என்றும் வேண்டும் சுத்தம் –( மக்கும் குப்பை – மக்காத குப்பை)


          
        
திரு சோனாசலம்(பங்களூரு)என்ற நண்பர் கேட்டதற்கு இணங்க, ஆடியோவில் பதிவு செய்யப்பட்ட உரை

      என்றும் வேண்டும் சுத்தம் –( மக்கும் குப்பை – மக்காத குப்பை)

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலாகத் தோன்றியவை பலவகையான பூச்சிகளும், பல வகையான தாவரங் களும்தான். மனிதர்களாகிய நாம் இந்தப் பூமிக்கு வந்தது மிகவும் சமீபத்தில்தான், அதாவது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். ஆரம்ப காலங்களில் தோன்றிய பூச்சிகளும், தாவரங்களும், பிறகு தோன்றிய விலங்குகளும் ஒரு போதும் இயற்கையை அழித்ததில்லை; அழிக்க நினைத்ததும் இல்லை. அதனால் இயற்கை சூழ்நிலையோ, இயற்கையின் பன்முகத் தண்மையோ சிறிதளவும் பாதிக்கப்படவே இல்லை. அவையெல்லாம் இயற்கையில் கிடைக்கும் தாவர உணவுகளையோ, விலங்குகள் மற்ற மிருகங்களின் உணவுகளையோ உண்டு வாழ்ந்தன/ தற்போதும் வாழ்ந்து வருகின்றன. அவற்றால் ஒரு போதும் இயற்கை சூழ்நிலை மாறுபட்ட தில்லை.

மனிதன் என்ற இனமாகிய நாம் முதலில் சில  நூற்றாண்டுகள்  அதாவது 5 அல்லது 6 நூற்றாண்டு முன்பு வரை இயற்கையோடு இயைந்து, இணைந்துதான்  வாழ்ந்து கொண்டிருந்தோம். இயற்கை சூழ்நிலைக்கு ஒரு போதும் நம்மால் பாதிப்பு வந்ததில்லை.  உலகெங்கும் தொழில் புரட்சி ஏற்பட்டு, நிறைய தொழிற்சாலைகள் அமைந்ததும், எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல், பிளாஸ்டிக்  உபயோகத்தின் காரணமாக உலகம் முழுவதும்  ஏற்பட்ட மாசுக்களாலும், துணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பதால் உண்டாகும் சாயக் கழிவுகளாலும் உலகம் பாழ்பட்டு நிற்கிறது. தற்போது ஒரு நூறு ஆண்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட எலக்டிரானிக் சாதனங்களால் ஏற்பட்டுவரும் கழிவுகளும் அதன் கதிர்வீச்சும், உயிர் வாழும் இனங்களுக்கும், நமது மனித இனத்திற்கும் சேர்த்து மிகப் பெரிய அச்சத்தை உண்டாக்கி வருகிறது என்பது மாபெரும் உண்மை. இது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்.

உலகில் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ள  கடலில் எலக்டிரானிக் கழிவுகளையும், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளையும் கொண்டு கொட்டி இயற்கையான கடல் வளத்தையும், மீன்கள் மற்றும் கடலில் வாழும் பிற உயிர் இனங்களையும், தாவரங்களையும் நாம்தான் அழித்து வருகிறோம். இது போன்ற அழிவுகளைத் தடுத்து நிறுத்த கிராமத் திலிருந்து கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? என்று மட்டும் நினைக்காமல், இந்த உலகத்திற்காக இந்த கிராமத்திலிருந்தே  நாம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் நாம் செய்ய முயற்சிப்போமா? அதாவது நாம் எல்லோரும் சேர்ந்து, சிந்தித்து, திட்டங்கள் தீட்டி செயல் படுத்த வேண்டும்.  நாம் செய்யும் செயல்கள்  மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இல்லை. நம்மைப்போல் பல கிராமங்களில் வாழ்பவர்களுக்கு நாமும் நமது செயல்களும்,  வழிகாட்டியாக இருப்போம். இருக்க வேண்டும் என்று இன்று ஒரு சபதம் எடுப்போம்.

ஒரு சிலர் சொல்லலாம், நாம் ஒருவரோ அல்லது நம்முடைய இந்த ஒரு கிராமத்திலுள்ள அனைவரும் சேர்ந்து செய்வதால் இந்த உலகத்தை வரப் போகும் அழிவிலிருந்து காப்பாற்ற முடியுமா? என்று நிச்சயம் கேட்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சிறுதுளி பெருவெள்ளம் என்ற சொலவடை – நாம் எல்லோரும் அறிந்ததுதானே!

சுத்தமான சூழ்நிலை, சுத்தமான வீடு, சுத்தமான மனிதர்கள், சுத்தமான கிராமம் உருவானால், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்;  எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்தக் கிராமத்திக்கு நோய் வரும், நோய் பரவும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, மிகவும் எளிதான காரியம்தான். நம்முடைய வீட்டிலுள்ள எல்லோரும் இன்று முதல், வீடுகளில் சேரும் குப்பைகளை இரண்டு விதமாகப் பிரிப்போம். 
மக்கும் குப்பை          
மக்காத குப்பை
இந்த இரண்டு வகைக் குப்பைகளையும்  இரண்டு வண்ண டப்பாக்களில் தனித்தனியாக சேகரித்து வரும் பழக்கத்தை இன்று முதல் நாம் எல்லோரும் ஏற்படுத்திக் கொள்வோம்.

மக்கும் குப்பை

நாம் தினம் உபயோகப்படுத்தும் காய்கறி வகைகள், பழங்கள், மற்றும் எல்லா விதமான உணவுப் பொருட்களின் கழிவுகள் ( அதாவது சாப்பிட்டபின் மீந்து போகக் கூடிய உணவு வகைகள்) இலைகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள், அசுத்தமான காகிதங்கள் - சுருக்கமாகச் சொன்னால் எவையெல்லாம் மண்ணில் போட்டவுடன் மக்கிப்போய், மண்ணோடு மண்ணாகி விடுமோ அந்தப் பொருட்கள் எல்லாமே மக்கும் குப்பை.  

இந்த மக்கும் குப்பைகளை நாம் தனியாகப் பிரித்துக் கொடுப்பதால், அரசு நிறுவனங்கள் இவற்றை இயற்கை உரமாகத் தயாரிக்கிறார்கள் நம்முடைய இந்த சிறு முயற்சியால், நமது கிராமத்திலுள்ள வயலுக்கோ, தோட்டத்திற்கோ  செயற்கை உரம் வாங்க வேண்டிய செலவே இல்லை. நமது கிராமத்திலேயே தயாரான நல்ல தரமான இயற்கை உரம் இலவசமாகக் கிடைத்து விடுகிறது. இயற்கை உரங்கள் இடுவதால்,   விளைச்சல் நல்ல பலன் தருகிறது. இயற்கை உரத்தில் விளைந்த உணவுப் பொருட்களால் நமது கிராமத்து மக்களுடைய உடல் நலமும் பாதுகாக்கப் படுகிறது.

மக்காத குப்பை

இந்தக் குப்பைகளில் உள்ள அத்தனைப் பொருட்களும் மறு சுழற்சி என்னு முறையில் பயன்படுத்தப் படுகின்றன.

எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்கள், - பொம்மைகள், டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், அட்டை டப்பாக்கள், கேரிபேக்ஸ், பால் கவர்( கழுவிய பின்)  பேப்பர்கள் முதலானவை.

மக்காத குப்பைகள பிரித்துக் கொடுப்பது மட்டும்தான் நம்முடைய வேலை. மற்றபடி அரசு நிர்வாகம் மக்காதக் குப்பைகளை விலைக்கு விற்று அந்த வருமானம் மூலம் நமது கிராமத்திற்கு  நிச்சயமாக நல்லது செய்வார்கள்
எப்போதாவது நாம் கழிக்கும் மின்சார ஒயர்கள், பல்புகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் – 3 வது வகையாகும்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு விதமாகப் பிரிக்கும்  இந்த சிறிய வேலையை நாம் எல்லோரும் செய்தால், மிகப் பெரிய பலன் கள் நமது வீட்டிற்கும், நமது நாட்டிற்கும் கண்டிப்பாக இருக்கின்றன என்பதை உங்கள் எல்லோருக்கும் தெளிவாகச் சொல்கிறேன்.

நாட்டிற்காக நாம் எல்லோரும் இந்த சேவையை செய்து வருகிறோம் தொடர்ந்து செய்து வருவோம்  என்று இந்த  உலகம் கேட்க உரக்கச் சொல்வோம். நம்முடைய வருங்கால சந்ததியும் நாம் நாட்டிற்குச் செய்யும் இந்த சேவையை நிச்சயம் தொடர்ந்து செய்வார்கள் என்பதை உறுதியாக நாம் எல்லோரும் நம்பலாம்.




Comments

  1. நன்றி தோழரே,

    இந்த பூமியை சுத்தம் செய்ய கைகோர்த்து நிற்போம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE