முதியோர் இல்லம் - சிறுகதை
முதியோர் இல்லம் -சிறுகதை
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
என்னுடன் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது
‘நானா நானி’ (நானா என்றால் தாத்தா, நானி என்றால் பாட்டி) என்ற முதியோர் இல்லத்தில் மேலாளராகப் பணி புரிந்து
வரும் நண்பர் வள்ளிநாயகம் “ ராஜசேகர், நீயும்தான்
ஒய்வு பெற்று உன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்து வருகிறாய். ஒரு நாள் உன் மனைவியுடன்
நான் வேலை பார்க்கும் ‘நானா நானி’ வந்து, அங்கு தங்கியிருக்கும் நம்முடைய வயதுடையவர்கள்
எப்படி வாழ்கிறார்கள், என்ன செய்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது எப்படிப் போகிறது
என்பதையெல்லாம் பார்க்கலாமே “ என்றார். என்னுடைய மனைவியும் நீண்ட நாட்களாக ஒரு முதியோர்
இல்லம் சென்று பார்த்து வரலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தது என் நினைவில் வந்ததும்,
நண்பரிடம் உடனே வருவதாக சம்மதித்தேன். காலை பத்து மணிக்குள் வந்துவிடுங்கள்; மதியம்
அங்கிருக்கும் எல்லோருடனும் உணவருந்தலாம் என்றும் சொன்னார்.
வீட்டிற்கு வந்ததும், மனைவி லலிதாவிடம், நண்பரிடம் பேசிய விவரங்களை சொன்னேன். லலிதாவுக்கும் மகிழ்ச்சிதான். வருகிற ஞாயிறன்று செல்லலாம் என்று சொன்னாள். எங்கள் வீட்டிலிருந்து நானா நானி 15 கிலோ மீட்டர் தூரமிருக்கும். ஞாயிறன்று காலை சரியாக 9 மணிக்குக் காரில் புறப்பட்டோம். போகிற வழியில் 10 கிலோ ஆப்பிள் அந்த இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கிக் கொண்டோம். நண்பர் வள்ளிநாயகம் எங்களை எதிர்பார்த்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.
அந்த முதியோர் இல்லத்தின் தோற்றமே மிக அழகாக இருந்தது. சுமார் பத்து ஏக்கர் நிலத்தில் நடுவில் பெரிய வெள்ளை நிறத்தில் ஒரு கட்டிடம், அதில் கீழ்ப்பகுதியில் உணவருந்தும் அறை, புத்தக அலமாரிகள் உள்ள அறை, வரவேற்பறை என்று தனித்தனியாக இருந்தன. மாடியில் அலுவலகம், மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பெரிய ஹால், சில தெய்வ விக்கிரங்களுடன் ஒரு பூஜை அறை என்று இருந்தன. எல்லா அறைகளும் அப்போதுதான் துடைத்து வைத்தது போல மிகவும் சுத்தமாக இருந்தன.
கட்டிடத்தை சுற்றி பலவிதமான பூச்செடிகள், சிறிய, பெரிய மரங்கள் என இருந்தன. வெயிலின் வெப்பம் கொஞ்சம் கூட தெரியவில்லை. மணி 12 ஆகியிருந்தது. எனினும் குளுமையான காற்று வீசியது. தென்னை மரங்கள், மா மரங்கள், வேப்ப மரங்கள், உயரமான பாக்கு மரங்கள் இன்னும் பலவித மரங்கள் அந்த இடத்துக்கு குளிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. சுத்தமான அளவான வீதிகள், மின் விளக்குகள், வீதியின் இரண்டு பக்கங்களிலும் சின்ன, சின்ன வீடுகள் இருந்தன. வீடுகள் எல்லாம் ஒரே அளவில் இருந்தன. எல்லோருமே ஓரளவு வசதியானவர்கள்தான். சிலரிடம் கார் இருந்தது. கார் ஓட்டிச் செல்ல டிரைவர் தனியாகக் கிடைப்பதாகச் சொன்னார்கள். ஒரு சிலர் கால்டாக்ஸியில் டவுணுக்குச் சென்று வருகிறார்கள். சொந்தக் காரர்களோ அல்லது நண்பர்களோ இவர்களைப் பார்க்க வந்தால், ஒரு நாளோ, இரண்டு நாளோ தங்குவதற்கு தனி விருந்தினர் அறைகள் உண்டு.
வீட்டிலிருந்து புறப்படும் போதே, நானும் என் மனைவியும் அங்கு தங்கியிருக்கும் முதியவர்கள் சிலரிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அங்கு தங்கியிருப்பவர்கள் எல்லோருமே 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். சில நபர்களைப் பார்த்தால் 80 அல்லது 85 வயது இருக்கும் போல தோற்றமிருந்தது. மதிய உணவு வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. நண்பர் உணவருந்த அழைத்தார். வயதில் மூத்தவர்களுடன் அமர்ந்து உணவருந்த எங்களுக்கு மிகவும் ஆவலாக இருந்தது. உணவருந்தும் அறைக்குள் நுழைந்தோம். ஒரு டேபிள், நான்கு நாற்காலிகள் என சுமார் 60 நபர்கள் அமர்ந்து உணவருந்தலாம். இலைகளில் சாப்பாடு பரிமாரினார்கள். பொரியல், கூட்டு, பச்சடி, பாயாசம், அப்பளம், ஊறுகாய், தயிர் என எல்லாமே சுவையாக இருந்தன. எல்லோருக்கும் அன்புடன் பரிமாரினார்கள். எங்கள் அருகில் ஒரு வயதான தம்பதி அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். கணவருக்கு 80 வயது, மனைவிக்கு 75 வயது. இருவருக்குமே பற்கள் இல்லை. சிறிது சிரமத்துடன் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரிடமும் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். கணவர் பெயர் சுந்தரம் மனைவியின் பெயர் மீனாட்சியம்மாள்.
அவர்கள் இருவரும் திருநெல்வேலி அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சி தான் சொந்த ஊர் என்றதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் எங்கள் இருவருக்கும் சொந்த ஊர் திருநெல்வேலிதான். உணவருந்திய பின் எங்கள் இருவரையும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்தார்கள். அவர்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் சென்றோம். வீடு இரண்டு படுக்கை அறைகளுடன், சமையலறை, ஹால். மற்றும் பாத்ரூம் வசதிகளுடன் இருந்தது.
சிறிது நேரம் வீட்டைச் சுற்றிப் பார்த்த பிறகு, என்னுடைய மனைவி மீனாட்சியம்மாளிடம் பேசத் தொடங்கிவிட்டாள். நாங்கள் இருவரும் அரசியலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சுந்தரம், மீனாட்சியம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள். இரண்டு குழந்தைகளிடம் அளவில்லாத பாசம் காட்டி, அதிக அக்கறையுடன் வளர்த்து, பள்ளி, மற்றும் கல்லூரியில் நன்றாகப் படிக்க வைத்தார்கள். இரண்டு மகன்களுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மீனாட்சியம்மாள் வேண்டாத தெய்வம் இல்லை. திருமணமாகிய பின் இந்தியாவில் இரண்டு, மூன்று ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, இருவருமே சொல்லி வைத்தது போல அமெரிக்கா சென்று, அங்கு கிரீன் கார்டு வாங்கி செட்டிலாகி விட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 நாட்கள் விடுமுறையில் வருவார்கள். ஒரு நாள் இங்கு வந்து, எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு, மருமகள் வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு திரும்ப அமெரிக்கா சென்று விடுவார்கள். பேரன், பேத்திகள் எங்கள் பக்கமே வருவதில்லை. எந்த நேரமும் செல்போன் அல்லது ஐ பேட் பார்ப்பதும் அதில் கேம்ஸ் விளையாடுவதுமாக இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் வந்து சென்றபின் எங்கள் இருவருக்கும் மகன்கள் வந்தது, எங்களிடம் பேசியது எல்லாமே கனவு போல இருக்கும். சின்ன வயதில் என்னை விட்டுப் பிரியாத என் மகன்கள், இப்போது இரண்டு நாட்கள் கூட என்னுடன் இருப்பதில்லை.
சின்ன வயதில் பெரியவன் அவன் தினசரி வேலைகளை அவனே பார்த்துக் கொள்வான். சின்னவனுக்கோ பல் விளக்கி விடுவதிலிருந்து எல்லாம் நான்தான் செய்ய வேண்டும். பள்ளியிலிருந்து வந்தவுடன் தின்பண்டங்கள் கண்டிப்பாக ஏதாவது வீட்டில் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரே கலாட்டாதான். வீட்டில் கொலு பொம்மைகள் ஆண்டுதோறும் வைப்பதுண்டு. இரண்டு பிள்ளைகளும் அத்தனை உதவிகளும் செய்வார்கள். நான் அல்லது அவங்க அப்பா இரவில் கதைகள் சொல்லாவிட்டால் இருவரும் தூங்க மாட்டார்கள். அதையெல்லாம் இன்று நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்போது நாங்கள் இருவரும் வேளா வேளைக்கு சாப்பிட வேண்டியது, ஏதாவது புத்தகங்கள் படிப்பது அல்லது டி வி பார்ப்பது, தூங்குவது என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு காலத்தில் பெற்றவர்கள் பள்ளி அல்லது கல்லூரி அட்மிஷனுக்கு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு அலைந்தார்கள்; இப்போது முதியோர் இல்லத்தில் அட்மிஷனுக்காக பிள்ளைகள் பெற்றவர்களைக் கூட்டிக் கொண்டு அலைகிறார்கள். முதன் முதலாக பெரியவன் வெளியூர் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்து, ஹாஸ்டலுக்குச் செல்லும் போது, நான் கண்ணீர் சிந்தி அழுதது இன்றும் நினைவிருக்கிறது. இவ்வாறு மீனாட்சியம்மாள் சொல்லி முடித்ததும் எங்களுடைய இதயத்தில் ஏதோ அடைப்பது போல இருந்தது.
இரண்டு மகன்களைப் பெற்றும், கடைசி காலத்தில் தனிமையில் அவர்கள் இருவரும் இருப்பதைப் பார்த்து எங்கள் மனம் கலங்கியது. ஏதாவது சிறிது நோய்வாய் பட்டால், ஒருவருக்கொருவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. பெரிய பிரச்னை என்றால்தான் டாக்டர் வருகிறார். தினசரி வேலைக்காரி வந்து, வீடு கூட்டி, துடைத்துவிட்டு செல்கிறாள். உணவும் தங்க இடமும், உடையும் இருந்தால் மட்டும் போதுமா? அவர்கள் தேடும் அன்பு அங்கு இல்லை. மாலை 5 மணியானதால் சூடான மெது வடைகளும், காப்பியும் வந்தன. சுந்தரம், மீனாட்சியம்மாள் இருவரிடமும் மீண்டும் வருவதாகச் சொல்லி விட்டு விடைபெற்றோம்.
நண்பர் வள்ளிநாயகம் இருக்கும் அலுவலகம் வந்தோம். அவரும்
சில நிகழ்ச்சிகளை சொல்ல ஆரம்பித்தார். இரண்டு குடும்பம்; இருவரும் சம்பந்திகள். மகன்,
மருமகள் இருவரும் ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கிறார்கள்.
பேரன், பேத்தியுடன் வருவார்கள். எல்லோரும் வந்தால் மருமகளுடைய பெற்றோர் வீட்டில்தான்
தங்குவார்கள்; அவர்களுடன் மட்டும்தான் சாப்பிட வருவது என்று இருப்பார்கள். ஏன் அப்படி
செய்கிறாய் என்று பிள்ளையைப் பெற்றவர்கள் கேட்டால், பேரன், பேத்தி இருவரும் அந்த தாத்தா,
பாட்டியுடன் தங்க விரும்புகிறார்கள் என்று
ஒரு காரணம் தன் மகன் சொல்வதாக அந்தத் தாய் கண்ணீருடன் சொல்வதைப் பார்க்கும் போது, நம்முடைய
கண்களும் கலங்கிவிடும்.
ஒரு கவிஞரின் பாடல் நினைவுக்கு வந்தது: லலிதாவிடம் சொன்னேன்.
“ பத்து மாதம் சுமந்து பெற்ற
அன்னை
கல்வியும் அறிவும் தந்து அவை
மத்தியிலே வைத்த அருமைத் தந்தை
இருவருக்கும் இதயத்திலும்,
தானிருக்கும்
இல்லத்திலும் இடம் கொடுத்து,
பிள்ளைகள்
ஒருபோதும் முதியோர் இல்லத்தில்
இடம்
தேடாதிருப்பதல்லவோ தைரியம்
“
நாங்கள் இருவரும் சுந்தரம், மீனாட்சியம்மாள் தம்பதியைப்
பார்த்ததையும், அவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததையும் நண்பர் வள்ளிநாயகத்திடம் சொன்னோம்.
அவர் சிரித்துக் கொண்டே, சொன்னார். “ அவர்கள் இருவரும் ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை
நிச்சயம் உங்களிடம் சொல்லி இருக்க மாட்டார்கள். 6 மாதங்களுக்கு முன்பு, சுந்தரம் சாருக்கு
உடல் நலமில்லாமல். ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டோம். பாவம், மீனாட்சியம்மாள் மட்டும்
கூட இருந்து பார்த்துக் கொண்டார்கள். 4 நாட்கள் கழித்து, அவர்களுடைய பெரிய மகன் மட்டும்
வந்தான். மறுநாளே என்னிடம் ‘ சார், நான் ஒரு வாரம் தான் லீவில் வந்திருக்கிறேன். டாக்டரிடம்
கேட்டால் எதுவும் உறுதியாக சொல்ல மாட்டேன்கிறார். அவர் பிழைப்பாரா, இல்லையா நீங்கள்
சொல்லுங்கள். ஏனென்றால், ஒரு வேளை ஏதாவது நடந்து விட்டால், நான் எல்லாவற்றையும் முடித்துவிட்டு,
அமெரிக்கா சென்றுவிடுவேன். இதுபோல் என்னால் லீவு எடுத்துக் கொண்டு அடிக்கடி வர முடியாது.
இனிமேல் அவர் இறந்தபின் எனக்கும், தம்பிக்கும் நீங்கள் தகவல் சொன்னால் போதுமானது. இப்படி
நான் சொல்வது என்னுடைய அம்மாவுக்குத் தெரிய வேண்டாம் ” சொன்னார். நான் என்ன சொல்லமுடியும்? சரியென்று தலையாட்டினேன். பத்து தினங்கள்
ஆஸ்பத்திரியில் இருந்த பின், சுந்தரம் சார் கடவுள் புண்ணியத்தில் பிழைத்துக் கொண்டார்.
அதற்குள் அவர்களுடைய மூத்த மகன் அமெரிக்கா சென்று விட்டார்.
ஒரு நாள் மீனாட்சியம்மாள் என்னிடம் வந்து, “ மானேஜர் சார், என்னுடைய மகன் அன்று உங்களிடம் பேசியதை என்னுடைய தோழி சரஸ்வதி கேட்டு, என்னிடம் முழுவதுமாக சொல்லிவிட்டாள். நாங்கள் எப்போது இறந்தாலும், மகன்களுக்குத் தகவலே சொல்ல வேண்டாம். யாராவது சொல்லி எப்போது தெரிகிறதோ, அப்போது தெரிந்து கொள்ளட்டும் “ என்று சொன்னார்கள். என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை.
இந்த செய்தி கேட்டதும் எங்கள் இருவருடைய மனம் மிகவும் வேதனைப்பட்டது. என்ன உலகம் இது? அன்பு, பாசம், உறவு என்பதெல்லாம் இந்தத் தலைமுறையில் கிடையாதா? பெற்றவர்கள் தான் பெற்ற பிள்ளைகளுடன் இருப்பது, பிள்ளைகள் பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதா? ஒன்றுமே புரியவில்லை. அன்புக்காக ஏங்கும் உள்ளங்களைப் பார்த்தோம். ஒருவித இனம் புரியாத ஏக்கம் அவர்கள் கண்களில் தெரிந்தது. மாலை 6 மணிக்கு எங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்தோம்.
ஒரு வாரம் சென்றதும், ஒரு நாள் ‘நானா நானி’ சென்று சுந்தரம், மீனாட்சியம்மாள் இருவரையும் பார்க்க வேண்டும் என்று என்னவோ எங்கள் இருவருக்கும் மனதுக்குள் தோன்றியது. காலையிலேயே புறப்பட்டோம். சுந்தரம் சார் சிறிது உடல் நலமில்லாமல் இருந்தார். மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர விருப்பம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டதாக மானேஜர் சொன்னார். அன்று முழுவதும் அவர்கள் இருவர் கூடவே இருந்தோம். எங்களுக்கும் சேர்த்து உணவு வீட்டிற்கே வந்து விட்டது. அவர்கள் இருவரும் பால்ய வயதுகளில் நிறைய நடந்த சம்பவங்களைப் பற்றி மிகவும் உற்சாகமாகவும், சுவாரஸ்யமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சுந்தரம் சார், ‘ கல்லூரியில் படிக்கும் போது வகுப்புகளைக் கட் அடித்து விட்டு, நண்பர்களுடன் சினிமா செல்வதும், ஒரு முறை அந்த தியேட்டரில் லீவிலிருந்த, ஒரு ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டதையும் பற்றி வேடிக்கையாக சொன்னார்’.
மீனாட்சியம்மாள், ‘ சுந்தரம் சார் தன்னைப் பெண் பார்க்க வந்ததும், தான் அலை பாயுதே, கண்ணா என் மனம் அலை பாயுதே என்ற பாடல் பாடியதும், பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பார்த்து நான் பாடியதாக எல்லோரும் கலாட்டா செய்ததையும் சொன்னார்கள். காபி தம்ளரைக் கையில் வாங்காமல் சுந்தரம் சார் தன்னுடைய முகத்தையே பார்த்ததாகவும் இப்போதும் சிறிது நாணத்துடன் சொன்னார்கள்.
அன்று முழுவதும் ஒரே சிரிப்பும், கேலிப் பேச்சாகவும் கழிந்தது. எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வரும்படி அன்புடன் அவர்கள் இருவரையும் அழைத்தோம். கண்டிப்பாக வருவதாகச் சொன்னார்கள். அவர்கள் இருவரையும் காலில் விழுந்து வணங்கியதும், எங்கள் இருவரையும் பார்த்து, ‘ நீங்கள் இருவரும் நல்ல உடல் நலத்துடன், மன திருப்தியுடன் ஆண்டவன் அருளுடன் பல்லாண்டு வாழ வேண்டும் “ என்றார்கள்.
இளமையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருந்ததால் சுந்தரம் சாருக்கு, நோய் மற்றும் கவலைகள் நீங்கி, தன்னுடைய இளமைக்
காலத்துக்கே போய்விட்டார் என்று மீனாட்சியம்மாள் சொல்ல நாங்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.
மீண்டும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டோம்.
ஒரு மாதமாகியிருக்கும். ஒருநாள் நானா நானி மேனேஜர், “ சுந்தரம் சார் மிக சீரியஸாக இருக்கிறார். உங்கள் இருவருக்கும் மட்டும் தகவல் சொல்லும்படி மீனாட்சியம்மாள் கூறினார்கள். உடனே புறப்பட்டு வாருங்கள் “ என்றார்.
படுக்கையில் படுத்திருந்த சுந்தரம் சார் எங்களைப் பார்த்ததும் சைகையில் அருகில் வரும்படி அழைத்தார். வாய் திறந்து பேச முடியவில்லை. எங்கள் இருவரையும், தன் மனைவி மீனாட்சி யம்மாளையும் மாறி, மாறிப் பார்த்தார். இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்தது. நாங்கள் இருவரும், “ சுந்தரம் சார், உங்கள் மனைவி மீனாட்சியம்மாள் அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவர்கள் எங்களுக்கு இன்னொரு அம்மா, “ என்று சொல்லி மீனாட்சியம்மாள் கைகளைப் பிடித்துக் கொண்டோம். சுந்தரம் சார் கண்களில் ஒரு பிரகாசமான ஒளி தெரிந்தது. சில வினாடிகளில் அவர் கண்கள் நிரந்தரமாக மூடிக் கொண்டன.
மீனாட்சியம்மாள் பிரமை பிடித்தது போல நின்று கொண்டிருந்தார்கள். கண்களில் கண்ணீர் வடிந்தது. இதற்குள் 'நானா நானி' யில் தங்கியிருந்தவர்கள் கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். நாங்கள் இருவரும் மானேஜரிடம் சென்று மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மானேஜர் இரண்டு மகன் களுக்கும் உடனே தகவல் தெரிவித்து விட்டு, பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எல்லா சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் மீனாட்சி யம்மாளை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போவதாக மானேஜரிடம் சொன்னோம். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
சுந்தரம் சார் வீட்டிலிருந்து திடீரென்று வந்த ஒரு நபர், “ மானேஜர் சார், உடனே வந்து, மீனாட்சியம்மாளைப் பாருங்கள் “ என்றார். நாங்கள் எல்லோரும் வேகமாகச் சென்று பார்த்தோம். வீட்டில் சுவர் ஓரமாக அமர்ந்திருந்த மீனாட்சியம்மாள் உடலில் அசைவில்லை; முகத்தில் ஒரு தெய்வீகக் களை. ஒரு அமைதி. மீனாட்சியம்மாள் அன்று ஒரு நாள் எங்கள் இருவரையும் பிரிக்க முடியாது என்று எங்களிடம் சொன்னது போல சுந்தரம் சாருடன் சென்றுவிட்டார்கள். திருமண நாளில் ஒன்று சேர்ந்தவர்கள் இன்று மரண நாளிலும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
மானேஜர் அருகில் இருந்தவரிடம் எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே சொல்வது எங்கள் காதில் விழுகிறது. ‘ சுந்தரம், சார், மீனாட்சியம்மாள் இருவரும் கடந்த மூன்று மாதங்களாக ராஜசேகர், லலிதாவை சந்தித்ததிலிருந்து மகிழ்ச்சியாக இருந்து வந்தார்கள். வாழ்நாட்களில் அவர்களுக்குக் கிடைக்காத அன்பு இவர்கள் இருவர் மூலம் கிடைத்ததினால் அன்புக்காக ஏங்கிய இரு உள்ளங்கள் இன்று அமைதியாக உறங்குகின்றன. “
இறைவனே !, சாவிலும் இணை பிரியாத சுந்தரம் சார், மீனாட்சியம்மாள் தம்பதிகளுடைய ஆன்மா சாந்தியடையட்டும் ‘
Comments
Post a Comment