ஒரு கவிஞன் ஒரு காலை ஒரு காட்சி ஒரு கவிதை

                

                   பொங்கல் வாழ்த்துக்கள்

                 ஒரு கவிஞன்  ஒரு காலை
                    ஒரு காட்சி     ஒரு கவிதை

விழிகள்  திறந்தன,  விழிப்பு  வந்தது
இரவு  முடிந்ததால்,  நிலவு  மறைந்ததால்
பகலவன்  வந்ததால்,  பகல்  தெரிந்ததால்
மலர்கள்  மலர்ந்ததால்,  பறவைகள்  பறந்ததால்.

கட்டிய  மனைவி தந்த   காபியின் 
மணம்  வந்ததால், மஞ்சள்  
குளித்து  வரும்  மனைவியின்
மணமும்  வந்ததால்
எழுந்தேன்,   காலைக்  கடன்களைக்
கடமையுடன்  முடித்தேன் ,  நண்பர்களைப்
பார்க்கும்  ஆவலை  மனதில்  முடித்தேன் 

கால்கள்  நடந்தன  பூங்கா  தேடி
நடந்தால்  நல்லது  உடலுக்கும்
மனதுக்கும்; உண்மை  சொன்னது
மருத்துவ  நண்பர்களும்,  எனது
நன்மையை நாடும் அன்பர்களும். 
நடந்தேன்,  நடக்கிறேன் , இனியும்  நடப்பேன்

நண்பர்களைக் கண்டேன்;  அவர்தம்  முகத்தில்
புன்னகையைக்  கொண்டேன்.
புல்லும் , வெளியும்,  செடியும்,  கொடியும்
மரமும்,  மணக்கும்  மலர்களும்  கண்டேன்

சிரிக்கும்  மழலைகளையும்
சிந்தனை  மனிதர்களையும்
எதிர்  காலம்  எதிர்  நோக்கும்
இந்திய  இளைஞர்களையும்

எடை  குறைய,  உடல்  மெலிய,
மனம் மகிழ, முகம் மலர
நடை  பயிலும்  பெண்களையும்,
அறிவில்  மூத்தவர்களையும் ,
வயதில்  மூத்தவர்களையும்,
கண்களில் கண்டேன்;   
அவர்கள்  பண்பினை
நெஞ்சினில் கொண்டேன்

ஒரு சுற்று  முடிந்தது ;
இரு சுற்றும் முடிந்தது.
கண்டேன்  அற்புதங்களை;  
அறிந்தேன்   சொல்லில்
அடங்கா   பற்பதங்களை.
நண்பர்களை  அழைத்தேன்
நாடியும்  வந்தனர்  ஆவலால்
ஓடியும்  வந்தனர்.

புற்களின்  மேலும்,  செடி கொடிகளின்  
சின்னஞ் சிறு   இலைகளின்  மேலும்
சிதறிக்  கிடந்தன  சிறிய, மிகச்
சிறிய     வைரக் கற்கள்!
கண்டார்,  கண்  மலர்ந்தார்  
மனம்  திறந்தார்,   மகிழ்வு  கொண்டார்
அற்புதம், மிக அற்புதம் என்றார்.
உற்றவர்களையும் , மற்றவர்களையும்
அன்புடன் அழைத்தார்.
எல்லோர்  முகத்திலும்  பரவசம்
எல்லோர்  மனத்திலும்  நவரசம்.
இரவின்  பனியின்  குளிரின்  துளிகள்
மின்னின  கோடி கோடியாய்,
சின்னஞ் சிறு   வைரக் கற்களாய்.
அள்ள யாரும் நினைக்கவில்லை
கண்களில் பலர் பிரதி எடுத்தார்
கைபேசியில் சிலர் பிரதி எடுத்தார்.
அள்ளியது கண்கள் மலர்ச்சியால்
துள்ளியது என் மனம் மகிழ்ச்சியால்!




Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE