ஏழு பொற்காசுகள்
ஏழு பொற்காசுகள்
-கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
மாலை நேரம்,
மழை வருவது
போல இருக்கிறது
என்று சுந்தர
மூர்த்தி எண்ணியவாறு
மேலே வானத்தை
ஒரு முறையும்
நீண்டு கிடக்கும்
வீதியை ஒருமுறையும்
மாறி மாறிப்
பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஊரின் பெயர்
நல்லூர், நல்லவர்கள்
அதிகம் இருந்ததனால்
அந்தக் காலத்தில்
இந்த ஊருக்கு
நல்லூர் என்ற
பெயர் வந்திருக்கலாம்.
கடந்த பன்னிரண்டு
ஆண்டுகளாக சுந்தர
மூர்த்தி நல்லூரில்
ஒரு மளிகைக்
கடையும், கடையின்
இணைப்பாக உள்ள இடத்தில் பகல் மற்றும்
மாலை நேரங்களில்
வடைகள் மற்றும்
காபி, டீ
தயார் செய்வதும்
உண்டு. மளிகை
வியாபாரம் சுமாராக
இருந்ததால், அவருடைய மனைவி மீனாக்ஷியம்மாள் ஆலோசனைப்
படியும் ஒத்துழைப்போடும்
இந்த சிறிய
டிபன் ஸ்டால்
இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு ஆரம்பிக்கப்பட்டது.
வடைகளுக்கு மாவு அரைப்பதிலிருந்து, மிகவும் சுவையாக
பல வகையான வடைகள் சுட்டு எடுத்து, தேங்காய் மற்றும்
காரச் சட்னி
தயாரிக்கும் வரை மீனாக்ஷியம்மாளின் கைவண்ணம்தான். கைப்பக்குவம்
அல்லது கை
மணம் என்பார்களே
அந்த சொலவடை
மீனாக்ஷியம்மாள் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சரி
என்று எல்லோரும்
சொல்வார்கள்.
பாளையம்கோட்டை பெருமாள் கோயில் தேரடிக்கு எதிரே இருக்கும்
சாரதி மெஸ் ஓனரின் மகள்தான் மீனாக்ஷியம்மாள். சாரதி மெஸ் 20 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்
கூடிய ஒரு சிறிய ஹோட்டல்தான். மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரைதான் திறந்திருக்கும்.
அந்த 5 மணி நேரத்தில் எப்போது சென்றாலும் காத்திருந்து தான் சாப்பிட முடியும். பார்சலுக்குத்
தனி வரிசை. அங்கு தயாராகும் அத்தனை டிபன் வகைகளும் சுவையோ சுவை. பல வகையான தோசைகள்,
காரவடை, மெதுவடை, ஆமவடை, பஜ்ஜி. பூரிக் கிழங்கு எப்போது சென்றாலும் சூடாகத்தான் கிடைக்கும்.
இப்போது தெரிகிறதா, மீனாக்ஷியம்மாளின் கை மணம் அல்லது கைப் பக்குவத்தின் இரகசியம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த
தம்பதியினர் திருநெல்வேலியிலிருந்து நல்லூருக்கு
வந்தார்கள். சுந்தரமூர்த்திக்கு ஒன்று விட்ட மாமா
ஒருவர் இந்த
ஊரில் இருந்ததால்
அவர் உதவியுடன் நல்லூரில் மளிகைக் கடை
தொடங்கினார்கள்.
அந்தக் காலத்தில்
இவரது மளிகைக்கடைதான்
ஊரில் பெரியது.
ஊரில் உள்ள
மக்கள் அனைவரும்
இந்தக் கடையில்தான்
அரிசி, மற்றும்
மளிகை, காய்கறிகள்,
பழவகைகள் வாங்கி
வந்தார்கள். தற்போது புதிதாக கனரா வங்கி
கிளை ஒன்று
நல்லூரில் திறந்திருப்பதால், வங்கியில் கடன்
வாங்கி, இரண்டு
மளிகைக் கடைகளும்
ஒரு
சிறிய டிபார்ட்மெண்ட்
ஸ்டோரும் நல்லூரில்
வந்து விட்டன.
அன்றிலிருந்து சுந்தரமூர்த்திக்
கடையில் வியாபாரம்
சிறிது சிறிதாகக்
குறையத் தொடங்கியது.
கனரா வங்கி மேலாலர் பாலகிருஷ்ணன் ஒரு நாள் மாலை கடையில்
வடைகள், காபி சாப்பிட்டுவிட்டு, “ என்ன சுந்தரமூர்த்தி, வங்கிக்கு வருவதே இல்லையே,
உங்களைப்போல் கடை வைத்திருப் பவர்களுக்குக் குறைந்த வட்டியில் வியாபார அபிவிருத்திக்காக
கடன் வழங்க அரசாங்கம் சொல்கிறது. எப்போது வருகிறீர்கள்?”.என்று
கேட்டார். அதற்கு சுந்தரமூர்த்தி, “ மானேஜர் சார், கடன் வாங்கி, தவணை கட்டுமளவு தற்போது
வியாபாரம் இல்லை. கடன் தேவை ஏற்படும்போது வருகிறேன்” என்றார்.
மாலை ஆறு
மணியாகியும் மளிகைக் கடையில் பெரிய அளவில்
வியாபாரம் இல்லை.ஆனால் டிபன் வகைகள் விற்பனைக்குக் குறை வில்லை. கடையில் கணேசன் என்ற15 வயதுப்
பையன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கிறான். கடையை சுத்தம் செய்வது, சுந்தரமூர்த்தி
இல்லாத போது, பொருட்கள் வாங்க வருபவர்கள் தேவைக்கேற்ப பொட்டலம் மடித்துக் கொடுப்பது,
கனரா வங்கி, பஞ்சாயத்து அலுவலகம் இரண்டு இடங்களிலிருந்து போன் வரும்போது, அவர்களுக்கு
டிபன், காபி நேரில் கொண்டு செல்வது போன்ற வேலைகளைக் கணேசன் செய் வதுண்டு. கணேசனுக்கு
சுந்தரமூர்த்தி வீட்டில்தான் மதியம் சாப்பாடு. காலையில் 9 மணிக்கு வந்தால், மாலை6 மணிவரை
கடையில் இருப்பான். கணேசனை சுந்தரமூர்த்தி
தம்பதிகள் தன்னுடைய இன்னொரு மகன் போல பாவித்து வந்தார்கள்.
வீதியில் யாரோ
ஒரு மனிதர்
மிக மெதுவாக
நடந்து வருவது
தெரிகிறது. கடை அருகில் அந்த
உருவம் வருகிறது.
சுந்தரமூர்த்தி உற்று நோக்குகிறார்.
அந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் வரும் தொடர் கதைகளுக்காக
பிரபல ஓவியர் கோபுலு வரைந்த துப்பறியும் சாம்பு போல வந்தவர் தோற்றம் இருந்தது. பழுப்பு
நிற பஞ்சகச்சம் வேட்டி, கலைந்த சட்டை, அழுக்கான பழைய கோட்டு சகிதம் இடது கையில் ஒரு
தகரப் பெட்டி, வலது கையில் ஒரு குடையுடன் வந்தார்.
வந்தவர் கடை முன்னே போட்டிருந்த நீள பெஞ்சில் மெதுவாக அமர்ந்தார்.
வானம் இருண்டு கொண்டு வந்தது; மழை எந்த நேரமும் பெய்யலாம் என்பது போல் தூரத்தில் மின்னல்
மின்னுவதும், இடி இடிப்பதும் கேட்டன. மரங் களிலுள்ள இலைகள் வேகமாக அசைந்து குளிர்ந்த
காற்றும் வீச ஆரம்பித்தது.
சுந்தரமூர்த்தி ஒரு பெருமூச்சு விட்டபின், வந்தவரிடம்,
‘ ஐயா, உங்களைப் பார்த்தால், நீண்ட தூரம் நடந்து வந்திருப்பீர்கள் போலத் தோன்றுகிறது.
ஏதாவது சாப்பிடுகிறீர்களா? வடை, காபி தரட்டுமா” என்று கேட்டார். வந்தவர்
சுந்தரமூர்த்தியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு முதலில் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை;
பிறகு,“ நன்றி, ஐயா, பசி இருக்கத்தான் செய்கிறது; ஆனால் எனக்கு ஒன்றும் வேண்டாம்”. என்றார். சுந்தரமூர்த்திக்குக் குழப்பமாக இருந்தது.
வந்தவர் ஒரு வேளை மனநிலை சரியில்லாதவரோ என்று நினைத்தார்.
எது எப்படியோ வந்தவர் பசி என்று சொன்னதால், இரண்டு மெதுவடைகள்,
சட்னியுடனும், ஒரு பித்தளைத் தம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்து, வந்தவர் முன்பு வைக்கிறார்.
வந்தவர் ஒரு நிமிடம் வடைகளையும் காபியையும் பார்த்து விட்டு, உடனே வேகமாக சாப்பிட ஆரம்பிக்கிறார்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு பித்தளைத் தம்ளர், டபராவில் காபியும் வருகிறது. காபியை
வாய் வைத்து மிகவும் ருசித்துக் குடிக்கிறார்.
சாப்பிட்டு முடித்ததும் கடையின் பின் பக்கம் சென்று கிணற்றடியில் நன்றாகக் கைகளைக்
கழுவி விட்டு, செம்மண் சகதி படிந்த கால்களையும் சுத்தம் செய்கிறார்.
கடையின் முன்பு வந்து பெஞ்சில் அதே இடத்தில் அமர்கிறார்.
சுந்தரமூர்த்திக்கோ ஒன்றும் புரியவில்லை. வந்தவர் சாபிட்டதற்குக் காசு கொடுப்பதாகத்
தெரியவில்லை; காசு உடனே கேட்பதா, இல்லை சிறிது
நேரம் கழித்துக் கேட்கலாமா என்று யோசிக்கிறார். இதற்கிடையில் 5, 6 நபர்கள் கடைக்கு
வந்து மளிகைச் சாமான்களும், வடைகள் பார்சலும் வாங்கிச் சென்றனர். வந்தவர் சிறிது தயக்கத்துடன் சுந்தரமூர்த்தியைப் பார்த்து, ‘ ஐயா, என்னை மன்னிக்கவும்,
வடைகள், காபி சாப்பிடும் முன்பே நான் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். இதோ என்னிடம்
ஐந்து ரூபாய்கள் மட்டும்தான் இருக்கிறது. தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்’.
என்கிறார். மழை சோவென்று பெய்ய ஆரம்பித்து விட்டது
வந்தவரைப் பார்க்கவும் சுந்தரமூர்த்திக்குப் பரிதாபமாக இருக்கிறது.
ஆனால் ஓசியில் கொடுக்குமளவு தன்னுடைய நிலைமை தற்போது இல்லை என்றும் நினைக்கிறார். நடந்ததையெல்லாம் உள்ளே
இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி மீனாக்ஷியம்மாள். தன் கணவரை உள்ளே அழைத்து,
‘இதோ பாருங்க, வந்திருப்பவரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. அவரிடம் காசு
எதுவும் வாங்க வேண்டாம். நமது வீட்டிற்கு வந்த விருந்தினர் என்று நினைத்துக் கொள்வோம்’
என்கிறாள். சுந்தரமூர்த்திக்கும் அதுதான் சரி
என்று தோன்றியது. வெளியே வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுக்க விரும்பும் ஐந்து ரூபாய் உங்களிடமே இருக்கட்டும், அடுத்த முறை
கடைக்கு வரும்போது நீங்கள் பணம் தந்தால் போதும்’ என்கிறார். வந்தவர்
ஒன்றும் பேசாமல் நன்றியோடு சுந்தரமூர்த்தியைப் பார்க்கிறார். குடை, மற்றும் தகரப் பெட்டியை
எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகிறார். சுந்தரமூர்த்திக்கோ என்ன செய்வது , சொல்வது
என்று தெரியவில்லை. வந்தவர் கையில் குடையிருந்தாலும் இந்தக் கொட்டுகிற மழையில் அவரால்
செல்ல முடியுமா?
“ ஐயா, இன்று இரவு இங்கு தங்கியிருந்துவிட்டு, மழை நின்ற
பின் காலையில் செல்லுங்கள்; மணி எட்டரை. நான் கடையை மூடும் நேரமாகிவிட்டது.”
‘மழை இன்று இரவு முழுவதும் விடாமல் பெய்யும் என்று நினைக்கிறேன்.
நான் இங்கு இருப்பது தங்களுக்கு சிரமமாக இருக்கும்தானே”
“ நான் அப்படி சிரமமாக நினைக்கவில்லை. இங்கு தங்கிவிட்டுக்
நாளைக் காலையில் நீங்கள் செல்லலாம்” ஆமாம், நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்?”
“ ஐயா, நீங்கள் கடையை மூடிவிட்டு, இரவு உணவு அருந்திவிட்டு,
சாவகாசமாக வாருங்கள். நான் என் கதையை அப்புறமாகச் சொல்லுகிறேன்”
சுந்தரமூர்த்தி கடையைப் பாதி மூடிவிட்டு, உணவருந்த வீட்டிற்குள்
செல்கிறார். கை, கால், முகம் கழுவி, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, சாமி கும்பிட்டு
விட்டு உணவருந்த அமர்கிறார். சூடான இட்லிகள், சட்னியுடன் இரண்டு தட்டுகளில் வருகிறது.
“என்னங்க? இந்த ஒரு தட்டு இட்லிகளை வெளியே இருப்பவரிடம்
கொடுங்கள்; பிறகு நீங்கள் அமர்ந்து நிதானமாகச் சாப்பிடுங்கள்”.
“ மீனாக்ஷி, நான் மனதில் நினைத்ததை நீ சொல்லி விட்டாய்.
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று”
என்று திருவள்ளுவர் சொன்னதை நான் இப்போது நினைத்தேன். இதோ,
அவரிடம் இட்லிகளைக் கொடுத்து வருகிறேன்”
சுந்தரமூர்த்தி இட்லித் தட்டைக் கொண்டு வந்து பெஞ்சில் வைத்தவுடன்
வந்தவருக்குக் கண்களில் கண்ணீர் படர்ந்தது. ஆவலுடன் இட்லிகளைச் சாப்பிட ஆரம்பித்தார்.
சுந்தரமூர்த்தி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றார். அவரும், மீனாக்ஷியம்மாளும் சாப்பிட்டபின்,
வந்தவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம் என் நினைத்தவாறு இருவரும் வெளியே வந்தார்கள் இரவு 9 மணி. வந்தவர் மீனாக்ஷியம்மாளைப் பார்த்து,
“ இட்டிலி, சட்னி மிகவும் நன்றாக இருந்தது. நன்றியம்ம்மா உங்களுக்கு!, கடவுள் உங்கள்
இருவருக்கும் எல்லாவிதமான நன்மைகளையும் கொடுப்பார்.” என்றார். பிறகு அவர்
இருவரையும் பார்த்து தன் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
“என்னுடைய பெயர் மாதவன் நாயர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு
முன்பு, என் மனைவிக்கு முதல் குழந்தை பிறக்கும் நேரம், குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ
வசதி கிடைக்காததால் குழந்தை இறந்தே பிறந்தது. அடுத்த மூன்று மாதங்களில் இறந்த தன் குழந்தையை
நினைத்து, நினைத்து அந்த ஏக்கத்திலேயே என் மனைவி என்னை விட்டு ஒரேயடியாகப் பிரிந்து
போய்விட்டாள். அன்றுமுதல் நான் எல்லா ஊர்களையும் என் சொந்த ஊராக நினைத்துக் கால்கள்
போன பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். சில சமயங்களில் காடுகளில் அலைந்து, மூலிகைகளை
சேகரிப்பது, அந்த மூலிகைகளிலிருந்து மருந்துகள் தயார் பண்ணுவது,, நான் செல்லும் ஊர்களில்
அவற்றை விற்பனை செய்வது வழக்கம். அதில் கிடைக்கும் வருமானத்தை அந்த ஊர்களில் உள்ள அரசு
பள்ளிகளுக்கு வேண்டிய குடிதண்ணீர், கழிவறை கட்டுதல் போன்ற வசதிகள் செய்வதற்கு கையில்
சேர்ந்த பணத்தைக் கொடுத்து விடுவேன்.
இந்த நல்லூர் கிராமத்திற்கு இன்றுதான் வந்தேன். மூலிகை மருந்துகள்
இன்று விற்கவும் முடியவில்லை. மழை வந்து விட்டது. உடனே கண்ணில் பட்ட உங்கள் கடைக்கு
நேராக வந்துவிட்டேன்”.
மாதவன் நாயர் கதையைக் கேட்டவுடன், சுந்தரமூர்த்தி, மீனாக்ஷியம்மாள்
இருவருடைய கண்களும் கலங்கின. தங்களுடைய ஒரே மகன் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில்
மூன்றாம் ஆண்டு படித்து வருவதையும், தங்களிடம் மகன் மிகவும் பாசமாக இருப்பதையும் மனதில்
நினைத்துக் கொண்டார்கள். மாதவன் நாயர் பெட்டியைத் திறக்கும் போது மஞ்சள் நிறத்தில் கீழே ஒரு காசு விழுந்தது. அதை
அவர் கவனிக்கவில்லை, ஆனால் சுந்தரமூர்த்தி பார்த்து விட்டார். மாதவன் நாயரிடம் வீட்டின்
உள்ளே முதல் அறையில் இருந்த பெஞ்சில் படுத்துக்
கொள்ளச் சொல்லி விட்டு, தம்பதியினர் இருவரும் தூங்கச் சென்றார்கள்.
மாதவன் நாயர் தன் பெட்டியிலிருந்த போர்வையை எடுத்து தன்னுடைய
மெலிந்த உடலை மூடிக்கொண்டார். குளிரில் அவரது உடல் நடுங்கியது. மழை சிறு சிறு தூரல்களாக
மாறி இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.
இரவின் இருள் முடிந்து, மறுநாள் கதிரவனின் ஒளி வெள்ளம் நல்லூர்
கிராமம் முழுவதும் படர்ந்தது. மாதவன் நாயர் வீட்டின் பின் புறமுள்ள கிணற்றில் எளிமையாகக்
குளித்துவிட்டு, இரவு தான் படுத்திருந்த பெஞ்சில்
அமர்ந்து, தான் கொண்டு வந்த பெட்டியில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டார்.
சுந்தரமூர்த்தி, கடையைத் திறந்துவிட்டு, “ஐயா, காலை உணவருந்திவிட்டு செல்லுங்கள்”
என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, மீனாக்ஷியம்மாள்
ஒரு தட்டில் உப்புமாவைக் கொண்டு வந்தாள். மாதவன் நாயரும் காலை டிபனுக்கு கண்களால் இருவருக்கும்
நன்றி சொல்லிவிட்டு, உப்புமா சாப்பிடுகிறார். உடன் வந்த காபியையும் ருசித்துக் குடித்து
முடித்தார்.
சுந்தர மூர்த்தி, மீனாக்ஷியம்மாள் இருவரிடமும் சிறிது நாட்கள்
கழித்து மீண்டும் வருவதாகச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு, தன்னுடைய பெட்டியையும், குடையையும்
எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கி நடந்தார். காலை மணி 9 ஆகிவிட்டது, கணேசன் வந்து கடையையும்,
வீட்டையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்
. “ முதலாளி, இதோ ஒரு காசு மஞ்சள் நிறத்தில் கிடக்கிறது;
இந்த சுருக்குப் பையும் கீழே கிடந்தது”
என்று சொல்லியவாறு கணேசன் காசையும், சுருக்குப் பையையும்
சுந்தர மூர்த்தியிடம் கொடுக்கிறான். கணேசன் கொடுத்தவற்றை எடுத்துக் கொண்டு சுந்தர மூர்த்தி
வீட்டிற்குள் சென்று, தன் மனைவியிடம் காட்டுகிறார்.
வெளியில் கிடந்த ஒரு காசு தவிர, சுருக்குப் பையில் 6 காசுகள்
ஒரே அளவில் இருந்தன. அத்தனையும் தங்கக் காசுகள்; ஒவ்வொன்றும் ஒரு பவுன். சுந்தர மூர்த்தி
இரு ஆண்டுகள், பாளையம்கோட்டை மார்க்கட் அருகில் உள்ள உமா ஜுவல்லர்ஸ் கடையில் வேலை பார்த்திருந்ததால்,
காசுகளைப் பார்த்தவுடன் அவை எல்லாமே சுத்தமான தங்கக் காசுகள் என்று கண்டுபிடித்துவிட்டார்.
மீனாக்ஷியம்மாளுக்கோ வியப்பு தாங்க வில்லை. “ ஏங்க, இத்தனை தங்க காசுகள் வைத்துக் கொண்டு,
மாதவன் நாயர் சாப்பிட்ட டிபனுக்குக் கூட கொடுக்க
காசு இல்லை என்று ஏன் சொன்னார்?”
“மீனாக்ஷி, எனக்கும் அதுதான் விளங்கவில்லை. எனினும் சிறிது
நேரம் கழித்து மாதவன் நாயார் வருவார், அவர் வந்தவுடன் நாம் அந்தத் தங்கக் காசுகளை அவரிடமே
கொடுத்துவிடலாம். அது வரை இவற்றை நீ மிகவும் பத்திரமாக அலமாரியில் வைத்துப் பூட்டிவிடு
என்று சொல்லிவிட்டு சுந்தர மூர்த்தி கடை வியாபாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார். வழக்கம்போல்,
மளிகை வாங்க வரும் நபர்களை விட, வடைகள் மற்றும் காபி சாப்பிட வரும் நபர்கள் தான் அன்றும்
அதிகம்.
மாலை மறைந்து, இரவும் வந்தாகிவிட்டது. கடையைப் பூட்டும்
நேரம், மாதவன் நாயர் வரவில்லை. ஒவ்வொரு நாளும் காலை, மாலை, இரவு என்று ஒரு வாரம். இரண்டு
வாரம் ஆகியும் மாதவன் நாயர் வரவில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. இரவு மீனாக்ஷியம்மாள்,
“ஏங்க, மாதவன் நாயர் வரவில்லை. 7 காசுகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அந்த
காசுகளை விற்று, நமது கடைக்கு வேண்டிய பொருட்களை, நாளை திங்கள் கிழமை, நீங்கள் சென்று
வாங்கி வாருங்கள். ஒரு வேளை மாதவன் நாயர் வந்தால், நாம் ஏதாவது சொல்லி சமாளித்துக்
கொண்டு, மீதமுள்ள தங்கக் காசுகளை அவரிடம் கொடுத்துவிடலாம்”.
என்கிறாள்
“மீனாக்ஷி, நீயோ, நானோ அடுத்தவர் பொருளுக்கு இன்றுவரை ஆசைபட்டதில்லை.
ஆனால் இப்போது நீ பேசுவது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது”
என்றார் சுந்தர மூர்த்தி.
“நம்முடைய கஷ்ட நிலைமையைப் பார்த்து கடவுளே மாதவன் நாயர்
வடிவத்தில் வந்து, இந்த சிறிய உதவி செய்வது போலத் தெரிகிறது. இந்தப் பணத்தை நாம் கடன்
என்று கருதி, மாதவன் நாயர் வரும்போது கண்டிப்பாகக் கொடுத்துவிடலாம்”
.
மறுநாள் காலை, கணேசனையும், மீனாக்ஷியம்மாளையும் கடையைப்
பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சுந்தர மூர்த்தி.
20 கிலோமீட்டர் தூரமுள்ள திருநெல்வேலிக்கு இரண்டு தங்கக் காசுகளுடன் செல்கிறார்.
இரண்டு தங்கக் காசுகளை விற்று, அந்தப் பணத்தில் கடைகளுக்கு
வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு, மீனாக்ஷியம்மாளுக்கு இரண்டு நல்ல சேலைகள், கணேசனுக்கு
இரண்டு செட் ரெடிமேட் துணிகள் எடுத்துக் கொண்டு மாலை நல்லூர் திரும்புகிறார்.
அடுத்த இரண்டு நாட்கள் முழுவதும் வீட்டிற்கும், கடைக்கும்
பெயின்ட் பூசுவதில் கழிந்து விடுகிறது. மளிகைக் கடையில் பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.
மூன்றாவது நாள், முகத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் சுந்தர மூர்த்தி கடையில் அமர்கிறார்.
மக்கள் கூட்டம் நிறைய வருகிறது. வியாபாரம் நல்ல நடக்கிறது. நல்லூரில் வசிக்கும் 90
வயது நிரம்பிய ஒரு முதியவர், “சுந்தர மூர்த்தி, கடவுள் கண் திறந்துவிட்டார். இனி உன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடவுளுடைய அருள் உனக்கும், உன்
குடும்பத்திற்கும் நிச்சயம் உண்டு” என்று வாழ்த்தினார்.
பகல் பொழுது கழிந்து, மாலையும் மறைந்து, இரவு 9 மணிக்குக்
கடையை மூடிவிட்டு சுந்தர மூர்த்தி வீட்டிற்குள் வந்து, முகம், கை, கால் கழுவி, வழக்கம்
போல் நெற்றியில் திருநீறு பூசியபின் இரவு உணவு அருந்த அமர்கிறார். பகல் முழுவதும் கடையில்
இருந்ததால், மனதில் ஒன்றும் தோன்ற வில்லை. சுடச் சுட தட்டில் தோசைகள், சட்னி இருக்கின்றது.
முதல் துண்டு தோசையைப் பிட்டு வாயில் போடுவதற்கு முன்பு மீனாக்ஷி யம்மாள் முகத்தைப்
பார்க்கிறார்; இருவர் கண்களும் கலங்குகின்றன.
“என்னங்க, நாம் செய்தது மிகப் பெரிய தவறுதான். ஆனால் மாதவன்
நாயர் எப்போது வந்தாலும், கனரா வங்கி நம்ம ஊரிலேயே இருக்கிறது. வங்கி மேலாளர் எப்போது
வேண்டுமானாலும் நமக்குக் கடன் தருவதாகக் கூறியிருக்கிறார். மனசு கலங்காதீங்க” என்கிறாள் மீனாக்ஷியம்மாள்.
மழைக் காலம் முடிந்து, இளவேனில் காலம் தொடங்கிவிட்டது. ஆறு
மாதங்கள் ஓடிவிட்டன. வசந்த காலம், இலையுதிர் காலம் முடிந்து, மீண்டும் மழைக்காலம்.
ஆண்டு ஒன்று கடந்துவிட்டது. ஆனால் மாதவன் நாயர் வரவே இல்லை.
சுந்தர மூர்த்தி ஏழு தங்கக் காசுகளில், இரண்டு தங்கக் காசுகளைப்
பணமாக மாற்றி செலவுகள் செய்தது போக மீதி ஐந்து
தங்கக் காசுகள் இருக்கும் சுருக்குப் பையை அலமாரியிலிருந்து எடுக்கவே இல்லை.
மாதவன் நாயர் விரைவில் வரவேண்டும், அவரிடம் தங்கக் காசுகள் உள்ள சுருக்குப் பையைக்
கொடுக்க வேண்டும் என்று தினம் காலையில், இரவில் சாமி கும்பிடும் போது மனதில் இறைவனிடம்
வேண்டிக் கொள்வார்.
அன்று மாலை முதல் மழை தூரலாக இருந்தது. இரவு 8 மணி இருக்கும்.
திடீரென்று சுந்தர மூர்த்தி தூரத்தில் சாலையில் ஒரு பரிச்சயப்பட்ட உருவம் மெதுவாக நடந்து
வருவதைப் பார்க்கிரார். சந்தேகமே இல்லை, வருபவர் மாதவன் நாயர்தான். சுந்தர மூர்த்தி நெஞ்சு பட படவென்று அடித்துக் கொள்கிறது.
வீட்டின் உள்ளே சென்று மீனாக்ஷியம்மாளிடம் மாதவன் நாயர் வந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
மீனாக்ஷியம்மாள் பதட்டப்படவில்லை, அமைதியாகச் சொன்னாள், “ மாதவன் நாயர் வரட்டும், நீங்களாக
ஒன்றும் சொல்ல வேண்டாம். அவர் எப்போது கேட்கிறாரோ, அப்போது நாம் இருவரும் அவரிடம் உண்மையைச்
சொல்லி விடலாம்”.
சுந்தர மூர்த்தி வீட்டிற்குள்ளிருந்து கடைக்கு வரவும், மாதவன்
நாயர் வந்து, அலுப்புடன் கடை முன்னிருந்த பெஞ்சில் தான் கொண்டுவந்த தகரப் பெட்டி, குடையை
வைத்து விட்டு, அமரவும் சரியாக இருந்தது. சுந்தர மூர்த்தி, “வாருங்கள் மாதவன் நாயரே,
உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது. உங்களைப் பார்த்தால், மிகவும் களைப்புடன்
இருப்பதாகத் தெரிகிறது. வடை, காபி சாப்பிடுகிறீர்களா?”
என்று கேட்கிறார்.
மாதவன் நாயர் சிறிது புன்னகையுடன், “ நீங்கள் என்ன டிபன்
கொடுத்தாலும் இன்று சாப்பிடுகிறேன். உண்மையில் பசி அதிகமாகத்தான் இருக்கிறது.”
என்கிறார்.
“இரண்டு பேருமே வீட்டிற்குள் வந்து சாப்பிடுங்கள், இன்று
இரவு டிபன் சப்பாத்தியும், மசாலா இல்லாத குருமாவும்.”
என்று மீனாக்ஷி யம்மாள் சொன்னதும் இருவரும்
உள்ளே வந்து தரையில் அமர்கிறார்கள்.
மிருதுவான சப்பாத்திகளும், சுவையான குருமாவும் சாப்பிட்டு
முடித்தவுடன், இருவரும் வீட்டின் முன் அறைக்கு வந்து பெஞ்சில் அமர்கிறார்கள். பேச்சை
எப்படி துவங்குவது என்று புரியாமல் சுந்தரமூர்த்தி யோசிக்கிறார்.
மாதவன் நாயரோ கடந்த ஒரு ஆண்டாகத் தான் சென்று வந்த இடங்களையும்,
மூலிகை மற்றும் மருந்துகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாரே தவிர, சுருக்குப் பையைப்
பற்றியோ, அதிலிருந்த தங்கக் காசுகளைப் பற்றியோ
பேசவில்லை. மீனாக்ஷியம்மாவும் மனதில் குழப்பத்தோடு முன் அறையில் இருவரும் பேசுவதைக்
கேட்டுக் கொண்டிருக்கிறாள். மணி பத்தரையாகி விட்டது. தனக்குத் தூக்கம் வருவதாகவும்,
காலையில் தான் புறப்பட வேண்டும் என்றும் மாதவன் நாயர் சொல்கிறார். சுந்தரமூர்த்தியும்
வீட்டிற்குள் சென்று மீனாக்ஷி யம்மாளைக் கேள்விக்குறியோடு பார்த்துவிட்டு, ஒன்றும்
பேசாமல் படுத்து விடுகிறார். மீனாக்ஷியம்மாளுக்கும், சுந்தரமூர்த்திக்கும் இரவு வெகு
நேரம் தூக்கம் வராமல் இருந்து, இருவரும் பிறகு எப்போது தூங்கினார்கள் என்று தெரியவில்லை.
எப்போது தூங்கினாலும்
மீனாக்ஷியம்மாளுக்குக் காலை 6 மணிக்கு எழுந்து விடுவது நீண்ட நாள் பழக்கம். மீனாக்ஷியம்மாள் வேகமாகக் குளித்துவிட்டு,
சூடான ஃபில்ட்ர் காபி தயாராகக் கொண்டு வரவும், சுந்தரமூர்த்தியும், மாதவன் நாயரும்
பல் துலக்கிவிட்டு வரவும் சரியாக இருந்தது. பிறகு சிறிது நேரம் அன்றைய தினசரி பேப்பரில்
வெளியான அரசியலைப் பற்றிப் பேசிவிட்டு, இருவரும் குளிக்கச் சென்றார்கள். சூடான சிறுபருப்பு
பொங்கலும், வடைகள், சட்னி, சாம்பாரும் மிகவும் சுவையாக இருப்பதாக மாதவன் நாயர் சொல்லுகிறார்.
“ வீட்டில், கடையில் புதியதாக பெயின்ட் பூசியிருக்கிறீர்கள்,
கடையில் நிறைய பொருட்கள் இருப்பதைப் பார்த்தாலே மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது.
நான் முதல் முறை வந்த போது இருந்தைவிட, நீங்கள் இருவரும் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதை
அறிந்து நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன்.
உங்கள் மகிழ்ச்சிக்குக் காரணமான அந்தக் கடவுளுக்கு மனதார
நன்றி சொல்லுகிறேன்.” என்று சொல்லி விட்டுப் புறப்படத் தயாராகிறார் மாதவன் நாயர்.
மாதவன் நாயர் இருவரிடமும் விடை பெறுகிறார். இடது கையில் தகரப் பெட்டியும், வலது கையில் குடையும்
எடுத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார். சுந்தரமூர்த்தியும், மீனாக்ஷியம்மாளும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இருவரது கண்களும் கலங்குகின்றன.
சாலையின் தூரத்தில் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கும்
மாதவன் நாயர் உருவத்தைப் பார்த்து இருவரும் நன்றியோடு கை கூப்புகிறார்கள்.
சென்ற ஆண்டு இந்த நல்லூருக்குத் தான் மிகவும் களைப்போடும்,
பசியோடும் வந்த போது, தன்னை உறவினருக்கும் மேலாக பிரியத்துடன் கவனித்து, உணவளித்து,
முன்பின் அறிமுகமில்லாத தனக்குத் தங்க இடம் கொடுத்து உபசரித்த சுந்தரமூர்த்தி, மீனாக்ஷியம்மாள்
ஆதர்ஷ தம்பதி யர்க்குத் தான் அளித்த பரிசுதான்,
சுருக்குப் பையில் உள்ள ஏழு தங்கக் காசுகள் என்று ஒரு சிறு புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும்
ஒருவித மனதிருப்தியுடன் நினைத்துக் கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார் மாதவன் நாயர்..
Comments
Post a Comment