காதலித்தால் என்ன ? -- சிறு கதை
காதலித்தால் என்ன ?
-- சிறு கதை
என் பெயர் லலிதா. சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும் கோயமுத்தூர்
வந்து 25 ஆண்டுகளாகி விட்டன. ஒருநாள், என் கணவர்
ராஜ சேகரிடம் “ இந்த வாரம் திருச்சி
சென்று, ஸ்ரீரங்கநாதரை
தரிசனம் செய்து
விட்டு வருவோமா?
“ என்று கேட்டேன்.
அவர் உடனே,
“ நான் 30 ஆண்டுகள் வேலை பார்த்து, ஓய்வு பெற்று 2
ஆண்டுகளாகி விட்டன. இனிமேல் நீ எங்கெல்லாம் செல்ல வேண்டுமென விரும்புகிறாயோ, அங்கெல்லாம்
தாராளமாகப் போய் வரலாம். மாதா மாதம் தமிழ் ஃபெமினாவில் சுற்றுலா பற்றி நிறைய செய்திகள்
வருகின்றன. அந்த மாத இதழ்களை பத்திரமாக எடுத்து வைத்துக்கோ ” என்றார்.
கோவையிலிருந்து, மறுநாள் காலை 7 மணிக்குப் புறப்பட்டோம்.
எங்களிடம் ஒரு ‘சான்ட்ரோ’ கார் இருக்கிறது.
கனரா வங்கியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே வாங்கினோம். என் கணவருக்குக்
கார் ஓட்டுவது சுவாரஸ்மான விஷயம். எங்கள் இருவருக்குமே காரில் நீண்ட தூரம் பிரயாணம்
செய்வது பிடிக்கும். வீட்டில் தயார் செய்த இட்லிகளும், கட்டிச் சட்னியும் இரண்டு பார்சல்களாக
எடுத்துக் கொண்டோம். வழியில் நல்ல நிழல் தரும் ஒரு மரத்தடியில் இட்லிகளை சாப்பிட்டோம்.
அருகிலிருந்த ஹோட்டலில் ஃபில்டர் காஃபி. சரியாக 12 மணிக்கு ஸ்ரீரங்கம் போய் சேர்ந்தோம்.
ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினோம். மதிய உணவு அருந்திய பின் 5 மணி வரை ஓய்வு. இரவு
ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வழியில் இரவு உணவையும் முடித்துவிட்டு நாங்கள்
தங்கியிருந்த அறைக்கு வந்தோம்.
ஸ்ரீரங்கநாதர் கோயிலில் காலை 5 மணி தரிசனம் மிகவும் விஷேசமானது;
அந்த நேரத்தில் கோயிலிலுள்ள ஒரு யானையையும், ஒரு பசுவையும் சன்னதி முன்பு அழைத்து வருவார்கள்.
அந்த யானையும், பசுவும் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும்.
நாங்கள் திருப்தியாக சாமி தரிசனம் பண்ணி விட்டு வெளிப் பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்.
அப்போது ஒரு இளம் தம்பதிகள் இருவரும் எங்களை வணங்கி விட்டு
எங்கள் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை
என்றாலும், அந்த இளம் தம்பதியினரை மனமார வாழ்த்தினோம். “ நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளுடன்
நீண்ட ஆயுளுடனும், உடல் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எங்கள் ஆசிர்வாதங்கள் “
உடனே அந்தப் பெண், “ உங்கள் இருவரிடமும் கொஞ்ச நேரம் எங்கள்
மனதில் உள்ளதை பேச விரும்புகிறோம். ஏனோ தெரியவில்லை, உங்களைக் கண்டதும் எங்கள் மனதில்
இனம் புரியாத மரியாதை தோன்றுகிறது. என் பெயர்
சித்ரா, அவர் பெயர் ஸ்ரீதர். சாமி தரிசனம் செய்யும் போது நாங்கள் இருவரும் உங்கள் பின்புதான்
இருந்தோம். நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகளுக்காக ஸ்ரீரங்கநாதரிடம்
வேண்டிக் கொண்டதைக் கவனித்தோம். உங்கள் இருவருக்கும் மிகவும் நல்ல மனது என்று புரிந்து
கொண்டோம்.. எங்களுக்குக் கல்யாணமாகி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனால் எங்கள் மனதில்
சிறிதளவு கூட மகிழ்ச்சி இல்லை, குழந்தையும் இல்லை “ என்றாள்.
எங்களுக்கு ஒரே
குழப்பமாக இருந்தது. இருவரும் பார்ப்பதற்குப் பொருத்தமான தம்பதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு என்ன பிரச்சனைகள் என்று நாங்கள் கேட்பதற்கு முன் ஸ்ரீதர், “ நானும், சித்ராவும்
கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒருவரை ஒருவர் விரும்பினோம். பொள்ளாச்சியில் என்னுடைய
அப்பா மிகப் பெரிய தொழிலதிபர்; நூற்றுக் கணக்கான ஏக்கரில் தென்னந் தோப்புகளும் அவருக்குண்டு.
அதே அளவுக்குப் பணக்காரரான என்னுடைய தாய் மாமனார் பெண் உஷாவைத்தான் நான் திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்பதில் என்னுடைய பெற்றோர் பிடிவாதமாக இருந்தார்கள். சித்ரா ஏழ்மையான
குடும்பத்தை சேர்ந்தவள். அவளுடைய அப்பா எங்களுடைய டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்க்கிறார்.
நான் சித்ராவை விரும்புவதாகச் சொன்னதும் என்னுடைய பெற்றோர்கள் சித்ராவைப் பார்க்கக்
கூட விரும்பவில்லை; ஒரே பிடிவாதமாக இருவரும் மறுத்து விட்டார்கள். எங்களுக்கு என்ன
செய்வது என்றே புரியவில்லை “
சித்ரா, “ எங்கள் வீட்டிலோ, உங்கள் இருவருடைய திருமணத்திற்கு
ஸ்ரீதருடைய பெற்றோர்கள் சம்மதித்தால், எங்களுக்கும் சம்மதம்தான். ஆனால் அவர்கள் சம்மதம்
வாங்குவது ஸ்ரீதருடைய பொறுப்பு என்று சொல்லி விட்டார்கள்; வாழ்ந்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது என்றும்,
இல்லையேல் இருவரும் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்வதில்லை என்றும் முடிவெடுத்தோம்.
“ என்றாள்.
மேலும் சித்ரா எங்கள் இருவரையும் பார்த்து,“ ஸ்ரீதருடைய பெற்றோர் எப்போது உங்கள் இருவருடைய திருமணத்தை
ஒப்புக் கொள்கிறார்களோ, அதன் பின்புதான் எங்கள் இருவரையும் என்னுடைய பெற்றோரும் வீட்டுக்கு
வரவேற்போம் என்று கறாராக சொல்லி விட்டார்கள். இந்த சூழ்நிலையில் நாங்கள் இருவரும் விரும்பியது,
திருமணம் செய்து கொண்டது தவறா என்பது எங்களுக்கே புரிய வில்லை. நாங்கள் இருவரும் இப்போது அனாதைகளாகி விட்டோம்”. என்று கண் கலங்கியவாறு சொன்னாள்.
ஸ்ரீதரும், சித்ராவும் எங்களை ஏக்கமோடு பார்த்தது போல இருந்தது..
நான் என் கணவரை சற்று தூரம் அழைத்துச் சென்று, “ ஏங்க, இருவரையும்
பார்த்தால் மிகவும் நல்லவர்கள் போல தெரிகிறது. நாம் இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம்
என்று நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது, எப்படி செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை
“ என்றேன்.
என் கணவர், “ லலிதா, அவசரப்பட்டு எந்த வாக்குறுதியும் கொடுத்து
விடாதே, சற்றுப் பொறு. அவர்களிடம் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு நாம் ஒரு முடிவுக்கு
வரலாம்.” என்றார்.
மறுபடியும் ஸ்ரீதர், சித்ரா இருவரும் இருந்த இடத்திற்கு
வந்தோம்.
சித்ரா, “ எங்கள் கதையை சொல்லி உங்கள் இருவரையும் சிரமப்
படுத்தி விட்டோம். ஏனோ உங்கள் இருவரையும் பார்த்தவுடன் என்னுடைய அப்பா, அம்மா நினைவு
வந்து விட்டது. எங்களை மன்னித்து விடுங்கள் ” என்றாள்.
நான், “ அப்படியெல்லாம் சொல்லாதே அம்மா. எங்களுக்குப் பெண்
குழந்தை கிடையாது. ஆண் பிள்ளைகள்தான்; எல்லோருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊரிலிருக்கிறார்கள்.
நாங்கள் இருவரும் கோயமுத்தூரில் தனியாகத்தான் இருக்கிறோம். அடுத்த வாரம் நீங்கள் இருவரும்
எங்கள் வீட்டுக்கு வாருங்கள். நிதானமாகப் பேசலாம்” என்று சொல்லி எங்கள் வீட்டு முகவரியையும், மொபைல்
எண்ணையும் கொடுத்தேன்.
ஸ்ரீதர், சித்ரா இருவரும் முகத்தில் சிறு புன்னகையுடன் எங்களிட
மிருந்து விடை பெற்று சென்றார்கள் .
நானும் என் கணவரும் ஸ்ரீரங்கநாதர் கோயிலை சுற்றிப் பார்க்கப்
புறப்பட்டோம். எவ்வளவு பெரிய கோயில் ? ராஜ கோபுரம் எத்தனை கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது; உயரம் 236 அடி. ஆண்டுகள்
ஆயிரம் கடந்தாலும் நிலைத்து நிற்குமாறு கோபுரத்தைக் கட்டியவர்களை எவ்வளவு பாராட்டினாலும்
தகும். எந்த வித இயந்திர வசதிகளும் இல்லாத காலத்தில் சரியாகத் திட்டமிட்டு, ஆழமான அஸ்தி
வாரத்துடனும், கட்டிட நேர்த்தியுடனும் 13 அடுக்குகளுடன் கட்டி யிருக்கிறார்கள். கோபுரத்தில் அமைந்துள்ள பல வண்ணங்களுடன் திகழும்
சின்ன சின்ன பொம்மைகளின் அழகைப் பார்த்துக்
கொண்டே இருக்கலாம்.
கோயில் கர்ப்ப கிருஹத்தில் ஸ்ரீரங்கநாதர் படுத்திருக்கும்
கம்பீரமான -கோலம், அருகில் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்கும் காட்சி- இவையெல்லாம்
காண்பதற்குக் கண் கொள்ளா காட்சி. கோயில் பிரகாரங்கள்
மிகவும் நீளமாகவும், நல்ல அகலமாகவும் அமைந்திருக்கின்றன. சக்கரத்தாழ்வாருக்கு என்று
தனியாக பெரிய சன்னதி இருக்கிறது.. பிரகாரங்களில் நிறைய நிழல் தரும் மரங்கள், மற்றும் அங்கு அமைந்துள்ள சில சிறிய சன்னதிகள், தண்ணீர் இருக்கும் ஒரு அழகான
தெப்பக் குளம் – இவற்றையெல்லாம் பார்த்துக்
கொண்டே நடந்தோம். வெளியே வரும் வழியில் பிரசாதங்கள் வாங்கி சாப்பிட்டோம். இரவு நாங்கள் தங்கியிருந்த
அறைக்கு வந்து படுத்த பின்பும் ஸ்ரீதர், சித்ரா இருவரையும் பற்றி நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருந்தோம்.
மறு நாள் அதிகாலை 6 மணிக்கு ‘சான்ட்ரோ’
காரில் புறப்பட்டு, மதியம் கோயமுத்தூர் அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு 2 மணிக்கு
வீடு வந்து சேர்ந்தோம்.
இரண்டு நாட்கள் சென்றதும் என்னுடைய கணவரின் நண்பர் திரு
பால தண்டபாணி சாய்பாபா கோயில் அருகிலுள்ள “அம்ரீத்” என்ற மன நலம் குன்றிய
குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு எங்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். சுமார் 200
பிள்ளைகள், அவர்களைக் கவனிக்க 25 ஆசிரியைகள்
அங்கு இருப்பதாக பிரின்சிபால் சொன்னார். பொதுவாகக்
குழந்தைகளைப் பார்ப்பதும், கற்றுக் கொடுப்பதும் மிகவும் சிரமம்; ஆனால் இங்கே பலவிதமான
மன நல குறைபாடுகளுடன் 5 வயது முதல் 15 வயது வரை இருக்கும் ஆண், பெண் குழந்தைகளிடம் அந்த ஆசிரியைகள்
அன்பாகவும், பொறுமையாகவும் பழகுவதையும், பாடங்கள் மற்றும் சில பயிற்சிகள் கற்றுக் கொடுப்பதையும்
நாங்கள் பார்த்தோம்.
இது போல குறைகள் உள்ள குழந்தைகளைப் படைப்பதில் கடவுள் தவறு
செய்து விட்டார் என்று எண்ணும் வேளையில், அதே கடவுள் நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்களையும்
படைத்திருக்கிறார் என்று நினைக்கும் போது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. கல்வித்
துறையிலிருந்து அதிக உதவி இல்லை என்றும் கேள்விப் பட்டோம். திரு பால தண்டபாணி ரூபாய்
ஐம்பதாயிரம் நன்கொடை கொடுத்தார். நாங்களும் ஒரு சிறிய தொகை கொடுத்தோம்.
திடீரென்று ஒரு நாள், சித்ரா என்னுடைய மொபைல் எண்ணில் பேசினாள்.
ஞாயிற்றுக் கிழமை மதியம் உணவருந்த எங்கள் இருவரையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்தாள்.
நானும், என் கணவரும் ஸ்ரீதர், சித்ரா வீட்டிற்குச் சென்று வரலாம் என்று முடிவெடுத்தோம்.
கோவையின் முக்கிய விரிவாக்கப் பகுதியான வடவள்ளியில் தொண்டாமுத்தூர்
சாலையில் இருக்கும் ‘ தக்க்ஷா ஷ்ரவ்யா “ என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் ‘பி’
பிளாக்கில் எண் 205 ல் குடியிருந்தார்கள். வீடு மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் இருந்தது.
வரவேற்பறை, பூஜை அறை, டைனிங் ஹால், கிச்சன்
எல்லாமே இப்போதுதான் துடைத்தது போல மிகவும் சுத்தமாக இருந்தன. பொருட்கள் எல்லாம் எங்கெங்கு
இருக்க வேண்டுமோ அங்கங்கே இருந்தன. ஸ்ரீதர், சித்ரா இருவரையும் மனதார பாராட்டினோம்.
சிறிது நேரம் பொதுவான சில விஷயங்களைப் பேசி விட்டு நால்வரும்
சாப்பிட அமர்ந்தோம். உணவின் மணமும், சுவையும் மிக அருமையாக இருந்தது.
சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு 5 மணிக்கு சூடான பஜ்ஜி,
கட்டி சட்னியுடன் சித்ரா காபி கொடுத்தாள். ஸ்ரீதருடைய பெற்றோர் பற்றி கேட்டோம். அவர்கள்
பிடிவாதம், கோபம் இன்னும் தீரவில்லையென்று இருவருமே வருந்தினார்கள்.
என் கணவர், ஸ்ரீதரைப் பார்த்து,”
உங்கள் அப்பா, அம்மா இருவருக்கும் பொழுது போக்கு என்ன ? வார இறுதியில் என்ன செய்வார்கள்”
? என்று கேட்டார்.
ஸ்ரீதர், “ என்னுடைய அப்பா பெயர் சுந்தர மூர்த்தி, அம்மா
பெயர் மீனாக்ஷியம்மாள். இருவருக்குமே தமிழ் மொழி மீது பற்று அதிகம். திருக்குறள், கம்ப
ராமாயணம் மற்றும் பாரதியார் கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அருகிலுள்ள எந்த
ஊரில் கருத்தரங்குகள் நடந்தாலும் அங்கு தவறாமல்
சென்று விடுவார்கள். வருகிற ஞாயிற்றுக் கிழமை
ஆர்.எஸ். புரத்தில் புரந்த தாசர் கலை அரங்கத்தில் நடக்கும் பாரதி பாடல்கள் பற்றி
ஒரு கருத்தரங்கு நடக்கிறது. என் பெற்றோர்கள் கண்டிப்பாக அங்கு வருவார்கள்”
என்றான்.
உடனே நான் கணவரைப் பார்த்து, “ அன்று அந்த கருத்தரங்குக்கு
நாமும் செல்வோம். அங்கு ஸ்ரீதருடைய பெற்றோரை
எப்படியாவது நாம் அறிமுகப் படுத்திக் கொள்வோம் “. என்றேன். என் கணவர் முகத்தில் தெரிந்த
புன்சிரிப்பே இந்த திட்டத்திற்கு அவர் சம்மதம் என்பது தெரிந்தது. ஸ்ரீதர், சித்ரா இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.
மறு நாள் காலை நடைப் பயிற்சி சென்று வந்த என் கணவர், “ லலிதா,
ஸ்ரீதருடைய அப்பா சுந்தர மூர்த்தியை எனது நண்பர்
பால தண்டபாணிக்கு நன்கு தெரியுமாம். அவரிடம் ஸ்ரீதர், சித்ராவை சந்தித்தது,
அவர்களுடைய பிரச்னை, மற்றும் எல்லா விஷயங் களையும் சொன்னேன். ஸ்ரீதர் அப்பாவும், இவரும்
கல்லூரி நண்பர்கள் என்று சொன்னார். பாரதி பாடல்கள் பற்றி கருத்தரங்கத்திற்கு அவரும்
வந்து, ஸ்ரீதருடைய அப்பா, அம்மாவை நம் இருவருக்கும் அறிமுகம் செய்து வைப்பதாகச் சொன்னார்”
. என்றார்.
ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும் என்று எங்கள் இருவரது மனமும்
மகிழ்ச்சியுடன் எதிர் பார்க்கத் தொடங்கியது.
கலையரங்கத்துக்கு சரியாக 6 மணிக்கு நாங்கள் இருவரும் சென்று
விட்டோம். அங்கு வந்த பால தண்டபாணி சார், ஸ்ரீதர் அப்பா சுந்தர மூர்த்தி, அம்மா மீனாக்ஷியம்மாள்
இருவரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாரதியின் பாடல்கள் கண்ணன் பாட்டு,
குயில் பாட்டு, விடுதலைப் பாடல்கள், தீண்டாமை மற்றும் பெண் விடுதலைப் பாடல்கள் என அன்று நடந்த வழக்காடு மன்றத்தில் மாணவ, மாணவிகள்
மிக அற்புதமாகப் பேசினார்கள். 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும்
பால தண்டபாணி சார் எங்கள் நால்வருக்கும் ‘ டின்னர் ‘ கொடுத்தார். சில பொதுவான விஷயங்
களைப் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்ரீதரின் பெற்றோர்கள் எங்கள் இருவரையும் பொள்ளாச்சியில்
உள்ள தங்கள் வீட்டிற்கு அடுத்த ஞாயிறன்று வருமாறு அழைத்தார்கள். கண்டிப்பாக வருவதாகச்
சொல்லி விடை பெற்றோம்.
ஞாயிற்றுக் கிழமை காலையில் 11 மணிக்குக் கோவையிலிருந்து
புறப்பட்டோம். பொள்ளாச்சியில் ஸ்ரீதரின் வீட்டிற்குச் சென்றதும் சுந்தர மூர்த்தியும்,
மீனாக்ஷியம்மாளும் எங்களை மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மதிய உணவு, விருந்து சாப்பாடு
போல வடை, பாயாசத்துடன் இருந்தது.
மீனாக்ஷியம்மாள், ‘ இன்று எங்களுடைய 30 வது திருமண நாள்.
உங்கள் இருவரையும் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை.” என்றாள்.
உடனே நான், “ ஏன்,
உங்கள் பிள்ளைகளைக் கூப்பிடவில்லை?” என்று கேட்டேன்.
சுந்தரமூர்த்தி, மீனக்ஷியம்மாள் இருவருடைய கண்களும் கலங்கின. “எங்களுக்கு ஒரே மகன். பெயர்
ஸ்ரீதர். மிகவும் செல்லமாக வளர்த்தோம். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தோம். மிகவும்
நல்ல பிள்ளை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு பெண்ணை எங்கள் பேச்சைக் கேட்காமல்,
எங்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டான். இப்போது எங்கிருக்கிறான், என்ன செய்கிறான்
என்று தெரியவில்லை. இந்த நல்ல நாளில் கூட அவனைப் பார்க்க முடியவில்லை “ இது மீனாக்ஷியம்மாள்.
சுந்தரமூர்த்தி, “ எங்கள் மகனுக்கு என்ன குறை வைத்தோம் என்று
அவனிடமே கேட்டுப் பாருங்கள். அவன் விருப்பத்திற்கு மாறாக என்றுமே நாங்கள் நடந்ததில்லை.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. காதலிக்க
நேரமில்லை சினிமாவில், நடிகர் முத்துராமன் சொல்லுவார் ‘ ஒரு நாள் என் மகன் யானை எப்படியிருக்கும்
என்று கேட்டான். உண்மையான ஒரு யானையை வாங்கி, இது தான் யானை என்று சொன்னேன் என்பார்’.
நாங்களும் ஸ்ரீதரை அப்படித்தான் செல்லமாக வளர்த்தோம். என்ன கேட்டாலும் உடனே வாங்கிக்
கொடுத்தோம். ஆனால் யாரோ ஒரு பெண்ணுக்காகப் பெற்று, வளர்த்து, ஆளாக்கிய எங்களைத் தவிக்க
விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டான்” என்று சொன்னார்.
சிறிது நேரம் நானும் என் கணவரும் ஒன்றுமே பேசவில்லை. அவர்கள்
இருவரும் தங்கள் மனதில் உள்ளதைப் பேசி முடிக்கட்டும் என்று இருந்தோம்.
மீனாக்ஷியம்மாள், “ இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. சிறு வயது
முதல் தினம் எங்களைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டான். எப்போதாவது வெளியூர்
சென்றாலும் வீடியோவில் பேசுவான் வீடியோவில் அவனைப் பார்த்த பின்புதான் எங்களுக்குத்
தூக்கம் வரும்.
அப்படியெல்லாம் இருந்தவன் யாரோ ஒரு பெண்ணுக்காக எங்களை மறந்து
விட்டான் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை “. நாங்கள் அப்படி என்னதான்
தப்பு செய்து விட்டோம் ?. அந்த ஏழைப் பெண் வேண்டாம், மாமன் மகள் நல்ல லட்சனமாய் இருக்கிறாள்,
அவளைத் திருமணம் செய்யத்தானே சொன்னோம். அவனோ
ஒரே பிடிவாதமாகக் காலேஜில் தன்னுடன் படித்த
அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன், இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் தனக்குத்
திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணை
ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டான் என்று
கேள்விப் பட்டோம் “. என்றாள்.
நான் இருவரையும் பார்த்து, “ நீங்கள் இருவரும் எங்களை விட
வயதில் பெரியவர்கள். இருந்தாலும் மனதில் பட்டதை சொல்லாமலிருக்க முடியவில்லை. பெற்ற
பிள்ளைகள் ஆணோ, பெண்ணோ அப்பா, அம்மா பேச்சைக் கேட்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள்
கிடையாது. உங்கள் மகன் பிறந்தது முதல் அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவன் விருப்பப்
பட்டதையெல்லாம், அவன் கேட்கும் போதும் அல்லது அவன் கேட்காமலிருந்த போதும் கூட வாங்கிக்
கொடுத்திருக்கிறீர்கள்” என்று சொன்னேன்.
தொடர்ந்து, “இப்போது நீங்கள் இருவரும் அனுமதித்தால் ஒன்று
கேட்கட்டுமா? தான் என்ன கேட்டாலும் அப்பா, அம்மா வாங்கித் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை
சின்ன வயதிலிருந்தே உங்கள் மகன் மனதில் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. திருமண வயது
வந்ததும், அதே மன நிலையுடன், தன் விருப்பத்தை உங்கள் இருவரிடமும் சொல்லியிருக்கிறான்.
