ஓநாய்களின் கூட்டம்


                                                                                                                                          15.3.2019

                ஓநாய்களின் கூட்டம்

பல நாட்கள் தவமிருந்து பத்து மாதங்கள் சுமந்து 
அவளைப் பெற்றோமடா
மார்பிலும், எங்கள் தோளிலும் சுமந்தும், திரிந்தும்
அவளை வளர்த்தோமடா
பாலூட்டி அவளை வளர்த்தோமடா, நல்ல பண்பூட்டி
அவளை வளர்த்தோமடா. - அவள்
பள்ளி செல்லும் அழகைப் பார்த்தோமடா
துள்ளும் மானாக, மயிலாக
அவளைக் கண்டோமடா

மடியில் தவழ்ந்து, மார்பில் வளர்ந்த
மழலை அவளடா -- எங்கள்
வீட்டின் மகாலட்சுமி அவளடா - எங்கள்
வீட்டின் கலைமகள் அவளடா
எங்கள் வீட்டு அருமைப்
பிள்ளைகளுக்கு சகோதரி அவளடா
நாளை வரும் கணவனுக்கு
கண் நிறைந்த  மனைவி அவளடா
பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு
பாசமுள்ள அன்னை அவளடா

நீங்கள் சீரழித்து உங்கள் கால்களில் மிதித்த
அந்தப் பெண்கள் எல்லாம் எங்கள் தாயடா,
எங்கள் சேயடா, எங்கள் பாசத்தில் எங்கள்
தோட்டத்தில் மலர்ந்த       பாச மலர்களடா.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்டவர்களை நினைத்து விட்டால்
என்று பாரதி பாடியது உங்களைப்
பார்த்துத்தானேடா, வஞ்சகப் பேய்களா,
நெஞ்சில் சிறிதும்  ஈரமின்றி, இரக்கமின்றி
பிஞ்சுகள் நெஞ்சில் வஞ்சமுடன்
நஞ்சைக் கலந்தாயடா, பாதகா 

என்ன பாவமடா செய்தோம் நாங்களும்
எங்கள் கண்ணின் மணிகளும் .
பொன்னென்று வளர்த்தோமடா இரு
கண்ணென்று காத்தோமடா.

இன்று எங்கள்
கண்மணி ஆடியோவிலும், வீடியோவிலும்
அலறுவதைக் கேட்டோமடா.
பதறுவது எங்கள் மனதல்ல; பாவிகளே,
பதறுவது எங்கள் உயிரடா,
ஏனடா மாறினீர்கள் இரத்தம் குடிக்கும்
ஓநாய்க் கூட்டங்களாய் ?  

உங்களைப் பெற்றவளும் பெண்தானடா
உடன் பிறந்த தங்கையும் பெண்தானடா
பிறகு என் செல்வத்தை சீரழித்தது ஏனடா
கண்ணீர் சிந்துங்கடா, இந்த உலகத்தில் இனி
வாழ வேண்டுமா என சிந்திங்கடா
எந்த நதியில் குளித்தாலும் தீராத பாவமடா

ஏனென்றால்
நதிகளின் பெயரெல்லாம் பெண்களின் பெயரடா
நல்ல பயிர் வளர வேண்டும் என்பதற்காக
உங்களைக் களையெடுப்பது குற்றமாகுமாடா
உங்களைப் பெற்றவரும், உற்றவரும்
இந்த உலகமும், உங்களைப் போன்ற
கயவர்களைப் படைத்த கடவுளும் ஒரு போதும்
உங்களை மன்னிக்க மாட்டார்கள்      என்பதுதான்
இன்று இங்கு நாங்கள் எழுதும் தீர்ப்புடா !




Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE