கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்
கவிஞர்
கண்ணதாசன் நினைவலைகள்
கண்ணதாசனே! கண்ணதாசனே!
கவிதைகளின் ரசிகனே!
கவிஞர்களின் அரசனே!
உன்னை வணங்குகிறேன்
உன் பாடல்களை எழுதுகிறேன்
தத்துவம்
உலகம் பிறந்தது எனக்காக என்றும்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
தாயகம் காப்பது கடமையடா என்றாய்!
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம் என்றாய்!.
கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே என்று சொல்லி
கன்னியின் காதலில் திரையுலகம் வந்தாய்!
மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா?
என்று கேட்டாய், பதிலாக நீ சொன்னாய்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில் என்றாய்!
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை என்றும்
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை என்றும்
கருணை மறந்து வாழ்கின்றார் ஆனால்
கடவுளைத் தேடி அலைகின்றார் என்றாய்!
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார் என்றும்
கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது
கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன் என்றாய்!
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் அதை
உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம்
விலகும் என்றும் விதி என்று ஏதுமில்லை
வேதங்கள் வாழ்க்கை இல்லை என்றாய்!
உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது என்றும்
உள்ளத்தில் உள்ளதை வார்த்தையில்
மறைக்கும் கபடம் தெரியாது என்றும்
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் என்றும்
உண்மையை வாங்கிப் பொய்களை விற்று
உருப்பட வாருங்கள் என்றும் சொன்னாய்!
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
திருட்டு உலகமடா என்றும்
கொள்ளை அடிப்பதில் வல்லமை
காட்டும் முரட்டு உலகமடா
என்றும் சொன்னாய்!
நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன் என்றும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
என்றும் அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே என்றும்
யாரை நம்பி நான் பிறந்தேன்
என் காலம் வெல்லும் என்றும்
தென்னையைப் பெத்தா இளனீரு,
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு என்றும்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
என்றும் சொன்னாய்!
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் காட்டிய வழியம்மா என்றும்
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்குக் கண்ணாக என்றும்
குழந்தையும் தெய்வமும் குணத்தால்
ஒன்று என்றும் சொன்னாய்!
கோடி கொடுத்து உறவினரோடு
வாழ்வதுதான் இன்பம்
கூட இருந்து பாதி கொடுத்து
உண்பது பேரின்பம் என்றாய்
புத்தியுள்ள மனிதர் எல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம்
புத்திசாலி இல்லை என்றும்
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை என்றும்
பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா என்றும் சொன்னாய்
ஒளி மயமான எதிர்காலம் உள்ளத்தில்
தெரிகிறது என்றும், நல்லதொரு
குடும்பம்
பல்கலைக் கழகம் என்றும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம் என்றும் சொன்னாய்!
தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு முடிந்து போனால்
தந்தைக்கு என்று யாருமில்லை
என்றும் சொன்னாய்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது
என் பேரு, ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம் என்றும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்றும்
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும் என்றும்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
என்றும் சொன்னாய்!
நதியின் பிழையன்று நறும்புனலின்மை
விதியின் பிழை என்ற கம்பனின் வரிகளை
நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா
என்று உன் பாடலில் வைத்தாய்!
தலைக்கு மேலே வெள்ளம் போனால்
ஜான் என்ன முழம் என்ன?
தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
நாளென்ன, பொழுதென்ன? என்றும்
பணத்தின் மீதுதான் பந்தம் என்றபின்
பந்த பாசமும் இல்லையே என்றும்
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான்
அழுது கொண்டே சிரிக்கின்றேன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு
ஒன்று மனசாட்சி, ஒன்று தெய்வத்தின்
சாட்சி என்றெல்லாம் சொன்னாய்!
திருமண நாளில் மணமக்கள் சொல்லும்
‘நான் மனமாக இருந்து நினைப்பேன்
நீ வாக்காக இருந்து பேசு' என்ற
புரியாத மொழியை
'நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்' என்று எளிதாக
ஒரு சினிமாப் பாடலில்
சொன்னாய்!
பக்தி
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்றும்
திருமால் பெருமைக்கு நிகரேது, அவன்
திருவடி நிழலுக்கு இணையேது என்றாய்!
கோதை ஆண்டாள், அவள் தமிழை ஆண்டாள்
அந்தக் கோதையின் திருப்பாவை கேட்டும்
வாசகன் திருவெம்பாவை கேட்டும்
கண்ணன் வந்தான் என்றும்
பாஞ்சாலி புகழ் காக்க சேலை
கொடுத்தான்
படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்
என்றும் சொன்னாய்!
கோசலராமன், தசரதராமன், கல்யாணராமன்,
சீதாராமன், சுந்தரராமன்,கோதண்டராமன்,
சிவராமன், ரகுராமன், அனந்தராமன், ஸ்ரீராமன்
என்று ஓரு திரைப்படப் பாடலில் ராமனுக்கு
இத்தனை பெயர்கள் சூட்டி மகிழ்ந்தாய்!
சிவ மயமே என்றும் சிவ மயமே இனி
தவ பயம் இல்லை என்றும் சிவமயமே என்றும்
ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமசிவாயா என்று ஐந்தானவன்,
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசைப் பதங்களில் ஏழானவன் என்று
சிவபெருமானை ஔவையார் பாடுவது போல
திருவிளையாடலில் எழுதினாய்!
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு ஆற்றுப் படையினிலே வருமுருகா,
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
என்றும், பழம் நீயப்பா, ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
என்றும் முருகனை, அழகனை சொன்னாய்!
ஒன்றே சொல்வான், ஒன்றே செய்வான் அவன்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி என்றாய்!.
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்.
தருமம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்.
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
இந்தப் பாடல்களில் எல்லாம் கண்ணதாசன் வந்தான்
காதல்
காதலிக்க நேரமில்லை என்று சொன்னாலும்
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி
காதலர்களுக்கானப் பல பாடல்கள்
இளைஞர்களுக்காக அன்று எழுதினாய்!
அன்புள்ள அத்தான் வணக்கம். உங்கள்
ஆயிழை கொண்டாள் மயக்கம் என்றும்
பேரழகு இருந்தென்ன ஒரு ரசிகன் இல்லாமல்,
அத்தான், என் அத்தான், அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி? என்றும் அவள்
செந்தமிழ்த் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
என்றெல்லாம் எழுதினாய்!
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி என்றும்
காதலுக்கு ஜாதி இல்லை, மதமும் இல்லை என்றும்
அழகு ரசிப்பதற்கு அறிவு கொடுப்பதற்கு
வாழ்க்கை வாழ்வதற்கே என்றாய்!
பாட்டு, ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு
அது காதலுடன் பாடும் பாட்டு என்றும்
கண்ணன் என்னும் மன்னன் பேரைச்
சொல்லச் சொல்ல கள்ளும் முள்ளும்
பூவாய் மாறும் மெல்ல மெல்ல என்றும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத
பேச்சு வரும், முன்னாடி ஆண்கள்
வந்தால் முழுமனதில் நாணம் வரும்.
என்றெல்லாம் எழுதினாய்!
காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா என்றும்
கண்கள் இரண்டும் என்று உம்மைக்
கண்டு பேசுமோ என்றும்
பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா? என்றெல்லாம்
காதலில் பிரிவைச் சொன்னாய்!
நலந்தானா, நலந்தானா என்றும்
ஹலோ, ஹலோ சுகமா என்றும்
சந்திப்போமா, இன்று சந்திப்போமா என்று
இன்றும் காதலர்களை கேட்க வைத்தாய்!
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் உள்ளம் ஒருவனுக்கே என்றும்
ஒருவனுக்கு ஒருத்தி என்றும் சொன்னாய்!.
காதலித்தல் பாவமென்றால் கண்களும்
பாவமன்றோ?கண்களே பாவமன்றால்
பெண்மையும் பாவமன்றோ?பெண்மையே
பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?
என்று கேட்டாள் ஒரு காதலி
உன் திறன் மிகுந்த பாடல் வழி!
காலங்களில் அவள் வசந்தம், கலைகளில் அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி. மலர்களிலே அவள் மல்லிகை!
பேசுவது கிளியா, பெண்ணரசி மொழியா என்றும்
வாராயோ என் தோழி வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
மயங்குகிறாள் ஒரு மாது என்றும்
நாணமோ இன்னும் நாணமோ என்றும்
மல்லிகை மஞ்சம் விரிக்கட்டுமே அதில்
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே என்றும்
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய், கன்னம்
சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
என்றெல்லாம் எழுதினாய்!
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்,
என்று காதலன் காதலி இருவரும்
சொல்வதாகச் சொன்னாய்!
யாருக்கு மாப்பிள்ளை யாரோ, அவர் எங்கே
பிறந்திருக்கிறரோ?
எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ? என்றாய்
பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா என்றும்
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவை தந்து செல்லவா என்றும்
மல்லிகை மலர் சூடிக் காத்து நிற்கவா
மாலை இளந்தென்றல் தன்னை தூதுவிடவா என்றும்
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம்
காத்திருந்தேன் என்று காதலி சொல்ல
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
என்று காதலன் கேட்க திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம் என்று சொல்லி
இரு மனம் இணைய திருமணம் செய்து வைத்தாய்!
நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம்
ஏன் என்ற கேள்வி காதலன் கேட்க,
அது இளமையின் நாடகம் அரங்கத்தில்
வருவது என்ற காதலியின் பதிலும்,
முதலிரவு என்று சொல்வது ஏன் வந்தது
என்று காதலன் கேள்வி கேட்க
அது உரிமையில் இருவரும் அறிமுகமாவது
என்ற காதலி பதில் சொல்வதும்
தமிழர்களின் பண்பல்லவா,
அதை உன் வரிகளில் சொன்னாய்!
தோள் கண்டார் தோளே கண்டார்
என்ற இராமன் பற்றிய கம்பரின் வரிகள்
தோள் கண்டேன், தோளே கண்டேன்
என்று திரையிசையில் சொன்னாய்!
கவிஞர்
கண்ணதாசன்
ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா
கண்ணதாசனுடைய கவிதைகளைப் பற்றிப் பேச?
நாடோடி, மன்னனைப் பார்த்து ‘ மன்னா!
நீங்கள் நல்ல வாழத் தெரிந்தவர்கள் ஆனால்
ஆளத் தெரிந்தவர்கள் அல்ல’ என்று எழுதினாய்
எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னனுக்காக!
இந்த வரிகள் இன்றும், என்றும் உலக
அரசியல் மனிதருக்கு நீ சொன்னதல்லவா?
அவரவர் கடமைகளைச் செய்யச் சொன்ன
அர்த்தமுள்ள இந்து மதம்; தூய ஏசுவின்
வரலாறு சொல்லும் மாசில்லா ஏசு காவியம்
இவ்விரண்டும் இந்த உலகத்திற்கு நீ தந்த
ஈடில்லாத பரிசுகள் அல்லவா?
போட்டிக்கு வந்தவனல்ல திரைஉலகின்
பாட்டுக்கு வந்த புதிய கவிஞன் வாலி, தமிழ்
நாட்டுக்கு அவனை அறிமுகம் செய்வதே
என் கடமை என்றாய்; பல வாய்ப்புகளை
வாலிக்கு அளித்து, என்னிலும் திறமை
வாய்ந்தவன் வாலி, வாழ்க கவிஞர் வாலி
என்று சொன்னவன் கவிஞன் கண்ணதாசன்!.
கவிதைகள் படைப்பதினால் நான் இறைவன் என்றும்
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்றும்.
மரணத்தை எண்ணிக் கலங்க வேண்டாம்
என்றும் அப்படி மரணம் வந்தால்
போனால் போகட்டும் போடா என்றும் சொன்னாய்!
கண்ணதாசனே! இன்று சொல்கிறோம்
ஒரு போதும் உனக்கும் மரணமில்லை
ஒரு போதும் உன் கவிதைக்கும் மரணமில்லை!
வாழ்க உன் புகழ்! வளர்க உன் புகழ்!
வணக்கம். வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ்!
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 989841 87627 ksg_rani@yahoo.co.in
Please visit: www.myiniyatamil.blogspot.co.in
Comments
Post a Comment