வாழைக்காய் பஜ்ஜியும் வாய் மணக்கும் சொஜ்ஜியும்


            வாழைக்காய்  பஜ்ஜியும் வாய் மணக்கும் சொஜ்ஜியும்
                                  --  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

என் பெயர் ராம் குமார். நான் பிறந்த ஊர் தென்றல் தவழ்ந்து வரும், தேன் மதுரத் தமிழோசை கேட்கும், வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி  ஓடும்   திருநெல்வேலி. முதலில் வாசகர்களுக்கு பஜ்ஜி என்றால் என்ன சொஜ்ஜி என்றால் என்ன என்பதை விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அனேகமாக பலருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் இந்தக் கதைக்குத் தலைப்பு பஜ்ஜி, சொஜ்ஜி என்று அமைந்திருப்பதால் விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

பஜ்ஜி பற்றி பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார். ‘முதலில் பஜ்ஜி தயார் பண்ண,  உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து கடலைமாவில் பக்குவமாக தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும். வாழைக்காயை சன்னமாக சீவி, கரைத்து வைத்த கடலை மாவில் தோய்த்து எடுத்து வாணலியில் எண்ணெய் சூடான பின்பு மெதுவாகப் போட்டு, பக்குவமாக பொன் நிறத்தில் சுட்டு எடுக்கவும் என்றும்,  பஜ்ஜியில் எத்தனை விதங்கள் இருந்தாலும் நம்ம ஊர் வாழைக்காய் பஜ்ஜிக்கு ஈடு இணை கிடையாது என்றும் எழுதியிருப்பார். அதில் முக்கியமானது அந்த வாழைக்காய்க்கும் கடலை மாவுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது அப்படி பக்குவமாக பஜ்ஜி தயார் பண்ண வேண்டும் 

எனவே பஜ்ஜி வகைகளில் கத்தரிக்காய் பஜ்ஜி, உருளைக் கிழங்கு பஜ்ஜி,  என்றெல்லாம் இருந்தாலும், வாழைக்காய் பஜ்ஜிதான் சிறந்தது என்று முடிவுக்கு நாம் வரலாம். பஜ்ஜியில் மாவு அதிகம் கட்டியாக இருந்தால், கடலை மாவு மிகவும் கட்டியாக தண்ணீரில் கரைக்கப் பட்டிருக்கிறது என்றும், பஜ்ஜியில் அதிகமாக எண்ணெய் இருந்தால் கடலைமாவில் அதிகம் தண்ணீர் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் பொருள் கொள்ள வேண்டும். இதுவும் திரு பாக்கியம் ராமசாமி சொன்னதுதான்.  சொஜ்ஜி என்றால் வேறு ஒன்றும் இல்லை; அடிக்கடி அவ்வப்போது நமது வீடுகளில் பெண்மணிகள் தயார் செய்யும் கேசரிக்குத்தான் சொஜ்ஜி என்று பெயர்.

வீட்டில் அவசரமாக ஏதாவது ஒரு ஸ்வீட் வேண்டும் என்று பள்ளியிலிருந்து வரும் குழந்தைகள் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் கேட்டால், நமது பெண்மணிகள் சுலபமாக செய்வது கேசரி, அதாவது சொஜ்ஜிதான். குழந்தைகள் கேட்டால் உடனே கேசரி கிடைத்து விடும். பெரியவர்கள் கேட்டால் எப்போதாவதுதான் கிடைக்கும். சரிதானே. அனேகமாக பெண் பார்க்க  மாப்பிள்ளை வீட்டார் வந்தால் பெண் வீட்டார் நிச்சசயம் பஜ்ஜி, சொஜ்ஜியுடன், காபி கொடுப்பதுதான் நம் ஊர்களில் வழக்கம்.

எங்கள் வீட்டில் என்னுடைய மூத்த சகோதரனுக்குப் பெண் பார்த்தாலும் சரி, என்னுடைய மூத்த சகோதரிக்கு மாப்பிள்ளை பார்த்தாலும் சரி  திருமணம் முடியும் வரை என்னைத்தான் அந்த வீடுகளுக்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமென்றால் தூது அனுப்புவார்கள். நானும் அந்த வேலையை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன். காரணம் இப்போது வாசகர்களுக்கே தெரிந்திருக்கும். அந்த வீடுகளில் பஜ்ஜி, சொஜ்ஜி கண்டிப்பாக கிடைக்கும் அல்லவா? இல்லாவிட்டலும், சுடச் சுட ஏதாவது டிபன் கிடைக்கும் டிபன் மட்டுமல்ல, ஒரு விஷேச மரியாதையும் கிடைக்கும். அதற்காகவே நான் விரும்பி செல்வதுண்டு. எனக்குப்  பத்து வயது இருக்கும் போது என் மூத்த சகோதரனுக்கு ஏற்கனவே பெண் பார்த்த பாளையங்கோட்டை தெற்குத் தெருவில் அமைந்துள்ள வீட்டிற்கு நான், என்னைவிட இரண்டு வயது அதிகமுள்ள சகோதரியுடன் டவுண் பஸ்ஸில் ஏதோ ஒரு செய்தி சொல்ல தூது (?)  சென்றேன். நாங்கள் குடியிருந்த வீடு திருநெல்வேலி டவுணில் இருந்தது. 5 கிலோ மீட்டர் தூரம்தான். நல்ல வரவேற்பு. பெண் வீட்டிலுள்ள ஒரு உறவினர் ஹோட்டல் உரிமையாளர் என்பதால் டிபன் மற்றும் இனிப்பு, கார வகைகளுக்குக் குறைவே இல்லை. பெண்ணுடைய குறும்புக்காரத் தங்கை, என்னையும், என்னுடைய சகோதரியையும் பார்த்து, “ என்ன சினிமாவெல்லாம் இரண்டு பேரும் பார்த்தீர்கள்? டிபன் வருவதற்கு முன்பு நீங்கள் பார்த்த சினிமாவிலிருந்து ஏதாவது ஒரு பாட்டு பாட வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டாள்.  வேறு வழி இல்லாமல் எங்களுடைய வசீகரமாரமான (?) குரலில்  அப்போது ரிலீசாயிருந்த குலேபகாவலி என்ற சினிமாவிலிருந்து, நான் எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றையும் என் சகோதரி ஜிக்கி பாடல் ஒன்றையும் நினைவிலிருந்த சில வரிகளை டிபன் வரும் வரை பாடினோம். இப்படி ஒரு நிகழ்ச்சி. பாடி முடித்ததும் பெண்ணுடைய சகோதரி சைகை செய்ததும், பஜ்ஜி, சொஜ்ஜி வந்தது; பிறகென்ன, மகிழ்ச்சியுடனும், முகத்தில் புன்னகையுடனும் டிபன் சாப்பிட்டோம். அப்போதெல்லாம் செல் போன் கிடையாது, இருந்திருந்தால் நாங்கள் ருசித்து, ரசித்து பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிடுவதை செல் போன் காமிராவில் போட்டா எடுத்திருப்பார்கள்.

திருநெல்வேலி டவுணில், மகாத்மா காந்தி சிலை(மகாத்மா காந்தி நடந்து வருவது போல அத்தனை தத்ரூபமாக இருப்பார்)  அருகில் போத்தி ஹோட்டல் என்று ஒரு பெரிய உணவு விடுதி இருந்தது. பெயர்ப் பலகையெல்லாம் இருக்காது. ஹோட்டலின் உள்ளே மிகப் பெரிய அளவில் அமைந்துள்ள கேஷ் கவுண்டருக்கு மேலே ஆஞ்சனேய விலாஸ் என்று எழுதிய சிறிய பலகை இருக்கும்.  அந்த கவுண்டரில் எம்.ஜி.ஆர் நிறத்தில்  உரிமையாளர் (உடுப்பி போத்தி) நிற்பார். பல விதமான வாசனைப் பொருட்கள் ,ஊதுபத்திகள், கஸ்தூரி, கோரோசனை, புனுகு கிடைக்கும்.  முக்கியமாகக் கர்ப்பினிப் பெண்கள் தனக்குப் பிறக்கும் குழந்தைகள் நல்ல நிறமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக ராசியான இடம் என்று இங்குதான் குங்குமப்பூ  வாங்குவார்கள்.

காலை 5 மணிக்கு போத்தி ஹோட்டல் திறக்கும்போது சுமார் 40 – 50 நபர்கள் முதல் டீகாஷன் பில்டர் காபி குடிக்க உள்ளே செல்வார்கள். காபி அத்தனை மணமாகவும் ருசியாகவும் இருக்கும். மாலை 5 மணி ஆகிவிட்டால் போதும், பஜ்ஜி, சொஜ்ஜி மணம் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவர்களுக்கும் தெரிந்துவிடும். அந்த ஏரியாவில் உள்ளவர்கள் போத்தி ஹோட்டலில் மாலை நேரங்களில் பஜ்ஜி, சொஜ்ஜி, காபி சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அந்தக் காலங்களில் பஜ்ஜி மட்டும் அல்லது சொஜ்ஜி அதாவது கேசரி மட்டும் தயார் பண்ணும் ஹோட்டல்கள் நிறைய உண்டு. ஆனால் பஜ்ஜி, சொஜ்ஜி இரண்டும் தயார் பண்ணும் ஹோட்டல்கள் மிக அபூர்வம். சிறிது தூரத்தில் உள்ள கல்லூர் பிள்ளை ஹோட்டலில் தயார் பண்ணும் பஜ்ஜியின் சுவைக்கு ஈடு இணை கிடையாது.

திருநெல்வேலி ஜங்ஷனில் அமைந்திருந்த சந்திர விலாஸ் ஹோட்டலி லிருந்து என்னுடைய பெரியப்பா அடிக்கடி அதாவது வாரம் இரு முறையாவது பஜ்ஜி, சொஜ்ஜி வாங்கி வருவதுண்டு. இந்த பஜ்ஜி, சொஜ்ஜியின் மணமும் சுவையும் தனிரகம்.
பிற்காலத்தில் என் சகோதரிக்கு வரன் பார்க்கும் போது, மாப்பிள்ளையோட மூத்த சகோதரர் திருமணம் பேசிக்கொண்டிருக்கும் போதும், திருமணம் முடிந்த பின்பும் கூட அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். நல்ல டிபனோ, காலை அல்லது மதிய உணவோ எங்கள் வீட்டில் சாப்பிடுவார். திருநெல்வேலி டவுணில் மிகவும் சுவையாக சமையல் தயார் பண்ணும் ஒரு சிலரில் என்னுடைய அம்மா முதன்மையானவர். அதனால் ஒரு முறை அந்த வரனுடைய சகோதரர், ஒரு நாள் ‘அத்தை நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம், நீங்கள் செய்யும் டிபன், குறிப்பாக பஜ்ஜி, சொஜ்ஜி மற்றும் சமையல் எல்லாமே மிகவும் ருசியாக இருந்ததுதான் என்னை  இங்கே அடிக்கடி வர வைத்தது என்று சிரித்துக் கொண்டே   உண்மையை சொல்லி விட்டார். அன்று எங்கள் வீட்டில் எழுந்த  சிரிப்பு சத்தம் அடங்க நீண்ட நேரம் ஆனது. சிரிப்பு சத்தம் நாங்கள் குடியிருந்த தெரு முழுவதும் அன்று கேட்டிருக்கும்.

சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவம். அப்போது எனக்கு 5 வயதிருக்கும் எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு தூரத்து உறவினர், “ ராமு! இங்கே வா, நான் உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கிறேண் என்று பார் என்றார். எனக்கோ மகிழ்ச்சி, அவர் கையில் இருந்த இரண்டு பொட்டலங்களும் என்னிடம் கிடைத்ததும், அதைப் பிரித்துப் பார்த்து , ஆஹா! எத்தனை கேசரி, பஜ்ஜி, அத்தனையும் எனக்கா? என்று குதித்துக் கூச்சலிட்டேன். என் வீட்டிலிருந்த அத்தனை பேரும், வந்த உறவினரும் சேர்ந்து நீண்ட நேரம் சிரித்ததாக பிற்காலத்தில் எல்லோரும் சொல்லி, சொல்லி என்னை கலாட்டா செய்வதுண்டு. எனவே 5 வயதிலேயே பஜ்ஜியும், சொஜ்ஜியும் அறிமுகமாகி விட்டது என்று வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.

ஒரு சமயம் எங்கள் வீட்டில் எல்லோரும் காதலிக்க நேரமில்லை  என்ற சினிமாவுக்குச் சென்றிருந்தோம். எனக்கு சின்ன வயது என்பதால் நான் பெண்கள் பகுதியில் அமர்ந்திருந்தேன். என்னுடைய மூத்த சகோதரர் சினிமா ஆரம்பிக்கும்போது  ஆண்கள் பகுதியில்   பெஞ்சின் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். சினிமா தியேட்டரில் அனேகமாக அனைவரும் அங்கு விற்கும் தின்பண்டங்கள் வாங்குவதுண்டு, நாங்களும் முறுக்குகள் வாங்கி, சிலவற்றை என் சகோதரரிடம் கொடுக்கச் சொல்லி முறுக்கு விற்றவரிடம் சொல்லி அனுப்பினோம். முறுக்கு விற்பவர் முறுக்குகளை அவரிடம் கொடுக்கிறார்.
ஆனால் என் சகோதரரோ பிடிவாதமாக வாங்க மறுக்கிறார். சினிமா தியேட்டர் இருட்டாக வேறு இருந்தது. எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்துசகோதரர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு ‘ இப்போது முறுக்குகளை வாங்குகிறாயா, இல்லையா என்று சத்தம் போட்டு வாங்க வைத்து விட்டோம்.. சினிமா இடைவேளையில், என் சகோதரர் வேகமாக எங்களிடம் வந்து ‘தின்பண்டம் ஏதாவது வாங்குனீர்களா, வாங்கினால் எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டார். எங்களுக்கோ மிக மிக ஆச்சர்யம்.  நாங்கள் கொடுத்துவிட்ட முறுக்குகள் என்னவாயிற்று என்று நினைக்கும்போதே, ஒரு நபர் எங்களிடம் வந்து, நீங்கள் எல்லோரும் சேர்ந்து முறுக்குகளை வாங்கச் சொல்லி என்னைக் கட்டாயப் படுத்தினீர்கள். இதோ, முறுக்கு விற்பவர் கொடுத்த முறுக்குகள் என்று சொல்லி ஒரு பேப்பரில் பத்திரமாகக் கட்டி வைத்திருந்த  முறுக்குகளைத் திருப்பிக் கொடுத்தார். 

அப்போதுதான் சினிமா ஆரம்பித்ததும் என் சகோதரர் இடம் மாற்றி அமர்ந்துவிட்டார் என்பதும், அவர் முதலில் இருந்த இடத்திலிருந்த நபரிடம்தான் முறுக்குகள் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டன என்பது அறிந்ததும், சினிமாவில் வந்த காமெடியைவிட, இந்த காமெடி பெரியதாகி விட்டது. பிற்காலங்களில் இந்த நிகழ்ச்சியை சொல்லிச் சொல்லி சிரிப்பது எங்கள் குடும்பத்தில் வழக்கமாகிவிட்டது. அன்று சினிமாவுக்கு வந்திருந்த தூரத்து உறவினர் ஒருவர் என் சகோதரியைப் பெண் பார்க்க மறுநாள் வருவதாகச் சொல்லி சென்றார். இப்போது பஜ்ஜி, சொஜ்ஜி தயார் பண்ணும் பொறுப்பு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டது. எப்படியோ, நாளை பஜ்ஜி, சொஜ்ஜி கிடைக்கப் போகிறது என்று மகிழ்ச்சியடைந்தேன். மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்து, டிபன், முக்கியமாக சுவையான பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டதும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க,  சகோதரியின்  திருமணம் இனிதே நடந்தது

என்னுடைய இன்னொரு மூத்த சகோதரர் திருச்சியில் பணிபுரிந்ததால் அவருக்குப் பெண் பார்க்க முதல் முறை உறவினர்கள் எல்லோரும்
திருநெல்வேலியிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரமுள்ள செங்கோட்டை என்ற  ஊருக்குச் சென்றோம். அருமையான பஜ்ஜி, சொஜ்ஜி அன்று கிடைத்தது மறக்க முடியாது.  அதன் பிறகு, திருமணம் முடியும்வரை செய்திகள் பரிமாற என்னைத்தான் தூது அனுப்பினார்கள். அப்போது எனக்கு வயது 19. ஆனாலும் இது போல  தூது செல்வதும், செல்லும் இடங்களில் கிடைக்கும் மரியாதையும், முக்கியமாக பஜ்ஜி, சொஜ்ஜியுடன் சேர்ந்து கிடைக்கும் டிபனும் எனக்கு விருப்பமாகவே இருந்தது. திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு பஸ்ஸில்தான் பிரயாணம் செய்ய வேண்டும், பஸ்ஸிலோ, ரயிலிலோ எப்போதுமே ஜன்னல் ஓரம் சீட்டில் அமர்ந்து செல்வதுதான் எனக்கு விருப்பமானது.  எப்படியோ ஜன்னல் ஓர சீட் எனக்கு கிடைத்துவிடும் அல்லது யாரிடமாவது கேட்டு ஜன்னல் ஓரம் சீட் வாங்கிவிடுவேன்.

ஜன்னல் வழியாக மிக வேகமாகப் பின்னால் செல்லும் மனிதர்களையும், மரங்களையும் பார்த்துக் கொண்டே பிரயாணம் செல்வது மிகவும் சுவாரஸ்யமானது, சில வேளைகளில், பஸ்ஸைத் தொடர்ந்து நான் மட்டும் சினிமாவில் வருவது போல ஒரு அழகான வெள்ளைக் குதிரையில் சவாரி செய்வதாகக் கற்பனை செய்து கொள்வேன். அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் திருமணத்திற்கு முன்பு, மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்கவோ, பெண் மாப்பிள்ளையைப் பார்க்கவோ அனுமதிக்க மாட்டர்கள். இரண்டு பக்கங்களும் உள்ள உறவினர்கள் பார்த்து சொல்லும் அபிப்பிராயங்களைத்தான் மாப்பிள்ளையும், பெண்ணும் கேட்டுக் கொள்ள வேண்டியது.

எனவே என் சகோதரர் என்னிடம் இரகசியமாகக் கூறியிருந்தார் ‘ராமு, நான் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், நீ எப்படியாவது செங்கோட்டை சென்று பெண்ணைப் பார்த்து உன்னுடைய உண்மையான அபிப்பிராயம் சொல்லு என்றார்.

அடுத்த முறை செங்கோட்டையிலிருந்த பெண் வீட்டிற்குச் சென்றதும், நான், பெண்ணின் படிப்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லி, பெண்ணிடம்( எனக்கு அண்ணீயாக வரப் போகிறவர்) சில கேள்விகள் கேட்கும் சாக்கில் பெண்ணைப் பார்த்து விட்டேன். பஜ்ஜி, சொஜ்ஜி அன்றும் கிடைத்தது என்று சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ‘எனக்கு முழு திருப்தி, உனக்கும், நம்முடைய குடும்பத்திற்கும் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதை என் சகோதரரிடம் கூறினேன். பிறகென்ன, திருமணம் இனிதாக நடந்தது. சொல்ல மறந்து விட்டேனே, செங்கோட்டையில் பெண் வீட்டிற்கு எப்போது சென்றாலும் நல்ல சுவையான டிபன், பஜ்ஜி, சொஜ்ஜியுடன்  உண்டு.(சகோதரர் திருமணத்திற்குப் பிறகும்).

என்னுடைய திருமணத்திற்குப் பெண் தேடும் படலம் தொடங்கியது. இப்போதும் கூட, மாப்பிள்ளையும் பெண்ணும் சந்திக்க அனுமதி கிடையாது. என் மன நிலை வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். பெண் பார்க்கப் போகும் வீட்டில் பஜ்ஜி, சொஜ்ஜியை ருசிக்கும் சந்தர்ப்பம் இப்போது கிடைக்காதா? என்று எண்ணினேன்.  எனினும் கொஞ்சம் நாகரீகத்தில் முன்னேறிய இரண்டு பெண் வீடுகளில், மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினார்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்த இரண்டு பெண்களும் என்னுடைய உறவினர்களுக்கு திருப்தியாக இல்லை.

எல்லோரும் ஒரே குரலில் ‘ராமு,  இப்போது பார்த்த இரண்டு பெண்களும் உனக்குப் பொருத்தமாக இல்லை’, மேலும் ஜாதகமும் பொருந்தவில்லை என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு மனது மிகவும் கஷ்டமாகிவிட்டது. நானும், உறவினர்கள் எல்லோரும் அந்த வீடுகளில் பஜ்ஜி, சொஜ்ஜி காபியுடன் சாப்பிட்டோமே என்று நினைத்தேன். இனி பெண் பார்க்கப் போகும் முன், பெண்ணுடைய போட்டோவைப் பார்த்து, ஒரு முடிவு செய்த பின்தான், பெண் வீட்டுக்குச் செல்ல வேண்டும். முக்கியமாகப் பெண் பிடித்தால்தான் பஜ்ஜி, சொஜ்ஜி; இல்லை யென்றால் பஜ்ஜி, சொஜ்ஜியைத் அன்று தியாகம் பண்ண வேண்டியது தான் என்று எல்லோரும் நினைத்தோம்.

ஒரு நாள் என் உறவினர்கள் என்னிடம் வந்து, ‘ராமு, உனக்குப் பெண் பார்க்கத் தொடங்கும் போது பாளையங்கோட்டையில், அசோக் தியேட்டர் பக்கம் இருக்கும், ஏற்கனவே நாங்கள் எல்லோரும் பார்த்த பெண்தான், எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் என்று தெரிகிறது. நாளை நல்ல நாள், நாங்கள் எல்லோரும் மறுபடியும் சென்று அந்தப் பெண் வீட்டில் பார்த்துப் பேசி வருகிறோம். பெண் வீட்டில் சம்மதித்தால், அடுத்த முறை உன்னையும் அழைத்துச் செல்கிறோம். என்றார்கள். நான்,‘ சரி, சரி எல்லோரும் போய், பெண்ணைப் பார்த்துவிட்டு, பஜ்ஜியும், சொஜ்ஜியும் நல்ல சாப்பிட்டுவிட்டு வாருங்கள். என்று சிரித்துகொண்டே சொன்னேன்.

அன்று மாலையே பெண் பார்த்துவிட்டு என்னிடம் வந்து என்னுடைய குறும்புக்கார சகோதரி, “ ராமு, பஜ்ஜி, சொஜ்ஜி பிரமாதம்; போதும், போதும் என்று நாங்கள் சொல்லச், சொல்ல தட்டில் சுடச் சுடப் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.என்று சொன்னாள். நண்பருடைய மனைவியோ, ‘ காபி மணமும், சுவையும்  மிகவும் பிரமாதம் என்றாள்.  நானோ இவர்களுக்குப் பெண் பிடித்ததா, இல்லையா தெரியவில்லையே, பஜ்ஜி, சொஜ்ஜியைப் பற்றியும், காபியைப் பற்றியும்  பேசுகிறார்களே என்று எண்ணினேன். கடைசியில் பொறுமை இழந்து கேட்டேவிட்டேன். பஜ்ஜி, சொஜ்ஜி, காபி எல்லாம் நீங்கள் சூடாக சாப்பிட்ட கதை ஒரு பக்கம் இருக்கட்டும். போன விஷயம் என்னவாயிற்று? பெண் எல்லோருக்கும் பிடித்ததா?  

‘எங்கள் எல்லோருக்கும் பெண் பிடித்துவிட்டது, உனக்குப் பொருத்த மானவள் இந்தப் பெண்தான். இவளை விட்டால், அகில உலகத்திலும் உனக்குப் பொருத்தமான அழகானப் பெண் இல்லை. பெண் வீட்டிலும் சம்மதித்து விட்டார்கள். உடனே திருமணத்திற்கு நல்ல நாள் பார்க்க வேண்டியதுதான் என்று ஒரே குரலாக எல்லோரும் சொன்னர்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால், இவர்கள் வந்தவுடன் சூடான பஜ்ஜி, சொஜ்ஜி பற்றிப் புகழ்ந்து சொன்னர்களே, ஒரு வேளை, அங்கு சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜிதான் பெண் பிடித்திருக்கிறது என்று இவர்களை சொல்ல வைக்கிறதா? என்று நினைத்தேன்.

என்னுடைய சந்தேகத்தை தீர்க்கும் வகையில், என்னுடைய சகோதரி, ‘ இதோ பெண்ணுடைய போட்டோ, என்று என் கையில் கொடுத்தாள். எனக்கோ மனதுக்குள் ஒரே குஷி, என்னுடைய கனவில் வந்த தேவதையைப் பார்க்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு, போட்டோவைக் கையில் வாங்கிப் பார்த்தால், அது ஒரு குரூப் போட்டோ, இதில் மணப் பெண்ணை எப்படித் தேடுவது? என்று யோசிக்கும் போதே, என்னுடைய சகோதரி, ‘இந்தக் கூட்டத்தில் எந்தப் பெண் நாங்கள் பார்த்த, உனக்குப் பொருத்தமான பெண் என்று கண்டுபிடி பார்க்கலாம். என்று சொன்னாள். என்னுடைய கண்கள் மிகவும் ஆவலாகத் தேடின. ஒரே ஒரு பெண், அந்தப் பெண்ணை விட்டு என் கண்கள் அகல மறுத்தன. ‘இதோ, இந்தப் பெண் என்றால் எனக்கு சம்மதம் என்றேன். அதே  பெண்தான் என்று எல்லோரும் சொன்னர்கள். அப்புறமென்ன? அடுத்த மாதமே எனக்கும் என்னுடைய கனவில் வந்த தேவதைக்கும் திருமணம்தான்.

நாங்கள் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடனும், முகங்களில் புன்னகை யுடனும் ஒரே குரலில் சொல்வது : ‘எங்கள் இனிய திருமணத்திற்கு வாசகர்கள் எல்லோரையும்  அழைக்கிறோம். வாசகர்கள்  திருமணத்தில் பஜ்ஜி, சொஜ்ஜி உண்டா என்று கேட்பது காதில் விழுகிறது. விருந்தில் மூன்று நாட்களும் பஜ்ஜி சொஜ்ஜி கண்டிப்பாக உண்டு என்று சொல்லி  அழைக்கிறோம். வாசகர்கள் எல்லோரும் வாருங்கள், வந்து எங்களை மனமார வாழ்த்துங்கள்.










Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE