மன்னிப்பு -- சிறுகதை

                     

         

                மன்னிப்பு 

                       -- சிறுகதை
   

               கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்              
                                                                

                                                                    
                                                                                 
                                                                                  
              
                                              மன்னிப்பு

ராஜசேகர் தான் வழக்கமாகத் தூங்கும் கட்டிலில் கண்களை மூடிப் படுத்திருந்தார். தான் உயிரோடு இருக்கிறோமா அல்லது இறந்து விட்டோமா என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் இன்னும் எத்தனை நாட்கள் உயிரோடிருப்பார் என்பது யாருக்கும் தெரியவில்லை. உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வருவதும், அவர்கள் பேசுவதும் அவருக்கு நன்றாகக் கேட்கிறது. ஆனால் கண்களைத் திறந்து பார்க்கவோ, பேசவோ ராஜசேகரால் முடியவில்லை.

இப்போது டாக்டர் வருகிறார்; என் மனைவி லலிதாவிடம் ஏதோ சொல்லுகிறார். எதுவும் சரியாகக் கேட்கவில்லை, ஒன்றும் புரியவும் இல்லை. ஒருவேளை தான் உயிரோடிருந்தால் இன்னும் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரம் உயிரோடிருப்போம் என்றும் ராஜசேகருக்குத் தெரியவில்லை.

ஆனால் ராஜசேகர் மனது மட்டும் முழுமையாக விழித்துக் கொண்டிருக் கிறது. மனம் என்னவெல்லாமோ நினைத்துப் பார்க்கிறது. ராஜசேகர் வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால் செல்லப் பிள்ளையாகவே வளர்ந் தார். தனக்கு விவரம் தெரிந்த நாள் எப்போது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறார்.

சின்ன வயதில் ராஜசேகருடைய பெரியப்பா இவருக்கு வீட்டிலேயே பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். தமிழ் மற்றும் கணக்குப் பாடங்கள் தவிர கடிகாரத்தில் மணி பார்ப்பது, நான்கு திசைகள் அறிவது போன்ற பொது அறிவு விஷயங்களையும் வீட்டிலேயே தன்னுடைய பெரியப்பா மூலம் கற்றுக் கொண்டார். ஓன்றாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக இரண்டாம் வகுப்பில் அவர் பெரியப்பா சேர்த்து விட்டார். தினம் பள்ளிக் கூடத்துக்கு பெரியப்பா இவரைக் கூட்டிப் போவதும் திரும்ப அழைத்து வருவதும் வழக்கமாக இருந்தது. ராஜசேகருக்கு ஏழு வயதிருக்கும் போது குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் பெரியப்பாவை பிரிய நேரிட்டது. 

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு நாள் இவர் பெரியப்பாவை சந்தித்த போது, பெரியப்பா இவரை, “ நல்ல படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; எல்லா சந்தர்ப்பங்களிலும்  வாழ்க்கையில் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்” என்றார். அதன் பின்பு பெரியப்பாவை இவர் சந்திக்கவே இல்லை. பெரியப்பா இறந்த செய்தி பல நாட்கள் கழித்து அறிந்த போது ராஜசேகரால் அழ மட்டும் தான் முடிந்தது.

இதோ இப்போது ராஜசேகரின் உடன் பிறந்த மூத்த சகோதரியும், அவள் கணவரும் வந்திருப்பதும், அவர்கள் இருவரும் ராஜசேகரின் மனைவி யிடம் பேசுவதும் கேட்கிறது. என்ன பேசுகிறார்கள்? “ எத்தனை நாட்களாக இப்படி நினைவில்லாமல் இருக்கிறான்? டாக்டர் வந்து பார்த்தாரா? டாக்டர் என்ன சொன்னார்? ராஜசேகரின் மனைவி என்னவோ பதில் சொல்கிறாள். இவருக்கு ஒன்றும் சரியாகக் கேட்கவில்லை.


ராஜசேகரிடம் அவருடைய சகோதரி மிகவும் பிரியமாக இருந்தாள். சகோதரியின் கணவரும் கூடத்தான் இவர் மேலே பிரியம் கொண்டிருந்தார். இவர் கல்லூரியில் படிப்பதற்கு இவருடைய தந்தையிடம் சிபாரிசு செய்தார். அவர் ஒவ்வொரு தமிழ் மாதக் கடைசி வெள்ளிக் கிழமை திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந் தார். அன்று ராஜசேகருக்கு சகோதரி வீட்டில்தான் வெல்லப் பாயாசத்துடன் நல்ல சாப்பாடு. அது போல இவருடைய உறவினர் யார் வீட்டிற்குச் சென்றாலும், இவருக்கென்று ஸ்பெஷல் சாப்பாடுதான். ஏனென்றால் உறவினர்கள் எல்லோருக்கும் இவர் செல்லப்பிள்ளை.

கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டி கவிதைப் போட்டிகளில் இவரைக் கேட்காமலேயே இவருடைய நண்பர்கள் இவருடைய பெயரைக் கொடுத்து விடுவார்கள். எல்லாவிதமான போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவதுண்டு. எல்லோருடைய வாழ்க்கையைப் போல இவருடைய வாழ்க்கையிலும் காதல் வந்தது; போனது. காதல் ஏன் வந்தது காதல் ஏன்  போனது என்பது இன்று வரை  இவருக்குப் புரியவில்லை.

கல்லூரியில் படிக்கும் போதும், பின்னாட்களில் வங்கியில் பணி புரியும் போதும் ராஜசேகருக்குக் கிடைத்த நண்பர்கள் போல வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. எல்லா நண்பர்களும் இவரை விரும்புவதும் இவரை இவர் வீட்டிற்கு வந்து சந்திப்பதும், சினிமா மற்றும் கோயிலுக்குச் செல்வதும் வழக்கம். அரசியல், சினிமா மற்றும் தமிழ் இலக்கியம் பற்றி இவரும் இவருடைய நண்பர்களும் ஆராய்ச்சி செய்த அளவு அந்தக் காலத்தில் வேறு யாரும் பண்ணியிருக்க மாட்டார்கள். நண்பர்களுடன் ஒவ்வொரு ஆண்டும் சீசன் தவறாமல் திருநெல்வேலியிலிருந்து குற்றாலம் செல்வதும், ஆனந்தமாக குற்றால அருவியில் குளிப்பதும் உண்டு.

இதோ கல்லூரி நண்பர்கள் இருவர்கள் வந்திருக்கிறார்கள். ராஜசேகரின் மனைவியிடம் ஏதோ கேட்கிறார்கள். ஆனால் தன்னிடம் வந்து ஏன் பேசவில்லை.  ஒரு வேளை அவர்கள் பேசினால் நானும் பேச முயற்சியாவது பண்ணுவேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் என் உயிர் நண்பர்    களாயிற்றே! இதோ அருகில் நிற்கும் கண்ணனைப் பார்த்துத்தான்  நான் கவிதை எழுதக் கற்றுக் கொண்டேன். உடன் வந்திருக்கும் நண்பர் சுந்தரத்தைப் பார்த்துத்தான் மேடைப் பேச்சைக் கற்றுக் கொண்டேன். கண்ணன் என் பக்கத்தில் வந்து ஒரு கவிதை சொல்ல மாட்டானா  என்று ஏங்குகிறேன். நண்பர்கள் இருவரும் பால்ய கால நினைவுகளைப் பற்றிப் பேச மாட்டார்களா என்றும் நினைக்கிறேன். நான் நினைப்பது இங்கு யாருக்குமே தெரியவில்லை. உண்மையில் நான் இறந்துதான் விட்டேனா? கடவுளே, ஒன்று நான் உடனே இறந்துவிட வேண்டும் அல்லது உயிர் பிழைத்து எழுந்துவிட வேண்டும். இந்த நிலை தொடர வேண்டாம். என்று ராஜசேகர் நினைத்தார்.

ராஜசேகர் திருமணத்திற்குப் பெண் பார்க்கும் ஏற்பாடுகள் ஆரம்பித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகவும் பெண் பார்க்கும் வேலை நடந்தது. அந்தக் காலத்தில் மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்கவோ, பெண் மாப்பிள்ளையைப்  பார்க்கவோ  அனுமதி  கிடையாதுஎனவே ராஜசேகர்  “எந்தப் பெண் உங்கள் எல்லோருக்கும் முழு திருப்தியாக இருக்கிறதோ, அந்தப் பெண்தான் எனக்கு மனைவிஎன்று சொல்லிவிட்டார். திருமண நாளன்றுதான் பெண்ணைப் பார்த்தார். பார்த்த உடனே பிடித்து விட்டது. கடவுளுக்கு மனதார நன்றி சொன்னார். அன்று முதல் இவர் மனைவி லலிதாதான் இவரையும், இவருடைய வயதான பெற்றோர்களையும் மிகவும் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டாள். நல்ல மனதும், குணமும் அழகும் வாய்ந்த பெண்மணி அவள். வீட்டையும், குழந்தைகளையும் மனைவி லலிதா பார்த்துக் கொண்டதால் ராஜசேகர் வங்கியில் சிறப்பாக வேலை பார்த்து வெற்றிகரமான மேலாளராக பணிபுரிந்தார். அதனால் இவருக்கு உத்தியோக உயர்வுடன் கார் மற்றும் .சி. வசதிகள் வங்கியில் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் இவர் மனைவிதான் காரணம் என்பது உண்மை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவிஞர் கண்ணதாசன் எழுதியது உண்மை என்பதை ராஜசேகர் தன் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறார்.

இப்போது ராஜசேகருடன் வங்கியில் பணி புரிந்த நண்பர் முத்தையா தன்னுடைய குடும்பத்துடன் வந்திருக்கிறார். நண்பர் முத்தையாவின் மனைவிக்கு இவர் அண்ணன், நண்பரின் குழந்தைகளுக்கு இவர் அங்கிள், நண்பரின் பேரக் குழந்தைகளுக்கு இவர் தாத்தா. அந்தளவு நண்பர் முத்தையா நெருங்கிய குடும்ப நண்பர். நண்பருடனும் அவரது குடும்பத்தினருடனும் பேச மனம் துடிக்கிறது. ஆனால் பேச்சு வர மாட்டேன்கிறதே. கண்களில் கண்ணீர் வடிவதாக எல்லோரும் சொல்வது ராஜசேகரின் காதில் விழுகிறது. எப்போது கண் விழிப்பேன் என்று ராஜசேகரின் மனம் ஏங்குகிறது

ஒரு நாள் ராஜசேகர் வங்கியிலிருந்து பணி ஓய்வு பெற்று வந்தார். மனைவி மற்றும் எல்லோருமே “ நல்ல வேளை, பென்ஷன் விரும்பிக் கேட்டிருந்தீர்கள், மாதா மாதம் வங்கியிலிருந்து சம்பளம் போல ஒரு தொகை வரும்” என்று மகிழ்ச்சியோடு சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறார். ஒரு வேளை பென்ஷன் இல்லை என்றால் வீட்டில் யாரும் மதிக்க மாட்டார்களோ? என்னவோ? எப்படியோ கடைசிவரை பென்ஷன் வந்து விட்டது, தன் மதிப்பும் காப்பாற்றப்பட்டது என்று நினைத்தார். தான் 30 வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்த, தன்னுடைய குடும்பத்தை வாழவைத்த வங்கியை நன்றியோடு நினைத்துக் கொண்டார். வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு பல நிறுவனங்களிலும் மீண்டும் பணி செய்ய அழைத்தார்கள். ஆனால் அதை இவர் விரும்பவில்லை. ஓய்வு பெற்ற பின்பாவது தன் மனைவிக்காக வாழலாம் என்று முடிவெடுத்தார். ராஜசேகரன் மனைவி லலிதாவுக்கு ஒரே ஆசை இந்தியாவில் உள்ள முக்கியமான கோயில்களுக்கெல்லாம் ஒரு முறை சென்று வர வேண்டும் என்பதே.

வாழ்க்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னையும், பிள்ளைகளயும் மற்றும் வயதான தன்னுடைய பெற்றோர்களையும் மிகவும் அக்கறையாகப் பார்த்துக் கொண்டு, தன்னுடைய இளமைக் காலத்தின் பெரும் பகுதியை தியாகம் செய்த மனைவி லலிதாவுக்கு தான் செய்யும் மிகச் சிறிய கைமாறுதான் நிறைய கோயில்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது என்று நினைத்தார். இந்தியாவில் உள்ள முக்கியமான கோயில்களுக்கும் மற்றும் சுற்றுலா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்.

வட இந்தியாவில் வங்கியில் பணி புரிந்த காலங்களில் மனைவி லலிதாவையும், பிள்ளைகளையும் வட இந்தியாவில் அமைந்துள்ள முக்கிய நகரங்களுக்கு அழைத்துச் சென்று வந்திருக்கிறார். இவையெல்லாம் தன் மனைவி லலிதாவுக்குத் திருப்தியாக இருந்தது என்று நம்பினார். லலிதாவுடன்  உடன் பிறந்த ஒரே சகோதரி கவிதா. லலிதா கவிதா இருவரும் நல்ல தோழிகளைப் போல பழகி வருவதையும், பல சந்தர்ப்பங்களில் மனம் விட்டுப் பேசுவதையும் ராஜசேகர் நினைத்துப் பார்க்கிறார். 

ராஜசேகரின் அண்ணன்களில் மூத்தவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். மற்றொரு அண்ணன் தன் குடும்பத்துடன் வந்திருக்கிறார். தனது உடல் நலமில்லாத போதும் நீண்ட தூரம் பிரயானம் செய்து வந்திருக்கிறார் என்றால் அவருக்கு என் மேல் உள்ள பாசம்தான் காரணம். என்னால் அவரிடம் பேச முடியவில்லையே! கடவுளே இது என்ன சோதனை? இதோ அவர் பேசுவது கேட்கிறது. என்னவென்று சரியாகப் புரியவில்லை.

சிறிது நேரம் கழித்து, உடன் பிறவா சகோதரனான நண்பர் சரவணனும் அவர் மனைவியும் என் அருகே வந்து என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார். “ நான் கூப்பிட்டால் ராஜு ( உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் ராஜு என்றுதான் அழைப்பார்கள்.) நிச்சயமாக கண்ணைத்
திறந்து  பார்ப்பான்” என்று சரவணன் சொல்வது காதில் நன்றாகக் கேட்கிறது. உயிர் நண்பனின் நம்பிக்கையும் வீண்தான் என்று நினைத்த
ராஜசேகரால் கண்ணைத் திறக்க முடியவில்லை. இந்த நண்பனின் ஒரே மகள் திருமணத்திற்கு உடனிருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியது மனதுக்கு திருப்தியாக இருந்தது.

ராஜசேகர் தன் மனைவியிடம் அடிக்கடி சொல்வார் “ இருவரில் ஒருவர் இறந்து இன்னொருவர் உயிருடன் இருந்தால், தனிமையில் இருப்பவற்கு உறவினர்களிடம் மதிப்பு இருக்காது

அதற்கு லலிதா கூறுவாள் “அதற்காக இருவரும் ஒரே நேரத்தில் இறக்க முடியுமா, என்ன? கடவுள் அழைக்க வேண்டுமே  மனைவி சொல்வதும் சரிதான் என்று எண்ணுவார்.

இந்த தம்பதிக்கு பெண் குழந்தைகள் இல்லை; எல்லாம் ஆண் பிள்ளைகள்தான். ஒரு பெண் குழந்தையாவது இல்லையே என்ற வருத்தம் லலிதாவுக்கு எப்பவும் உண்டு. வயதான காலங்களில் மருமகள், மகள் போல பார்க்க முடியுமா? பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் இவர்கள் இருவரும் மருமகள்களை மகள்கள் போலத்தான் நினைத்து வந்தார்கள். ராஜசேகர், லலிதா இருவரும் புரிந்துதான் இருந்தார்கள்.

சில  வேளைகளில் ராஜசேகரும் 60 வயதுக்கு மேல் என்ன சுய மரியாதை வேண்டிக் கிடக்கிறது என்றும் நினைப்பதுண்டு. மனைவியிடமும் சொல்வார். ஆனால் தன் மனைவி லலிதாவின் மனம் நோகும்படி மகனோ அல்லது மருமகளோ நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறார். ஒரு வேளை தான் இறந்து, தன் மனைவி லலிதா மட்டும் உயிருடன் இருந்தால், இருக்கட்டும், இருந்து விட்டுப் போகட்டும். அவள் நூறு வயது வரை நல்ல நலமுடன் இருக்கட்டும். ஆனால் அவளை யார் நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்? அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்பவாவது யார் வெளியே அழைத்துச் செல்வார்கள்?  கடவுளே! தான் இறந்து, மனைவி உயிருடன் இருக்கும் போது எல்லா உறவினர்களும் குறிப்பாக மகன்களும், மருமகள்களும், பேரன், பேத்திகளும் அடிக்கடி பார்க்க வருவார்களா? எல்லோரும் வர வேண்டும். வந்து நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கடவுளே! லலிதாவுடைய கௌரவத்திற்குப் பங்கம் வராமல் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். இதுவே தன்னுடைய இறுதி பிரார்த்தனை என்றும், தான் இத்தனை ஆண்டுகள் பூஜை பண்ணியதன் பலன் இந்த பிரார்த்த்னை நிறைவேறுவதன் மூலம் கிடைக்கட்டும் என்று மனதார ராஜசேகர் கடவுளிடம் வேண்டுகிறார். 

பூவே பூச்சூடவா திரைப்படத்தில் பேத்தி (நதியா) வருவாள் என்று  பாட்டி (பத்மினி) அழைப்பு மணியின் ஓசையை எதிர்பார்ப்பது, பேத்தி ஒரு நாள் வந்து பாட்டியுடன் சிறிது காலம் தங்கியிருப்பது; சிப்பிக்குள் முத்து திரைப் படத்தில்  வயதான தாத்தா (கமல ஹாசன்) தன்னைத் தேடி வரும் மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகளுடன் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது எல்லாம் ராஜசேகருக்கு நினைவு வருகிறது.

யாரோ சொல்கிறார்கள். ‘அமெரிக்காவிலிருந்து மகன் தன் குடும்பத்துடன் வந்து கொண்டிருக்கிறான் ஏன் வருகிறான்? எனக்காக வருகிறானா? என்னைப் பார்ப்பதற்காக வருகிறானா? அப்படியென்றால் இனி சந்தேகமில்லை; தன்னுடைய அந்திமக் காலம் நெருங்கி விட்டது என்று ராஜசேகர் நினைக்கிறார்.

அதற்குள் ஒரே ஒரு முறை கண் விழித்து, என் மனைவி லலிதா, மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகளை மற்றும் என்னைப் பார்க்க வந்திருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் ஒரு முறை பார்த்து விட மாட்டேனா என்று இவருடைய உள்ளம் ஏங்குகிறது. யாராவது டாக்டரிடம் சொல்லி, இவர்கள் எல்லோரிடமும் பேசிப் பழகி வாழ ஒரு நாள், வேண்டாம் குறைந்தது ஒரு 5 நிமிடங்களாவது கண் விழித்து, எல்லோரையும் பார்த்து விட ஏற்பாடு செய்யுங்களேன்; வேறு ஒன்றும் வேண்டாம், இந்த ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறி விட்டால் போதும், அப்புறம் நிம்மதியாக இறந்து விடலாம் என்று ராஜசேகர் நினைத்தார். அனேகமாக ராஜசேகர் எல்லோரிடமும் அன்பாகத்தான் பழகி வந்திருக்கிறார். அது போல் எல்லோரும் இவரிடம் அன்பாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று இப்போதும் நம்புகிறார். யாருடைய மனமாவது புண்படும்படி நடந்திருந்தால், அது இவருடைய மனைவி லலிதாவின் மனம் வருந்துபடி பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கிறார் என்பதை ராஜசேகர் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. 

இதோ அமெரிக்காவிலிருந்து வந்த மகன் “ அப்பா, நான் வந்து விட்டேன். கண் விழித்துப் பாருங்கள். நம்ம சொந்தக்காரங்க, உங்க நண்பர்கள் எல்லோரும் வந்திருக்காங்க,  பாருங்க அப்பா, ஏதாவது பேசுங்க அப்பா” என்கிறான். இந்த மகன் மேல்தான் நான் அதிக பாசம் வைத்திருப்பதாக லலிதா சொல்லுவாள். அதனால் தான் கண் விழித்து விடுவேன் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது ராஜசேகருக்குப் புரிகிறது. இருந்தாலும் கண் விழிக்கவோ, வாய் திறந்து பேசவோ தன்னால் முடியவில்லையே என்று நினைக்கிறார். கண் விழித்து எல்லோரையும் பார்க்க, எல்லோருடனும் பேச மனது துடிக்கிறது, இவர் மேல் அதிக பாசம் கொண்ட பேரன்களும், பேத்திகளும் பக்கத்தில் வந்து ‘ தாத்தா, தாத்தா என்று ஆசையுடன் என்னுடன் முதலில் பேசுங்க தாத்தா என்று ஒவ்வொருவரும் கூப்பிடுவது நன்றாகக் காதில் கேட்கிறது கண்ணைத் திறக்கவும் ஒரு வார்த்தை பேசவும். இவருக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது, இவரும்  துடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பது யாருக்குத் தெரியும்?.

மீண்டும் யாரோ ‘ கண் இமைகளும், உதடுகளும் அசைகின்றன. சிறிது நேரத்தில் ராஜசேகர் கண் விழித்து எல்லோரையும் பார்த்து விடுவார், எல்லோரிடமும் பேசி விடுவார்’ என்று மிகவும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இவர்களின் நம்பிக்கையைத் தான் பொய்யாக்கக் கூடாது என்றும் ராஜ சேகர் நினைக்கிறார்.

‘ என்னங்க, இத்த்னை பேர் கூப்பிடுவது உங்கள் காதில் விழவில்லையா? ஒரு தடவையாவது கண் திறந்து பாருங்க, வாய் திறந்து என்ன வேண்டும் என்று சொல்லுங்க. என்னங்க?’

ஆஹா, இது என் மனைவி லலிதாவுடைய குரல் அல்லவா? அவளுடைய ஒரு கை என் வலது கையைப் பிடித்திருக்கிறது; இன்னொரு கை என் இதயத்தின் மேல் இருக்கிறது. லலிதா என் உயிர் போகாமல் தடுத்துக் கொண்டிருக்கிறாளா? 

அட பைத்தியக்காரி, என் அந்திமக் காலம் நெருங்கிவிட்டது, உனக்குத் தெரியவில்லையா? நான் என்ன சத்தியவானா? நீ என்ன சாவித்திரியா? எமனிடமிருந்து என் உயிரைக் காப்பாற்ற! ஆனால் ஒரு முறை ராஜசேகர் சாலையைக் கடக்கும்போது, பைக் மோதி இவர் கீழே விழுந்து சுமார் 6 மணி நேரம் நினைவில்லாமலிருந்த போது, மிகவும் துணிச்சலோடு லலிதா அருகில் உள்ளவர்களிடம் பேசி, மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்ததை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா, என்ன? உண்மையிலேயே அது மறு பிறவி என்று எல்லோரிடமும்  இவர் சொல்வதுண்டு. எது எப்படியோ, நீ அந்தப் புராண காலத்தில் வாழ்ந்த  சிறந்த பெண்களை விட மிகச் சிறந்தவள் என்பதை நான் நன்கு அறிவேன்.  ஆனால் விதியை மாற்ற யாரால் முடியும்? பிறந்தவர் எல்லோரும் ஒரு நாள் இறந்துதானே ஆக வேண்டும். எனக்கு அந்த நாள் தனக்கு வந்து விட்டது என்று ராஜசேகர் மனதுக்குள் நினைத்தார்.

மீண்டும் மீண்டும் லலிதா, ‘ என்னங்க, என்னங்க, என்றதும், ராஜசேகரிடம் ஒரு உயிர் துடிப்பு. மனைவி, என் மனைவி கூப்பிடுகிறாள். என்று நினைத்தவாறே மெதுவாகக் கண்களைத் திறந்து, கண்களில் கண்ணீர் வழியும் தன் மனைவியைப் பார்த்தார். ஆனால் உதடுகளால் பேச முடியவில்லை. தன் கண்களால் சுற்றி நின்ற எல்லா உறவினர்களையும், நண்பர்களையும் நன்றியோடு பார்த்தார். மகன்களையும், பேரன், பேத்திகளையும் ஆசையாக, வாஞ்சையோடு பார்த்தார். எல்லோரிடமும் கண்களாலேயே விடை பெற்றுக் கொண்டார். ராஜசேகர் தன் மகன்களைக் கண்களில் கேள்வியோடு பார்த்தார். ராஜசேகர் என்ன கேட்க விரும்புகிறார் என்பது அவர் மகன்களுக்குப் புரிந்தது. மகன்கள் எல்லோரும் ஒரே குரலில் ‘ நீங்க கவலைப் படாதீங்கப்பா, அம்மாவை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றார்கள். ராஜசேகரின் கண்கள் ஒரு முறை திருப்தியாக மூடித் திறந்தன. 

இறுதியாக, தன் இனிய மனைவி லலிதாவைப் பார்த்தார். கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த  தன் மனைவியைப் பார்த்ததும் தன் கண்களிலும் கண்ணீர் வருவதை உணர்ந்தார். ஒரு  கேள்வியுடன் தன் கண்களால் மனைவி லலிதாவைப் பார்த்தார். அந்தக் கண்களில் உள்ள கேள்வியைப் புரிந்து கொண்ட ராஜசேகரின் மனைவி தன்னுடைய கண்களால் திருப்தியாகப் பதில் அளித்தாள்.

ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் ராஜசேகர் நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொண்டார்.

ராஜசேகர் தன்னுடைய மனைவி லலிதாவிடம் கேட்ட வார்த்தையும், அதற்கு லலிதா சொன்ன பதில் வார்த்தையும் ஒன்றுதான். அந்த வார்த்தை ‘ மன்னிப்பு’

எதற்காக ‘மன்னிப்பு’ என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும்.













Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE