அழகியும் அற்புத மனிதனும்
அழகியும் அற்புத மனிதனும்
அடர்ந்த வனத்தில் ஒரு நாள்
மலையினில் அருவி விழுந்திடும்
ஓசை
அழகிய தென்றல்
தவழ்ந்திடும் ஓசை
மலர்கள் இதழ்கள்
திறந்திடும் ஓசை
பறவைகள் சிறகுகள் விரிந்திடும்
ஓசை.
உலகின் அழகுப் பெண்களின்
சாயல்;
ஒயிலில் மயிலின் சாயல்,
நடையில் அன்னத்தின்
சாயல்,
இடையில் கொடியின் சாயல்
குரலில் குயிலின்
சாயல், கண்களில்
மீன்களின் சாயல்,
மான்களின் சாயல்,
புருவத்தில் அர்ஜுன
வில்லின் சாயல்
உருவத்தில் கோயில்
சிலைகளின் சாயல்
பருவத்தில் அழகு
கொண்ட பேரழகி
அவள்!
அழகிதான் அவள் பெயர்!
மலர்ச் செடிகள்
சுற்றிலும் சூழ்ந்திருக்க,
மலர்களின் மணம்
எங்கும் நிறைந்திருக்க
பச்சைப் புல்வெளி படர்ந்திருக்க
இளமையும், அழகும்,
ஒன்றாய்க் கூடியிருக்க
வளமையும் உடன் அங்கு வாய்த்திருக்க,
அந்த அழகி
படுத்திருக்கிறாள் சோதனை தாங்காமல்!.
தடுத்திருக்கிறாள் வேதனை தாங்காமல்!
இளமையும் உடலில்
தெரிகிறது, உடன் பிறந்த
வறுமையும் உடையில்
தெரிகிறது.
அணிந்த ஆடைகளின் கிழிநிலை
தெரிகிறது
அங்கு மனித நேயத்தின்
இழிநிலை தெரிகிறது.
ஆடைகள் சில
இடங்களில் நழுவித்
தெரிகிறது
அங்கங்கள் சில இடங்களில் விலகித் தெரிகிறது
அழகியின்
மேடிட்ட வயிறு,
அங்கே கோடிட்டுத் தெரிகிறது
பிறை நுதலாள்
நிறை மாதம்
எனவும் தெரிகிறது.
அழகியின் அறை கூவல் எங்கும் ஒலிக்கிறது
குறை கூறும் வழியில்லை, வனமென்பதால்.
மெலியாள், வலியால் துடிக்கிறாள்,
பற்களைக் கடிக்கிறாள், புல் தரையைக்
கையால் இடிக்கிறாள், இரு கண்களில்
கண்ணீர் வடிக்கிறாள்.
வலி உணர்வுக்கு அங்கு பஞ்சமில்லை அந்த
வழி வருபவர்கள் என்று யாருமில்லை.
அழகியின் அலறல் சத்தம்
வனமெங்கும் ஒலிக்கிறது
எந்த மனிதருக்கும் கேட்கவில்லை
அந்தக் கடவுளுக்கும் கேட்கவில்லை
மலையடிவாரத்தில்
மனநிலை குறைந்த
மனிதன் என்ற ஒருவன் உள்ளான்.
உற்றார் இல்லை, உறவினர் இல்லை
பெற்றோர் யாரெனத் தெரியவுமில்லை
எங்கு பிறந்தான், எங்கு வளர்ந்தான்
இங்கு யாருக்கும் தெரியவில்லை
ஒன்றும் தெரியாதவன் இவன்
ஒன்றுக்கும் உதவாதவன் இவன்
என்றுதான் சொல்லுவார் எல்லோரும்
ஊரில் இன்றும் என்றும்!
மழலைகளின் நண்பன் மனதளவில் பண்பன்
மழலைகள் தரும் உணவுதான் இந்த
மனிதனுக்கு! அந்த உணவு
உன்னதம் அளிக்கும், வாழ்வில்
உயர்வும் அளிக்கும். இந்த
மனிதனின் பெயரும் மனிதன்தான்.
கால் போன போக்கிலே பலநாள்
கண் போன போக்கிலே
சிலநாள்
என்றும் இருப்பான், எங்கும்
என்றும் இருப்பான். ஏனோ அன்று
கால்கள் நடந்தன வல்ல வனம் தேடி
கண்கள் சென்றன நல்ல மனம் தேடி!
இருள்மிகு வனத்தில் வலிமிகு முனகல்
இதயம் குலுங்க அழுகை
சத்தம்!
மனிதனின் கால்கள்
நடந்தன; பின்
கண்கள் அறிந்தன, அங்கு நடந்தன!.
அழகியின்
ஆடைகள் கிழிந்திருக்க, அங்கங்கள் தெரிந்திருக்க
கால்கள் பிரிந்திருக்க, பிரசவ வாயில் விரிந்திருக்க
குழந்தையின் தலை மட்டும் அங்கு வெளியே வந்திருக்க
மனிதன் அமர்ந்தான் அமைதியாய், அழகியின்
இரு கால்களுக்கிடையில்!
மேடிட்ட வயிற்றைத் கீழ்நோக்கித் தடவினான்
மேதகு குழந்தை வெளிவர உதவினான்.
வாய் விட்டு வீறிட்டு அழுதிட்டாள் அழகி,
குழந்தையும்
தாய் விட்டு வந்து வீறிட்டு அழுதது.
பனிக்குட நீரில் குளித்த, இரத்தத்தில் நனைந்த
குழந்தையை ஏந்துகிறான் தன்னிரு கைகளில்!
பிஞ்சுக் குழந்தையின் நஞ்சுக் கொடியை முன்
பற்களால் கடிக்கிறான், பின் துடிக்கிறான்!
பிறந்த குழந்தை பசியில் அழுகிறது, அழுகிறது!
என்ன செய்வது, ஏதுசெய்வது என்றெல்லாம்
சிந்திக்கவில்லை மனிதன்! தன்னிரு கைகளால்
அழகியின் சட்டைப் பொத்தான்களை நீக்கி,
சட்டையை விலக்கி, பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சு இதழ்களை அழகியின் மார்புக் காம்புகளில்
வைக்கிறான், மார்புக் காம்பைப் பற்றி,சுவைத்துப்,
பாலை, உறிஞ்சிக் குடிக்கிறது அந்தக் குழந்தை!
இரு இதழ்களும் வறண்ட அழகியின் தாகம்
தீர்க்க ஓடுகிறான் மனிதன் ஓடையைத் தேடி!
ஓடையில் ஓடும் நீரை
இரு கைகளிலும் ஏந்துகிறான், ஓடி வந்து
அழகியின் இதழ் பிரித்து நன்னீரை ஊற்றுகிறான்.
அழகியின் முகத்தில் நவரசம் சிறு
புன்னகையுடன் ஒரு பரவசம்.
பசியாறிய குழந்தை கண் மூடி உறங்குகிறது
ஆலிலையில் கண்ணன் உறங்குவது போல!
கண் போன போக்கில், கால் போன போக்கில்
மனிதன் நடக்கிறான்! எங்கோ நடக்கிறான்.
Comments
Post a Comment