நீங்கள் மறுத்துச் சொல்வீர்கள், சம்மதிக்க மாட்டீர்கள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க
மாட்டான். அப்பா, அம்மாவையும் மறக்க முடியாமல், அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த நம்பிக்கையையும்
நிறைவேற்ற முடியாமல் உங்க பிள்ளை எந்தளவு தவித்துப்
போயிருப்பான் ?, இது போல நீங்கள் இருவரும் இதுவரை யோசித்துப் பார்த்திருக்க மாட்டீர்கள்
என்று நினைக்கிறோம். அந்தப் பெண்ணுடைய அனாதரவான
நிலையை நினைத்துப் பார்த்து, அவளைத் திருமணம் செய்ய ஸ்ரீதர் முடிவெடுத்திருக்கலாம்
“. என்றேன்.
ராஜ சேகர், “ லலிதா, இவ்வளவு தூரம் பேசி விட்டாய். ஸ்ரீரங்கம்
சென்றிருந்த போது ஸ்ரீதரையும், சித்ராவையும் நாம் சந்தித்ததையும் சொல்லி விடலாமே “
என்றார்.
சுந்தரமூர்த்தி, மீனாக்ஷியம்மாள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி
தெரிந்தது. . ஆனால் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.
நான், “ ஸ்ரீதர், சித்ரா இருவரையும் நாங்கள் சந்தித்ததை
முதலிலேயே உங்களிடம் சொல்லவில்லையே என்று தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் இருவருடைய
மன நிலையை அறிந்த பின் சொல்லலாம் என்றிருந்தோம். உங்கள் மகனைப் பிரிந்த துயரம் உங்கள்
இருவருடைய பேச்சில் நன்றாகத் தெரிகிறது. பெற்ற பாசம் அவ்வளவு எளிமையான விஷயமா, என்ன
“? என்றேன்.
சுந்தர மூர்த்தி, மீனாக்ஷியம்மாள் இருவருடைய கண்களும் கலங்கின.
இருந்தாலும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை.
நான், “ ஸ்ரீதர், சித்ரா இருவரிடம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்
போது, என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘நாங்கள் திருமணம் செய்து கொண்டதால் எங்கள் இருவரையும் பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இல்லை.
எனவே, காதலித்துத் திருமணம் செய்து கொண்டோமே தவிர எங்கள் மனதிலும் கொஞ்சம் கூட மகிழ்ச்சி
இல்லை. அதனால் எங்கள் பெற்றோர்கள் மனம் மாறும் வரை நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை
என்று தீர்மானமாக முடிவு செய்து விட்டோம்’. அவர்கள் இப்படி சொன்னதும், சித்ராவைத் தனியாக அழைத்துச்
சென்று நான் கேட்ட போது, அவர்களுக்குள் இன்னும் தாம்பத்யமே நடக்க வில்லை என்று தெரிந்து
கொண்டேன்.” என்று சொன்னேன்.
என் கணவர், “ இப்போதெல்லாம் காதலிக்கிறோம் என்று சொல்லிக்
கொண்டு, இந்தத் தலைமுறையில் என்னவெல்லாமோ நடக்கிறது. பிள்ளைகளும் பொறுப்பில்லாமல் நடந்து
கொள்கிறார்கள். ஆனால் ஸ்ரீதர், சித்ரா இருவரும் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள்
என்று அறிந்ததுமே, அவர்கள் இருவருக்கும் கண்டிப்பாக உதவி செய்வதென்று நானும் லலிதாவும்
தீர்மானித்தோம். அதனால்தான் இன்று உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு நிறைய பேசி
விட்டோம். மன்னிக்க வேண்டும். ” என்றார்.
சுந்தர மூர்த்தி, “ மன்னிப்பு என்ற வார்த்தையெல்லாம் நீங்கள்
சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் இருவரும் பேசியது எங்க வீட்டுப் பிள்ளை ஸ்ரீதரின் மேல் கொண்ட அக்கறையில்தானே, அதனால் பரவாயில்லை.
நீங்கள் இருவரும் இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வந்து பேசியது எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சிதான்.
அப்படித்தானே மீனாக்ஷி ? என்று தன் மனைவியிடம் கேட்டார்.
மீனாக்ஷியம்மாளுக்குக் கண்களில் கண்ணீர் வடிவதைத் தடுக்க
முடியவில்லை. எங்கள் இருவருக்கும் இரு கரங்களையும் கூப்பி கண்களாலேயே நன்றி சொன்னாள்.
நாங்கள் அவர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்து சொல்லி விட்டுக் காரில் கோயமுத்தூர்
வந்து சேர இரவு 10 மணியாகி விட்டது.
இரண்டு தினங்கள் சென்ற பின், ஒரு நாள் காலை 10 மணியிருக்கும். என்னுடைய
மொபைல் போனில் மீனாக்ஷியம்மாள் 5 நிமிடங்கள்தான் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் மடிக்
கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த என் கணவருக்கு ஆவலுடன் என் முகத்தைப் பார்த்தார்.
“என்ன லலிதா, என்ன
சொல்கிறார்கள் மீனாக்ஷியம்மாள்?”
நான் , “ எல்லாம் மகிழ்ச்சியான செய்திதான். நம்முடைய முயற்சிக்குப்
பலன் கிடைத்து விட்டது. வருகிற மாதம் 7 ந்
தேதி பொள்ளாச்சியில் ஸ்ரீதர், சித்ரா இருவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு
செய்திருக்கிறார்கள். ஸ்ரீதரிடமும், சித்ராவிடமும் பேசி விட்டார்களாம். சித்ராவினுடைய
பெற்றோர்களிடமும் பேசியிருக்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளிகள்
ராஜ சேகர் – லலிதா தம்பதி யர்கள்தான் அதாவது நாம்தான் முன்னின்று எல்லோரையும் வரவேற்க
வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் “ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
அன்று மாலையே ஸ்ரீதர், சித்ரா இருவரும் எங்கள் வீட்டிற்கு
வந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதருடைய அப்பா, அம்மா இவ்வளவு விரைவில்
மனது மாறுவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை என்றும், அவர்கள் மனம் மாறுவதற்குக்
காரணமான எங்கள் இருவரையும் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் இருவரும் சொன்னார்கள்.
பொள்ளாச்சியில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்குக் கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்து
விட்டுச் சென்றார்கள்.
பொள்ளாச்சி நகரமே திணரிப் போகும் அளவுக்கு எங்கு பார்த்தாலும்,
பேனர்களில் ஸ்ரீதர், சித்ரா புன்னகையுடன் காட்சியளித்தார்கள். வண்ண மயமான ஒளி விளக்குகள், பட்டாசு சத்தங்கள், ஆண்,
பெண் குழந்தைகளின் பேச்சு சத்தங்கள். ஊரே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. வரவேற்பு
நிகழ்ச்சிக்கு வருபவர்களையெல்லாம் நாங்கள் இருவரும் உதட்டில் புன்னகையுடனும், உள்ளத்தில்
மகிழ்ச்சியுடனும் வரவேற்றுக் கொண்டிருந்தோம். மேடையிலிருந்து ஸ்ரீதர், சித்ரா எங்கள்
இருவரையும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவர் கண்களிலும் நன்றியுணர்வு
தெரிந்தது.
‘ஸ்ரீதர், சித்ரா இருவரும் கூடிய சீக்கிரம் ஆண், பெண் என்று
இரண்டு குழந்தைகளைப் பெற்று, எல்லா விதமான நலங்களும் பெற்று, நீண்ட நாள் வாழ வேண்டும்’
என்று எங்கள் இதயங்கள் வாழ்த்தின.
ராஜ சேகர், ‘ ஏன் லலிதா ? ஸ்ரீதர் சித்ரா இருவரையும் ஸ்ரீரங்கத்தில்
பார்த்ததிலிருந்து இன்று வரை நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தால் ஒரு கதை போல இல்லை
? என்றார்.
நான், “ நீங்க சொல்வது சரிதான். இந்தக் கதைக்கு நீங்களே
ஒரு நல்ல தலைப்பு சொல்லுங்களேன். “ என்றேன்.
உடனே ராஜ சேகர், “ காதலித்தால் என்ன? “ என்று சொல்லி முடித்ததும் நாங்கள் இருவரும் சிரித்ததைக்
கேட்டு எல்லோரும் எங்களைப் பார்க்க, நாங்கள் இன்னும் சத்தமாக சிரித்தோம்.
எழுதியவர் : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment