வெனிஸ் நகர வர்த்தகன் (Based on SHAKESPEARE’S THE MERCHANT OF VENICE)
SHAKESPEARE’S
THE MERCHANT OF VENICE
(ஷேக்ஸ்பியரின் தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்)
வெனிஸ்
நகர வர்த்தகன்
தமிழில்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
கிருஷ்ணா பதிப்பகம்
கோயம்புத்தூர்
FIRST EDITION : JULY, 2017
VENICE NAGARA VARTHAGAN
(Based on SHAKESPEARE’S THE MERCHANT OF
VENICE)
AUTHOR: K.S.GOPALAKRISHNAN
E Mail:
Ksg_rani@yahoo.co.in
PRICE:
RS.40/-
Pubisher and Distributor:
KRISHNA
PUBLICATIONS
7 A, SAI DWARKA,
RAMALINGA NAGAR
SECOND CROSS,
K.K.PUDUR,
COIMBATORE – 641 038
MOBILE: 98941 87627
வெனிஸ் நகர வர்த்தகன்
THE MERCHANT OF VENICE - WILLIAM
SHAKESPEARE
முன்னுரை
ஷேக்ஸ்பியர் லண்டன் அருகிலுள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட்
என்னுமிடத்தில் 1564 –ல் பிறந்தார். அவர் தனது 20 வயதில் கவிதை, நாடகங்கள்
எழுதுவதிலும், நாடக நடிகராக நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார். அவர் 16 இன்பியல், 10
துன்பியல் மற்றும் 11 வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 37 நாடகங்களையும்,
சில நெடுங்கதைகளையும், சில நீள் கவிதைகளையும் உலக இலக்கியத்திற்கு வழங்கியவர்
ஷேக்ஸ்பியர். தன்னுடைய திறமையால் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் புகழ் பெற்றார்.
தான் பல்வேறு நிலைகளில் வேலை பார்த்து வந்த குலோப் திரையரங்கின் பங்குதாரராகவும்
ஆனார். 1586 லிருந்து 1611 வரை 25 ஆண்டுகள் அவர் லண்டனிலேயே இருந்தார். அதன் பிறகு
தன்னுடைய சொந்த ஊரில் பெரிய மாளிகை போன்று வீடு கட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக
வாழ்ந்து வந்தார்.
1616 –ல் தனது 52 வது வயதில் இந்த உலகை விட்டு
மறைந்தார். எனினும் அவரது படைப்புகள் சாகாவரம் பெற்று உலக மக்களால் கொண்டாடப் படுகின்றன.
இன்றும் அவருடைய நாடகங்கள் பல நாடுகளிலும் நாடகமாகவோ அல்லது திரைப்படமாகவோ
உருவாக்கப்பட்டு வருகின்றன. ஷேக்ஸ்பியரின் மிகவும் சுவாரஸ்யமான நாடகங்களுள் THE
MERCHANT OF VENICE (வெனிஸ் நகர வர்த்தகன்) குறிப்பிடத்தக்கது. இந்த நாடகத்தை நான்
தமிழில் மொழி பெயர்த்து எழுதுவதில் பெருமை கொள்கிறேன்.
என்னுடைய முந்திய புத்தகம் “இளவரசி ஒலிவியா” – (BASED
ON SHAKESPEARE’S TWELFTH NIGHT) முற்றிலும் நாடகப் பாணியிலேயே எழுதப்பட்டது. ஆனால்
இந்த நாடகத்தில் நீதி மன்ற காட்சிகளை மட்டும் கதாபாத்திரங்கள் நேரடியாகப் பேசுவது
போல அதாவது நாடகப் பாணியில் எழுதியிருக்கிறேன்.
இந்த நாடகத்தில் அண்டோனியோ, பசானியோ என்ற இரு நண்பர்களுக்கு இடையே உள்ள நட்பின் சிறப்பையும், பசானியோ போர்ஷியா இவர்கள் இருவரும் முதன் முதலில் சந்திக்கும் போதே இருவர் விழிகளும் கண்டதும் காதல் கொள்வதையும், எல்லாவற்றுக்கும் மேலாக கருணையின் பெருமையையும் ஒரு மனிதன் பிற மனிதர்களிடம் கருணை கொள்வதே உலகில் மிகவும்
சிறந்தது என்று கதாநாயகி போர்ஷியா ஆண் வேடத்தில் வழக்கறிஞராக ஷைலக்கிடம் கூறுவதையும் ஷேக்ஸ்பியர் மிக அழகாக தன்னுடைய வரிகளில் விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நாடகத்தை நான் தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு
உற்சாகம், ஊக்கம் அளித்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த
நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
வணக்கம்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
கோயம்புத்தூர்
98941
87627
ஷேக்ஸ்பியர் எழுதிய கீழ்க்கண்ட நாடகங்கள்
தமிழில் திரைப்படங்களாக வந்திருக்கின்றன.
TWELFTH NIGHT
-
கன்னியின் காதலி
THE TAMING OF THE SHREW - அறிவாளி
AS YOU LIKE IT
- சொல்லு தம்பி சொல்லு
ROMEO JULIET
-
அம்பிகாபதி
HAMLET
- மனோகரா, மர்மயோகி
KING LEAR
-
குணசுந்தரி
ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ என்ற நாடகம், இரத்தத் திலகம்
என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியாக வருகிறது.
கதாப்பாத்திரங்கள்
அண்டோனியோ - வெனிஸ் நகர வர்த்தகன்
பசானியோ
- அண்டோனியோவின் நண்பன்
போர்ஷியா
- பெல்மான்ட் நகர இளவரசி
ஷைலக்
- வெனிஸ் நகர யூதன்
நெரிஸ்ஸா
- போர்ஷியாவின் தோழி
கிராஷியானோ,
சலேரியோ, சொலானியோ-
அண்டோனியோ, பசானியோவின் நண்பர்கள்
ஜெஸ்ஸிக்கா
- ஷைலக்கின் மகள்
லொரென்சோ
- ஜெஸ்ஸிக்காவின் காதலன்
வெனிஸ் நாட்டின் நீதிபதி, மொராக்கோ நாட்டு இளவரசன்,
அர்ராகான் நாட்டு இளவரசன், மற்றும் பலர்.
FAMOUS CONVERSATIONS IN SHAKESPEARE’S
THE MERCHANT OF VENICE
1. ANTONIO AND GRATIANO
GRATIANO: You look not well,
Signor Antonio. You have too much
respect upon the World. They lose it that they do buy it with much care.
Believe me, you are marvelously changed.
Antonio: I hold the World but as
the World, Gratiano, A STAGE WHERE EVERY MAN MUST PLAY A PART.
2. PORTIA’S PALACE
There are three Caskets made of GOLD, SILVER and LEAD. Inscriptions
written on them are:
GOLD : Who chooseth me shall gain
what many men desire.
SILVER :Who chooseth me shall get as much as he deserves.
LEAD : Who chooseth me must give
and hazard all he hath.
Prince of Morocco opens Gold Casket where the following words are
written:
ALL THAT GLITTERS IS NOT GOLD.
Often have you heard that told,
Many a man his life hath sold,
But my outside to behold,
Gilded tombs do worms infold,
Had you been as wise as bold,
Young in limbs, in judgement old,
your answer had not been inscrolled,
Fare you well, your suit is cold.
3. PORTIA AND SHYLOCK
PORTIA : Then must the Jew me merciful.
SHYLOCK : On what compulsion must I? Tell me that.
PORTIA : THE QUALITY OF MERCY IS
NOT STRAINED.
It droppeth as the gentle rain from the heaven.
Upon the place beneath. It is twice blest.
It blesseth him that gives and him that takes.
‘Tis mightiest in the mightiest, it becomes
The throned monarch better than his crown.
His sceptre shows the force of temporal power.
The attribute to awe and majesty.
Wherein doth sit the dread and fear of Kings.
But mercy is above this sceptred sway,
It is enthroned in the heart of kings,
It is attribute to God himself,
And earthly power doth then show likest God’s
When mercy seasons injustice. Therefore, Jew,
Though injustice be thy plea, consider this:
That in the course of justice none of us
Should see salvation. WE DO PRAY FOR MERCY,
And that the same prayer doth teach us all to render
The deeds of mercy. I have spoke thus much.
வெனிஸ் நகர வர்த்தகன்
THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE
இத்தாலியின் தலை நகரான வெனிஸ் நகரம். உலகிலேயே அழகான
நகரங்களில் மிகவும் முக்கியமானது. வெனிஸ் நகரம் என்பது 117 சிறிய தீவுகளாலானது.
சாலைகளே கிடையாது. மக்கள் அதிகமாக விரும்புவதுவும், பிரயாணம் செய்வதுவும் வெனிஸ்
நகர் முழுவதும் வளைந்தும், நெளிந்தும் செல்லும் நதியின் மீது செல்லும் படகுகளில்தான்.
மக்கள் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நடந்து செல்வதற்காக நதியின் குறுக்கே மிக
அழகான பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
வெனிஸ்
நகரம்
வெனிஸ் நகரத்தின் செல்வந்தர்களுள் அண்டோனியோ என்பவன்
கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வந்தான். நண்பர்கள் சலேரியோ,
சொலானியோ இருவருடனும் அண்டோனியோ ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தான். நான் ஏன் கவலையாக
இருக்கிறேன் என்று தெரியவில்லை என அண்டோனியோ சொல்கிறான். அப்போது கடலில் வந்து
கொண்டிருக்கும் கப்பல்களைப் பற்றி அண்டோனியோ கவலைப் படலாம் அல்லது தன்னுடைய
காதலைப் பற்றிக் கவலைப் படலாம் என்று சலேரியோ கூறுகிறான்.
அண்டோனியோ, என்னுடைய கப்பல்களைப் பற்றி எப்போழுதுமே
நான் கவலைப்படுவது இல்லை, ஆனால் காதல் என்ற வார்த்தையை நான் வெறுக்கிறேன்’.
சலேரியோ : அப்படியென்றால், அண்டோனியோ மகிழ்ச்சியாக
இல்லை என்பதனாலேயே கவலையாக இருக்கிறான், ஒரு சிலர் கவலை இல்லாமல் இருப்பதால்
மகிழ்ச்சியாக இருப்பார்கள். சரிதானே? இருமுகம் கொண்ட கிரேக்கக் கடவுள் ஜானஸ் உருவத்தில்
ஒரு முகம் எதிர்காலத்தையும் இன்னொரு முகம் இறந்த காலத்தையும் பார்ப்பது போல
இருக்கும். சிலர் எந்த விதக்காரணமும் இல்லாமல் சிரிப்பார்கள் அல்லது அழுவார்கள்!
எனவே அண்டோனியோ கவலையோடு இருப்பதற்கு எவ்விதக் காரணமும் இல்லாமலிருக்கலாம்”
என்கிறான்.
அண்டோனியோவின் மிக நெருங்கிய நண்பர்கள் பசானியோ, மற்றும்
லொரன்சோ, கிராஷியானோ மூவரும் வருகிறார்கள். . பசானியோ அதிக வருமானம் இல்லாத
நிலையில் அண்டோனியோவிடம் சில
சந்தர்ப்பங்களில் பணம் உதவி கேட்பதுண்டு. அண்டோனியோவும் பசானியோவை உயிர் நண்பனாக
நினைத்து தேவையான பணம் அடிக்கடி கொடுக்கும் வழக்கம் உண்டு. வேறு என்ன உதவிகள்
கேட்டாலும் செய்வதுண்டு.
வெனிஸ் நகரத்தில் பணம் தேவைப்படும் மக்களுக்கு ஷைலக்
என்ற யூதன் அதிக வட்டிக்குப் பணம்
கொடுத்து வந்தான். அதே சமயத்தில்
அண்டோனியோ பணம் தேவைப்படுபவர்களுக்கு வட்டியில்லாமல் பண உதவி செய்து வந்தான். ஷைலக்கை
சந்திக்க நேரும் போதெல்லாம் அண்டோனியோ, ஷைலக்கை கேலி செய்வதும், அவமானப்படுத்தி
வருவதும் வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு சமயம் ஷைலக்கின் மேல் எச்சில் துப்பவும்
செய்திருக்கிறான். இதனால் ஷைலக்
அண்டோனியோவைப் பழி வாங்க நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்பார்த்துக்
காத்திருந்தான்.
ஒரு நாள் அண்டோனியோ, ‘பசானியோ! நீ யாராவது ஒரு பெண்ணைக்
காதலிக்கிறாயா, திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?’ இன்று மனம் திறந்து
என்னிடம் சொல்” என்கிறான்.
பசானியோ அண்டோனியோவிடம் " அருமை நண்பனே! நான்
ஏற்கனவே நிறைய பணத்தை வீணாக செலவழித்து விட்டேன். உன்னிடமும் நிறைய சந்தர்ப்பங்களில்
பணம் கேட்டு வாங்கியிருக்கிறேன். இப்போது நீ கேட்பதனால் சொல்கிறேன். நான்
பெல்மான்ட் நகரில் உள்ள போர்ஷியா என்ற சீமாட்டியைத் திருமணம் செய்ய கொள்ள விரும்புகிறேன்.
அவளுடைய தந்தை இறந்ததும் அளவிடமுடியாத சொத்துக்கள் ஒரே மகளான போர்ஷியாவுக்குத்தான்
கிடைத்திருக்கிறது. அவள் தந்தை உயிருடன் இருந்த போது அவர்கள் வீட்டிற்கு நான்
சென்றிருக்கிறேன். அப்போது போர்ஷியாவுடைய அழகிய விழிகள் என் காதலை மறுக்கவில்லை
என்று புரிந்து கொண்டேன். போர்ஷியாவைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் நான் இந்த
சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ முடியும் என்று நம்புகிறேன். நான் உடனே
பெல்மான்ட் செல்லவும், விலை மதிப்புள்ள ஆடைகள் வாங்கவும் எனக்குப் பணம்
தேவைப்படுகிறது" என்கிறான்
அந்த சமயத்தில் அண்டோனியோவின் கப்பல்கள் எல்லாம்
வியாபாரத்திற்காக பல நாடுகள் சென்றிருந்தன. கப்பல்கள் திரும்பி வந்தால் தான் அண்டோனியோவுக்குப்
பணம் கிடைக்கும். ஆனால் உயிர் நண்பன் பசானியோவின் வேண்டுகோளை ஒரு போதும் மறுக்காத
அண்டோனியோ வேறு வழியில்லாமல் யூதன் ஷைலக்கிடம்
சென்று 3000 டக்கட்ஸ் கடனாகக் கேட்க முடிவு செய்கிறான். தன்னுடைய வியாபாரக்
கப்பல்கள் சிறிது நாட்களில் வந்ததும் வட்டியோடு சேர்த்துக் கொடுத்து விடுவதாக
ஷைலக்கிடம் கூறுகிறான்.
முந்திய நாட்களில் தான் ஒரு யூதன் என்பதால் அண்டோனியோ தன்னை
அவமானப் படுத்தியதை ஷைலக் நினைவு படுத்துகிறான். தன்னை நாய் என்று அண்டோனியோ குறிப்பிட்டதையும் கூறி உனக்குப் பணம் கொடுக்க
இந்த நாயிடம் ஏது பணம் என்று கேட்கிறான். எனினும் வட்டியில்லாமல் கடன் கொடுப்பதாகவும்
குறிப்பிட்ட மூன்று மாதங்களில் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் அண்டோனியோவின்
உடலிலிருந்து ஒரு பவுண்டு சதை எடுத்துக் கொள்வதாகவும் கடன் பத்திரத்தில்
குறிப்பிட்டு ஷைலக், அண்டோனியோ இருவரும் கையெழுத்திடுகிறார்கள். ஒரு பவுண்டு சதை
எடுப்பதை வேடிக்கையாகக் குறிப்பிடுவதாகவும் ஷைலக் கூறுகிறான். பசானியோ தடுத்துப்
பார்க்கிறான். அண்டோனியோ புன்முறுவலுடன் 3000 டக்கட்ஸ் பணத்தை ஷைலக்கிடமிருந்து
வாங்கி பசானியோவிடம் கொடுக்கிறான். பசானியோ தன்னுடைய நண்பன் கிராஷியானோவுடன்
பெல்மான்ட் செல்ல முடிவு செய்கிறான்.
பெல்மான்ட்
போர்ஷியாவுடைய தந்தை
இறப்பதற்கு முன் தன்னுடைய மகளைத் திருமணம் செய்ய விரும்புபவர்கள்
பேராசைப்படாதவர்களாகவும், திறமை மற்றும் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும் என்று
முடிவு செய்து தங்கம், வெள்ளி மற்றும் ஈயம் ஆகிய உலோகங்களில் தயாரிக்கப்பட்ட
மூன்று பெட்டிகளை மகளிடம் கொடுக்கிறார். அவற்றில் ஒரு குறிப்பிட்ட பெட்டியைத்
திறப்பவர்தான் போர்ஷியாவைத் திருமணம் செய்ய தகுதி பெற்றவராவார். போர்ஷியாவுடைய
அழகான ஒரு ஓவியம் அந்தப் பெட்டியில்தான் இருக்கிறது.
பக்கத்து நாடுகளிலிருந்து
வந்த இளவரசர்கள் மற்றும் கணவான்கள் யாருமே சரியான பெட்டியைத் திறக்கவுமில்லை;
அவர்களில் யாரையுமே போர்ஷியாவுக்குப் பிடிக்கவுமில்லை.
போர்ஷியாவின் தோழி நெரிஸ்ஸா
: உங்கள் தந்தை உயிரோடிருக்கும் போது ஒரு நாள் வெனிஸ் நகரத்திலிருந்து அழகான ஒரு இளைஞன், போர் வீரன் வந்திருந்தாரே,
அவர்தான் உங்களுக்குப் பொருத்தமானவராக எனக்குத் தோன்றுகிறது, நான் சொல்வது
சரிதானே? என்று கேட்கிறாள். உடனே போர்ஷியாவும் அந்த வீரனைப் பார்த்ததிலிருந்து என்
மனமும் அவரைத்தான் விரும்புகிறது என்கிறாள்.
அப்போது மொரோக்கோ நாட்டின் இளவரசர் தன்னுடைய பரிவாரங்களுடன்
போட்டியில் கலந்து கொள்ள வந்திருப்பதாக ஒரு வேலையாள் சொல்கிறான்.
போர்ஷியாவும் நெரிஸ்ஸாவும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்கிறார்கள்.
மறுநாள் மொரோக்கோ இளவரசன்
போர்ஷியாவின் மாளிகைக்கு போட்டியில் கலந்து கொள்ள வருகிறான்.:
இளவரசன்: ‘சீமாட்டியே! என்னுடைய நிறத்தைப் பார்த்து
பயப்பட வேண்டாம். இந்த நிறத்தைப் பார்த்து என்னுடைய எதிரிகள் எல்லோரும் பயந்து
ஓடியிருக்கிறார்கள். சிவப்பு நிறமுள்ள மனிதனின் இரத்தத்தை விட என்னுடயைய இரத்தம்
சிவப்பாகத்தான் இருக்கும்.
என்னுடைய நாட்டிலுள்ள அழகிய பெண்கள் எல்லோரும் என்னுடைய
இந்த நிறத்தைப் பார்த்து என்னை விரும்பியுமிருக்கிறார்கள்.’ .
போர்ஷியா: இளவரசே! இதில் நான்
உங்கள் தோற்றத்தைப் பார்த்து முடிவெடுக்க முடியாது. என் தந்தை அறிவு பூர்வமாக
வைத்திருக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவரைத்தான் நான் திருமணம் செய்து
கொள்ள முடியும்.
இளவரசன்: அதிர்ஷ்டத்தை
மட்டுமே நம்பி மாவீரன் ஹெர்குலிஸும் அவனுடைய வேலைக்காரனும் பகடை விளையாடும் போது,
ஹெர்குலிஸ் அவனுடைய வேலைக்காரனிடமே தோற்றுப் போக நேரிடலாம். ஒருவேளை என்னுடைய
துரதிர்ஷ்டம் நான் தோற்று உங்களை இழப்பதாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் நான்
துக்கத்திலேயே இருப்பேன்’.
போர்ஷியா (புன்னகையுடன்) : அப்படியா?
முதலில் சர்ச்சுக்கு சென்று விட்டு இரவு சாப்பாடு முடிந்த பின் போட்டி
நடக்குமிடத்திற்குச் செல்லலாம். .
இளவரசன்: அதிர்ஷ்டம் இந்த
உலகத்திலேயே என்னை மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக
மாற்றுமா அல்லது துரதிர்ஷ்டம் என்னை துன்பக் கடலில் என்று வீழ்த்துமா தெரியவில்லை’
என்கிறான்.
சிறிது நேரத்திற்குப் பின் எல்லோரும்
பெட்டிகள் இருக்கும் போட்டி நடக்கும் அறைக்குச் செல்கிறார்கள்.
.
இளவரசன்;(பெட்டிகளின் மேல்
எழுதியிருக்கும் வாசகங்களை வாசிக்கிறான்)
முதல் பெட்டி தங்கத்தாலானது
அதில் ‘ எல்லா மனிதர்களும் விரும்புவது கிடைக்கும் ‘ என்று எழுதியிருக்கிறது.
இரண்டாவது பெட்டி
வெள்ளியாலானது. அதில் ‘ யாருக்கு என்ன தகுதியோ, அது கிடைக்கும்’ என்று
எழுதியிருக்கிறது.
மூன்றாவது பெட்டி ஈயத்தாலானது.
அதில் ‘தனக்கு உரிமையுள்ளவற்றை எல்லாம் விட்டுத் தர வேண்டும் பல விதமான சோதனைகளை
எதிர் கொள்ள வேண்டும்.’ என்று எழுதியிருக்கிறது. இவற்றில் சரியான பெட்டியை நான்
எப்படி தேர்ந்தெடுப்பேன்?
போர்ஷியா: மூன்று
பெட்டிகளில் ஒன்றில் என்னுடைய ஓவியம் இருக்கும். அந்தப் பெட்டியைத் திறந்தால்
நீங்கள் என்னை மணம் புரியலாம். நான் உங்களுடையவளாக ஆவேன்! .ஒருவேளை போட்டியில்
நீங்கள் தோற்றால் ஒரு வார்த்தை கூட பேசாமல் இந்த மாளிகையை விட்டு வெளியேற
வேண்டும்.
இளவரசன்: என்னுடைய
அதிர்ஷ்டத்திற்கு கடவுள் துணையாக இருக்கட்டும். ஒரு ஈயப் பெட்டிக்காக தனக்கு
உரியதையெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டுமா? சோதனைகளை சந்திக்க வேண்டுமா? நிச்சயமாக
இந்தப் பெட்டி இல்லை. வெள்ளியினாலான பெட்டியை விட என் தகுதி மேலானதல்லவா? அப்படி யென்றால்
இதுவும் இல்லை. எல்லா மனிதர்களும் விரும்புவது கிடைக்கும் என்று தங்கத்திலான
பெட்டியில் எழுதி இருக்கிறது. சீமாட்டி போர்ஷியாவை உலகத்தில் உள்ள எல்லோரும்
விரும்புவார்களே! உலகத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் அழகி போர்ஷியாவைப்
பார்க்கவும், திருமணம் செய்து கொள்ளவும் வருவார்களே! அப்படியென்றால் போர்ஷியாவின்
ஓவியம் இருக்கும் தகுதி நிச்சயம் ஈயப் பெட்டிக்கு இருக்காது. தங்கத்தை விட பல
மடங்கு மதிப்பு குறைவான வெள்ளிப் பெட்டியில் போர்ஷியாவின் ஓவியம் இருக்கும் என்று
நான் நினைப்பதே தவறான சிந்தனை.! இங்கிலாந்தில் தங்கக் காசுகளில் தேவதைகளின்
உருவத்தைத்தான் பொறித்திருப்பார்கள்! போர்ஷியா என்ற தேவதையின் ஓவியம் நிச்சயம்
தங்கப் பெட்டியில் தானிருக்க வேண்டும்! ஆஹா அப்படியென்றால் இதோ இந்தப் பெட்டிதான்;
நான் கண்டு பிடித்து விட்டேன். நான் அதிர்ஷ்டக்காரன்தான்! இந்தத் தங்கப்
பெட்டியின் சாவியை என்னிடம் கொடுங்கள்.
தங்கப் பெட்டியின் சாவியைக்
காவலர்கள் கொடுக்கிறார்கள்.
போர்ஷியா: இளவரசே! தங்கப்
பெட்டியின் உள்ளே என் புகைப்படம் இருந்தால், உங்கள் அதிர்ஷ்டம், நான்
உங்களுடையவளாகி விடுவேன்.
இளவரசன்: (பெட்டியைத்
திறந்து பார்க்கிறான்) “ஓ நரகமே! ஒரு மண்டையோடு இருக்கிறது. அதனுடன் ஒரு கடிதம். ‘
மின்னுவதெல்லாம் பொன்னல்ல! தங்கக் கட்டிகளை சம்பாதிப்பதற்காகவே ஒரு மனிதன் தன்
வாழ்நாளை வீணாக்குகிறான். அவனுடைய தங்கத்தால் மூடப்பட்ட சமாதியின் உள்ளே புழுக்கள்தான்
இருக்கின்றன. நீ இந்தப் போட்டியில் தோற்று
விட்டாய். என்று எழுதியிருக்கிறது. ஆஹா, நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டேன். மிகவும்
வருந்துகிறேன்.
போர்ஷியா: நானும்
வருந்துகிறேன்; தோற்றவர்கள் திரும்பிச் செல்லத்தான் வேண்டும் நீங்கள் செல்லலாம்.
தன் பரிவாரங்களுடன்
மொரோக்கோ இளவரசன் செல்கிறான்.
அடுத்த நாள் அர்ராகோன் நாட்டு
இளவரசன் வருகிறான். வழக்கமான வரவேற்பிற்குப் பின் பெட்டிகள் இருக்குமிடத்தைப்
பார்க்க விரும்புகிறான். போர்ஷியா: “என்னுடைய ஓவியம் இருக்கும் பெட்டியைத்
திறந்தால் நமது திருமணச் சடங்குகள் நடக்கும். நீங்கள் தோற்று விட்டால் வேறு எந்த
வார்த்தையும் பேசாமல் உடனடியாக வெளியேற வேண்டும்”
அர்ராகோன் இளவரசன் ‘ நான்
மூன்று சபதங்கள் செய்திருக்கிறேன். முதலாவது - நான் தேர்வு செய்யும் பெட்டியை
யாரிடமும் சொல்ல மாட்டேன். இரண்டாவது – சரியான பெட்டியை நான் தேர்வு
செய்யாவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் இனி எந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய
மாட்டேன். மூன்றாவது – நான் தோற்று விட்டால் உடனடியாக இந்த இடத்தை விட்டுச் சென்று
விடுவேன்.
பெட்டிகளையும் அதில் மேலே
எழுதியிருக்கும் வாசகங்களையும் அர்ராகோன் இளவரசன் கவனமாகப் படிக்கிறான்.
ஈயப் பெட்டிக்காக யாரவது
சோதனைகளை ஏற்றுக் கொள்வார்களா என்ன? எனவே இந்தப் பெட்டி இல்லை. வெளித் தோற்றத்தைப்
பார்த்து ஏமாறும் கண்கள் உள்ளே என்ன
இருக்கும் என்பதை சரியாக கண்டு பிடிக்காமல் போகும். எல்லா சாதாரன மனிதர்களும்
விரும்புவதை நான் எப்படி விரும்ப முடியும்? எனவே இந்த தங்கப் பெட்டியும் என்னுடைய
தேர்வு இல்லை.
அடுத்தது வெள்ளிப் பெட்டி.யில்
எழுதியிருப்பதுதான் பொருத்தமாகத் தெரிகிறது. தகுதியுள்ளவர்களுக்குத்தான் இந்த
உலகத்தில் பதவியோ, பதவி உயர்வோ, பணமோ, சொத்துக்களோ கிடைக்கிறது. எனவே தகுதியுள்ள
எனக்குத்தான் சீமாட்டி போர்ஷியா கிடைப்பாள் என்று முடிவு செய்து வெள்ளிப்
பெட்டியின் சாவியைக் கேட்கிறான். வெள்ளிப் பெட்டியின் சாவி கொடுக்கப்படுகிறது.
வெள்ளிப் பெட்டியைத்
திறந்து பார்க்கிறான். “ என்ன இது? கண்களை சிமிட்டும் ஒரு கோமாளியினுடைய உருவம்!
என்னுடைய தகுதிக்கு இந்த உருவம் தான் பரிசா? வேறு எதுவும் கிடையாதா? என்று
கேட்கிறான். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீர்மானிக்கப் பட்டவர்களுக்கும் வேறு வேறு
கடமைகள் இருக்கின்றன. இந்தத் தீர்ப்பு ஏழு முறை பரிசோதிக்கப்பட்டது; எனவே நிச்சயம்
இது தவறாக இருக்காது. நிழலிடம் அன்பு செலுத்துபவர்கள் போலியான மகிழ்ச்சியைத்தான்
பெறுவார்கள். எந்த மனைவியை நீ அடைந்தாலும் இந்தக் கோமாளியினுடைய தலைதான் உன்னிடம்
இருக்கும். நீ போகலாம், வந்த வேலை முடிந்து விட்டது. என்று எழுதியிருந்தது.
இனிமேல் நான் இங்கு தங்கியிருந்தால் எல்லோருடைய கண்களுக்கும் நான் கோமாளியாகத்தான்
தெரிவேன். இனிய சீமாட்டியே, நான் செல்கிறேன். என்னுடைய சபதத்தை நான்
நிறைவேற்றுவேன்!
அர்ராகோன் நாட்டு இளவரசன் தன்
நண்பர்களுடன் வெளியேறுகிறான்.
வெனிஸ் நகரம்:
வெனிஸ் நகரத்தில் ஷைலக்கின்
ஒரே மகள் ஜெஸ்ஸிக்கா, லொரென்சோ என்ற கிறிஸ்துவன் இருவரும் காதலிக்கிறார்கள்.
இந்தக் காதல் ஷைலக்கிற்குத் தெரியாது. ஒரு நாள் ஜெஸ்ஸிக்காவிடம் வீட்டை கவனமாக
பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஷைலக் வெளியே செல்கிறான். ஜெஸ்ஸிக்கா வேலையாள்
மூலமாக ஒரு கடிதத்தை லொரென்சோவுக்குக் கொடுத்தனுப்புகிறாள். அன்றிரவு இருவரும்
வெனிஸ் நகரத்தை விட்டு வெளியூர் செல்லும் திட்டம் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
கடிதத்தின்படி இரவு லொரென்சோ வருகிறான். ஜெஸ்ஸிக்கா தன்னுடைய தங்க நகைகள் மற்றும்
சில டக்கட்ஸ் பணத்துடன் ஆண் வேடத்தில் லொரென்சோவுடன் வெனிஸ் நகரத்தை விட்டுச் செல்கிறாள்.
ஷைலக் வீடு திரும்பியதும் தன் மகள் ஜெஸிக்கா இல்லை என்பதும் கிறிஸ்துவன்
லொரென்சோவுடன் ஓடிப் போய்விட்டாள் என்பதையும் அறிந்து மிகவும் கலங்குகிறான்; மழை
பெய்யும் தெருக்களில் அங்கும் இங்கும் தேடி அலைகிறான். ‘ஜெஸ்ஸிக்கா’, ‘ஜெஸ்ஸிக்கா’
என்று கதறி அழுகிறான்.
பெல்மான்ட்:
போர்ஷியாவைத் திருமணம்
செய்து கொள்ளும் எண்ணத்தோடு பசானியோ தன் நண்பன் கிராஷியானோ மற்றும் சிலருடன்
பெல்மான்ட் வருகிறான்.போர்ஷியா, நெரிஸ்ஸா இருவரும் பசானியோ, கிராஷியானோ இருவரையும்
வரவேற்கிறார்கள். பசானியோ காதலுடன் போர்ஷியாவைப் பார்க்கிறான். போர்ஷியா கண்களும்
காதலை வெளிப்படுத்துகின்றன. பசானியோ போட்டியில் கலந்து கொள்ள விருப்பத்தைத்
தெரிவிக்கிறான்; பெட்டிகள்
இருக்குமிடத்திற்கு செல்ல விரும்புகிறான்.
போர்ஷியா (பசானியோவிடம்)
சற்றுப் பொறுங்கள். ஒரு நாளோ இரண்டு நாட்களோ அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.
தாமதமானாலும் பரவாயில்லை. தவறானப் பெட்டியை
ஒருவேளை நீங்கள் தேர்வு செய்தால் என்னை இழந்து விடுவீர்கள். உங்களை இழந்து
விடக்கூடாது என்று என் மனதுக்குள் ஏதோ சொல்கிறது; அது காதலா என்று சொல்லத்
தெரியவில்லை. வெறுப்பாக இருந்தால் நான் இப்படி பேச மாட்டேன். என்னை நீங்கள்
புரிந்து கொள்ளுங்கள். சரியான பெட்டியை எப்படி தேர்ந்தெடுப்பது என்று நான்
உங்களுக்கு சொல்ல முடியும்; ஆனால் அப்படி சொல்வது தவறாகும். நான் பாவம்
புரிந்தவளாவேன். உங்கள் கண்கள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன; அந்தக் கண்கள் என்னை
இரண்டாகப் பிரித்து ஒரு பாதி நானாகவும் மறு பாதி நீங்களாகவும் ஆக்கி விட்டன.
என்னுடைய பாதியை நான் உங்களுக்கு சொந்தமாக்கிவிட்டால், அதன் பின் எல்லாமே
உங்களுக்கு உரிமையாகி விடுகிறதல்லவா? அப்படியானாலும் நான் உங்களுக்கு இன்னும்
சொந்தமாகி விடவில்லை. நான் அதிகமாகப் பேசியது இந்தப் போட்டியைத்
தாமதப்படுத்தத்தான்.’
பசானியோ: மோசமான அவநம்பிக்கையே
என்னை இப்போது குழப்பத்தில் ஆழ்த்துகிறது. என்னுடைய வாழ்க்கையே இப்போது
பனிக்கட்டிக்கும் நெருப்புக்கும் இடையில்தான் இருக்கிறது. சரியான
பெட்டியைத் தேர்ந்தெடுக்க
அதிர்ஷ்டம் எனக்குத் துணை புரியும் என்று நம்புகிறேன்.
.
போர்ஷியா: மூன்று
பெட்டிகளில் ஏதோ ஒரு பெட்டியில் எனது ஓவியம் உள்ளது. என்னை நீங்கள் உண்மையிலேயே காதலிப்பதாக
இருந்தால், நிச்சயம் சரியான பெட்டியைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்..
இனிமையான இசை ஒலிக்கட்டும்; நெரிஸ்ஸாவும் மற்றவர்களும் விலகி நில்லுங்கள். பசானியோ
தோற்றால் தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் வாத்து போல, இசையும் சோகமாக
ஒலிக்கட்டும். .அப்போது என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென கொட்டும். பசானியோ
வெற்றி பெற்றால் மன்னன் முன்பு மக்கள் தலை வணங்கும் போது ஒலிக்கும் இசை போல
மிகுந்த சப்தத்துடன் இசை ஒலிக்கட்டும்.
இனிமையான இசை ஒலிக்கிறது. பசானியோ
பெட்டிகள் இருக்குமிடத்திற்கு வருகிறான்.
பசானியோ:(தனக்குள்
பேசுகிறான்) எங்கே காதல் பிறக்கிறது?
இதயத்திலா அல்லது தலையில் உள்ள மூளையிலா? காதல் என்பது எங்கே பிறந்து எங்கே
வளர்கிறது? காதல் கண்களிலே ஆரம்பித்து, அன்பான பார்வையிலே வளர்ந்து இரு மனங்களுடன்
இணைகிறது. வெளித் தோற்ற அலங்காரங்களை நம்பி இந்த உலகமே ஏமாந்து போகிறது. சட்டத்தின்
முன்பு கூட அற்புதமான வாதங்களால் மோசமான, நேர்மையற்றவர்கள் வெற்றி பெற்று
விடுகிறார்கள். புனித நூல்களிலிருந்து சில வார்த்தைகளைக் கூறி பாவச் செயல்களைக்
கூட மறைத்து விடுகிறார்கள். எத்தனையோ கோழைகள் ஹெர்குலஸ் போல தாடி வைத்துக் கொண்டு
தன்னை மிகப் பெரிய வீரனாகக் காட்டிக் கொள்கிறார்கள். அழகான பெண்களின் தலையில் இருக்கும் செயற்கை முடி அழகாக
இருக்கும்; ஆனால் அந்த செயற்கை முடியோ வேறு ஒருவர் தலையிலிருந்து
எடுக்கப்பட்டதாகும். போலி அலங்காரங்களால் உண்மையை மறைத்து ஒரு மிகவும் அறிவுள்ள
மனிதனைக் கூட ஏமாற்ற முடியும். எனவே அதிக பள பளப்புடனிருக்கும் தங்கப் பெட்டியே,
உன்னிடம் எனக்கு வேலை இல்லை.. வெளிர் நிறம் கொண்ட வெள்ளிப் பெட்டியே! உன் பக்கமும்
நான் வரப் போவதில்லை. எவரையும் மிரட்டும் செய்தி எழுதப்பட்டிருக்கும் குறைந்த
மதிப்புள்ள ஈயமே, உன்னுடைய ஒளிவு மறைவு இல்லாத செய்தி என்னை உன் அருகே கொண்டு
வருகிறது. எனவே இதுதான் என்னுடைய தேர்வு. என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்.*
போர்ஷியா (தனக்குள்):
இப்போது என்னுடைய சந்தேகம், பயம், கலக்கம் எல்லாமே காற்றோடு போய் விட்டது. காதல்
என்ற உணர்வு மட்டுமே எஞ்சியிருக்கிறது. போதும், அதிகமான மகிழ்ச்சி என்ற நிலை என்னை
துன்பத்தில் தள்ளிவிடுமோ என்று பயப்படுகிறேன்.
பசானியோ ( ஈயப் பெட்டியைத்
திறந்து கொன்டே) : இதில் என்ன இருக்கிறது; ஆஹா! போர்ஷியாவுடைய அழகான உருவம்!
கடவுள் படைத்த அற்புதப் பெண்ணை தெய்வீக சக்தியுள்ள ஓவியன் மிகவும் அழகாக ஓவியமாகத்
தீட்டியிருக்கிறான். கண்கள் அங்கும் இங்கும் அசைகிறதா? இல்லை என்னுடைய கண்கள்
அசைவுக்கு ஏற்றபடி அங்கும் இங்கும் செல்கிறதா? இனிமையான சுவாசக் காற்று வெளியே
வருவதற்காக இவளுடைய சிவந்த உதடுகள் சிறிது திறந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.
தங்க நிறமுள்ள கேசம் அழகான பளிங்கு போன்ற முகத்தில் அலை பாய்கின்றன. கண்களைத்
தீட்டிய ஓவியன் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் இங்கிருக்கும் கடிதத்தில்
என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கிறேன்.
“ நீ உன்னுடைய கண்களை
மட்டும் நம்பாமல் சரியான பெட்டியைத் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியடைந்திருப்பதால்,
அங்கு உனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அழகான பெண்ணை உடனே சென்று பார்த்து அவள்
கைகளில் அன்பாக ஒரு முத்தம் கொடு” என்றல்லவா எழுதியிருக்கிறது.
இதோ வருகிறேன், அன்பும்,
அழகும் நிறைந்த பெண்ணே! உன் கைகளில் ஒரு முத்தம் கொடுத்து ஒரு முத்தம் வாங்க
வருகிறேன்”.
அப்போது மகிழ்ச்சி
ஆரவாரங்களும் கைத்தட்டலும் பலமான இசை ஒலிப்பதும் பசானியோவுக்குக் கேட்கின்றன. பசானியோ
மிகவும் மகிழ்ச்சியடைகிறான்.
போர்ஷியாவும் தோழி
நெரிஸ்ஸாவும் வருகிறார்கள். கிராஷியானோவும் நெரிஸ்ஸாவும் ஒருவரை ஒருவர் பார்த்து
புன்னகைக்கிறார்கள்.
போர்ஷியா ‘ அன்புள்ள
பசானியோ! எனக்கென்று தனிப்பட்ட குறிக்கோளோ ஆசையோ கிடையாது. நான் ஆயிரம் மடங்கு
அழகாகவும் பணக்காரியாகவும் இருக்கலாம். உங்கள் அன்புக்காக நான் அத்தனையும் உங்கள்
முன்பு சமர்ப்பிக்கிறேன். நான் அதிக அனுபவமில்லாதவள்; நாகரீகமாக நடக்கப் பயிற்சி இல்லாதவள்:
இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள முடியாதளவு எனக்கு வயதாகிவிடவில்லை. நான் இப்போது
உங்களுக்குச் சொந்தமானவள். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்த
மாளிகை, வேலையாட்கள், மற்றும் எனக்குச் சொந்தமான அத்தனையும் தங்களுக்கே
உரித்தானதாகட்டும். இதோ இந்த மோதிரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மோதிரத்தை
நீங்கள் யாருக்காவது கொடுத்தாலோ, வேறு விதங்களில் இழந்தாலோ, என் மேல் உள்ள உங்கள்
காதல் அழிந்து விட்டது என்று நான் நினைப்பேன்.’
பசானியோ: “சீமாட்டியே! நான்
பேசுவதற்கு வார்த்தைகளே இல்லாதபடி நீயே எல்லாவற்றையும் பேசி விட்.டாய். என்னுடைய
மகிழ்ச்சியை இப்போது வார்த்தைகளால் சொல்ல முடியாதவனாக இருக்கிறேன். ஒன்று மட்டும்
உறுதியாகச் சொல்வேன். நீ தந்த மோதிரம் என் விரலை விட்டுப் பிரிந்தால் என் உயிர்
என் உடலை விட்டுப் பிரிந்து விட்டது என்று நீ முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த மகிழ்ச்சியை நாம் எல்லோருமே
கொண்டாடலாம் என நெரிஸ்ஸா சொல்கிறாள்.
பசானியோ போர்ஷியா இருவருக்கும் கிராஷியானோ வாழ்த்து தெரிவித்து விட்டு
உங்கள் இருவர் திருமண நிச்சயம் செய்யும் இந்த தினத்தில் நானும் திருமணம் செய்து
கொள்ள விரும்புகிறேன். என்கிறான். பசானியோவும் மகிழ்ச்சியுடன் ‘திருமணம் சரி,
மணப்பெண் கிடைக்க வேண்டுமே’ என்கிறான்.
கிராஷியானோ: அன்புள்ள
பசானியோ! எப்போது உன் கண்கள் சீமாட்டி போர்ஷியாவைக் கண்டு, காதல் கொண்டதோ அதே
நேரத்தில் நானும் தோழி நெரிஸ்ஸாவைக் காதலுடன் பார்த்தேன், நெரிஸ்ஸாவும் என்னைக்
காதலிக்க சம்மதித்தாள்; ஆனால், பசானியோ சரியான பெட்டியைத் தேர்வு செய்து உங்கள்
இருவரின் திருமணம் எப்போது தீர்மானிக்கப்படுகிறதோ, அப்போது தான் எங்கள் திருமணம் நடைபெறும்
என்று நெரிஸ்ஸா உறுதியாகச் சொல்லி விட்டாள்.
இது உண்மையா நெரிஸ்ஸா?
என்று போர்ஷியா கேட்டதும், உண்மை தான்; ஆனால் இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி
தரும் என்று நம்புகிறேன் என்று நெரிஸ்ஸா சொல்கிறாள்.
இரண்டு திருமண
நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் நடத்த முடிவு செய்கிறார்கள்.
அப்போது வெனிஸ்
நகரத்திலிருந்து லொரன்ஸோ, ஜெஸ்ஸிக்கா இருவரும் பசானியோவின் நண்பன் சலேரியோவுடன்
வருகிறார்கள். இவர்களை போர்ஷியாவுக்கு பசானியோ அறிமுகப்படுத்துகிறான். போர்ஷியா எல்லோரையும்
வரவேற்கிறாள். அண்டோனியோ கொடுத்து அனுப்பிய கடிதத்தை சலேரியோ பசானியோவிடம்
கொடுக்கிறான்.
கடிதத்தில் இவ்வாறு
குறிப்பிடப் பட்டிருக்கிறது " பிரிய நண்பன் பசானியோ! என்னுடைய வியாபாரக்
கப்பல்கள் எல்லாம் மூழ்கி விட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. என்னால்
ஷைலக்குக்கு பத்திரத்தில் உள்ள தேதியில் 3000 டக்கட்ஸ் பணம் கொடுக்க முடியவில்லை.
பத்திரத்தில் எழுதியது போல என்னுடைய உடலில் இருந்து ஒரு பவுண்டு சதையைக் கொடுக்க
வேண்டியதுதான். வேறு வழியில்லை. எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் இறப்பதற்கு
முன் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்"
கடிதத்தைப் படித்தவுடன்
பசானியோ போர்ஷியாவிடம் “இந்தக் கடிதத்தில் வருத்தப்பட வேண்டிய செய்திதான்
இருக்கிறது. என் உயிர் நண்பன் அண்டோனியோ ஆபத்தில் இருக்கிறான். உன் மேல் நான்
கொண்ட காதல் நிறைவேறவும், நான் பெல்மாண்ட் வரவும் தன்னுடைய எதிரி என்று தெரிந்தும்
ஷைலக் என்ற யூதனிடமிருந்து அண்டோனியோ 3000 டக்கட்ஸ் பணம் வாங்கிக் கொடுத்தான்.
தற்போது டிரிபோலிஸ், மெக்சிகோ, லண்டன், லிஸ்பன், இந்தியா போன்ற பல நாடுகளுக்கு
அவன் அனுப்பிய கப்பல்கள் யாவும் மூழ்கி விட்டதாகவும், ஷைலக்குக்கு பணம் திருப்பிக்
கொடுக்க முடியாமல் இருப்பதாகவும் எழுதியிருக்கிறான். பத்திரத்தில் எழுதியுள்ளபடி
ஷைலக் அண்டோனியோவின் உடலிலிருந்து ஒரு பவுண்டு சதையை வெட்டி எடுக்காமல் விட
மாட்டான். ஷைலக் என்ற யூதன் மிகவும் கொடியவன். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்றே
புரியவில்லை. என்கிறான்.
ஜெஸ்ஸிக்கா மூவாயிரம்
டக்கட்ஸ் பணத்தை விட அண்டோனியோவின் உடலிலிருந்து ஒரு பவுண்டு சதைதான் வேண்டும்
என்று என் தந்தை ஷைலக் வெனிஸ் நகரத்தில் தன் நண்பர்களிடம் சொல்வதைத் தான் கேட்டிருப்பதாகச்
சொல்கிறாள்.
உடனே போர்ஷியா, ‘அன்பரே!
3000 டக்கட்ஸ் மட்டுமில்லை! அதை விட, பல மடங்கு டக்கட்ஸ் கொண்டு சென்று நண்பன்
அண்டோனியோவைக் காப்பாற்ற வேண்டும். அண்டோனியோ போன்று இப்படி ஒரு நண்பன்,
பசானியோவுக்காக ஒரு சிறு தலை முடி கூட இழக்கக் கூடாது. பசானியோ, நாம் எல்லோரும்
சர்ச்சுக்குச் செல்வோம். முதலில் நம் திருமணம் நடக்கட்டும் .உங்கள் மன நிலை இது
போல ஒரு சங்கடத்திலிருக்கும் போது நாம் நமது இனிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டாம்.
பசானியோ, கிராஷியோனா நீங்கள் இருவரும் இந்த திருமண நாளில் வெனிஸ் நகரம் சென்று
அந்த யூதனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு உங்கள் நண்பரைக் காப்பாற்றி அழைத்து வாருங்கள்.
நானும் நெரிஸ்ஸாவும் நீங்கள் இருவரும் திரும்பி வரும் நாள் வரை காத்திருப்போம்.
அன்று இரவு சர்ச்சில் பசானியோ
- போர்ஷியா, கிராஷியானோ- நெரிஸ்ஸா இவர்களது திருமணம் நடைபெறுகிறது.
பசானியோ ‘இனிய போர்ஷியாவே, உன்னுடைய
அனுமதி கிடைத்து விட்டது. வெனிஸ் நகரம் சென்றுவிட்டு, எவ்வளவு சீக்கிரம் திரும்பி
வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருகிறேன்’.
என்கிறான்.
அதன் பின் பசானியோவும்
கிராஷியானோவும் தேவையான பணத்துடன் வெனிஸ் நகரம் செல்கிறார்கள்.
வெனிஸ் நகரம்:
அண்டோனியோவின் கப்பல்கள்
மூழ்கிய செய்தி கேட்டதும் ஷைலக் ‘ எனக்கு நல்ல செய்தி கிடைத்தது. கிறிஸ்துவர்கள் எல்லோருக்கும் அண்டோனியோ வட்டியில்லாமல்
பணம் கொடுப்பவன். நான் அதிக வட்டி வாங்குவதாக என்னைக் கேலி செய்பவன். சந்திக்கும்
போதெல்லாம் என்னை அவமானப் படுத்தியவன். அவனுடைய கப்பல்கள் எல்லாம் மூழ்கி விட்டன. இப்போது
அவன் எனக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தைப் படித்துப் பார்க்கட்டும். என்று
சலேரியோவிடம் சொல்கிறான்.
ஒரு வேளை அண்டோனியோ
குறிப்பிட்ட நாளில் பணம் திருப்பித் தராவிட்டால் அண்டோனியோவின் உடலிலிருந்து ஒரு
பவுண்டு சதையை வெட்டி எடுப்பாயா? வெறும் சதையினால் உனக்கு என்ன பயன்? என்று சலேரியோ
ஷைலக்கிடம் கேட்கிறான்.
அப்போது ஷைலக், ‘ மனிதனுடைய
சதை ஒரு மீனுக்கு உணவாகுமே தவிர வேறு எதற்கும் உதவாது; ஆனால் என்னுடைய பழி
வாங்கும் உணர்ச்சிக்கு அது உணவாகும். 50 லட்சம் டக்கட்ஸ்க்கு இணையாகும். என்னுடைய
நஷ்டத்தைப் பார்த்து சிரித்தான்; என்னுடைய லாபத்தைப் பார்த்து கேலி செய்தான். நான்
பேரம் பேசும் முயற்சியை எல்லாம் கெடுத்தான். யூதன் என்பதால் நான் எந்த விதத்தில்
வேறுபட்டவன்? யூதர்களுக்குக் கண்கள் கிடையாதா? கைகள் கிடையாதா? அதே அறிவு, அதே
உணர்வு, அதே உணவு, ஆயுதத்தால் பாதிக்கப்படுவது, நோயால் அவதிப்படுவது, மருந்துகளால்
குணமாவது, எல்லாம் ஒன்றுதானே? வெயிற்காலமும், மழைக்காலமும் கிறிஸ்துவர்களுக்குப்
போலவே தான் யூதர்களுக்கும். விஷம் குடித்தால் இறந்து போவது கூடத்தான். என்னைக்
காயப்படுத்தினால் நான் பழி வாங்கக்கூடாதா? ஒரு யூதன் ஒரு கிறிஸ்துவனைக்
காயப்படுத்தினால், அந்தக் கிறிஸ்துவன் யூதனைப் பழி வாங்குவானா அல்லது அமைதியாகப்
போவானா? பழி வாங்குவான் இல்லையா? அது போல ஒரு கிறிஸ்துவன் யூதனைக் காயப்படுத்தும்
போது உங்கள் பைபிளில் கூறியுள்ளபடி யூதன்
என்ன செய்ய வேண்டும்? பழி வாங்க வேண்டும் இல்லையா? எனவே கிறிஸ்துவர்கள் எனக்குக்
கற்றுக் கொடுத்ததைத்தான் நான் இப்போது செய்யப் போகிறேன். என்கிறான்.
அப்போது டியூபல் என்ற
இன்னொரு யூதன் வருகிறான். அவனிடம் தன்னுடைய மகள் ஜெஸ்ஸிக்காவைப் பார்த்தாயா? என்று
ஷைலக் கேட்கிறான். ஜெஸ்ஸிக்காவைப் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் சந்திக்க முடியவில்லை
என்றும் டியூபல் கூறுகிறான். அவள் அணிந்துள்ள இரண்டாயிரம் டக்கட்ஸ் மதிப்புள்ள
காதணிகளோடு என்னுடைய காலடியில் மடிந்து விழட்டும். விலை மதிப்புள்ள நகைகளுடன்
சென்று விட்டாள். இன்னும் அவளைத் தேடுவதிலும் பணம் செலவு பண்ண வேண்டியதிருக்கிறதே’
என்று ஷைலக் புலம்புகிறான்.
ஷைலக் தினம் வெனிஸ் நகர
நீதிபதியிடம் சென்று பத்திரத்தில் எழுதியது போல அண்டோனியோவின் சதையை வெட்டி எடுக்க
அனுமதி கேட்கிறான். நீதிபதியும் வெனிஸ் நகரத்தில் உள்ள பெரிய மனிதர்களும் எவ்வளவோ
சொல்லியும் ஷைலக் கேட்பதாக இல்லை. அண்டோனியோவும் ஷைலக்கிடம் எவ்வளவோ பவ்வியமாகப்
பேசிப் பார்க்கிறான். எக்காரணத்தைக் கொண்டும் அண்டோனியோவுக்குக் கருணை காட்ட
முடியாது என்றும் ,முன்பு பல முறை தன்னை நாய் என்று அண்டோனியோ கூறியதை ஒருபோதும் மறக்க
மாட்டேன் என்றும் ஷைலக் கூறுகிறான். யார் எவ்வளவு கெஞ்சினாலும் ஒரு கிறிஸ்துவனுக்கு
ஒரு போதும் நான் இரக்கம் காட்ட மாட்டேன் என்றும் ஷைலக் உறுதியாகக் கூறுகிறான்.
அண்டோனியோ தன் நண்பர்
சலேரியோவிடம், “பல சந்தர்ப்பங்களில் ஷைலக் மற்றவர்களிடம் அதிக வட்டி வாங்குவதை
நான் தடுத்திருக்கிறேன்; எனவே ஷைலக் என் மேல் வஞ்சம் கொண்டிருக்கிறான்; என் உயிரை
வாங்கவும் முடிவு செய்து விட்டான்; வெனிஸ் நகர நீதிபதி சொன்னாலும் வேறு யார் சொன்னாலும்
ஷைலக் கேட்க மாட்டான்; நான் உயிர் பிழைக்க ஒரே வழி பசானியோ நாளை வந்து கடன் வாங்கிய
பணத்தைக் கொடுத்து விட்டால் பிறகு நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன்.” என்று கூறுகிறான்.
பெல்மான்ட்
பசானியோவை வழியனுப்பி
வைத்தாலும், பசானியோவினால் அண்டோனியோவைக் காப்பாற்ற முடியுமா என்று போர்ஷியா
யோசிக்கிறாள்.
பெல்மான்ட்டில் லொரன்சோ,
ஜெஸ்ஸிக்கா இருவரிடமும் தன்னுடைய மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்து
விட்டு சிறிது தூரத்திலிருக்கும் மற்றொரு மாளிகைக்கு செல்வதாகக் கூறி தோழி
நெரிஸ்ஸாவுடன் போர்ஷியா வெளியே செல்கிறாள். போவதற்கு முன்பு ஒரு வேலையாளை அழைத்து
மிகவும் வேகமாக அருகில் உள்ள படுவா என்ற ஊருக்குச் சென்று வக்கீல்கள் அணியும்
இரண்டு ஆண் உடைகளை வாங்கி வெனிஸ் நகரத்திற்குக் கொண்டு வரச் சொல்கிறாள். வேலையாள்
வெனிஸ் நகரம் வருவதற்குள் தானும் நெரிஸ்ஸாவும் அங்கு வந்து விடுவோம் என்றும்
வேலையாளிடம் சொல்கிறாள்.
பிறகு போர்ஷியா நெரிஸ்ஸாவிடம்
“நாம் இருவரும், நமது கணவர்கள் பசானியோ, கிராஷியோனா வெனிஸ் நகரம் செல்வதற்கு
முன்பாக செல்ல வேண்டும்; நம்மை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியாதவாறு நாம்
ஆணுடைகள் அணிந்து செல்லப் போகிறோம். நான் சிறிது காலம்தான் படித்திருந்தாலும்
என்னுடைய அறிவு நிறைய தந்திரங்களும், சிந்தனைகளும் நிறைந்தது. என்னுடைய திட்டங்கள்
என்னவென்பதை வெனிஸ் நகரம் போகும் வழியில் விளக்கமாகச் சொல்கிறேன்.” என்கிறாள்.
போர்ஷியா நெரிஸ்ஸாவுடன்
அருகில் உள்ள படுவா என்ற ஊருக்குச் செல்கிறாள். வழக்கறிஞர் பெல்லாரியோவை சந்தித்து, அண்டோனியோவின் வழக்கு பற்றி போர்ஷியா
விவாதிக்கிறாள். பிறகு அவரிடமிருந்து
வெனிஸ் நகர நீதி மன்றத்தில் அண்டோனியோவுக்காக வாதம் செய்ய அனுமதிக் கடிதத்தைப்
பெற்றுக் கொண்டு வெனிஸ் நகரம் வருகிறாள். ஆண்
வேடத்தில் போர்ஷியா அண்டோனியோவுக்காக வெனிஸ் நகர நீதி மன்றத்தில் வாதிடத்
திட்டமிடுகிறாள்..
வெனிஸ் நகரம்:
வெனிஸ் நகர நீதிபதி முன்பு
வழக்கு விவாதம் நடக்கிறது.
அண்டோனியோவிடம் நீதிபதி
“உனக்காக நான் பரிதாபப்படுகிறேன். மனிதாபிமானம் சிறிதும் இல்லாத, இரக்கமே இல்லாத
கல் நெஞ்சுக்காரன் ஷைலக்கிடமிருந்து உன்னை நீ காப்பாற்றிக் கொள்ள வேண்டிய
நிலையிருக்கிறாய்., என்கிறார்.
அண்டோனியோ : எனக்காக
தாங்கள் நிறைய முயற்சிகள் செய்து ஷைலக் என்ற இந்தக் கொடியவன் மனதை மாற்ற முயன்றும்
அவன் தன் முடிவில் தீர்மானமாக இருக்கிறான். என்னுடைய விதியின் காரணமாக, இப்போது ஷைலக்கிடம்
நான் மாட்டிக் கொண்டேன்.
நீதிபதி ஷைலக்கை அழைத்து
வரச் சொல்கிறார். ஷைலக் கடுமையாகவும் முகத்தில் ஏளனச் சிரிப்புடனும் வருகிறான்.
நீதிபதி: ஷைலக்! நானும்,
ஏன் இந்த உலகமுமே நினைக்கிறோம், இந்த பழி வாங்கும் எண்ணத்தை நீ விட்டு விட்டு,
கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக அண்டோனியோவிடம் கருணை காட்டி உன் தவறை நீ
உணர்ந்து கொள்வாய் என்று நம்புகிறோம். அண்டோனியோவிடமிருந்து ஒரு பவுண்டு சதை
வேண்டாம் என்று நீ முடிவு செய்தால், அது மனிதர்கள் மேல் நீ அன்பு
கொண்டிருப்பதையும் உன்னுடைய மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துவத்துவதாகவும்
இருக்கும். எதிர்பாராத விதமாக அண்டோனியோ பொருள் நஷ்டம் அடைந்திருப்பதால் அவன் மீது
இரக்கம் கொண்டு அசல் தொகையிலும் ஒரு பகுதி நீ விட்டுக் கொடுக்க வேண்டும். அன்பான
பதிலை எல்லோரும் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
ஷைலக்: என்னுடைய நோக்கம்
என்னவென்று நான் உங்களிடம் சொல்லி விட்டேன். மேலும் என்னுடைய புனித நூலான
‘சப்பாத்’ மேல் ஆணையாக பத்திரத்தில் உள்ள ஒப்பந்தப்படி குறிப்பிட்ட தேதியில் அண்டோனியோ
பணம் கொடுக்கத் தவறியதால்தான் அபராதத்தை நான் கேட்கிறேன். நீங்கள் என் கோரிக்கையை
மறுத்தால், இந்த வெனிஸ் நகரத்தின் சட்டத்தைக் காப்பாற்றத் தவறி விட்டதாக ஆகி
விடும். மூவாயிரம் டக்கட்ஸ்க்குப் பதிலாக நான் ஏன் இறந்து போன சதையைக் கேட்கிறேன்
என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். என்னுடைய விருப்பமாக இருக்கலாம். இந்த
பதில் போதுமா? என்னுடைய வீட்டில் ஒரு எலி தொந்தரவு செய்யும் போது அந்த எலியைக்
கொல்வதற்காக நான் பத்தாயிரம் டக்கட்ஸ் செலவு செய்வேன். இந்த பதில் போதுமா? சில
மனிதர்களுக்கு வாய் பிளந்து நிற்கும் பன்றியைப் பிடிக்காது; சிலருக்குப் பூனையைப்
பார்த்தாலே பிடிக்காது; சிலருக்கு ஊது குழலின் ஓசை பிடிக்காது. நீதிபதி அவர்களே!
இதற்கெல்லாம் காரணங்களைக் கண்டு பிடிக்க முடியாது. இவை எல்லாமே தனிப்பட்ட உணர்வுகள்தான்.
சில விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்காமல் போகிறது. இதற்கு மேல்
நான் விளக்கம் கொடுக்க முடியாது. அண்டோனியோ மீது எனக்கு தீர்மானமான வெறுப்பு
இருக்கிறது. எனவே நான் அவன் மேல் வழக்கு போட்டிருக்கிறேன். இந்த பதில் போதுமா?
பசானியோ: இந்த பதில் போதாது
ஷைலக், உன்னுடைய கடுமையான நடவடிக்கைகளை விட்டு விடு.
ஷைலக்: உனக்கு நான் பதில்
சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
பசானியோ: தான்
விரும்பவில்லை, அன்பு செலுத்தவில்லை என்பதற்காக தனக்குப் பிடிக்காத மனிதர்களை எல்லோரும் கொல்வார்களா? ஒரு மனிதன்
செய்யும் எந்தத் தவறும் உடனடியாக வெறுப்பாக மாற வேண்டிய அவசியமில்லை.
ஷைலக்: உன்னுடைய எதிரி
உன்னை இரண்டாம் முறை காயப்படுத்துவதற்கு நீ அனுமதிப்பாயா? உன்னை ஒரு பாம்பு
இரண்டாம் முறை கடித்தால் என்ன செய்வாய்?
அண்டோனியோ: பசானியோ! தயவு
செய்து இந்த யூதனிடம் விவாதம் செய்வதை விட,
கடற்கரைக்குச் சென்று அலைகள் உயரமாக எழ வேண்டாம் என்று சொல்; ஒரு ஆட்டுக்
குட்டியைக் கொன்று அதன் தாய் ஆட்டை அழ வைத்த நரியிடம் ஏன் கொன்றாய் என்று கேள்;
மலை உச்சியில் உயரமாக வளர்ந்துள்ள பைன் மரங்களின் இலைகள் காற்றில் ஓசை எழுப்ப
வேண்டாம் என்று சொல்; மிகவும் கடினமான இந்த யூதனுடைய இருதயத்தை மாற்றுவதை விட இந்த
உலகத்தில் உள்ள எந்த ஒரு கடினமான பொருளையும் மென்மையாக உன்னால் மாற்றி விட
முடியும். எனவே உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், இந்த யூதனிடம் எனக்காக இனி நீ
எந்த வேண்டு கோளையும் வைக்க வேண்டாம்.
இந்த யூதனுடைய ஆசை
நிறைவேறுமாறு எனக்கு தீர்ப்பு சீக்கிரம் வழங்கப்படட்டும்.
பசானியோ இரு மடங்கு பணம்
கொடுப்பதை ஷைலக் ஏற்க மறுக்கிறான். ஒவ்வொரு டக்கட்ஸும் ஆறு டக்கட்ஸ்ஸாக மாறினாலும்
எனக்கு வேண்டாம்; பத்திரத்தில் குறிப்பிட்ட தேதியில் அண்டோனியோ பணம்
கொடுக்காததால், அண்டோனியோவின் உடலிலிருந்து ஒரு பவுண்டு சதை வேண்டும்; அதுதான்
நியாயம் என்கிறான்.
நீதிபதி: ஷைலக்! இரக்கம்
என்பதை யாருக்குமே நீ அளிக்க முன் வராத போது கடவுளிடம் எப்படி இரக்கம் வேண்டும்
என்று நீ பிரார்த்தனை செய்வாய்?
ஷைலக்: எந்தத் தவறும்
செய்யாத நான் ஏன் தாங்கள் தரப் போகும் தீர்ப்புக்குப் பயப்பட வேண்டும்? எதற்காக
நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்? பணம் கொடுத்து வாங்கி விட்டீர்கள் என்ற ஒரே
காரணத்திற்காக, நீங்கள் கிறிஸ்துவர்கள், ஏவிய வேலைகளையெல்லாம் அடிமைகள் செய்யலாம்.
அதற்காக உங்கள் வாரிசுகளை அந்த அடிமைகளுக்குத் திருமணம் செய்து கொடுப்பீர்களா?
நீங்கள் உறங்கும் பஞ்சு மெத்தைகளில் அவர்களை ஓய்வெடுக்க அனுமதிப்பீர்களா? நீங்கள்
உண்ணும் உணவை அவர்களுக்குக் கொடுப்பீர்களா? இந்த அடிமைகளையெல்லாம் பணம் கொடுத்து
நாங்கள் வாங்கியதால் அவர்கள் எங்களுடைய சொத்து என்று சொல்லுவீர்கள் - இதுதான்
உங்களுடைய பதிலாக இருக்கும். அது போலவே அண்டோனியோவுடைய ஒரு பவுண்டு சதையை நான் மிக
அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன், அது எனக்கு உரியது; எனக்கு வேண்டும்;
நீங்கள் மறுத்தால், இந்த நாட்டிலுள்ள நீதி, சட்டம் எல்லாமே வெட்கித் தலை குனிய வேண்டும்.
இந்த நீதிமன்றத்தின் நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறேன்; அண்டோனியோவுடைய ஒரு
பவுண்டு சதை எனக்கு கிடைக்குமா, இல்லை, கிடைக்காதா?
.
நீதிபதி: பெல்லாரியோ என்ற
அனுபவமுள்ள வழக்கறிஞரை நான் எதிர்பார்க்கிறேன். அவர் இன்று இங்கு வந்து இந்த
வழக்கை முடிவு செய்வார்.
சலேரியோ: நீதிபதி அவர்களே!
படுவா என்ற ஊரிலிருந்து வந்த ஒரு நபர் ஒரு கடிதத்துடன் வெளியே நின்று கொண்டிருக்கிறார்.
நீதிபதி: உடனே அந்தக்
கடிதத்துடன் அந்த நபரை உள்ளே அழைத்து வாருங்கள்.
பசானியோ: மகிழ்ச்சியாக இரு
அண்டோனியோ! தைரியமாக இரு. என்னுடைய உடலில் இருந்து இரத்தம் சதையெல்லாம் ஷைலக் எடுத்துக்
கொள்ள அனுமதிப்பேனே தவிர உன் உடலிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் எடுக்க விட
மாட்டேன்.
அண்டோனியோ: நான் இப்போது
ஒரு ஆட்டு மந்தையில் நோய்வாய்ப்பட்டு இறப்பதற்குத் தயாரான ஒரு ஆடு போல
இருக்கிறேன். பலமில்லாத ஒரு பழம் விரைவில் மரத்திலிருந்து விழத் தயாராக இருப்பது
போல இருக்கிறேன். இது என்னுடைய விதி; பசானியோ! நீ உயிர் வாழ்ந்து, என்னுடைய
சமாதியில் நமது நட்பைப் பற்றி எழுத வேண்டும்.
அப்போது ஆண் உடையில்
நெரிஸ்ஸா கடிதத்துடன் வருகிறாள். தான் படுவா என்ற ஊரிலிருந்து வருவதாகக் கூறி,
வழக்கறிஞர் பெல்லாரியோ கொடுத்த கடிதத்தை நீதிபதியிடம் கொடுக்கிறாள்.
பசானியோ: உன்னுடைய கத்தியை
ஏன் தீட்டுகிறாய், ஷைலக்?
ஷைலக்: திவாலானவனின் உடலில்
இருந்து ஒரு பவுண்டு சதையை எடுக்கத்தான் நான் இந்த கத்தியைத் தீட்டுகிறேன்.
கிராஷியானோ: உன்னை உயிரோடு
வாழ விட்டதற்காக நீதியைத்தான் சபிக்க வேண்டும். ஒரு ஓணாயினுடைய ஆன்மா உன் உடலில்
புகுந்து விட்டது என்று நினைக்கிறேன். அதனால் தான் ஷைலக், நீ இரத்த வெறி கொண்டு அலைகிறாய்.
ஷைலக்: நீ எவ்வளவு
பேசினாலும், உன் பேச்சு இந்த பத்திரத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யப் போவதில்லை.
நான் நீதியை வேண்டி நிற்கிறேன்.
நீதிபதி: பெல்லாரியோவின்
கடிதத்தின் படி ஒரு இளம் வழக்கறிஞர் வந்திருக்கிறார். அவரை சகல மரியாதைகளுடன்
இங்கே அழைத்து வாருங்கள். அதுவரை பெல்லாரியோவின் கடிதத்தை இந்த நீதி மன்றம்
கேட்கட்டும்.
பெல்லாரியோவின் கடிதம்:
நீதிபதி அவர்களே! உங்கள்
கடிதம் வந்த போது நான் உடல் நலமில்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில், வெனிஸ்
நகரத்திலிருந்து வந்த ஒரு இளம் வழக்கறிஞர் என்னிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கைப் பற்றிய முழு விவரங்களையும் பல விதமான சட்ட நுணுக்கங்களையும்
இருவரும் விவாதித்தோம். அவருடைய திறமையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
என்னுடைய சார்பில் நீதி மன்றத்தில் அவர் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஆண் வேடத்தில் போர்ஷியா
வழக்கறிஞராகவும், நெரிஸ்ஸா உதவியாளராகவும் வருகிறார்கள்; வெனிஸ் நகர நீதிபதியிடம்
அந்தக் கடிதத்தில்
எழுதியிருப்பது போல அந்தோணியோவுக்காக வாதிட போர்ஷியா நீதிபதியிடம் அனுமதி
கேட்கிறாள். .
நீதிபதி முன்பு பழி வாங்கும்
உணர்வுடன் ஷைலக்கும், பரிதாபமாக அண்டோனியோவும், ஒன்றும் செய்வதறியாது பசானியோவும்
நிற்பதைப் போர்ஷியா பார்க்கிறாள். எப்படியாவது அண்டோனியோ காப்பற்றப்பட வேண்டும்
என்று நினைக்கிறாள்..
நீதிபதி ; இளம் வழக்கறிஞரே!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வழக்கைப் பற்றி முழு விவரங்கள் தெரியுமா? .
போர்ஷியா: வழக்கறிஞர்
பெல்லாரியோ அவர்களால் முழு விவரங்களும் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு யார் வணிகர்? யார் யூதர்?
நீதிபதி: வணிகர் அண்டோனியோ
ஒரு பக்கமும், வயதான யூதர் ஷைலக் ஒரு பக்கமும் என்று இருவரும் உங்கள் எதிரே நின்று
கொண்டிருக்கிறார்கள்.
போர்ஷியா (ஷைலக்கைப்
பார்த்து) உங்கள் பெயர்தான் ஷைலக்கா?
ஷைலக்: ஆம்! என்னுடைய
பெயர்தான் ஷைலக்.
போர்ஷியா: மிகவும்
வித்தியாசமான வழக்கை நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள்; எனினும் வெனிஸ் நகர
சட்டப்படி தங்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
(அண்டோனியோவைப் பார்த்து)
ஷைலக் தொடர்ந்துள்ள வழக்கில் ஆபத்தான கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது
தெரியுமா?
அண்டோனியோ: ஆம் தெரியும். ஷைலக்
அப்படித்தான் சொல்கிறார்.
போர்ஷியா: பத்திரத்தில்
எழுதியுள்ளதையும், அதில் நீங்கள் கையெழுத்திட்டதையும் ஒப்புக் கொள்கிறீர்களா?
அண்டோனியோ: ஆமாம்!. நான்
ஒப்புக் கொள்கிறேன்.
போர்ஷியா: அப்படியென்றால்
இந்த யூதர்தான் உங்கள் மேல் இரக்கம் காட்ட வேண்டும்.
ஷைலக்: எந்தக்
கட்டாயத்தினால் நான் இரக்கம் காட்ட வேண்டும்? எனக்கு அதைச் சொல்லுங்கள்.
போர்ஷியா ' ஷைலக்! கருணை என்ற பண்பு கறை படாதது. பிறரிடம் கருணை
காட்டுவதுதான் உலகத்திலேயே மிகவும் சிறந்தது! வானத்திலிருந்து பொழியும் மென்மையான
மழை போன்றது. அந்தக் கருணை என்பது கொடுப்பவரையும் பெறுவரையும் மகிழ்விக்கும்; ஒரு
அரசனின் மணிமகுடத்தை விட உயர்ந்தது; சட்டத்திற்காகவும் மரியாதைக்காகவும்தான்
உலகத்திலேயே சக்தி வாய்ந்த ஒரு அரசன் தன்னுடைய படை, பரிவாரங்களால்
மதிக்கப்படுகிறானே தவிர, அவன் அரசன் என்பதனால் மட்டும் அல்ல. பிற மனிதர்களிடம்
இரக்கம் காட்டுவது என்பது உலகத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் விட உயர்ந்தது. கடவுளின்
ஆசிர்வாதம் கிடைக்கும். பிறரிடம் காட்டும் கருணை என்பது ஒருவனை கடவுளின் அருகே
கொண்டு செல்லும். நினைவு கொள்ளுங்கள் ஷைலக்! நாம் எல்லோருமே கடவுளின்
கருணைக்காகத்தான் பிரார்த்தனை செய்கிறோம். அந்த பிரார்த்தனை நமக்கு கருணையைக்
கற்றுத் தர வில்லையா?' உங்கள் கடினமான மனதை மென்மையாக மாற்றுவதற்காகவே நான்
இவ்வளவு நேரம் பேசினேன், இந்த வழக்கை நீங்கள் தொடர்ந்து நடத்துவதாக இருந்தால், வெனிஸ்
நகர சட்டப்படி அண்டோனியோவுக்கு எதிரான தீர்ப்பு தர வேண்டியதிருக்கும்.
ஷைலக் : என்னுடைய
நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இந்த பத்திரத்தின்படி பணம்
கொடுக்கப்படவில்லை என்பதால், எனக்கு சட்டப்படி தீர்ப்பு வழங்கும்படி கேட்கிறேன்.
.போர்ஷியா பத்திரத்தைத்
தான் பார்க்க விரும்புவதாகக் கூறுகிறாள். ஷைலக் பத்திரத்தை போர்ஷியாவிடம்
கொடுக்கிறான். போர்ஷியா பத்திரத்தை மிகவும் கவனமாகப் படிக்கிறாள்,
போர்ஷியா: ஷைலக்! இரண்டு
மடங்கு பணம் உங்களுக்குத் தரப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு கருணையுடன்
அண்டோனியோவை விடுவித்து விடுங்கள். .
ஷைலக்: பத்திரத்தின்படி
நடப்பதாக நான் கடவுளின் முன்பு ஆணையிட்டிருக்கிறேன். வெனிஸ் நகரை மொத்தமாகக்
கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
\
போர்ஷியா :‘ ஷைலக்!
பத்திரத்தில் எழுதியுள்ளது போல சட்டப்படி
அண்டோனியோவிடமிருந்து ஒரு
பவுண்டு சதை எடுத்துக் கொள்ளலாம்’. ஆனால் இரக்கம் காட்டுங்கள் ஷைலக்! மறுபடியும்
சொல்கிறேன்.
ஷைலக்: எனக்கு பணம்
வேண்டாம் பத்திரத்தில் எழுதியுள்ளது போல அண்டோனியோவிடமிருந்து. ஒரு பவுண்டு சதைதான்
வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பத்திரத்தில் எழுதியதை மீற சம்மதிக்க மாட்டேன். இந்த
பத்திரத்தின்படி பணம் கொடுக்கப்படவில்லை என்பதால், விரைவில் தீர்ப்பு வழங்கும்படிக்
கேட்கிறேன்.
போர்ஷியா; அண்டோனியோவால்
பணம் கொடுக்க முடியாதா?
பசானியோ: இந்த நீதி
மன்றத்தில் நான் அண்டோனியோவுக்காக பணம் தருகிறேன். இரண்டு அல்லது மூன்று மடங்கு தருகிறேன்;
அதுவும் போதவில்லையென்றால் பத்து மடங்கு தருகிறேன். என்னுடைய கைகள், தலை, இதயம்
அத்தனையும் தருகிறேன். இவையெல்லாம் போதாது என்றால், அடுத்தவரை துன்பப் படுத்துவதுதான்
ஷைலக்கின் நோக்கம் என்பது உண்மையாகிறது. நீதிபதி அவர்களே! இந்த ஒருமுறை இரக்க
மனதுடன் நீதியில் உள்ள சலுகைகள் மூலமாக, அல்லது நீதியிலிருந்து விலகியாவது இந்த கொடுமையிலிருந்து
என் நண்பன் அண்டோனியோவைக் காப்பற்றுங்கள்!
போர்ஷியா: அப்படி செய்யக்
கூடாது; வெனிஸ் நகர சட்டத்தை மீற யாருக்கும் அதிகாரமில்லை. அப்படிச் செய்தால் அது
ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும், வெனிஸ் நகரத்தின் புகழ், வர்த்தகம்
உலகளவில் பாதிக்கப்படும். எனவே, பசானியோ நீங்கள் கூறுவது போல் செய்ய முடியாது.
ஷைலக் (மிகவும்
மகிழ்ச்சியுடன்) ‘தீர்ப்பு சொல்லுவதில் மிகவும் திறமையான, பைபிளில்
குறிப்பிட்டுள்ள டானியலே வந்து தீர்ப்பு சொல்லுவது போல இருக்கிறது. இளம் வழக்கறிஞரே!
உங்களுக்கு எப்படி என்னுடைய மரியாதையைத் தெரிவிப்பேன்?
போர்ஷியா: ஷைலக்! மறுபடியும்
சொல்கிறேன். மூன்று மடங்கு பணம் உங்களுக்குத் தரப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்
கொண்டு கருணையுடன் அண்டோனியோவை விடுவித்து விடுங்கள். .ஷைலக்! பத்திரத்தில்
எழுதியுள்ளது போல சட்டப்படி அண்டோனியோ விடமிருந்து ஒரு பவுண்டு சதை நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம்’. ஆனால் இரக்கம் காட்டுங்கள் ஷைலக்! மூன்று மடங்கு பணம் பெற்றுக்
கொள்ளுங்கள்; நான் இந்தப் பத்திரத்தைக் கிழித்து விடுகிறேன்.
ஷைலக்: எந்த ஒரு மனிதனின்
வார்த்தைகளும் என்னுடைய முடிவை மாற்ற முடியாது. பத்திரத்தின் விதிமுறைகளின்படி
நடந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். தீர்ப்பை வழங்குங்கள்.
அண்டோனியோ: இந்த நீதி
மன்றம் தீர்ப்பு வழங்கும்படி நானும் கேட்டுக் கொள்கிறேன்.
நீதி மன்றக் காவலர்கள் அண்டோனியோவை
ஒரு நாற்காலியில் அமர வைத்து கைகளையும், கால்களையும் கட்டுகிறார்கள்.
போர்ஷியா: நல்லது! இந்தப்
பத்திரத்தில் எழுதி உள்ளது போல அண்டோனியோவின் உடலிலிருந்து ஷைலக் ஒரு பவுண்டு சதை
வெட்டி எடுத்துக் கொள்ளட்டும். அண்டோனியோ! உங்களுடைய நெஞ்சைக் காட்டுங்கள்.
ஷைலக்: (மகிழ்ச்சியுடன்) மிகவும்
அருமையான தீர்ப்பு’. இளம் வழக்கறிஞரிடமிருந்து இப்படி ஒரு அறிவுத் திறமையை யாரும்
எதிர்பார்க்க மாட்டார்கள்.
போர்ஷியா,!. ஷைலக்! சதையை
நிறுத்துப் பார்க்க தராசு கொண்டு வந்திருக்கிறீர்களா?.
ஷைலக்: நான் ஏற்கனவே கொண்டு
வந்திருக்கிறேன்.
போர்ஷியா: ஒரு
மருத்துவரையும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும், ஷைலக்! இல்லையென்றால் இரத்தம்
சிந்தியே அண்டோனியோ இறந்து விடுவார்.
ஷைலக்: பத்திரத்தில் அப்படி
குறிப்பிடப்பட்டிருக்கிறதா? இல்லையே!
(ஷைலக்கின் எண்ணம்
அண்டோனியோ இரத்தம் வடிந்து மடியட்டும் என்பதே.)
போர்ஷியா: பத்திரத்தில்
மருத்துவரைப் பற்றி இல்லாவிட்டாலும் நல்ல மனதுடன் ஒரு மருத்துவரை ஏற்பாடு
செய்யலாம் இல்லையா? வர்த்தகரே! நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டியதிருக்கிறதா?
அண்டோனியோ ; நான்
பேசுவதற்கு அதிகம் இல்லை. (பசானியோவின் கைகளைப் பிடித்துக் கொண்டு) எனக்காக
வருத்தப்படாதே! உனக்காக நான் விதியின் கரங்களில் விழுந்து விட்டேன். சில
சமயங்களில் ஒரு செல்வந்தன் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் இழந்து, பிறகு உடல்
மெலிந்து, கண்கள் குழி விழுந்து, அவனைப் பரிதாபமாக அதிர்ஷ்டம் நிற்கச் செய்து விடும். நல்ல வேளை,
எனக்கு அந்த சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல் அதிர்ஷ்டம் என் உயிரை எடுக்கப் போகிறது. நான்
இறந்த பின்பு நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பை உன் இனிய மனைவியிடம் சொல்லு.
என்னுடைய பரிதாபமான முடிவையும், நம் இருவருடைய நட்பைப் பற்றியும் சொல்லு. நல்ல
நண்பனை இழப்பதற்காக நீ வருத்தப்படலாம், ஆனால் உனக்காக நான் பண்ணப் போகிற
தியாகத்திற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. .
பசானியோ, பிரிய அண்டோனியோ!
நான் மணமானவன்தான். என் மனைவியை நான் என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். ஆனால்
என் மனைவி, என் உயிர், இந்த உலகம் எல்லாவற்றையும் தியாகம் பண்ணியாவது இந்த
அரக்கனிடமிருந்து உன் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறேன்'
இதைக் கேட்ட போர்ஷியா
பசானியோவிடம் (குறும்பாக), ' உங்கள் மனைவி இங்கிருந்தால் நீங்கள் சொல்வதைக் கேட்டு
மகிழ்ச்சி அடைந்திருப்பாள்.
கிராஷியோனா: எனக்கு ஒரு
மனைவி இருக்கிறாள், அவள் சொர்க்கத்திலிருந்தாவது ஏதாவது ஒரு மந்திரம் சொல்லி இந்த
யூதனுடைய கொடிய மனதை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
அந்தநேரத்தில் உதவியாளராக
எழுதிக் கொண்டிருக்கும் நெரிஸ்ஸா (கேலியாக), ' நல்ல வேளை! உங்கள் மனைவி இங்கில்லை.
நீங்கள் பேசுவதைக் கேட்டால் நாளை உங்கள் வீடு ரணகளம்தான்' என்கிறாள்.
ஷைலக், 'இது போலத்தான்
கிறிஸ்துவ கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை நடத்துகிறார்கள். ஒரு கிறிஸ்துவனைத்
திருமணம் செய்வதை விட என்னுடைய ஒரே மகள் ஒரு கொலைகாரனைத்
திருமணம் செய்ய நான் அனுமதி
கொடுத்திருப்பேன். நேரம் கடந்து கொண்டிருக்கிறது, தீர்ப்பை உடனே சொல்லுங்கள்' .
பழி வாங்கும் விழிகளோடு அண்டோனியோவைப்
பார்த்துக் கொண்டே ஷைலக் நீண்ட கத்தியைத் தீட்டுகிறான்.
போர்ஷியா நீதிபதியிடம்
சென்று ஏதோ இரகசியமாகப் பேசுகிறாள்.
பிறகு, போர்ஷியா,: ஷைலக் வாருங்கள்!,
அண்டோனியோவின் ஒரு பவுண்டு சதை உங்களுடையது. பத்திரத்தின் எழுதியுள்ளது போல ஒரு
பவுண்டு சதை மட்டும் நீங்கள் வைத்திருக்கும் கத்தியால் அண்டோனியோவின் நெஞ்சுப்
பகுதியிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளலாம். வெனிஸ் நகர சட்டம் இதை அனுமதிக்கிறது;
இந்த நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. .
ஷைலக்,: ' ஆஹா! இதுதான் அற்புதமான
தீர்ப்பு!. அண்டோனியோ, வா! தயாராக என் முன்னே வா, இந்தக் கூர்மையான கத்தியால் உன்
உடலிலிருந்து ஒரு பவுண்டு சதையை வெட்டி எடுக்கிறேன்.
இப்போது போர்ஷியா, “பொறுங்கள்
யூதரே! தராசு தயாராக இருக்கிறதல்லவா? சதையை எடை போடும் போது தராசின் முள் ஒரு
மயிரிழை கூட அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ சாயக் கூடாது, அது போல ஒரு துளி இரத்தம்
கூட சிந்தக் கூடாது. ஏனென்றால் பத்திரத்தில் ஒரு பவுண்டு சதை எடுத்துக் கொள்ளலாம்
என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, ஒரு பவுண்டுக்கு மேல் அதிக சதையோ,
இரத்தமோ எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்படவில்லை கிறிஸ்துவனுடைய ஒரு துளி
இரத்தம் சிந்தினால் கூட உங்களுடைய சொத்துக்கள் முழுவதும் வெனிஸ் நகர சட்டப்படி
பறிமுதல் செய்யப்படும்.. .
இப்போது நீதி மன்றத்தில் உள்ள
எல்லோரும் “ஆஹா! இதுதான் நியாயமான தீர்ப்பு. யூதனே! தீர்ப்பை நீ கேட்டாயா? என்கிறார்கள்.
ஷைலக்:(ஏமாற்றத்துடன்) இது
தான் தீர்ப்பா? இது தான் முடிவான தீர்ப்பா?
தன்னுடைய குரூரமான எண்ணம் நிறை
வேற வில்லையே என்று அதிர்ச்சியடைகிறான்.
போர்ஷியா: ஷைலக்! நீங்களே
வந்து சட்டப் புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளலாம். வேகமாக தீர்ப்பு வேண்டும் என்று
கேட்டீர்கள். எதிர்பார்த்தை விட விரைவாக தீர்ப்பு கிடைத்து விட்டது.
உடனே ஷைலக், ‘சரி!, நான் மூன்று
மடங்கு பணம் பெற்றுக் கொள்கிறேன். இந்த கிறிஸ்துவனை விட்டு விடுகிறேன்.
பசானியோ ,” ஷைலக்! இதோ
பணம். எடுத்துக் கொள்.
போர்ஷியா குறுக்கிட்டு
பசானியோவைத் தடுக்கிறாள். '
போர்ஷியா: “இந்த யூதனுடைய
பத்திரம் காலாவதியாகி விட்டபடியால், அபராதமாக அண்டோனியோவிடமிருந்து ஒரு பவுண்டு
சதைதான் இவருக்குக் கிடைக்கும், ஷைலக்!, நினைவிருக்கட்டும்! ஒரு பவுண்டு சதை
மட்டும்தான் நீங்கள் வெட்டி எடுக்க வேண்டும், தராசில் நிறுக்கும் போது ஒரு மயிரிழை
அதிகமிருந்தாலும், இரத்தம் சிந்தினாலும் வெனிஸ் நகர சட்டப்படி நீங்கள் உயிர் இழக்க
வேண்டியதிருக்கும்; தவிர உங்களுடைய சொத்துக்கள் முழுவதும் அரசாங்கத்தால் பறிமுதல்
செய்யப்படும்.
கிராஷியானோ: நல்ல தீர்ப்பு;
வானத்திலிருந்து வந்த தீர்ப்பு! இப்போது யூதனே, நீ என்னிடம் மாட்டிக் கொண்டாய்!
போர்ஷியா: ஏன் யூதரே தாமதம்
செய்கின்றீர்கள்? உங்கள் விருப்பப்படி தண்டனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
திகைப்படைந்த ஷைலக் 'எனக்கு
வர வேண்டிய அசல் பணத்தை மட்டும் கொடுங்கள். என்னைப் போக விடுங்கள்.
மீண்டும் பசானியோ பணம்
கொடுக்க, ஷைலக் வாங்க முயலுகிறான்.
போர்ஷியா தடுக்கிறாள்,
போர்ஷியா: “ஷைலக் ஏற்கனவே
இந்த நீதி மன்றத்தில் எல்லோருடைய முன்னிலையிலும் பணம் வாங்க மறுத்து விட்டார்.
தண்டனையை மட்டும் தான் அவரால் நிறைவேற்ற முடியும்
ஷைலக்: என்னுடைய அசல் தொகை
மட்டுமாவது கிடைக்காதா?
போர்ஷியா: அண்டோனியோவினுடைய
ஒரு பவுண்டு சதையைத் தவிர வேறு எதுவும் தங்களுக்குக் கிடைக்காது.
ஷைலக்: அந்த சதையை ஏதாவது
ஒரு பேய் எடுத்துக் கொள்ளட்டும்; நான் இனி இங்கு தங்கியிருக்கப் போவதில்லை.
போர்ஷியா: யூதரே!. சட்டம்
உங்களை அவ்வளவு எளிதாக விடாது; வெனிஸ் நகர சட்டப்படி ஒரு கிறிஸ்துவனுடைய உயிரைப்
பறிக்க நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சதி செய்ததால் உங்களுடைய சொத்துக்களில்
பாதி, யார் மேல் நீங்கள் வழக்கு போட்டீர்களோ அவர்களுக்குச் சேரும்; மறுபாதி வெனிஸ்
நகர அரசுக்குச் சேரும். அண்டோனியோவினுடைய உயிரைப் பறிக்க நீங்கள் சதி செய்ததால் உங்கள்
உயிரும் இப்போது நீதிபதியினுடைய கருணையில் இருக்கிறது. நீதிபதியின் முன்பு
மண்டியிட்டு மன்னிப்பு கேளுங்கள்..
கிராஷியானோ: யூதனே! உன்னை
நீயே தூக்கில் போட்டுக் கொள்ள அனுமதி கிடைக்கும். தூக்குக் கயிறு வாங்க பணம் இல்லை
என்பதால் நீ அரசு செலவிலேயே தூக்கில் தொங்கி மரணமடையலாம்.
நீதிபதி ஷைலக்கை நோக்கி, '
ஷைலக், நீ மன்னிப்பு கேட்கும் முன்பே உன்னை நான் மன்னிக்கிறேன். இதுதான் ஒரு
கிறிஸ்துவனுடைய பண்பு. உன்னுடைய சொத்துக்களில் ஒரு பாதி அண்டோனியோவுக்கும். மறு
பாதி இந்த அரசாங்கத்துக்கும் சேர்கின்றன.
ஷைலக்: என் உயிரை எடுத்துக்
கொள்ளுங்கள். என்னுடைய வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை எல்லாம் இடித்து
விடுங்கள். நான் வாழ்வதற்கு இடமில்லை என்கிறபோது என் உயிரையும் எடுத்து விடுங்கள்.
போர்ஷியா: இந்த யூதருக்கு
எந்தவிதத்தில் கருணை காட்டலாம், அண்டோனியோ?
அண்டோனியோ: மரியாதைக்கு
உரிய நீதிபதிமுன்பும், இந்த நீதி மன்றத்தில் இருக்கும் அத்தனை பேர் முன்னிலையிலும்
சொல்கிறேன். ஷைலக்கின் ஒரு பாதி சொத்துக்கள் அரசுக்குச் சேரட்டும். ஆனால் எனக்கு
வரும் ஒரு பாதி சொத்துக்களை, ஷைலக் ஒப்புக்கொண்டால், ஷைலக்கின் மகள் ஜெஸ்ஸிக்காவுக்குத்
தருகிறேன். (ஷைலக்கின் மகள் பசானியோவின் நண்பனாகிய கிறிஸ்துவன் லொரென்சோவைக்
காதலித்ததாலும், வெனிஸ் நகரை விட்டு வெளியேறியதாலும், ஷைலக் தன் மகளை தன் வாரிசு
உரிமையிலிருந்து விலக்கி வைத்திருந்தான்). ஆனால், அதற்கு இரண்டு நிபந்தனைகள்
உண்டு. முதலாவது ஷைலக் கிறிஸ்துவனாக இப்போதே மாற வேண்டும்; இரண்டாவது ஷைலக் இறந்த
பின்பு இப்போது எனக்கு வரும் ஷைலக்கின் பாதி சொத்துக்கள் ஷைலக்கின் மருமகன்
லொரென்சோவுக்கும் மகள் ஜெஸ்ஸிக்காவுக்கும் சேர வேண்டும்; இப்போதே ஷைலக்
பத்திரங்களில் கையெழுத்திட வேண்டும்.
நீதிபதி: ஷைலக்
இவற்றையெல்லாம் உடனே செய்வார்; இல்லை என்றால் சற்று நேரத்திற்கு முன் நான்
ஷைலக்குக்கு கொடுத்த மன்னிப்பை ரத்து செய்து விடுவேன்.
போர்ஷியா: உங்களுக்கு
திருப்துதானே யூதரே?
ஷைலக்: (மிகவும்
சோகத்துடன்) எனக்கு திருப்திதான்.
போர்ஷியா: உதவியாளரே,
பத்திரங்களை தயார் செய்யுங்கள்.
ஷைலக்: இங்கிருந்து நான் என்னுடைய
வீட்டுக்குப் போக அனுமதி கொடுங்கள். எனக்கு உடல்
நலமில்லை. பத்திரங்களை அனுப்புங்கள்; நான் கையெழுத்திடுகிறேன்.
நீதிபதி ஷைலக் செல்ல அனுமதிக்கிறார்.
நீதிபதி ஆண் உடையில் உள்ள போர்ஷியாவின் அறிவுத் திறனைப் பாராட்டிப் பேசுகிறார். மரியாதை
நிமித்தம் இரவு விருந்துக்கு அழைக்கிறார். பசானியோவுக்கு முன்பு, பெல்மாண்ட் செல்ல
விரும்புவதால், போர்ஷியா பணிவுடன் மறுக்கிறாள்.
நீதி மன்றம் கலைந்தது என்று நீதிபதி சொல்லி விட்டு செல்கிறார்.
பசானியோ போர்ஷியாவிடம், ' உங்களுடைய
அறிவுத் திறமையும், அற்புதமாக வாதிடும் திறமையும்தான் என் நண்பனுடைய உயிரைக்
காப்பாற்றியது; எனவே இந்த 3000 டக்கட்ஸ் பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
என்கிறான். அண்டோனியோவும் 'வாழ்க்கை முழுவதும் நாங்கள்
இருவரும் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம் என்கிறான்.
போர்ஷியா: “மனம் முழு
திருப்தி அடைவதே நிறைய பணம் பெற்றதற்குச் சமம். உங்கள் இருவருக்கும் நான் செய்த
உதவி எனக்கு மிகவும் திருப்தியாக இருப்பதால் எனக்குப் பணம் கிடைத்த மகிழ்ச்சி
இருக்கிறது. உங்களிடமிருந்து நான் பணம் பெற விரும்பவில்லை; என் மனது எப்போதுமே
அதிகம் பணம் வேண்டும் பொருள் வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. நீங்கள் இருவரும் என்னை
மறக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்! நான் விடை பெறுகிறேன்”.
பசானியோ: எங்கள் நினைவாக
நீங்கள் ஏதாவது பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் எங்களுடைய கோரிக்கையை
மறுக்கக் கூடாது. தங்களைக் கட்டாயப்படுத்துவதற்காக என்னை மன்னிக்கவும்.
பசானியோ வற்புறுத்துவதால், போர்ஷியா
பசானியோவுடைய கையுறையைக் கேட்கிறாள். கையுறையைக் கழட்டும் போது பசானியோவின்
விரலில் உள்ள மோதிரத்தைப் பார்க்கிறாள். (அந்த மோதிரம் திருமணத்தன்று போர்ஷியா பசானியோவுக்குப்
பரிசாகக் கொடுத்தது; எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் மோதிரத்தை
யாருக்கும் கொடுப்பதில்லை என்று பசானியோ வாக்குறுதி கொடுத்திருந்தான்.) புன்னகையுடன்
போர்ஷியா அந்த மோதிரத்தைக் கேட்கிறாள்.
பாசானியோ, “இந்த வெனிஸ்
நகரத்திலுள்ள அத்தனை நகைக் கடைகளிலும் விசாரித்து, மிகவும் விலை உயர்ந்த மோதிரம் ஒன்று
வாங்கித் தருகிறேன்; இந்த மோதிரத்தை மட்டும் கேட்காதீர்கள்”
போர்ஷியா: சரிதான்! நான்
தங்களிடம் பரிசு கேட்டது தவறுதான்! இந்த மோதிரம் தான் வேண்டும் என்று என் மனது
சொல்கிறது. இந்த மோதிரம் இல்லை என்றால் எனக்கு வேறு ஒன்றுமே வேண்டாம்.
பசானியோ: இந்த மோதிரம் என்
மனைவி என்னிடம் கொடுக்கும் போது, எந்தக் காரணத்தைக் கொண்டும் மோதிரத்தை யாருக்கும்
கொடுக்கவோ விற்கவோ, தொலைக்கவோ கூடாது என்று சொல்லியிருக்கிறாள்.
போர்ஷியா: பரிசு
கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே இது போல் காரணங்களை சொல்லுவதே ஆண்களுக்கு வழக்கமாகி
விட்டது. நான் உங்களுக்கு செய்த உதவிக்கு இந்த மோதிரம் பெற எல்லா தகுதியும் எனக்கு
உண்டு என்று உங்கள் மனைவியே சொல்வாள்; நிச்சயமாகக் கோபப்பட மாட்டாள். சரி, நாங்கள்
வருகிறோம் .என்று சொல்லிவிட்டு போர்ஷியாவும், நெரிஸ்ஸாவும் செல்கிறார்கள்.
அண்டோனியோ: பசானியோ!
உன்னுடைய மனைவியின் வருத்தத்தை விட மிகவும் திறமையாக வாதிட்டு என் உயிரைக்
காப்பாற்றியதற்காக அந்த வழக்கறிஞருக்கு உன் மோதிரத்தைக் கொடுப்பது தவறாகாது.
உடனே பசானியோ தன்னுடைய
நண்பன் கிராஷியானோவிடம் தனது மோதிரத்தைக் கொடுத்து, அந்த வழக்கறிஞர் பின்னே ஓடிப்
போய் மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கச்
சொல்கிறான். வழக்கறிஞரை இன்று இரவு விருந்துக்கு அண்டோனியோ வீட்டிற்கு நாங்கள்
அழைத்ததாகவும் கூறச் சொல்லுகிறான். .
(அண்டோனியோவிடம்) இன்று
இரவு உன்னுடைய வீட்டில் தங்கி விட்டு நாளைக் காலை நாம் இருவரும் பெல்மான்ட்
செல்லலாம் என்கிறான்.
போர்ஷியா நெரிஸ்ஸாவிடம்
ஷைலக்கின் வீடு எங்கேயிருக்கிறது என்று விசாரித்து, அங்கு சென்று அவரிடம் இந்த
பத்திரங்களில் கையெழுத்து வாங்க வேண்டும் என்கிறாள். கிராஷியானோ போர்ஷியாவிடம்
பசானியோ கொடுத்து அனுப்பிய மோதிரத்தைக் கொடுக்கிறான். இரவு விருந்துக்கும்
அழைக்கிறான். போர்ஷியா மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவிக்கிறாள். இரவு
விருந்துக்கு வர இயலாது என்கிறாள்.
நெரிஸ்ஸா போர்ஷியாவிடம் நான் இப்போது என் கணவரிடம் நான் கொடுத்த
மோதிரத்தைக் கேட்கப் போகிறேன் என்கிறாள்.
நெரிஸ்ஸாவும் தான் கிராஷியானோவிடம்
கொடுத்த மோதிரத்தை அன்பளிப்பாகக் கேட்கிறாள். கிராஷியானோவும் தனது மோதிரத்தைக்
கழட்டி நெரிஸ்ஸாவிடம் கொடுக்கிறான். போர்ஷியாவும், நெரிஸ்ஸாவும் ரகசியமாக சிரித்துக் கொள்கிறார்கள்; யாரோ இரு பெண்களுக்கு மோதிரத்தைக் கொடுத்து
விட்டதாகச் சொல்லி பசானியோவையும், கிராஷியானோ வையும் பெல்மான்ட் சென்றதும் கலாட்டா
செய்ய போர்ஷியாவும் நெரிஸ்ஸாவும் தீர்மானிக்கிறார்கள்.
போர்ஷியா, நமது கணவர்கள்
வருவதற்கு ஒரு நாள் முன்பாக அதாவது இன்று
இரவே நாம் இருவரும் பெல்மான்ட் சென்று விட வேண்டும். அண்டோனியோவால் கிடைக்கும்
ஷைலக்கின் சொத்துக்கள் அடங்கிய இந்தப் பத்திரம் லொரென்ஸோவுக்கும் ஜெஸ்ஸிக்காவுக்கும்
நல்ல பரிசாக இருக்கும் .
போர்ஷியா கிராஷியானோவிடம் ஷைலக்கின்
வீட்டை தன் உதவியாளருக்குக் காட்டச் சொல்கிறாள்..
போர்ஷியாவும், நெரிஸ்ஸாவும்
நல்லதொரு காரியம் செய்து முடித்த திருப்தியில், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்
பெல்மாண்ட் செல்கிறார்கள்.
பெல்மான்ட்:.
போர்ஷியா: “‘நெரிஸ்ஸா!, என்னுடைய
அறையில் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை அள்ளி வீசுகிறது ஆனால் மேகத்திற்குப்
பின்னால் மறைந்திருக்கும் அந்த நிலவு எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது. நிலவின் பிரமாண்டமான
ஒளியின் பிரகாசத்தில் மெழுகுவர்த்தியின் சிறிய ஒளியானது தனது முக்கியத்துவத்தை
இழந்து விடுகிறது. அது போல ஒரு மன்னனாக நடிப்பவன், உண்மையான மன்னன் வந்தவுடன்
தன்னுடைய மதிப்பு, மரியாதைகளை இழக்கிறான். சிறிய ஓடையானது பெரிய நதிகளில் கலந்து
விடுகிறது. தீயவர்கள் நிறைந்த இந்த உலகத்தில்
நாம்
இருவரும் மிகவும் ஒரு நல்ல
காரியம் செய்து விட்டு வந்திருக்கிறோம். நாம் இப்போது கேட்கும் இசை மிகவும்
இனிமையாக இருக்கிறது”
நெரிஸ்ஸா: “சீமாட்டி
அவர்களே1 தங்கள் மாளிகையில் உள்ள கலைஞர்கள் தான் இந்த இசையை மீட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.”
போர்சியா: “உண்மைதான்!. இசை
இனிமையாய் இருப்பதற்குக் காரணமே சூழ்நிலையும், தகுந்த நேரமும்தான். இரவின்
அமைதியில் பாடும் பறவையின் குரல் மிகவும் இனிமையானது. அதே பறவை பகலில் மற்ற
பறவைகளோடு சேர்ந்து பாடினால் நிச்சயம் அதன் குரலில் இனிமை இருக்காது. போதும்,
இசையை நிறுத்துங்கள். நிலவென்னும் மங்கை தன் காதலனுடன் நிம்மதியாகத் தூங்கட்டும்.
லொரென்சோவிடம்,
பசானியோவும், கிராஷியானோவும் வந்து விட்டார்களா என்று போர்ஷியா கேட்கிறாள்.
அவர்கள் இருவரும் இன்னும் வரவில்லை என்று லொரென்சோ சொல்கிறான். ஆனால் அவர்கள்
இருவரும் வந்து கொண்டிருப்பதாக ஒரு வேலையாள் இப்போது சொல்லி விட்டுச் சென்றதாகவும்
சொல்கிறான்.
தாங்கள் இருவரும் மாளிகையை
விட்டு வெளியே, அதாவது வெனிஸ் நகரம் சென்று வந்தது இந்த மாளிகையில் உள்ள
யாருக்குமே தெரியக் கூடாது என்று
வேலையாட்கள் உட்பட எல்லோரிடமும் கூறச் சொல்லி நெரிஸ்ஸாவிடம் போர்ஷியா
சொல்கிறாள். லொரென்சோ, ஜெஸ்ஸிக்கா நீங்கள் இருவரும் கூட யாரிடமும் சொல்லக் கூடாது
என்றும் போர்ஷியா சொல்கிறாள்.
பிறகு, போர்ஷியாவும்,
நெரிஸ்ஸாவும் தங்கள் அறைகளுக்குச் சென்று ஆணுடைகளைக் களைந்து விட்டு, தங்கள்
பெண்ணுடகளை மாற்றிக் கொண்டு, தங்கள் கணவன்மார்கள் பசானியோவும், கிராஷியானோவும்
வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
பசானியோவும்,
கிராஷியானோவும் வந்தவுடன் பசானியோ போர்ஷியாவையும்
கிராஷியானோ நெரிஸ்ஸாவையும் சந்திக்க செல்கிறார்கள்.
சிறிது நேரத்தில், கிராஷியானோ
நெரிஸ்ஸாவிடம், “வானத்தில் உள்ள நிலவின் மீது சத்தியமாகக் கூறுகிறேன். நீ கொடுத்த
மோதிரத்தை நான் அந்த வழக்கறிஞரின் உதவியாளருக்குத்தான் கொடுத்தேன். சிறிய பையன்
போன்ற தோற்றமும், அனேகமாக உன்னுடைய அளவுடன்தான் அவன் இருந்தான். தான் செய்த
சேவைகளுக்காக அவன் என்னிடம் மோதிரத்தை மிகவும் வேண்டிக் கேட்டான்; என்னால்
சிறிதளவும் மறுக்க முடியவில்லை.
நெரிஸ்ஸா : நான்
அன்பாகக் கொடுத்த மோதிரத்தை யாரோ ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டு என்னிடம் பொய்
சொல்கிறீர்கள். தான் உயிரோடு இருக்கும் அந்த மோதிரத்தைப் பிரிய மாட்டேன் என்று சபதம்
செய்தவர் நீங்கள்! எனக்காக இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த சபதத்திற்காகவாவது அந்த
மோதிரத்தைப் பிரியாமலிருந்திருக்க வேண்டும்; அது உங்கள் கடமையென்று நினைத்திருக்க
வேண்டும்.”
கிராஷியானோவும்
நெரிஸ்ஸாவும் சண்டை போடுவதைப் பார்த்த போர்ஷியா என்ன விஷயம் என்று கேட்.கிறாள். நெரிஸ்ஸா
விவரம் கூறுகிறாள்.
போர்ஷியாவோ, ‘கிராஷியானோ,
நீ தவறு செய்து விட்டாய். உன்னுடைய மனைவி முதன் முதலாக உனக்குக் கொடுத்த பரிசு. அந்த
மோதிரத்தை எந்த சந்தர்ப்பத்திலும் இழக்க மாட்டேன்; யார் கேட்டாலும் கொடுக்க
மாட்டேன் என்று நெரிஸ்ஸாவிடம் வாக்குறுதி அளித்து விட்டு இப்போது யாரோ ஒருவரிடம்
கொடுத்து விட்டாய், அல்லவா? ஆனால் என் கணவர் பசானியோ நான் கொடுத்த மோதிரத்தை எந்த
நேரத்திலும், யார் கேட்டாலும் நிச்சயமாகக் கொடுக்க மாட்டார். அவருடைய சார்பில்
நான் சொல்கிறேன். இந்த உலகத்தில் உள்ள செல்வங்கள் அத்தனையும் கொடுத்தால் கூட அந்த
மோதிரத்தை அவர் இழக்க மாட்டார், இல்லையா, பசானியோ? அப்படி ஏதாவது அவர்
பண்ணியிருந்தால் நான் மிகவும் கோபப்பட வேண்டியிருக்கும்’ என்கிறாள்.
பசானியோ: (தனக்குள்)
ஒரு சண்டையில் என்னுடைய மோதிர விரலை மோதிரத்தோடு இழந்து விட்டேன் என்று சொல்லிவிட
வேண்டியதுதான்.
கிராஷியானோ:
சீமாட்டியே! பசானியோ நீங்கள் கொடுத்த மோதிரத்தை அந்த வழக்கறிஞர் விரும்பிக்
கேட்டதால் கொடுத்து விட்டார்; என்னிடம் அவருடைய உதவியாளர் மிகவும் விரும்பிக் கேட்டதால்
நானும், நெரிஸ்ஸா எனக்குக் கொடுத்த மோதிரத்தைக் கொடுத்து விட்டேன். அவர்கள்
இருவரும் இந்த இரண்டு மோதிரங்கள் தவிர வேறு எந்த பரிசு கொடுத்தாலும் பெற்றுக்
கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.
போர்ஷியா: எந்த
மோதிரத்தைக் கொடுத்தீர்கள் என் அன்பே? நிச்சயம் நான் உங்களுக்குக் கொடுத்த
மோதிரத்தைக் கொடுத்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
பசானியோ: நான் செய்த
தவறை மறைக்க விரும்பினால், நான் அப்படிச் செய்யவில்லை என்று பொய் சொல்லலாம். ஆனால்
அந்த மோதிரம் என் விரலில் இல்லை என்பதை நீயே பார்க்கிறாய். அது போய் விட்டது.
போர்ஷியா: உங்கள்
விரலில் நான் கொடுத்த மோதிரம் இல்லை என்பது உங்கள் இதயத்தில் உண்மை இல்லை என்பதையே
காட்டுகிறது. அந்த மோதிரத்தை நான் பார்க்கும் வரை நான் உங்கள் மனைவி இல்லை என்று
உறுதியாகக் கூறுகிறேன்.
நெரிஸ்ஸா
(கிராஷியானோவிடம்) நான் கொடுத்த மோதிரத்தைப் பார்க்கும் வரை நானும் உங்கள் மனைவி
இல்லை.
பசானியோ
(போர்ஷியாவிடம்), ‘என்னை மன்னித்து விடு, போர்ஷியா!. தன் வாதிடும் திறமையால்
நண்பன் அந்தோனியோவின் உயிரைக் காப்பாற்றிய வழக்கறிஞர், நீ அன்பாகக் கொடுத்த மோதிரத்தை மிகவும்
விரும்பிக் கேட்டார்; நான் வெனிஸ் நகரத்தில் கிடைக்கும் மிக விலையுயர்ந்த மோதிரம்
வாங்கித் தருவதாகச் சொன்னேன். வழக்கறிஞரோ நான் கையில் அணிந்திருக்கும் மோதிரம்தான்
வேண்டும் இல்லையேல் எனக்கு ஒன்றுமே வேண்டாம் என்று சென்று விட்டார். எங்கே நான்
நன்றி கெட்டவனாகி விடுவேனோ என்று நினைத்து, மோதிரத்தை கிராஷியானோ மூலம் அந்த
வழக்கறிஞரிடம் கொடுத்து விட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. கிராஷியானோவும்
வழக்கறிஞரின் உதவியாளர் விரும்பிக் கேட்டதால் நெரிஸ்ஸா தனக்குக் கொடுத்திருந்த
மோதிரத்தைக் கொடுத்து விட்டான். போர்ஷியா, என் இனிய மனைவியே, ஒரு வேளை நீ அங்கு
இருந்திருந்தால் நீயே அந்த மோதிரத்தை என்னிடம் வாங்கி அந்த வழக்கறிஞருக்குக்
கொடுத்திருப்பாய், என்னுடைய இந்த விளக்கம் உன் கோபத்தைக் குறைத்து விடும் என்று
நம்புகிறேன்.
போர்ஷியா: அந்த
மோதிரத்தின் மதிப்பையும், மோதிரத்தைக் கொடுத்த என்னுடைய அன்பையும் நீங்கள் சரியாகப்
புரிந்து கொண்டிருந்தால், அந்த மோதிரத்தை யார் கேட்டாலும் கொடுத்திருக்க
மாட்டீர்கள். அந்த மோதிரத்தின் மதிப்பை நீங்கள் எடுத்துரைத்திருந்தால் சராசரியான
எந்த மனிதனும் பிடிவாதமாகக் கேட்டிருக்க மாட்டான். நெரிஸ்ஸா சொல்வதுதான் சரி!.
நீங்கள் மோதிரத்தை ஒரு பெண்ணுக்குத்தான் கொடுத்திருக்கிறீர்கள் என்று நான்
உறுதியாக நம்புகிறேன்.
பசானியோ: இல்லை.
என்னுடைய மனச்சாட்சிப்படி கூறுகிறேன், நிச்சயம் நான் மோதிரத்தை ஒரு பெண்ணுக்குக்
கொடுக்கவில்லை. ஒரு ஆண் வழக்கறிஞருக்குத்தான் கொடுத்தேன். அவர் 3000 டக்கட்ஸ் பணம்
வேண்டாம், அந்த மோதிரம் தான் வேண்டும் என்றதும் முதலில் நான் மறுத்தேன். என்னுடைய
நண்பனுடைய உயிரை அவர்
காப்பாற்றியிருந்தாலும் கோபமாக செல்லட்டும் என்றுதான் இருந்தேன். அவமானத்தைத் தவிர்க்கவும், மனதில்
தோன்றிய நன்றி உணர்வுக்காகவும், ஒரு மரியாதைக்காகவும்தான் அந்த வழக்கறிஞர் பின்னே
மோதிரத்தைக் கொடுத்து விட்டேன். வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் மேல் ஆணையிட்டுச்
சொல்கிறேன்; அப்போது நீ இருந்திருந்தால், என்னிடமிருந்து மோதிரத்தை வாங்கி நீயே
அந்த வழக்கறிஞருக்குக் கொடுத்திருப்பாய்.
போர்ஷியா: நல்ல வேளை!
அந்த வழக்கறிஞரை இங்கு அழைத்து வரவில்லை; என்னுடைய வைர மோதிரம் அவரிடம்
இருப்பதால், நீங்கள் கொடுத்த மாதிரி, என்னிடம் உள்ள எந்தப் பொருளையும் அவர்
கேட்டால் நான் மறுக்க மாட்டேன். நானும் கொடுத்திருப்பேன்.
நெரிஸ்ஸா: அது போல
நானும் அந்த உதவியாளருக்கு கேட்டதெல்லாம்
கொடுத்திருப்பேன்.
பசானியோ: போர்ஷியா,
தவிர்க்க முடியாமல் நான் செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடு! உன்னுடைய அழகான இரு
விழிகளில் தெரியும் என்னுடைய உருவங்களில் மேல் ஆணையாக இங்கிருக்கும் எல்லோர்
முன்பும் சொல்கிறேன்.
போர்ஷியா: எல்லோரும்
கேளுங்கள்! என்னுடைய இரு விழிகளிலும் பசானியோவின் இரண்டு உருவங்கள் தெரிவதால்,
இரட்டை வேடமிடுகிறார்; நாம் இந்த ஆணையை நம்பலாமா?
பசானியோ: என்னுடைய
மனச் சாட்சிப்படி சொல்கிறேன்; இனிமேல் நான் உனக்கு கொடுக்கும் எந்த
வாக்குறுதியையும் மீற மாட்டேன்.
அண்டோனியோ, போர்ஷியா! ‘என்னால்தான்
உங்களுக்கிடையே சண்டை வந்து விட்டது. அன்று நண்பன் பசானியோவிற்காக என் உடலையும்
உயிரையும் தருவதாக இருந்தேன். எனக்காகத்தான், என் உயிரைக் காப்பாற்றியதற்காகத்தான்
உன் கணவன் பசானியோ நீ அன்பாகக் கொடுத்த மோதிரத்தை இழந்து உனக்குக் கொடுத்த
வாக்குறுதியையும் காப்பாற்ற முடியாமல் நிற்கிறான். நான் இப்போது பசானியோவிற்காக
பொறுப்பேற்றுக் கொள்கிறேன். உன்னுடைய கணவன் இனி உனக்குக் கொடுக்கும் எந்த வாக்குறுதியையும்
மீற மாட்டான்.
போர்ஷியா:,(அந்தோனியோவிடம்)
‘அப்படியென்றால் இதோ, இந்த மோதிரத்தை என் கணவருக்குப் பரிசாகக் கொடுங்கள்! இந்த
மோதிரத்தையாவது அவர் கவனமாகப் பார்ப்பதற்கும், பிரியாமலிருப்பதற்கும் இனி நீங்கள்தான்
பொறுப்பேற்க வேண்டும்’
அண்டோனியோ: இதோ
பசானியோ, இந்த மோதிரத்தை எப்போதும் பத்திரமாக வைத்துக் கொள்!.
பசானியோ மோதிரத்தைப்
பார்த்தவுடன் தான் வழக்கறிஞருக்குப் பரிசளித்த அதே மோதிரம் என்று தெரிந்ததும்
அதிர்ச்சியடைகிறான்’ நெரிஸ்ஸாவும் குறும்புப் பார்வையுடன் கிராஷியானோவிடம்
மோதிரத்தைக் கொடுக்கிறாள்.
போர்ஷியா:
(பசானியோவிடம் சிரித்துக் கொண்டே) இதோ வழக்கறிஞர் பெல்லாரியோவின் கடிதம். அன்பரே! நான்தான் அன்று நீதி மன்றத்திற்கு வந்த
வழக்கறிஞர்; நெரிஸ்ஸாதான் என்னுடைய உதவியாளர் அன்று நீங்கள் வெனிஸ் நகரத்திற்குப் புறப்பட்டவுடன், நானும்
நெரிஸ்ஸாவும் உடனே வெளியே சென்று சற்று நேரத்திற்கு முன்புதான் இங்கு வந்தோம்
என்பதற்கு லொரென்சோதான் சாட்சி!. நாங்கள் இருவரும் அன்று ஆண் உடையில்
வந்திருந்ததால் எங்கள் இருவரையும் உங்கள் இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தன்னுடைய மனைவி
போர்ஷியாதான் தன்னுடைய அறிவாலும், வாதிடும் திறமையாலும் நண்பன் அண்டோனியோவின்
உயிரைக் காப்பற்றியது என்று தெரிந்ததும் பசானியோ மிகவும் மகிழ்ச்சியடைகிறான்.
எப்படியோ தன்னிடம்
வந்த கடிதங்களை போர்ஷியா அண்டோனியோவிடம் கொடுக்கிறாள். அந்தக் கடிதத்தில் புயலில்
சிக்கி கடலில் மூழ்கிவிட்டதாகக் கருதப்பட்ட அண்டோனியோவின் வியாபாரக் கப்பல்கள்
எல்லாம் நல்லபடியாக கரை வந்து சேர்ந்து விட்டன என்று எழுதியிருந்தது.
அண்டோனியோவும்
மற்றவர்களும் மிகவும் மகிழ்ச்சியடை கிறார்கள்.
போர்ஷியா: லொரென்சோ,
ஜெஸ்ஸிக்கா என்னுடைய உதவியாளர் உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல செய்தி
வைத்திருக்கிறார்.
தன்னுடைய
மரணத்திற்குப் பிறகு, சொத்துக்களில் பாதி லொரென்சோவுக்கும் ஜெஸ்ஸிக்காவுக்கும்
சேரும் என்று ஷைலக் எழுதிய பரிசுப் பத்திரத்தை லொரென்சோ ஜெஸ்ஸிக்கா இருவரிடமும் நெரிஸ்ஸா கொடுக்கிறாள்..
கிராஷியானோ(உற்சாகமாக)
நான் உயிரோடிருக்கும் வரை நெரிஸ்ஸாவின் மோதிரத்தைப் பத்திரமாக வைத்திருப்பதை விட
என் வாழ்க்கையில் வேறு வேலை கிடையாது.
அண்டோனியோ உயிர்
பிழைத்தது, அவனுடைய வியாபாரக் கப்பல்கள் பத்திரமாக வந்து சேர்ந்தது, ஆண் உடையில்
வந்திருந்த தங்கள் மனைவிகள் இருவரையும் பசானியோ, கிராஷியானோ அடையாளம் கண்டு
பிடிக்க முடியாமல் ஏமாந்தது, எல்லாவற்றையும் நினைத்து எல்லோரும் சிரித்த சிரிப்பு போர்ஷியாவின்
மாளிகை முழுவதும் எதிரொலித்தது.
Comments
Post a Comment