திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை
திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை
தென்றல் தவழ்ந்து
வரும், எழில் மேகம் தழுவ
வரும்
தேன் மதுரத்
தமிழோசை, குயில் ஓசை பரவி வரும்
தென் பொதிகை
மலை, எங்கள்
மலை!
குறு முனிவன்
தவம் செய்த
பொதிகை மலை
நறு மலர்கள்
மணம் பரப்பும்
பொதிகை மலை
சிறு நதிகள்
ஓடி வரும்,
பெரு நதியாய்
கூடி
வரும்
பெறு வளங்கள்
நாடி வரும்,
பெருமையெல்லாம் தேடி வரும்
தென் பொதிகை மலை எங்கள் மலை!
மலையினில் கருவாகி,
அருவியென உருவாகி
நதியென இரு
கரைகள் தழுவி
ஓடி,
வழி எல்லாம் ஊற்று மிகுந்து வரும்,
வற்றாமல் வளம் பார்க்கும், நலம் சேர்க்கும்
தாமிரபரணி நதி இருப்பது
எங்கள் திருநெல்வேலி!.
காலையில் கண்
விழித்தேன்,
கடமையெல்லாம் முடித்தேன்.
நடைப் பயிற்சி
நான் வந்தேன்
நலம் விரும்பும்
நண்பர்களிடம்
என் மனம்
தந்தேன்! நாடி வந்த
நண்பர்கள் நலம் கேட்டனர்;
பின்
அல்வா வேண்டும் எனக் கேட்டனர்.
ஆஹா! எங்கு
செல்வது, எவரிடம்
கேட்பது?
இது எங்கள் நெல்லை
அல்லவே, உங்கள்
கோவையல்லவா? கேட்டது
முக நகும்
நண்பர்கள் அல்லவே,
அகநகும் நண்பர்கள்
அல்லவா,
என்ன செய்வது
ஏது செய்வது என்ற
என் சிந்தனைக்கு
முன்னே, வந்த
நண்பர்கள்
வந்து என் முன்னே
இன்று, இங்கு,
இப்போது கேட்பது
இனிய நெல்லை அல்வா
அல்ல!,
அல்வா பற்றிய
இனிய கவிதை.
அந்தக் கவிதை தருவது
முன்னே,
நெல்லை அல்வா தருவது பின்னே
என்றனர் ஆருயிர்
அன்பர்கள்.
பிறந்த இடம்,
புகுந்த இடம்
பெண்களுக்கு மட்டுமா?
திருநெல்வேலி அல்வாவுக்கும்
உண்டு அல்லவா?.
இருட்டுக் கடை அல்வாவோ,
லட்சுமி விலாஸ் அல்வாவோ,
பிறந்தது ஒரு வட மாநிலம்,
புகுந்தது இந்தத் தமிழ் மாநிலம்!
இன்முகம் கொண்ட பெண்களோ,
இனிய நறுமண நெல்லை அல்வாவோ
பிறந்த இடத்தில்
வாழ்வது சில
காலம்.
புகுந்த இடத்தில்
வாழ்வது, பல
காலம்.
என்றும் நற்பெயர் எடுப்பது எதிர்காலம்!
ராஜஸ்தான் என்ற வட நாடு, அங்கு பல்லாண்டு
ராஜ்ஜியம் கண்ட சிங் என்ற சிங்க இனத்தினர்
நீரின் சுவை தேடி நீங்கினர் தம் நாட்டை விட்டு!
கங்கை கண்டனர்,
யமுனையும், நர்மதையும்,
தான் கண்டனர், கண்டனர் இல்லை சுவை!
கோதாவரியும்,
கிருஷ்ணாவும்,
பாலாறும், வைகையும்
கண்டனர்;
கொண்டனர் இல்லை
மனதில்!
சுவை கண்டதில்லை
நாவில்! எனவே
கண் கொண்டது
காணாமல் நீங்கினர்.
பொதிகையில் தோன்றி
வழியெல்லாம்
வளம் தந்து,
நெல் தந்து,
வாழை தந்து,
நெல்லையின் எல்லையிலே கடலில் கலந்து
புகழ் பெற்ற
தாமிரபரணி தண்ணீர்
கண்டதும்,
எடுத்தனர் கையில்,
சுவைத்தனர் நீரை! ,
நிலைத்தனர் நெல்லையில்,
அமைத்தனர் குழு
ஒன்று
பின் சமைத்தனர்
அல்வா நன்று!
நெல்லை அல்வா
என்ற புகழையும்
பின் சமைத்தனர்!.
உயர் கோதுமையை நீரில் நனைத்து, நனைந்த பின்
நன்கு அரைத்துப் பாலெடுத்து, அகண்ட வாணலியில்
சர்க்கரை இட்டுக்
கிளரி, நயம் நெய்யுடன் கிண்டி,
நெய்யில் வறுத்த பாதி முந்திரிகளைத் தூவியபின்
உருண்டு திரண்டு ஒட்டாமல் வருவதுதான்
திருநெல்வேலி அல்வா!
அடை மழையினில் குடையேதும் இல்லாமல்
நெல்லைக் காத்து நின்ற நெல்லையப்பர்
கோயில் சன்னதி எதிரில் தினமும்
மாலை மறையும் இரவில் மட்டும் கடை திறந்து
இரண்டு மணி நேரத்தில் இருநூறு கிலோ விற்கும்
இருட்டுக் கடை என்று, நெல்லையில் பெயர் கொண்டு
நூறாண்டுகள் கடந்தும், பெயர் பெற்று விளங்கும்
இருட்டுக் கடையில் கிடைப்பது
இனிய சுவைமிகு அல்வா!
உறவினர்,
விருந்தினர் என வீட்டிற்கு யார்
வந்தாலும்,
உறவோடு, உறவின் நினைவோடு இனிப்புக்கு
அல்வா கொடுப்பது
அல்ல, சுவைமிகு அல்வா
தருவது
நெல்லையின் அன்பல்லவா?
இல்லத்தில் பெண்
பார்க்க வரும் அன்பர்களின்
இனிய உறவு
மலரவும், அவரது
மனம் மலரவும்
அன்புடனும், சிறு நகையுடனும் சுவைமிகு அல்வா தருவது
நெல்லையின் பண்பல்லவா?
காதலி காதலனிடம்
ஊடல், மனைவி
கணவனிடம் ஊடல்.
எந்த வகை
ஊடலுக்கும் எத்தனை நாள் ஊடலுக்கும்
உடனே தீர்வென்பது திருநெல்வேலி
அவ்வா அல்லவா?
இதற்கு இணை உலகில்
வேறில்லை, உண்மை
அல்லவா?
ஊடல் உண்டோ,
இல்லையோ, கையில்
அல்வா உடன்
மல்லிகை இருந்தால்
கூடலன்றி வேறு
இல்லை அல்லவா?
தலைவன் தலைவிக்கு மல்லிகை
மலர் சூட்டவும்,
தலைவியின் இதழ் திறந்து
அல்வா ஊட்டவும்
இந்த ஒரு காட்சி காண இரு
கண்கள், ஒருபோதும்
போதாது போதாது என்பது
உண்மை அல்லவா?.
இருமனம் இணைந்து
திருமணம்!, முதலிரவில்
மணப் பெண்ணின்
தலையிலோ மலர்
மணம்,
தங்க நிறத் தட்டிலிலோ
அல்வாவின் சுவை
மணம்.
இப்படியொரு முதலிரவில் இனிமை என்றென்றும்
நிலைத்திருக்கும் என்பது, என்றும் உண்மை அல்லவா?
ஆண் மனதில்
என்றும் சுவை தரும்அல்வா இனிப்பும்,
பெண் மனதில்
மல்லிகை
மலர் தரும் நறு மணமும்
நிறைந்திருக்கும் என்றும், எப்போதும், எல்லோருக்கும்
இனிய முதலிரவுதான் என்பது உண்மை அல்லவா?
Comments
Post a Comment