காயத்ரி -- சிறு கதை


                
                            காயத்ரி

      “ ரஞ்சிதம், பசிக்கிறது. சீக்கிரம் இலையைப் போடு, கை, கால் கழுவி விட்டு வருகிறேன். “ என்று சொல்லிக் கொண்டே ராம கிருஷ்ணன் வீட்டின் பின் பக்கம் சென்றார்.
      ரஞ்சிதம் முகத்தில் ஒரு புன்னகை. தன் கணவர் ‘ஸ்ரீ கிருஷ்ணா’ ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தாலும், அங்கு சாப்பிட விரும்பாமல் தினம் மூன்று வேளைகளும் வீட்டிற்குத்தான் இத்தனை ஆண்டுகளும் சாப்பிட வந்து விடுகிறார். ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்து வரவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், ராம கிருஷ்ணனுக்குத் தன் மனைவி ரஞ்சிதம் சமைத்த உணவுதான் விருப்பமாக இருந்தது. அதிலும் மனைவி பரிமாறி சாப்பிடுவது மனதுக்கும், வயிற்றுக்கும் ஒரு திருப்தியாக இருக்கிறது என்று எல்லோரிடமும் சொல்லுவார்.. அனேகமாக, கூட வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் ஹோட்டலில்தான் மூன்று வேளைகளும் சாப்பிடுகிறார்கள்.
      ராம கிருஷ்ணன் தன்னுடைய 30 வயதில் திருமணமானதும் மனைவி ரஞ்சிதத்துடன் கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு வந்தார். கோயமுத்தூர் பீளமேட்டில் அமைந்துள்ள  ‘ஆனந்தாஸ் என்ற ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். ரஞ்சிதம் அதே ஊரில் ‘சென்னை சில்க்ஸ் என்ற துணிக் கடையில் வேலை பார்த்து வந்தாள். இருவரும் வடவள்ளியிலிருந்து தினம் பஸ்ஸில் வரும் போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நீண்ட நாட்களாகப் பேசியது கிடையாது. ஒரு நாள் பஸ் ஸ்டாண்டில், ரஞ்சிதத்திடம்  இரண்டு கல்லூரி மாணவர்கள் கலாட்டா செய்ய முயன்ற போது, ராம கிருஷ்ணன் அவர்களை சத்தம் போட்டு விரட்டிவிட்டார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தவர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் காதல் உணர்வு தோன்ற, இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். சென்னைக்கு வந்த பின் ரஞ்சிதம் குழந்தை உண்டானதால் வேலைக்குப் போகவில்லை. ராம கிருஷ்ணனுக்கு இப்போது வயது ஐம்பதாகிவிட்டது. ரம்யா, திவ்யா என்று இரண்டு பெண் குழந்தைகள். ரம்யாவுக்கு 18 வயது, திவ்யாவுக்கு 15 வயது. இருவரும் ஒரே சாயலில் இருப்பார்கள். தன் மனைவி ரஞ்சிதத்தைப் போல குடும்பத்தைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பெண்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு என்று ராம கிருஷ்ணன் அடிக்கடி நினைத்துக் கொள்ளுவார்.
      ரஞ்சிதம் இலையில் உணவு பரிமாறிக் கொண்டே, ‘ என்னங்க, ராகவன், மைதிலி இருவரும் உங்கள் ஹோட்டலுக்கு வந்தார்களா ?  அவங்க மகன் ரமேஷ் திருமணத்திற்கு சம்மதித்தார்களா ? ஒரு வாரமாக நீங்க அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ? என்று கேள்விகளை அடுக்கினாள்.
      ராம கிருஷ்ணன் , “ சரிதான், ரமேஷின் திருமணத்தில் ரமேஷின் அப்பா, அம்மாவை விட உனக்குத்தான் அதிக அக்கறை இருப்பது போலத் தெரிகிறது. இன்றுதான் ராகவன் தன் மனைவி மைதிலியுடன் வந்தார். ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு, எல்லோரும் மைலாப்பூர் கடற்கரைக்குச் சென்றோம். “ என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடித்தார். ரஞ்சிதமும் அவராகவே மேற்கொண்டு சொல்லட்டும் என்று அமைதியாக் இருந்தாள்.
      ராம கிருஷ்ணன், ‘ ரஞ்சிதம்!  ராகவன், மைதிலி இருவரும் படித்தவர்கள்; இருவருமே டாக்டர்கள்; தனியாக ‘கிளினிக்வைத்திருக் கிறார்கள்; பணத்திற்கோ, மற்ற வசதிகளுக்கோ கொஞ்சமும் குறை வில்லை. ஒரே மகன் ரமேஷ் தன்னுடன் பாங்கில் வேலை பார்க்கும் காயத்ரியைத் திருமணம் செய்து கொள்வதைக் கொஞ்சமும் விரும்பவில்லை. அவர்கள் இருவரும், தன்னுடைய மகன் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதில் தடை ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் ரமேஷ் காயத்ரியைக் காதலிப்பதைத்தான் அவர்கள் இருவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. காரணம் உனக்கே தெரியும் “, என்றார்.
      ரஞ்சிதம், “ ராகவனும், மைதிலியும் நினைப்பது சரிதாங்க ! ரமேஷ் காயத்ரியைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்  என்று இதுவரை என்னிடம் சொல்லவில்லை. என்னு டைய மனது கூட இந்தத் திருமணத்தை ஆதரிக்குமா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ராகவனும், மைதிலியும் கூட காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டதாக நீங்கள் முன்னமேயே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் இருவரும் தங்களுடைய மகன் ரமேஷ் காயத்ரியைக் காதலிப்பதையும் அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புதையும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்குக் காரணம் இருக்கத்தானே செய்கிறது “ என்றாள்.
      ராம கிருஷ்ணன், “ என்னைத் தன் சகோதரன் போல் நினைப்பதாக ராகவன் அடிக்கடி சொல்லுவார். அதனால்தான் அவர் தன்னுடைய பிரச்சனைகளை என்னிடம் மனம் விட்டுப் பேசுவதாகவும் சொல்லுவார். எனவே, இந்த விஷயத்தில் அவருக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது என்று புரியவில்லை. ரஞ்சிதம், உன்னிடம்தான் நான் இந்தப் பிரச்சனை முழுவதையும் ஆரம்பத்திலிருந்தே சொல்லியிருக்கிறேன். அதனால் நீதான் நல்ல ஒரு யோசனை சொல்லேன். “ என்றார்.
      ரஞ்சிதம், “ ராகவன், மைதிலி இருவரும் ரமேஷின் முடிவுக்கு சம்மதிக்காததற்கு ஒரே ஒரு காரணம்தான். அது நமக்கு நல்லவே தெரியும். காயத்ரிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மாதங்களில் அவள் கணவன் கார் ஓட்டும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டான். அதனாலேயே அவளுடைய கணவர் வேலை பார்த்து வந்த அந்த  பாங்கிலேயே காயத்ரிக்கு வேலை கிடைத்தது. கணவன் இறந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. காயத்ரிக்கும் ரமேஷைப் பார்க்கும் வரை மறு மணத்தைப் பற்றி சிந்தனையே இல்லை. தன்னிடமும், மற்றவர்களிடமும் ரமேஷ் பழகும் விதத்தையும், அவனுடைய நல்ல குணங்களையும் பல நாட்கள் கவனித்து வந்திருக்கிறாள். தன்னுடைய காதலைக் கூட மிகவும் தயக்கதுடன் ரமேஷ் வெளியிட்டதும், காயத்ரியைத் தான் காதலிப்பது உண்மையென்றும், அவளைத் திருமணம் செய்து கொள்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் ரமேஷ் சொன்னதைப் பற்றி பல முறை யோசித்துப் பார்த்துத்தான் காயத்ரியும் ரமேஷ் காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறாள். “ என்றாள்.
      ராம கிருஷ்ணன், “ ரஞ்சிதம், நீ சொல்வது முற்றிலும் சரி. போன வாரம் நாம் இருவரும் காயத்ரியின் வீட்டிற்குச் சென்று, காயத்ரியின் பெற்றோர்களிடம் விரிவாகப் பேசினோம்.  காயத்ரி வீட்டில் ஒரே பெண். கூடப் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. காயத்ரியின் மீது அக்கறை கொண்ட நெருங்கிய உறவினர்களும் இல்லை. இந்த சூழ் நிலையில் காயத்ரியின் எதிர் காலம் மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறிவிடக் கூடாது என்று நீ சொன்னவுடன்தான் அவர்கள் முகத்திலிருந்த குழப்பம் நீங்கியது போலத் தெரிந்தது. ஒரே பெண்ணான காயத்ரி தங்கள் காலத்திற்குப் பிறகு எந்த ஆதரவுமில்லாமல் தனியாக கஷ்டப்படக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில்தான் ரமேஷ், காயத்ரி இருவருடைய திருமணத்திற்கு அவர்கள்  தடை சொல்வில்லை ;முதலில் தயங்கினாலும், பிறகு சம்மதித்தார்கள்; ரமேஷுடைய பெற்றோர்களின் தயக்கம்தான் இப்போது பிரச்சனை. என்றார்.
      ரஞ்சிதம், “ நீங்கள் இப்போது சொன்னதெல்லாம் ஏற்கனவே நாம் பலமுறை பேசியதுதான். இனிமேல் என்ன செய்ய வேண்டும்; மனதில் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ? என்று கேட்டாள்.
      ராம கிருஷ்ணன், “ ரஞ்சிதம், வருகிற ஞாயிறன்று ராகவன், மைதிலி இருவரின் 25 ஆம் ஆண்டு திருமண நாள். நம்மை மட்டும் அழைத்திருக்கிறார்கள். அன்று சந்தர்ப்பம் பார்த்து நாம் இருவரும் அவர்களிடம் பேசலாம். “ என்றார்.
      ரஞ்சிதம் கொடுத்த வெற்றிலைய சுவைத்துக் கொண்டே, ராம கிருஷ்ணன் உறங்கச் சென்றார். ரஞ்சிதம் அடுப்படியில் உள்ள எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கச் செல்வதுதான் தினசரி வழக்கம். 
      ஞாயிற்றுக் கிழமை மாலை ராகவன், மைதிலி தம்பதியினரைப் பார்த்து, வாழ்த்து சொல்லிவிட்டு வரலாம் என்று ராம கிருஷ்ணன், ரஞ்சிதம் இருவரும் புறப்பட்டார்கள். ராகவன் வீடு அடையாரிலிருந்தது. வீடு பெரியதாக இருந்தாலும், மிகவும் எளிமையாக வீட்டை அலங்கரித்திருந்தார்கள். தோட்டத்தில் பல விதமான மரங்கள், செடி, கொடிகள், இருந்தன. பல வித வண்ண மலர்கள் பூத்திருந்தன. அங்கு ஒரு சிறிய அளவில் செயற்கை அருவி  அமைத்திருந்தார்கள். புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் ராதையுடன் நிற்கும் சிலை ஒன்றும் இருந்தது.
      ஹாலில் இருந்த டைனிங் டேபிளில் இருந்த கேக் வெட்டி, வாழ்த்துக்கள் சொன்ன பிறகு, எல்லோரும் டிபன் சாப்பிட்ட அமர்ந்தோம்.  ரமேஷ் பெற்றோர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான். சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு தன் நண்பர்களுடன் ஏதோ ஒரு சினிமாவுக்குச் செல்வதாகக் கூறி சென்று விட்டான். மாலை மறைந்து, இரவு 7 மணி இருக்கும். எல்லோரும் மொட்டை மாடிக்குச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் என்று ராகவன் சொன்னார்.
      நிலாவின் வெளிச்சம் மாடி முழுவதும் படர்ந்திருந்தது., பல வித வண்ண   மலர்களின் மணம் சுமந்து வீசும் தென்றல்; எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் தோட்டம் பசுமையாகக் காட்சியளித்தது. காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் மகாகவி பாரதியர் கேட்ட பாடல் ராம கிருஷ்ணன் நினைவுக்கு வந்தது. அந்த சூழ் நிலையே மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. மாடியின் மத்தியில் நான்கு நபர்கள் அமர்ந்து பேசுவதற்கு, கிரனைட்டில் செய்த இரண்டு சோபா போன்ற அமைப்பு இருந்தது. நாங்கள் நால்வரும் அங்கு சென்று எதிர் எதிராக அமர்ந்தோம்.
      ராகவன், ‘ நீங்கள் இருவரும் இன்று வந்தது எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி ! என்றார்.
      ரஞ்சிதம், “ எங்கள் இருவருக்கும்  மகிழ்ச்சிதான். உங்கள் வீடு, தோட்டம் இரண்டுமே நல்ல அழகாக இருக்கின்றன. பொதுவாக இதற்குக் காரணம் பெண்கள் என்பதால், உங்கள் மனைவி மைதிலிக்குத்தான் வாழ்த்து சொல்ல வேண்டும் “ என்றாள்.
      ராம கிருஷ்ணன், “ ராகவன் சார், மைதிலி மேடம்! எங்கள் இருவரையும் உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களாகக் கருதுவதாகப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறீர்கள். அந்த உரிமையுடன் இன்று உங்கள் இருவரிடமும்  ரமேஷ் திருமணத்தைப் பற்றி நாங்கள் இருவரும் பேசலாம் என்று நினைக்கிறோம்என்றார்.
      ராகவன், “ என்ன ராம கிருஷ்ணன், புதிர் போடுவது போல பேசுகிறீர்கள். ரமேஷ் திருமண விஷயமாகத்தான் நாம் எல்லோருமே நிறைய முறைகள் பேசியிருக்கிறோமே, புதியதாகப் பேசுவதற்கு இனி என்ன இருக்கிறது ? என்று கேட்டார். மைதிலி தன் கணவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
      இப்போது ரஞ்சிதம், “ நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.  சார், நீங்களும் மைதிலி மேடமும் நினைப்பது சரிதான். உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்கும் போது, உங்க பையன் காயத்ரியைத் தேர்ந்தெடுப்பானேன்? காயத்ரி ஒரு விதவை என்று தெரிந்தும், அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வானேன்? உங்கள் உறவிலேயே இரண்டு பெண்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் ரமேஷ் விரும்புவது காயத்ரியைத்தான். ஏனென்று காரணங்கள் நமக்குத் தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம். ரமேஷ் காயத்ரியின் அழகைப் பார்த்தோ, காயத்ரி ரமேஷின் அழகைப் பார்த்தோ ஒருவருக்கொருவர் விரும்பவில்லை. அதாவது கண்டதும் காதல் என்று சொல்வார்களே, அப்படியெல்லாம் இல்லை. இருவருமே அடுத்தவருடைய பழகும் விதம், அன்பான பேச்சு, மற்ற குணங்களையெல்லாம் பார்த்துத்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இருவரும் ஒரு தீர்மானம் செய்திருக் கிறார்கள். அதாவது அவர்கள் இருவருடைய பெற்றோர்கள் சம்மதத் தோடுதான் திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறார்கள் “ என்றாள்.
      மைதிலி, ‘ ரஞ்சிதம், ஒரு வேளை நாங்கள் இருவருமோ, அல்லது காயத்ரியின் பெற்றோர்களோ சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வார்களாம் ? என்று ஒருவித கவலையுடன் கேட்டாள்.
      ராம கிருஷ்ணன். “ ராகவன் சார், உங்கள் மனைவி கேட்பது நல்ல கேள்விதான். இது போல கேள்விகள் நீங்கள் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்துத்தான், ரஞ்சிதம் ஆலோசனைப்படி சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை நாங்கள் இருவரும் காயத்ரியின் வீட்டிற்குச் சென்று அவளுடைய அப்பா, அம்மா இருவரிடமும் பேசிவிட்டு வந்தோம்.  முதலில், காயத்ரியின் மறுமணத்திற்கு அவர்கள் இருவரும் சம்மதிக்கவே இல்லை. உற்றார், உறவினர்கள் என்ன சொல்வார்களோ என்று தயங்கினார்கள். ஒரு சொலவடை உண்டே, ‘ நாலு பேர் என்ன நினைப்பார்கள், நாலு பேர் என்ன சொல்லுவார்கள் ‘ என்று. அப்போது நான் கேட்டேன். அதாவது நாலு பேர் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்களோ என்பதற்காகத்தான் உங்கள் மகள் காயத்ரியின் திருமணத்திற்கு, அதாவது, மறு மணத்திற்கு பயப்படுகிறீர்கள் அல்லது தயங்குகிறீர்கள், இல்லையா?  யார் அந்த நாலு பேர்? உறவினர்கள். நண்பர்கள், அக்கம், பக்கம் உள்ள தெரிந்தவர்கள், கடைசியாக முன் பின் தெரியாதவர்கள். இவர்களுக்காக நீங்கள் ஒரு முடிவெடுக்கத் தயங்க வேண்டுமா, என்ன? ஒரு வேளை காய்த்ரி மறுமணம் செய்த கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தாலும்,
இதே நாலு பேரும் அப்போதும் ஏதாவது தவறாகக் கூட சொல்ல வாய்ப்புண்டு. இல்லையா, என்று கேட்டேன் என்றார்.
     
      மைதிலி, ‘ ராம கிருஷ்ணன் சார், அவர்களுக்கென்ன, பெண்ணைப் பெற்றவர்கள், விதவையான தன்னுடைய பெண்ணுக்கு எப்படியாவது ஒரு நல்ல பையன் கிடைத்துத் திருமணம் ஆகிவிட்டால் நிம்மதிதானே. என்று நினைப்பார்கள். ஆனால் எங்களுக்கு இருப்பது ஒரே பையன். பார்ப்பதற்கு லட்சனமாக இருக்கிறான், நல்ல படித்திருக்கிறான், பாங்கில் ஆபீசர்; கை நிறைய சம்பளம் வாங்குகிறான். இந்த நிலையில், நாங்கள் ஏன் எங்க பையனுக்கு ஒரு விதவையைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் ? என்றாள்.
      ராம கிருஷ்ணன் பதில் சொல்வதற்கு முன் ரஞ்சிதம், “ நீங்கள் கேட்பது மிகவும் நியாயமாகப்படுகிறது. ஆனாலும் பெண் என்ற முறையில் நீங்களும், நானும் அந்தக் காயத்ரியைப் பார்த்துப் பரிதாபப் படத்தான் வேண்டியதிருக்கிறது. உங்களுக்கோ, எனக்கோ இப்படி ஒரு விதவையான ஒரு மகள் இருந்தால் என்ன முடிவெடுப்போம் என்று எனக்குப் புரியவில்லை. குழப்பமாகத்தான் இருக்கிறது. காயத்ரி மறுமணத்திற்கு, அவளுடைய பெற்றோர்களை நாங்கள் இருவரும் ஒரு வழியாக சம்மதிக்க வைத்து விட்டோம்.  பொதுவாக ஒருவன் எதற்காக ஒரு விதவைப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்குத்தான் பதில் இல்லை “ என்றாள்.
      ராகவன், “ நீங்கள் சொல்வது உண்மைதான், எங்கள் மனதிலும் இதே கேள்விதான். ரமேஷிடம் கேட்டால்,  அவன் சொல்லும் பதில் ஒரே பதில் ‘நானும் காயத்ரியும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம் எங்களுக்கு என்ன பதில் சொல்வது, என்ன செய்வது  என்றே புரியவில்லை “ என்றார்.
      ராம கிருஷ்ணன், “அவர்கள் இருவரிடமும் பேசியதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ரமேஷும், காயத்ரியும் மனதார விரும்புகிறார்கள்; கடற்கரை, ஹோட்டல், சினிமா என்றெல்லாம் சுற்றக் கூடிய சாதாரணமான காதலர்களாக அவர்கள் இல்லை. திருமணம்செய்து கொள்வது, உறவினர்களோடு கலந்து வாழும் நல்ல வாழ்க்கை, எதிர் காலத்தில் குழந்தைகள், அவர்களைத் திட்டமிட்டு நல்ல முறையில் வளர்ப்பது என்ற குறிக்கோள்களுடன்தான் பழகி வருகிறார்கள். இவர்களைப் போன்று, இந்த நாட்களில் பிள்ளைகளைப் பார்ப்பது மிகவும் அரிது என்றார்.
      ராம கிருஷ்ணனிடம் ரஞ்சிதம் “ ஏங்க, உங்கள் நண்பர் சமீபத்தில் ஒரு சிறு கதை எழுதியிருந்தாரே, பொள்ளாச்சியில் மிகப் பெரிய தொழிலதிபருடைய ஒரே மகன், அவர்களுக்குச் சொந்தமான ஒரு மில்லில் வேலை பார்ப்பவருடைய மகளைக் காதலித்ததும், பிறகு இருவருடைய பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிந்ததும் காதலர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் கதை அமைந்திருந்தது. ஆனால் இருவருடைய பெற்றோர்கள் எப்போது திருமணத்திற்குத் தங்களுடைய சம்மதம் தெரிவிக்கிறார்களோ, அன்றுதான் தங்களுடைய இல்லற மற்றும் தாம்பத்திய வாழ்க்கை தொடங்கும் என முடிவெடுத்திருந்தார்கள். இப்படி ஒரு தீர்மானத்துடன் தங்கள் வாழ்க்கையின் இனிய பகுதியைத்  தியாகம்  செய்திருப்பதை அறிந்ததும் காதலர்களுடைய பெற்றோர்கள் மனம் மாறுதலடைந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியைப் பொள்ளாச்சியில் நடத்தி மகிழ்ந்தார்கள் என்று கதை முடியும். சரிதானே? என்று கேட்டாள்.
      ராகவன், “ இது போல கதைகள் வருவதும், நாம் பேசுவதும் இயற்கைதான். ஆனால் அவரவர் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் வரும் போது எதிர் கொள்வதுதான் பிரச்சனையே. இல்லையா ராம கிருஷ்ணன் ? என்று கேட்டார்.
      ராம கிருஷ்ணன், “ நீங்கள் சொல்வது உண்மைதான்; அந்த மாதிரி சந்தர்ப்பங்கள் வரும் போது என்ன செய்வது என்று யோசிக்கும் வேளையில், எனக்கு ஒரு மேல் நாட்டு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
“ நாம் எல்லோரும் கடவுளிடம் கருணை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறோம், இல்லையா? அதே போல் நம்மிடம் கருணை வேண்டி அல்லது எதிர்பார்த்து நிற்பவர்களிடம் நாமும் கருணை காட்ட வேண்டியது அவசியமாகிறதல்லவா? கருணை அளிப்பவர்களும், அந்தக் கருணையைப் பெறுபவர்களும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  என்று சொல்லுகிறார். மேலும் ஒரு வேளை, நாம் பிறரிடம் கருணை காட்ட மறுத்தாலோ, தயங்கினாலோ, நாம் பிரார்த்திக்கும் கருணையை அந்தக் கடவுளிடமிருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றும் கேட்கிறார். எது எப்படியோ, இந்த உலகத்தில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். நான் சொன்னது கிருஷ்ணர் சொன்ன கீதை வாக்கியம் மட்டுமல்ல. உண்மையும் அதுதான். என்று சொல்கிறார்.
      ராம கிருஷ்ணன் இவ்வாறு சொல்லி முடித்ததும், ராகவன், மைதிலி இருவர் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்தது போல இருந்தது. ஆனால் இருவரும் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை.
      ரமேஷும், காயத்ரியும் மண்டியிட்டு, தங்களிடம் கருணையை எதிர்பார்த்து வணங்குவது போல ராகவன், மைதிலி இருவருக்கும் சில வினாடிகள்   தோன்றியது.
      ராகவன் மைதிலியின் முகத்தைப் பார்த்தவாறே, “ இப்போது நாங்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
      ராம கிருஷ்ணன், “ ராகவன் சார், மைதிலி மேடம், எங்களை விட, நீங்கள்  இருவரும் நிறைய படித்தவர்கள்; எங்களுக்கோ அனுபவம்தான்  படிப்பு. நம்முடைய பிள்ளைகளுடைய மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைதான் முக்கியம். உங்கள் மகன் ரமேஷின் விருப்பத்தை நிராகரித்து விட்டு, வேறொரு பெண்ணைக் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கலாம். உங்கள் இருவருடைய பேச்சைத் தட்டாமல் ரமேஷும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யலாம். ஆனால் ரமேஷுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா? காயத்ரியிடம் அன்பு செலுத்தித் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டோமே என்ற ஒரு குற்ற உணர்வு ரமேஷிடம் நீண்ட காலம் இருக்கும், அல்லவா? இந்த உலகில் நியாயமான எந்த விதமான முடிவுகளும் சுதந்திரமாக எடுத்து வாழ, நமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு உரிமை உண்டு, இல்லையா? அப்படி ஒரு சிந்தனை இருக்கும்போது, ரமேஷ், காயத்ரி இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு நீங்கள் இருவரும் பெற்றவர்களாக இருந்தாலும் எப்படி குறுக்கே நிற்க முடியும் ? என்று கேட்டார்.
      ரஞ்சிதம், “ மனைவியை இழந்த ஒரு ஆண், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதைப் பற்றி யாரும் குறை சொல்வதில்லை; அந்த நிகழ்வை இந்த உலகம் மிகவும் சுலபமாக ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம், கணவனை இழந்த ஒரு பெண் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை நெருங்கிய உறவினர்களே, ஏன் அந்தப் பெண்ணைப் பெற்றவர்களே ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனால் இன்று உலகம் மாறி வருகிறது; அதற்கேற்ப மனிதர்களுடைய சிந்தனைகளும் மாறி வருகிறது. ஆண்களுக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் பெண்கள் பணி புரிகிறார்கள்; சாதனைகளும் புரிகிறார்கள். எனவே ரமேஷ், காயத்ரி இருவருடைய முடிவை நாம் மனதார வரவேற்போம்; திருமணத்தையும் நல்ல முறையில் நடத்தி வைப்போம் என்பது என்னுடைய கருத்து. இன்று உங்கள் வீட்டிற்குள் நுழையும் போது என் மனம் குழப்பத்தில்தான் இருந்தது. இவ்வளவு நேரம் நாம் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்துப் பேசி முடிந்த பின் என் மனம் தெளிவு பெற்று விட்டது “ என்றாள்.
      ராம கிருஷ்ணனுக்கு ஒரே அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம். தன்னுடைய மனைவி ரஞ்சிதமா இந்தளவு பேசுகிறாள் ?என்று எண்ணி பெருமையுடன்   புன்னகைக்கிறார்.
      ராகவன், “ என்ன மைதிலி? உனக்கு ரமேஷ் காயத்ரியைத் திருமணம் செய்து கொள்வது முழு சம்மதம்தானே? உனக்கு சம்மதம் என்றால், எனக்கும் சம்மதம்தான். அப்படியென்றால் இந்த நல்ல செய்தியை ரமேஷிடம் எப்போது தெரிவிக்கப் போகிறாய்? என்று கேட்கிறார்.
      மைதிலி, “ ரமேஷ் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு வரட்டும். நாம் இருவரும் சேர்ந்தே சம்மதம் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு நிபந்தனை. ரமேஷ் வரும் சமயம் ராம கிருஷ்ணனும், ரஞ்சிதமும் மகிழ்ச்சியான அந்த நேரத்தில் நம்முடன் இருக்க வேண்டும். என்ன சரிதானே? என்று கேட்கிறாள்.
      ராம கிருஷ்ணன், ரஞ்சிதம் இருவரும் ஒரே குரலில், “ கண்டிப்பாக இருப்போம். உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் கண்டிப்பாகக் கலந்து கொள்கிறோம். என்றார்கள்
      இதோ ரமேஷ் வந்து விட்டான்.
      மைதிலி, “ ரமேஷ், எங்க மருமகள் காயத்ரியை எப்போது வீட்டுக்கு அழைத்து வரப் போகிறாய் ? என்று கேட்டதும் ரமேஷ் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. அவன் கண்கள் இரண்டும் பிரகாசித்தன. பெற்றவர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கினான்; உடனே ராம கிருஷ்ணன், ரஞ்சிதம் இருவரையும் நன்றியோடு பார்த்து வணங்கினான். 
      வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், ராம கிருஷ்ணன் இவ்வாறு சொல்கிறார். “ ரஞ்சிதம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெய காந்தன் எழுதிய ‘ யுக சந்தி என்ற சிறு கதை படித்தேன். அந்தக் கதையில் கௌரிப் பாட்டிதான் முக்கிய கதா பாத்திரம். சின்ன வயதிலேயே விதவையானவள். அந்தக் கால வழக்கப்படி தலை முடியெல்லாம் சிரைத்து, காவி வண்ணத்தில் சேலை கட்டி, சேலை முந்தானையை தலையில் முக்காடிட்டிருந்தாள்.  எதிர் பாராத விதமாக அவளுடைய மகன் வயிற்றுப் பேத்தி கீதா திருமணமாகி ஓராண்டிலேயே விதவையாகி விடுகிறாள். கீதாவுடைய தந்தையோ மனித உணர்வுகளை விட சம்பிரதாயங்களுக்குத்தான் அதிக மதிப்பு கொடுக்கும் இயல்பு டையவர்; எந்த ஒரு செயலுக்கும் இந்த சமுதாயம் என்ன சொல்லுமோ என்று பயப்படுவார். எனவே தன் மகள் விதவையானதும் விதியே என்று இருந்து விடுகிறார். கீதா வெளியூரில் வேலை பார்ப்பது அவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால், கௌரிப் பாட்டியோ தன் பேத்தியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, பேத்திக்குத் துணையாக சென்று விடுகிறாள். ஒரு சமயம் பேத்தி கீதா மறுமணம் செய்ய முடிவெடுக்கும் போது, சிறிதும் ஒப்புக் கொள்ளாத தன் மகனைப் பிரிந்து, கீதாவின் மறுமணம் செய்து கொள்ளும் முடிவை ஆதரித்து பேத்தியுடன் சென்று விடுவதாக ஜெய காந்தன் எழுதியிருப்பார். அந்தக் கதையின் முடிவு ஜெய காந்தன் வரிகளில் ………
“ கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன்பு வழங்கி வந்த இந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுபட்டு, வாழ்விழந்து, அந்த நினைவுகளைக் கொண்டிருந்த, அந்த கனவுகளைக் கண்டிருந்த, அந்த ஆசைகளையெல்லாம் கொன்றிருந்த கௌரிப் பாட்டி அவற்றையெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்.?
என்னடி கீதாக் கண்ணு, இப்படி பண்ணிட்டியே என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறித் தன் மனதுக்குள் கேட்டுக் கொண்டாள். இருந்தாலும் பேத்தி கீதாவினுடைய மறு மணம் செய்து கொள்ளும் முடிவை முழு மனதோடு ஆதரித்தாள்.
வேகமாக ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாக அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்து பயணப் படுவது என்றால்….. 
ஓ ! அதற்கு ஒரு பக்குவம் தேவை ! “
படிப்பவர்கள் மனதைப் புரட்டிப் போடும் என்ன அற்புதமான வார்த்தைகள்!



































Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE