கருத்துக்களை ஆதரிப்பவள். எனவே அவர்கள் இருவரும் இப்படிப் பேசியது ஒன்றும் வியப்பதற்குரியதல்ல. அதுவும் தவிர, மலை வாழ் மாணவர்களுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதை ஒரு வாழ் நாள் கடமையாக நினைத்து சுமார் 10 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் கோயம்புத்தூர் அருகில் 40 கி.மீ தொலைவில் உள்ள ஆனைக் கட்டி என்ற மலைக் கிராமத்திற்குச் சென்று ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள்.
      சுந்தரேசனும், சுப்புலட்சுமியும் திகைத்து நிற்க, கார்த்திக் தன்னுடைய பெற்றோர்களைப் பெருமையுடன் பார்த்தான். கீதாவுக்கு நல்ல, பொருத்தமான கணவர் மட்டுமல்ல, முற்போக்கு சிந்தனையுள்ள மாமனார், மாமியார் கிடைத்து விட்டது கண்டு, கவிதா கண்களில் பெருமிதம் தெரிந்தது. சுந்தரேசனுக்கும், சுப்புலட்சுமிக்கும் என்ன செய்வது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருவரும் பூஜையறையில் இருக்கும் தெய்வங்களைப் பார்த்துக் கை கூப்பி னார்கள். கீதாவின் தம்பி கணேஷுக்கு மகிழ்ச்சி அளவிட முடியாததாக இருந்தது. இனிமேல் அக்கா கடையில் அலங்காரப் பதுமையாக நிற்க வேண்டியதில்லை என்று நினைக்கும் போது அவன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது.  
      கீதாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவள் மனம் முழுவதும் மலர்களின் மணம் வீசியது. சில மலர்கள் அழகாக இருக்கும், ஆனால் மணமிருக்காது. சில மலர்கள் மணமாக இருக்கும், ஆனால் அழகாக இருக்காது. அபூர்வமாக சில மலர்கள் மட்டுமே அழகுடன் மணம் பரப்பும் வகைகளாக இருக்கும்.. அது போல சில பெண்கள் அழகாக இருப்பார்கள். நல்ல குணம் என்பது இருக்காது. நல்ல குணமோடு இருக்கும் பெண்கள் அழகாக இருப்பது அபூர்வம். ஆனால் கீதாவோ நல்ல அழகுடன், நல்ல பல குணங்கள் கொண்டவளாக இருந்தாள். கார்த்திக் மிகவும் அதிர்ஷ்டசாலி. அழகும், குணமும் உடைய கார்த்திக் கணவனாக அமைவதற்குக் கீதாவும் அதிர்ஷ்டசாலிதான்,
      கார்த்திக், கீதா இவர்களுடைய திருமணம் மிகவும் சிறப்பாக ஆனால் எளிமையாக ஒரு நல்ல நாளில் மதுரையில் நடந்தது. கவிதாவும் அவள் கணவர் ஸ்ரீதரும்  குழந்தை தமிழுடன் திருமணத்தில் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டார்கள். தன்னுடைய தோழி கீதாவைப் பிரிவதையும், தினமும் கீதா இல்லாமல் அலங்காரப் பதுமையாகத் தான் மட்டும் நிற்க வேண்டியதிருக்கும் என்று எண்ணும் போது கவிதாவின் மனதில் ஒரு ஓரத்தில் சிறிய வருத்தம் இருந்தது.  எனினும் தோழி கீதாவிற்கு மிக நல்லதொரு வாழ்க்கை அமைந்தது என்று எண்ணும் போது, மகிழ்ச்சியாக இருந்தது.
      திருமணத்திற்கு வந்தவர்களெல்லாம் கார்த்திக், கீதா இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடி என்று சொல்லி மனமார வாழ்த்தி னார்கள். வந்தவர்கள் வாழ்த்தியதோடு மட்டுமல்ல, மணப் பெண் அலங்காரப் பதுமையென இருக்கிறாள் என்று சிலர் சொன்னது கவிதாவின் காதில் விழுந்தது. தன் விழிகளின் ஓரத்தில் திரண்ட கண்ணீர்த் துளிகளை கவிதா யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டாள். அவை ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் அல்லவா?











Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE