அன்பும் பண்பும்
அன்பும் பண்பும்
-- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
கோயமுத்தூர் டிரான்ஸ்பரில் வந்து ஒரு மாதமாகிவிட்டது. ஒருநாள் காலையில் எழுந்தவுடன் மணமுள்ள ஒரு கப் ஃபில்டர் காபி கொடுக்கும் போதே என்னுடைய மனைவி லலிதா சொல்லிவிட்டாள், “ என்னங்க, இந்த வீக் எண்ட் நாம ரொம்ப தூரமெல்லாம் போக வேண்டாம்; புரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்குப் போய், ஏதாவது ஷாப்பிங் பண்ணிவிட்டு, அங்கேயே ஒரு சினிமா பார்த்துவிட்டு, அப்படியே இரவு டின்னரும் முடித்து விட்டு வரலாங்க, என்ன சரிதானே?”
“இன்று எனக்குப் பிறந்த நாள் இல்லை! உனக்குப் பிறந்த நாளா என்ன?, – இது ராஜசேகராகிய நான்.
உடனே லலிதா, “ பிறந்த நாள் என்றால் தான் வெளியே போகனுமா என்ன, சும்மா போகலாங்க, நான் சரியாகப் பத்து மணிக்குத் தயாராகி விடுவேன்” என்றாள்.
நானும்
என் மனைவி லலிதாவும் கோயமுத்தூரில் உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்குச் சென்றோம். அங்கு இல்லாத கடைகளோ இல்லாத பொருட்களோ இல்லை, பொழுது போக்குவதற்கு என்று எல்லா வயதினருக்கும் நிறைய இடங்கள். இருக்கின்றன. சில கடைகளில் லலிதாவுக்கு வேண்டியன வாங்கிவிட்டு, புத்தகங்கள் வாங்க ‘ஒடிசி’ என்ற கடைக்குள் நுழைந்தோம். மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள்
வாங்குவது எனக்குப் பழக்கமுண்டு. என் மனைவி லலிதாவும் புத்தகப்பிரியைதான். சிறு கதைகள்
மற்றும் சமையல் குறிப்புகள் படிப்பதில் மிகவும் ஆர்வம். படித்த நல்ல சிறுகதைகளை உறவினர்கள்
அல்லது சிநேகிதிகளிடம் சொல்லுவதில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி!. அதோடு தான் படித்த
சமையல் குறிப்புகளைப் படித்த உடனேயே அந்த ஸ்னாக்ஸ் அல்லது டிபனைச் செய்து எனக்குக்
கண்டிப்பாக் கொடுத்து விடுவாள். சாபிட்டவுடன் நான் நன்றாக இருக்கிறது என்று சொல்லும்
வரை விடமாட்டாள். உண்மையிலேயே சுவையாக சமைப்பதில் என் மனைவி லலிதாவுக்கு நிகர் அவளே!.
புத்தகங்கள்
வாங்கி முடித்துவிட்டு வெளியே வரும்போது, திடீரென்று ஒருவன் அருகில் வந்து “சார்!, நல்லா இருக்கீங்களா சார்?, என்னைத் தெரிகிறதா? இவள் என் மனைவி சாரதா, இவங்க இரண்டு பேரும் என் குழந்தைகள்; என் பெயர் அருண்” என்று வேகமாகச் சொன்னான்.
எனக்கு ஞாபக மறதி அதிகம் என்று லலிதா அடிக்கடி சொல்வாள். இன்று அது சரியாகப் போயிற்று!. சுத்தமாக அந்த அருண் என்பவனை எனக்கு நினைவே இல்லை.
“சார், உங்களுக்கு என்னை நினைவிருக்காது, ஆனால் உங்களை நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று சொன்ன அருண்,
“சார், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் திருநெல்வேலி டவுண் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரிலுள்ள ‘சரவணபவா’ உணவகத்தில் சர்வராக இருந்தேன். நான் வேலைக்குச் சேர்ந்த அன்று இரவு நீங்கள் அங்கு டிபன் சாப்பிடுவதற்காக, நான் சப்ளை செய்யும் டேபிளுக்கு வந்தீர்கள், நானாகவே புன்னகையுடன் உங்களிடம் ‘சார், குடிப்பதற்கு சுடுநீர்
தரவாஎன்று கேட்டேன், பிறகு தட்டில் இலை போட்டு டிபன் கொண்டு வருவதாகவும்,(அந்த உணவகத்தில் கேட்டால்தான் இலையில் டிபன்) பிறகு இட்லி, சட்னி, சாம்பாருடன் டேபிளில் வைத்து விட்டு, என்ன வேண்டுமானாலும் கேளுங்க, உடனே கொண்டு வந்து தருவதாகவும் சொன்னேன்.
சாப்பிட்டு முடித்துவிட்டுப் போகும் போது, நீங்கள்.’ நான் வந்ததிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன்!.
இந்த அளவு என்னிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் நல்ல முறையில் பழகுகிறாயே!,
இப்படி அன்பாகப் பேசவும், பண்பாகப் பழகவும் உனக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? உங்க அம்மாவா அல்லது அப்பாவா? என்று கேட்டீர்கள்’.
அப்போது நான் உங்களிடம், ‘எனக்கு அப்பா இல்லை சார், சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள், எனக்கு எல்லாமே எங்க அம்மாதான் என்றேன். என்ன நினைத்தீர்களோ தெரியவில்லை. அன்று நீங்கள் உடனே என்னை மனமார வாழ்த்தி, நல்ல அன்பும், உயர்ந்த பண்பும் உள்ள உனக்கு மிக நல்ல எதிர்காலம் கண்டிப்பாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அடுத்த மாதமே, எனக்கு மாதம் இருபதாயிரம் சம்பளத்தில் இங்கு சக்தி சுகர்ஸ் நிறுவனத்தில் கிளார்க் வேலை கிடைத்து விட்டது.
நீங்கள் அன்று குறிப்பிட்ட ‘அன்பு’, ‘பண்பு’ என்ற இரண்டு வார்த்தைகளை நினைவில் வைத்திருந்து,
எங்கள் பெண் குழந்தைக்கு “அன்பரசி” என்ற பெயரும் ஆண் குழந்தைக்கு “பண்பரசு” என்ற பெயரும் வைத்திருக்கிறேன்”. என்று அருண் சொல்லி முடித்ததும் அந்த தம்பதியினரையும் இரு குழந்தைகளையும் வாழ்த்திவிட்டு, என்னுடைய மனைவியைப் பார்த்தேன். இப்படியொரு நல்ல மனிதர் தனக்குக் கணவராக அமைந்ததை நினைத்து லலிதா பெருமைப்படுவது அவள் கண்களில் தெரிந்தது.
Comments
Post a Comment